Monday, January 17, 2011

ஆதி மூலமல்ல, ஆதி - மூலம்

ஆதி மூலமல்ல, ஆதி - மூலம்


இம்மடலைத் தொடங்கு முன் ஒரு செய்தியை வலியுறுத்தி விடுகிறேன்.
சென்ற ஆண்ட மே மாதம் தொடங்கி, பதினோறு மடல்களை எழுதி முடித்து, பின் தொடர முடியாது நின்று போயிற்று. காரணம் மடல்களைத் தாங்கி வந்த தன்மானம் என்ற தனிச்சுற்றுத்  தடைப்பட்டதால், அக் கனத்த வேதனையின் நிவர்த்தியாக, அத்தடையினை தாண்டிய தொடர்ச்சியாக, இவ்வாண்டு மே-இல் 12-வது விடுமடல் வெளிவந்தது. அப்பணியில் உங்கள் பங்கு பாராட்டுக்குரியது.

அடுத்து, உங்களுக்கு ஓய்வு கிடைக்கும் போது, கடந்த காலத்தில் எழுதப்பட்ட பதினொரு கடிதங்களையும் ஒரு முறை படித்துவிட தவறாதீர்கள்.

தொடங்கி விட்டோம் தொடர்ந்து செல்வோம் - படியுங்கள், பரப்புங்கள், பலப்படுத்துங்கள் - களப்பணிக்கு மூலதனம் பணமா? பக்குவமா? -புரிந்திடு, பொருந்திடு, மாற்றிடு, போராடு - மனித உருவில் புதிய வடிவமே போராளி -புதிய சமூகத்தின் இரத்த சாட்சிகள் புரட்சியாளர்கள் - புரியாத புதிரல்ல சித்தாந்தம்-நமது சித்தாந்தம் பெரியாரீயம் - உலகைக் காட்டும் கண்ணாடி -கண்ணாடி காட்டும் உலகம் - போலி லேபிளா ஓட்டு? லேபிளை ஒட்டுபவர் ஓட்டரா? ஒட்டிக் கொண்ட போலிகள் புனிதராவரோ? போன்ற மடல்கள்.

அவை நம்மவரின் இணைப்பு பிணைப்புகளை, இறுக்க நெருக்கங்களை, தள கள உறவுகளை,  கருத்து செயல்களை, வள மூட்டி வலுப்படுத்தியிருப்பதையும் எதிரிகளின் சூதுவாதுகளை.  எத்தர்களின் பித்தலாட்டங்களை, உன்மத்தர்களின் உளவு துரோகங்களை அம்பலப்படுத்தி விழிப்பூட்டியிருப்பதையும் உணர்ந்து, புரிந்து, தொடர்ந்திட உதவிகரமாயிருக்கும். அதனை சிரமப்பட்டாவது சேகரித்து படித்திட முயலுங்கள். சரி. இம்மடலின் சாரத்திற்கு செல்லுமுன் ஒரு பீடிகை.
படைக்கப்படாத படைப்பாளியின் படைப்பில் உருவான இயற்கை. தனது இயக்கத்திலும், மாற்றத்திலுமான வளர்ச்சிப்போக்கில், பல்வேறு பரிணாம பாய்ச்சல் கட்டங்களைத் தாண்டி, உயிரியாயிற்று. அந்த உயிரின் பரிணாமத்தில் மிக உயர்ந்த கட்டமே மனிதன் தோன்றினான். நான்‡ஆக தோன்றிய மனிதன் நாம் ‡ ஆனானா? அல்லது நாம் ‡ ஆக தோன்றிய மனிதன் நான் ‡ ஆனானா? என்ற விளக்கத்திற்குள் செல்ல இம்மடலில் நாம் முனையவில்லை. உயிரியாய் உரு கொண்டு, காலப் போக்கினூடே கடுமையான போராட்டத்தில் மனித உருவெடுத்தக் காலம் வரை, அவன் பெற்றிருந்த மூலதனம் உழைப்பு மட்டுமே. உழைப்பின் மூலம் உயர்ந்த வடிவம் கண்ட மனிதன், தனித்து வாழ முடியாது குறிப்பிட்ட சுற்றுச்சார்புகளுக்கு ஊடே வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தையும், தன் வாழ்நிலை அமையப்பட்ட  சூழலில், தன்னைத் தகவமைத்துக் கொள்ள அச்சூழலை எதிர்த்துப் போராட வேண்டிய அவசியத்தையும், அந்த தகவமைப்பிற்கும், வாழ்வுக்கும் அத்தியாவசியமான தேவை பூர்த்திகளையும் , அதற்கான தேவை உற்பத்திகளையும் தானே ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டிய தவிர்க்க முடியா நிலைமைகளையும் காலத்தின் கட்டாயம் அவனுக்கு புரியவைத்தது.

அப்படி புரிந்து கொள்ள அவனுக்கு இயல்பாக உதவியதும், உதவியதன் மூலமே தன்னை செழுமைப்படுத்திக் கொண்டதுமான இருப்பே - மூளை என்று உறுப்பு. புறநிலை தாக்கத்தைப் புலனறிந்ததும், அவ்வறிதலின் தொடர்ச்சியும், தொகுப்பும் ஏற்படுத்திய அவசியத்தால் வெடித்துக் கிளம்பிய சிந்தனையும், அச்சிந்தனையால் உலகைக் காணவும், உழைப்பை நெறிப்படுத்தவும், ஊக்கி விடப்பட்ட முயற்சியும், அம் முயற்சியிலும் முனைப்பிலும் பெற்ற பட்டறிவும் அவனை மனிதனாக்கியது. இந்த வேலைகளைச் செய்து கொள்ள விசே­மாக அவன் பெற்ற மூளை அவனது உடலையும் உழைப்பையும் உறவையும் ஒழுங்கமைத்து நடத்தும் கட்டுப்பாட்டு இயக்க ஊக்கியாயிருந்தது. அதன் விளைபயனே அறிதலும், உணர்தலும்.

இயற்கையின் பரிணாமத்தில், நீண்ட நெடிய கால வரலாற்றுப் போக்கில்  பச்சையாய், பாசியாய் - புல்லாய் பூண்டாய் -செடி கொடி மரங்களாய்- தாவரமாகி பின் ஒரு செல் உயிரியாய் தொடங்கி, பல்கி, பெருகி விரிந்து தொடர்ந்து, நீந்துவன, தத்தித் தாவுவன, நடந்து ஓடிப்பாய்வன பறப்பன -என பிரிவாகி, முதுகுத்தண்டற்றவை முதுகுத் தண்டுள்ளவை என வகையாகி, சிறு பெரு விலங்காகி இறுதியில் மனித கட்டம் வந்தடைந்தது இயற்கை. எனவே தொடக்க முதல் படைப்பாளியாக இருந்த இருப்பு-இறுதியாகப் படைப்பாளியை படைத்துவிட்டு பயணத்தைத் தொடர்ந்தது.

இந்த புதிய படைப்பாளி, மூளை என்ற படைப்பின் வடிவத்தையும், படைப்போடு பிணைந்துவிட்ட உழைப்பின் வடிவத்தையும், படைப்பின் வடிவில் கொண்டுவிட்ட அவயவக் கருவிகளையும் ஒருங்கிணைத்து ஒழுங்குபடுத்திய சேர்க்கையின் மொத்தமே மனித மூலதனம். இயற்கையலிருந்தே, இயற்கையை கட்டுப்படுத்தியே, இயற்கையை வென்றே தனது தேவைப் பூர்த்திகளைச் செய்து வாழ வேண்டிய கட்டாயத்தைக் கற்றுக் கொண்ட மனிதன், தன்னந்தனியனாக அதைச் செய்யவியலாது எனப் புரிந்துகொண்டு கூட்டாகச் செய்திட வேண்டிய அவசியத்தில் தோற்றுவக்கப்பட்டதே மனிதச் சமூகம். மனிதச் சமூகமில்லாது தனிமனிதன் இல்லை. தனிமனிதர்களின் கூட்டே மனிதச் சமூகம், சமூக சக்தியே படைப்பாளி, சமூக வாழ்விற்கடித்தளம் தேவைப்பூர்த்திக்கான உற்பத்தி. அந்த உற்பத்தியில் மனிதர்களுக்கிடையே கொண்டிருக்கும் உறவே சமூக உறவு. அந்த உற்பத்தி முறையில் உடமை, கடமை, உரிமை மூன்றினது இணைப்பின் மீதான தொடர்பே சமூக வாழ்வு.
பொதுவாக உலகச் சமுதாயம், வாழ்கின்ற பிராந்திய, பகுதிகளுக்கேற்ப பூகற்ப வாழ்முறை அரசியல் பொருளியல் பண்பியல் மொழிகளின் பிரத்தியேக தன்மைகளோடு தனது வளர்ச்சிப் போக்கில் பல்வேறு அமைப்புமுறைக் கட்டங்களைத் தாண்டி இன்றைய கட்டத்திற்கு வந்திருக்கிறது. அந்தக் கட்டங்களை விவரிக்க  இப்போது நேரமில்லை.
கடந்து வந்த கட்டங்களில் சமூகத்தின் மானம் குறிப்பிட்ட மான ஈனர்களால் பறிக்கப்பட்டு, உற்பத்திச் சாதன சக்திகள் அவர்களின் உடமையும் அடிமையுமாக்கப்பட்டு, உற்பத்தி உறவுகள் நாசமாக்கப்பட்டு, ஒன்றேயான சமூகம் பிளவுபட்டு, பேதப்பட்டு, அடக்குமுறைக் கருவி சாதனங்கள் ஆதிக்கவாதிகளின் தண்டமாக்கப்பட்டு, ஒடுக்குமுறை கலாச்சாரங்களால் உணர்வு சீரழிக்கப்பட்டு, சமூகம் சின்னாபின்னமாக்கப்பட்டு, சமூக அங்கங்கள் சிதறடிக்கப்பட்டு கிடக்கிறது.
நிறவெறி, இனவெறி, மதவெறி, பணவெறி, கட்சி வெறி போன்றவற்றை, மக்களை உறிஞ்சுவோர் தூண்டி எரியூட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் அஞ்சி, ஒண்டி, ஒதுங்கிக் கிடக்கின்றனர். பொதுவான இந்த உலகச் சமூகத்தில் தான் இந்திய துணைக் கண்டம் மேலும் பிரத்தியேக தன்மை கொண்ட கடவுள் வெறி, வருண வெறி, ஜாதி வெறி, மூட நம்பிக்கை, மூடபழக்க வழக்க  வெறிகளில் முடக்கப்பட்டு, மக்கள் மூளைக்கும் கரங்களுக்குமான சேர்த்து விலங்கு பூட்டப்பட்டிருக்கிறார்கள்.

ஒன்றேயானச் சமூகம் உதிர்ந்து தனித்ததில், உடமைகளைப் பறித்த உறிஞ்சர்கள் கூட்டம், உழைக்கும் வெகுமக்கள் மீது தொடுத்த தாக்குதல்களை, அனுபவித்து பெற்ற பட்டறிவாலும் படிப்பினைகளாலும் உந்தப்பட்டு, திடீர் எதிர்ப்புகளும், கிளர்வுகளும், எதிர்தாக்குதல்களும் இயல்பாகவே  நிகழ்வுகளாயின. அதனை முன்னின்று நடத்தக் கூடிய உறுதியும் உத்வேகமும் பெற்றவர்களை வரலாறும் காலமும் அடையாளப்படுத்தின. மக்கள் மனதிலும் அழுத்தமாக பதிவாயினர். அவர்கள் தனிநபர்களாயிருப்பினும் சமூகத்தின் அங்கமேயல்லவா?
வரலாற்றுப் போக்கில், மார்க்க வாதிகள், தீர்க்கதரிசிகள, வகைப்படுத்தினோர், வழிகாட்டினோர், சித்தாந்தம் தந்தோர், செயல்வீரம் கொண்டோர், களத்திலேயே ஜீவியம் கொண்ட போராளிகள், புரட்சியாளர்கள் போன்றோர் காலத்தால் அடையாளம் பெற்றனர். அழுத்தமான முத்திரைப் பொறித்தனர். எதிர்வரும் சந்ததிக்கு சாலை அமைத்தனர். எதிரிகளின் சவாலுக்கு எதிராக வெகுமக்கள் திரளின் வீரவேசத்திற்கு வித்தானார்கள்.

இத்தகைய சந்ததியை படைத்ததும், சாதனையாளர்களாக்கியதும், அவர்களை அடையாளம் காட்டியதும் சமூக வரலாறுதானே. அந்தச் சமூக வரலாறுதான் எதிர்காலத்தில் தன்னையே புதிய வடிவமைக்க, ஒரு புரட்சிகர வர்க்கத்தையே படைத்து புகழ் பெற்றருப்பதைப் புரிந்து கொண்டீர்களா? அந்த வர்க்கத்தின் வழி காட்டுதலில் வாழத் துடிக்கும் ஒட்டு மொத்த மக்கள், ஒன்று திரண்டு, ஓரணியாகி, வரலாற்றைப் படைக்கிறவர்கள் மக்கள் என்ற மகிமை மிக்க முத்திரையைப் பதிக்கப் போகிறார்கள். வரலாறு வழிகாட்டிகளை, வழி நடத்திகளை உருவாக்குகிறது. வரலாற்றை மக்கள் படைக்கிறார்கள். மக்களிலிருந்துதான் அவர்களை வரலாறு அடையாளம் காட்டுகிறது. தனி நபர்களாக காட்டி வந்த வரலாறு ஒட்டு மொத்தச் சமூகத்தின் ஒரு தட்டு வர்க்கத்தையே உருவாக்கிவிட்ட உன்னத படைப்புத் தன்மையைப் புரிந்து கொண்டீரா?
சுருக்கமாக, படைக்கப்படா படைப்பாளியான இருப்பு படைத்திட்ட படைப்பாளி மனிதன். படைத்த படைப்பே பாட்டாளி வர்க்கம். தெளிவாகிறதா?

தொடக்கத்தில் நான் சுட்டியதைப்போல இதுவரை பார்த்தது ஒரு சுருக்கமான பீடிகை. இனி இம்மடலின் சாரத்திற்குள் செல்வோமா? என்ன யோசிக்கிறீர்கள். களைப்பு தட்டுகிறதா? களையும்  தளையும் மலிந்து வந்தால் கவலை வரும். கவலை வந்தால் அலுப்பும் சலிப்பும் வரும். இவை வந்தால் உடல் அயர்வும் தளர்வும் வரும். அவை வந்தால் சோம்பலும் சோகமும் வரும். இவை வந்தவுடன் தூக்கம் வரும். சிந்திக்கிற உங்களுக்கு கவலை ஏது? சிந்தனையின் முடக்கம் தானே கவலையின் தொடக்கம். கவலையில்லா உமக்கு களைப்பு ஏது? உழைப்பிலே களைப்பு என்பது அடுத்த கட்ட முனைப்பு என்று பொருள். அந்த முனைப்பிற்கு ஆயத்தப்படுத்திக் கொள்ளும் அவகாசத்தைக் களைப்பு என்று ஒரு போதும் கருதி விடாதே. அந்த ஆயத்தப் பணிகளும் உழைப்பின் தொடர்ச்சியே. சரி. வி­யத்திற்குச் செல்வோம்.

இது வரையிலான சுருக்கம்தான் ஆதி முதல் அந்தத்தின் தொடர்ச்சி இடை என்பதாகும். இதில் இரு வினாக்களுக்கு மட்டும் விடைகாண்பதுதான் இம்மடலின் சாரம். ஒன்று பேரண்டத்தின் ஆதி படைப்பாளி யார்? அந்தத்தில் சமூகம் காண விரும்பும், சமூகம் எது? இவ்விரு கேள்விகளையயாட்டிய எண்ணற்ற கேள்விகளுக்கான பதிலை பின்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

முதல் வினா; இயற்கை, சமூகம், சிந்தனை ஆகியவற்றை உள்ளடக்கிய பேரணடத்திற்கு ஆதி முதல் அசல் படைப்பாளி யார்? ஆதி முதலான படைக்கும் ஆற்றல் பெற்ற படைக்கப்படா படைப்பாளி இருப்பு.
குறிப்பிட்ட காலத்தில் - இடத்தில் -பரிமாணத்தில்-குணத்தில் -வடிவில்- நேர் எதிர் முரணில் -இயக்கத்தில் - மாற்றத்தில்-பரிணாம பாய்ச்சலில் - விதி ஒழுங்கில்-விதி மீறி ஒழுங்கில்- இணைவில்- பிரிவில்-விரிவில்-ஒன்றி முரணில்-உடனில் போரில்-நிலையில்-ருசுப்பித்தலில்-எதார்த்தத்தலில்- புறநிலையில்-எதனாலும் படைக்கப்படாது-தானே படைப்பாளியாக-தனக்கு அப்பால் ஏதுமில்லாது -தானே அனைத்துமாகி - நித்தியத்தில் -இருப்பதால் உண்மையாகி இருப்பது இருப்பு.

என்ன? தலை சுற்றுகிறதா? சுற்றலும் சுழற்சியும் தானே நிலையாக நடமாட வைத்திருக்கிறது. அதனால் சுற்றல் சுழற்சி என நிலை குலைந்துவிடத் தேவையில்லை.

இருப்பின் காலம் இடம் முதல் நித்தியம் வரையிலான 25 அம்சங்களும் இருப்போடு பின்னிப்பிணைந்தவை. பிரிக்கவோ, பிரித்துப் பார்க்கவோ முடியாதவை.

மேற்சொன்னவை அனைத்தாலும் இருப்பை ருசுப்பித்திட முடியும். அதனை ருசுபித்து சாட்சியமாயிருப்பதுதான் விஞ்ஞானம். சாட்சியத்தோடு நிரூபணத்திற்குட்டபட்ட இருப்பை யாரால் மறுத்திட முடியும்? அந்த படைப்பாளியை யாரால் மறைத்திடவும் -அழித்திடவும் தான் முடியும்? ஒருவராலும் அழித்திட முடியாத உண்மை தானே இருப்பு.
ஆனாலும் ஒன்று. ஆண்டவனை இருப்போடு ஒத்திட்டு விடாதீர்கள். ஆண்டவன் சங்கதி வேறு வகைப்பட்டது. அவகாசமாக பின்பு பார்ப்போம். கடவுள் பக்தியுள்ள விஞ்ஞானிகளும் இருப்பை ருசிப்பார்கள். ஆனாலும் கடவுளை ருசுப்பித்ததில்லை. ருசுபிக்க முடியாது. காரணம் இல்லாத தொன்றை எப்படித்தான் நிரூபிப்பது?

நீர் வாழ் முதலை பலமிகு யானையின் காலை நீரினுள் கெட்டியாகப் பற்றிக்கொண்டு விட்ட போது, பதறித்துடித்து ஆதிமூலமே என பெரும் குரலெடுத்து பிளரிய போது, கஜேந்திர மோட்சம் தர காட்சியளித்தவன் ஆதிமூலம் என்பது புராணக்கதையல்லவா? அந்த ஆதிமூலமல்ல, ஆதியும் மூலமும், மூலமும் முதலும், முதலும் முடிவுமான இருப்பு என்ற இந்த ஆதிமூலம்.

இனியவர்களே! இப்போதைக்கு படைப்பாளியைப் பற்றிய ஒரு மின்னல் காட்சி போதுமானது. சந்தர்ப்பம் கிட்டும் போது ஆங்காங்கே உட்புகுந்து ஆய்ந்திடலாம்.

அடுத்தக் கேள்வி; இப்போதைய சமூகம் காண விரும்பும் எதிர்காலச் சமூகம் எது? பாட்டாளிகள் கண்டிட வினைமுற்றும் வருங்கால சமூகம் எது? படைப்பாளிகள் அடைந்திட அர்ப்பணிக்கும் இலட்சிய சமூகம் எது? அதுதான் மனித மானச் சமூகம். 
விடுமடல் -14 நன்றி: தன்மானம்இணைமிகு தோழா!

No comments:

Post a Comment