Tuesday, January 18, 2011

அனுகலா? முனகலா?

அனுகலா? முனகலா?

இணைமிகு தோழா!

விடுமடல் தொடங்கியதிலிருந்து இதுவரை, முழுக்க முழுக்க நம்மவர்களுக்கே எழுதினேன்; சித்தாந்தம், செயல்வழி, நடைமுறை, அனுகுமுறை போன்ற அமைப்பம்சங்களில் ஓரளவு அறிவுபெற இந்த மடல்கள் பயன்பட்டிருக்கும் என நம்புகிறேன்.  அதுவும் குறிப்பாக, அமைப்பையே வாழ்விடமாக்கிக் கொள்ளுவதற்கான அர்ப்பணிப்பு முறையே வரலாற்று வாழ்க்கையாகும் என்பதால், அமைப்பெற்ற பேராயுதத்தின் அவசியமும், அதனில் ஏற்படுத்திக் கொள்ளும் எச்சரிக்கையோடு கூடிய பிணைப்பும் முக்கியத்துவமுடையதாகும்.  அதனை கொஞ்மேனும் நீங்கள் புரிந்து கொள்ள எனது மடல்கள் உதவியிருக்குமானால் எனக்கு நிரம்ப மகிழ்ச்சி.

அத்தகைய எனது நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் உறுதிப்படுத்திக் கொள்வது, நீங்களும் ஒரு நபர் என்ற முறையிலான உறவில் அல்ல; உங்களது செயல்முறையில் கிடைத்த அனுபவத்தை பகிர்ந்து கொள்ளும் போது ஏற்படும் புரிதலால் உருக்கொள்ளுவதாகும்.  ஆந்த வாய்ப்பையும் ஒரு அமைப்பில் மூலமே நாம் பெறமுடியும்.

நம் எதிரிகளையும், நண்பர்களையும், துரோகிகளையும் வரையறுத்துத் தந்து, உதிரிகளுடனான மோதுதலையும், நண்பர்களுடனான உறவு முறையையும், துரோகிகளை தாமதமின்றி, அடையாளம் கண்டு, அப்புறப்படுத்தும் துரித வகைகளையும், நம் பலவீனங்களை நாம் புரிந்து எடுத்துக் கொள்ளும் எச்சரிக்கை முறைகளையும், நாம் நம் அமைப்பின் மூலமே கற்றறிந்து கண்டறிந்து, கடைபிடிக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
அமைப்பு, தற்காப்பு, தாக்குதலின் பிணைப்பே அங்கத்தின் உத்திரவாதத்திற்கு உறுதியாகும்; இதில் அமைப்பு, தவறியும் மறந்தும், கீழே வைத்துவிடாமல் தரித்திருக்க வேண்டிய பேராயுதமாகும்; இரவும் பகலும் கூட, நினைவிலும் கனவிலும் கூட அதனைவிட்டு நம்மை பிரித்திட முடியாது.  அதனை நமதாக்கிக் கொள்ளுவதன் மூலம் நாம் அதனாகிவிடுகிறோம்.  அமைப்பு திசைபாதை வழிகளைப் பெற்றிருப்பதால், ஆயுதமாயிருக்கிறது என்பதை மறந்துவிட்டு, மதியிழந்து, அமைப்புக்கள் திசைபாதை வழிகளுக்கு  எதிராகச் செல்லவைப்பது, செலுத்த முனைவது அதன் அழிவை நோக்கிய பயணமாயிருக்கும்.

ஆகவே அமைப்பு கட்டப்படுவதன் அவசியத்தை புரிந்து கொண்டிருப்பாய் என நம்புகிறேன்.  அமைப்பைக் கட்டுவதற்கு ஒருவர் பெற்றிருக்கக்கூடிய புரிந்து பொருந்தும் போக்கையும், நடை உடை பாவனைகளையும், நம்பகத் தன்மையும், திறனையும், தெளிவான பார்வையையும், திடமான வழிநடத்தலையும் மக்களுக்கு புரியவைப்பது அவரது அனுகுமுறைதானே?
அந்த அனுகுமுறை பக்குவத்தையும், திறனையும் பெறுவது, பயில்வது கடினமான வேலைதான்; அதைக் கற்றுத் தெரியாமல் அமைப்பில் பணியாற்றுவது முயற்கொம்புதான்; அதை அமைப்பிற்கு வெளியே அலைந்து கற்க முனைவதும் அதோகதி தான்; சோதனைகளைச் சமாளிக்கவும், வேதனைகளுக்கு தீர்வுகாணவும், சாதனைகள் படைத்திடவும் இந்த அணுகுமுறை பயிற்சி தான் அரணாயிருக்கும்.

இதுவிலை கொடுத்து வாங்குவதல்ல, ஏடுபடித்து எடுத்துக் கொள்வதுமில்லை, ஒரு குறிப்பிட்டச் சூழலை உள்ளாழ்ந்து புரிந்து கொண்டு, அதனை மாற்றும் செயலில் இறங்கி, எதிர்படுபவற்றை எதிர்கொண்டு ஜீரணித்து, உணர்ச்சி வயப்படாது கசப்பையும் உணர்வாக்கிக் கொண்டு, கொள்கை நிலை குலையாத நிலை எடுத்தால் எதிர்ப்பை வென்றெடுத்து அமைப்பிற்குட்படுத்திக் கொள்வதே அனுகுமுறை; அனுபவம் படிப்பினை தர, அப்படிப்பினை வெளிச்சம் காட்ட, அவ்வெளிச்சத்தை பார்வையாக்கிக் கொண்டு தடம்பதித்து பயனிப்பதை வழக்கமாக்கி பின் பழக்கமாக்கிக் கொள்வது, அதுவும் அமைப்பெற்ற பாசறையில் பயில்வது தான் அனுகுமுறை.

தன்னை மட்டும் முன்னிறுத்தி பயணம் தொடங்குவதல்ல; தனியார் சித்து, சீற்றத்தாலும், வீம்பு வீராப்பாலும் வெற்றிப் போல தோன்றுவதை விவரமான அனுகுமுறை என்று கருதிட வேண்டாம்; அது இறுதியில் விரக்தியிலும் வீழ்ச்சியிலுமே முடியும்.

ஒரு தோழரிடம், கடந்த காலத்தில் நிலவிய போராட்ட உணர்வுகளையும், கட்டுப்பாட்டுறுதிகளையும், செயலூக்க ஈடுபாடுகளையும் பற்றி கூறிக் கொண்டிருந்தேன்.  கேட்டுக் கொண்டிருந்த அவர் கூறினார் நீங்கள் பழயகாலம்.  உங்கள் காலம் என்று நினைத்துக் கொண்டு பேசாதீர்கள் இது அட்வான்ஸ் காலம் இந்த நாகரீகத்தை புரிந்து கொண்டு வாழ வேண்டும் என எனக்கு போதித்தார்.  வேடிக்கைத்தானே?

பழய காலத்திலிருந்து முன்னோக்கிய சமூகவளர்ச்சி காலகட்டத்தில் இன்று இருக்கிறோம் என்பது உண்மைதான்; இக்காலகட்டத்தை புரிந்து கொண்டு மாற்ற வேண்டும் என்று அவர் கூறியிருந்தால் சரியான கருத்தோட்டம் தான்.  ஆனால் அதை புரிந்து கொண்டு அதில் வாழ வேண்டும் என ஆசைப்படுகிறார்.  அதாவது இக்காலகட்டத்தோடு ஒத்து அய்க்கியம் கொள்ள வேண்டும் என்கிறார்.  இது நியாயமா?

ஏதோ ஒருவகை போராட்ட உணர்வு, கட்டுப்பாடு, செயலூக்கத்திலிருந்து கடந்த காலகட்ட வளர்ச்சி புரட்சி உணர்வு, உறுக்குக் கட்டுப்பாடு செயலூக்கத் திறன் கொண்ட உதிர்காலத்தை சென்றடைய கடந்து செல்லும் இக்கால கட்டத்தில் புதிய ஒவ்வாத அம்சங்களை ஒழித்துவிட்டு, புவ்வுதலுக்குரியவற்றை இணைத்துக் கொண்டு,  மேலும் உத்திரவாதமான உதிர்காலம் நோக்கிய பயணம் என்பதை மறந்துவிடக் கூடாது.
இந்த நிலையில் சரியான போர் உணர்வையும், கட்டுப்பாட்டையும் செயலுறுதியையும் உறுதிப்படுத்த முனைவதற்கு மாறாக, இவ்விடைக் காலகட்டமே நம் வாழ்நாளில் நிரந்தர காலம் என கருதி அதிலேயே தன் ஆஜிளைக் கழிக்க வழி தேடினால், உதிர்கால வாழ்வுக்கான சிந்தனை சீக்கு ஏற்படுத்தி, இக்கால வாழ்வு என்று படுத்த படுக்கையாகி, என் காலம் இனி அந்திம காலம்தான் என பிதற்றுவதில் தான் கொண்டு போய்விடும்.
ஆகவேதான், நம் வாழ்க்கைப் போராட்டம் தொடர, நமது அனுகுமுறையிலும் மாற்றம் காணவேண்டும்.  அதற்கு கடந்த கால அனுபவத்தை பாடமாக்கிக் கொண்டுதானே எதிர்காலம் செல்லத் தக்க அனுகுமுறையை இந்த காலத்தில் வடிவமைத்துக் கொள்ள வேண்டும். 
சேறும் சகதியும், கள்ளும் முள்ளும், காடும் மேடுமான பாதையில் பயனித்து நம் மூதாதையர் பெற்ற அனுபவங்களை, கொண்டிருந்த உண்ர்வை, ஏற்படுத்திக் கொண்ட கட்டுப்பாட்டை, தூக்கிச் சுமந்த செயலூக்கத்தை புறக்கணித்துவிட்டு, பறக்கும் ரயில், பாய்தோடும் விண்கோள்; அண்டத்தில் தங்கிடும் விண்தளம்; என்ற அட்வான்று காலத்தில் பிறந்தோம் என்றாலும், இதுவே நிரந்தரமானது இங்கே உணர்வும் வேண்டாம்; கட்டுப்பாடும் வேண்டாம்; செயலூக்கமும் வேண்டாம்; வளமான வாழ்வு போதும் என கருதிட முடியுமா?  இந்த ‘அட்வான்ஸ்’ காலத்தில் உலகில், கண்டங்களில், நாடுகளில் வாழும் மனிதர்கள் வளமான வாழ்வு வாழ முடியுமா?  முடிகிறதா? அதைப் பெருவதற்கே போராட்ட உணர்வும், கட்டுப்பாடும், செயலூக்கமும் மக்களுக்கு வேண்டுமல்லவா?

நவீனகாலம் - அட்வான்ஸ் காலம் என்று காலத்து வாழ்க்கை மக்களுக்கு கிடைத்திருக்கிறதா?   இக்கால சுகபோகத்தை மக்களால் அனுபவிக்க முடிகிறதா?  மக்களுக்கான அட்வான்ஸ் காலத்தை அடைய வேண்டிய பயணத்தில் நாம் இருக்கிற இன்றை கால கட்டத்தில் நமக்கான பணியை மனதில் கொள்ள வேண்டும்; பாதை தெளிவாகும்.

சரி! விஷயத்திற்கு திரும்புவோம்; இன்றைக்கு நமது அனுகுமுறை எப்படி அமைய வேண்டும்?  அதுதான் நாம் கற்றுத் தெளிய வேண்டிய பாடம்.  இது வேண்டும் போது விலை கொடுத்து வாங்கி விடலாம் என்ற கடைச்சரக்கல்ல; மந்திரவாதிகள் தரும் மாயக்கயிறு அல்ல; கணவில், கடவுள் காட்சியளித்து தந்திடும் பரப்பிரசாதம் அல்ல; உடைத்தால் கண்டிப்பாகக் கிடைத்திடும் என்ற லாக்கரும் அல்ல.

முதலில், நீ தன்னந்தனியனல்ல; அமைப்பென்ற ஆற்றலின் வடிவு; யார் பின்னாலும் ஓடும் எடுபிடியல்ல, எல்லோருக்கும் முன்னில் வழிநடத்தி செல்லும் திறனுரு; கூப்பிட்ட குரலுக்கு ஏவல்புரிய தண்டனிடும் அடிமையல்ல, நம்பிவந்து கூப்பிட்டோருக்கு நல்ல துணையாகி நிற்க வழி தெரிந்தவன்.  ஏதோ புகழுக்கும் பணத்திற்கும் பந்தா காட்டுபவனல்ல, பயன்படுவதற்காக பாடுபடுதல், பாதுகாப்புக்குரியது என்ற முத்திரை பதிப்பவன்; என்பதை மனதில் பதிய வைத்து செயலில் தடம் பதிக்க திடம் கொள்ள வேண்டும்.

அடுத்தவரை, அடர்திரளை அதிகாரம் ஆதிக்கம், அச்சுறுத்தல் அடாதுடிகளாலல்ல, அறிய, தெரிய, தெளிய, புரியவைப்பதால் ஈர்ப்பவன்; எதற்கோ ஏமாந்த ஏவிலியல்ல, எடுத்துக்காட்டாய் மற்றவர்கள் எடுத்துக் கொள்வதற்குரியவன் என்ற பக்குவத்தை பயிற்சியாய் பெற்றுவிட்டால் அனுகுமுறையின் வடிவே அதுதானே.

இதற்குபின்னும் புரியாமல் விழிப்பவர் யார்?  அவர் விழிக்க வழியின்று உறங்கிவிட்டவர் தானே?

தன் முயற்சியிலும் தன்னுறுதியிலும் தன் நம்பிக்கையிலும் தன்னிழப்பிலும் தன்னை அய்க்கியப்படுத்திக் கொண்டு, அதனால் தன் சுபாவ, பிப்பியல்பாக கொண்டுவிடு தோழா! பின் எங்கும், எதிலும், எப்போதும், உன்னில், உன் உணர்வில், உன் நினைவில், உன் செயலில் அதனை அடையாளம் காண்பாய்; இது அமைப்பு வாழ்வால் மட்டுமே சாத்தியம்.

அங்கத்தைப் பங்கப்படுத்தி அமைப்பைக் கெடுப்பது ஆற்றல் இல்லை; நண்பனை விரட்டியடித்து எதிரியை பலப்படுத்துவது விவேகமல்ல; எதிரியை நண்பனாக எடைபோட்டு வலையில் சிக்குவது துணிவு அல்ல; நம்மவனை பிணைப்பாக்கி; நண்பனை அணையாது விலகாது வென்றெடுத் தீர்த்து; இயல்பான எதிரிக்கிடையான முரணை, கூர்மையுறச் செய்து; அவனுக்கும் நண்பனுக்குமான இடைவெளியை ஆழ, அகலப்படுத்தி; முனைப்புடன் முன்னோக்கிட நிலை எடுப்பதும், நிலை கொள்வதும், நிலை நிறுத்துவதும், தளம் அமைத்து களம் காண்பதும் தானே புரட்சியாளன் புரிந்து கொள்ளும் பாடம்.

அன்பு தோழா! மற்றொன்றையும் மனதில் பதியவைத்து கொள்ளுங்கள்: அதுவும் அனுகுமுறையில் போது, ஒவ்வொரு அசைவிலும் சிறுநீரகத்தின் தொடரோட்டம் போல, தவறுகளை சுத்திகரித்து வெளிச்சமாக்கிக் கொள்வது அவசியமல்லவா?  இதற்கு கால அவகாசம் வேண்டாமா?  என விளாச விணை எழுப்பிடக் கூடாது.  செயலாற்றும் போது தவறுகள் ஏற்படத்தான் செய்யும்; கவலைப்பட தேவையில்லை; ஒரு பணி முடிந்து ஓய்வு என்பது பணியில் நடந்தவற்றை குறிப்பாக தன் அனுகுமுறையை அசைபோட்டறிந்து தவறைச் சரிபடுத்திக் கொள்ளும் நேரம் அல்லவா?
அரட்டையடித்து ஆட்டம் போடுவதும், குறட்டைவிட்டு குந்தகமிழைப்பதும் ஓய்வாகுமா? பொழுதுபோக்கு என்றால், முடிந்த காரியத்தை, முடித்துவந்த வளக தொகையறிந்து புரிந்து கொண்ட படிப்பினைகளை பொக்கிஷமாக்கிக் கொள்வது தானே?  ஒருவன் தூங்குவதற்கு நேரம் தேவைதான்; மூளையின் சோர்வை போக்கிக் கொள்ள வேறுமாற்று இல்லாத நிலையில் அல்லது ஒரு பழக்கத்தில்; ஆனால் ஒன்று தூங்கிக் கொண்டிருக்கும் போதும் மூளை தன் வேலையை நிறுத்தி விடுவதில்லை.

அணுகலை முதலில் நாம் வழக்கமாக்கி, பின் பழக்கமாக்கிக் கொள்வது நமக்கு வலிபு.  நாம் நடத்துவது வெறும் அசைவல்ல, போராட்டம்.  போராட்டம், போர் என்ற வார்த்தைகளை கண்டு யாரும் அஞ்சிட வேண்டியதில்லை, இதனை அச்சுறுத்தும் வார்த்தையாக ஆதிக்கவாதிகள் சித்தரிக்க முனைகிறார்கள்.

கருத்து, செயல், எழுத்து, பேச்சு இந்த முணைகளில் பலவேறு துறைகளில் நாம் எதிரிகளோடும், நண்பர்களோடும் போராட வேண்டியவர்களாகவும் இருக்கிறோம்; நமக்கு எதிரிகள் மக்களின் எதிரிகள் தான்; எதிரிகளோடு அவர்களை வீழ்த்துவதற்கு போராடுகிறோம்.  நண்பர்களோடு எதிரிகளுக்கும் நமக்குமிடையில் ஊசலாடாமல் நம் பக்கம் வென்றெடுக்க - ஈர்த்தெடுக்க போராடுகிறோம்; நாமே நம்முள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம்; நம் பிணைப்பை பலப்படுத்தி, களையை களைந்துவிட்டு, முன்னோக்கி பயனிக்க வெளிச்சத்தையும், திடத்தையும் ஒருசேர பெறுவதற்கு போராடிக் கொண்டிருக்கிறோம், மக்களோடும் போராடுகிறோம், சமத்துவச் சமுதாயத்தை நிர்மானிப்பதில் சரியான பாதையில் நடைபோடும் புரட்சியாளர்களுக்கும், போராளிகளுக்கும் செயல்வீரர்களுக்கும் பொலிவான தளமாக மக்கள் அமைந்திட போராடுகிறோம்; ஆதிக்கச் சுரண்டல்காரர்களின் அடிமைத்தளமாக, அவர்களது சூதுவாது சதிகளுக்கு ஆக்கிரமிப்பிடமாக மக்களை வீழ்த்திவிட கூடாதல்லவா?

இவற்றில் நமக்கு தெளிவு வேண்டும்.  எதிரிகளைத் தனிமைப்படுத்தி, நண்பர்களை ஈர்த்தெடுத்து, பலம் பெற்று, மக்கள் தளத்தில் நின்று உதிரியை சந்திக்க களம் அமைக்க வேண்டியது போராளியின் மூச்சல்லவா?
தன்னை - தான் சார்ந்த அமைப்பை - தனிமைப்படுத்திக் கொண்டு எதிரியை வலுபெறச் செய்து, நண்பர்கள் அண்டிவிடாதபடி அடாதுடிகள் செய்து; மக்கள் மருண்டு ஒதுங்கியோடிச் செய்து, தன்னை முன்னிறுத்தி மக்களின் நம்பத்தை முற்றும் இழந்துவிட்டவரை போராளி என கோமாளி கூட கூறுவானா?  இந்த அனுகுமுறை ஒருகாலும் போராளியின் அனுகுமுறையாகாது; ஆக முடியாது.  இத்தகையவர்கள் வீரதீர பராகிரமமுடையவராகவோ அல்லது வல்லமை படைத்தவராகவோ வரலாறு அடையாளம் காட்டுமா?  குல்லறையைக் கட்டிக் கொண்டு அதில் குடியிருப்பவன், கோட்டையிலமர்ந்து கோலோச்சுவதாக கூறுவது ஒரு காலத்தின் காட்சி தானே.

கருத்து, செயல், எழுத்து, பேச்சு ஆகிய கோணங்களிலான உலகின் உள்ளடக்கத்தில் நடத்தப்படும் போராட்டம் ஒவ்வொன்றும் ஒரு சிறப்புக்குரிய கலை அல்லவா?  ஏல்லா கலைகளிலும் ஒருவர் தேர்ச்சி பெற முடியுமா அல்லது பெற்றிருக்கிறார் என்பதல்ல நம் ஆய்வு; அனைத்திலும் ஒருவர் சிறப்பு பெறுவது அப்புறமிருக்கட்டும்; ஒன்றினுள்ளேயே பெற்றுள்ள சிறப்புக்களிலும் வேறுபாடுண்டே.  மனித சமூகத்தில் அங்கமாகிவிட்ட ஒவ்வொருவரிடமும் ஒரு தனிச் சிறப்புண்டு என்பதை மறுத்து விடக் கூடாது.  நாம் இங்கு சொல்லவந்தது, பயனிக்கும் பாதையில் சந்திக்கும் ஒவ்வொரு போராட்டத்திலும் மேலே சொன்ன அனைத்து கோணங்களிலான போராட்டங்களுக்குமிடையேயான சிந்தனைப் போக்கின் இழையோட்டம் அறுபட்டுவிடக் கூடாது என்பதில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும்.

அனுகுமுறைத் திறனில் நடத்தும் போராட்டம், அனுபவத்தால் செழுமைப்படுத்தப்படும்; போராட்டம் என்றாலே திட்டமிடப்பட்ட, ஒழுங்குபடுத்தப்பட்ட, வரையறுக்கப்பட்ட மோதுதல் என்பது நீ அறிந்ததல்லவா?  மோதல் என்று வந்துவிட்டால் பலம் பிரதான அங்கம் வகிக்கிறது.  பலம் என்பது பண்முகத்தன்மை கொண்டதல்லவா?  பலம் அறிதலும் ஒரு நுட்பமான கலைதான்; அதனை அறிய பலவழிமுறைகளை பலர் பலவிதமாக கடைபிடித்தாலும் அறிந்தவை உண்மையா என்பது உறுதி செய்து கொள்வதிலே தான் உள்ளார்ந்த திறன் பொதிந்திருக்கிறது.
மோதல் என்று வந்துவிட்டால் அதில் பலம் பிரதாக அங்கம் வகிக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது; எதிரி, நண்பன், நீ, உன் அமைப்பு மக்கள் திறள் ஆகிய ஒவ்வொருவருக்கும், பலமும் உண்டு பலவீனமும் உண்டு; இந்தச் சமூகத்தில், உன் பலவீனத்தைப் போக்கி, உன் அமைப்பின் பலத்தை உறுதிப்படுத்தி, மக்கள் திரளின் பலத்தை எழுச்சியாக்கி, உன் நன்பணின் ஆதரவு பலத்தை வென்றெடுத்து, எதிரியை வீழ்த்தி, சமூகத்தை அடிப்படையாக மாற்றுவது தானே புரட்சி திட்டம் என்பது.

எதிரியின் பலம், பணம் எடுபிடிக்கும்பல் ஆதிக்கம் அதிகாரத்தில் போன்றவற்றில் இருக்கிறது.  பலவீனம் அவர்களுக்குள்ளான முரண்பாட்டிலும், வெறிகொண்ட கோஷ்டி பூசலிலும் இருக்கின்றன.  நண்பனின் பலம் அவனது கவர்ச்சியின் திரட்சியிலும், அளித்திடும் அபரிமித வாக்குறுதியிலும் இருக்கிறது; அவனது பலவீனம் இயல்பான தடுமாற்றத்திலும்; ஆதரவு தேடி அலைவதிலும் இருக்கிறது.  உனது பலம் அமைப்போடு பிணைந்திருக்கும் உன் வாழ்வில் இருக்கிறது, உனது பலவீனம் தனிநலனிலும், தனிமைப்படுதலிலும் இருக்கிறது நமது பலம் கொள்கை, தன்னிழப்பாளர்கள் குழு களவாழ்க்கையில் இருக்கிறது; நமது பலவீனம் அமைப்பு தொளதொளப்பிலும், அர்ப்பணிப்புக்கு மாறாக ஆதாயத்தில் கருவெடுக்கும் துரோகத்திலும் இருக்கிறது.

எனவே ஒரு சமூகப் போராளி, தனது அமைப்பின் பலவீனத்தைப் போக்கிக் கொண்டு பலத்தில் ஊன்றி தடம் பதித்து, வெகுமக்கள் திரளின் எழுச்சித் தொடருக்கு முன் வகித்து, நண்பனின் பலப்பகுதியை பயன்படுத்தி ஆதரவாக்கி, எதிரியின் பலத்திற்கு தடைபோட்டு, அவனது பலவீனத்தில் தாக்குவது புரட்சியின் வெற்றியாகும்.

இதற்கு மேலும் சென்று, எதிரும் புதிருமான ஜீவியத்தை - நட்பு ஜீவியத்தை - நேர்மறை எதிர் மறை ஜீவியத்தை துல்லியமாக்கிக் காட்டி ஒவ்வொருவரின் பலம், பலவீனங்களை தோலுரித்து, அதனை தொட்டு, தட்டி, மோதி, முட்டி, வெட்டி எடுக்கும் பிணவறை சோதனை விளக்கத்திற்கு நான் போக விரும்பவில்லை; அது பாசறை போதனையில் பார்ப்போம்; இங்கே எழுதினால் நாக்கைத் தொங்கப் போட்டலையும் பினவாடையெடுத்த ஜீவன்களுக்கு தீனியாகிவிடுமல்லவா?
இத்தோடு இந்த விடுமடல் தொடரை முடித்துக் கொள்ளுகிறேன்; அமைப்பையும் அதனைச் சார்ந்த அனைத்தையும், உன்னிள் வாழ்வையும் அதன் பாதை வழி பயணத்தையும் ஓரளவாவது சொல்லிவிட்டதாக கருதுகிறேன்; தேவைப்பட்டால் எதிர்காலத்தில் தொடர்வோம்; இத்தோடு முடித்துக் கொண்டது முற்றுப் புள்ளியல்ல; இதனை ஒட்டி இனி தொடரவிருக்கும் விடுமடல்களை சில பெரும் சிந்தனை விளக்கங்களை சுருக்கமான பாடமாக்கி மனதில் இருத்தும் பணியில் ஈடுபடுவோம்.
அதனை முடித்த பின், நீ அவசரப்படுகிறாயே, அனைத்து மக்களும் அறிந்திட துடிக்கிறாயே, அந்த கட்டத்திற்கு வரலாம்; உன்னை ஆயத்தப்படுத்து; மக்கள் ஆயத்தமாகவே இருக்கிறார்கள்; நம்பகத் தன்மைக்கும், தலைமைக்கும் அவர்கள் காத்திருக்கிறார்கள்; அந்த காத்திருப்பை தொடர் பயணமாக்க நீ இனியும் காத்திருக்காதே இனிய தோழா! கற்றிடு பயின்றிடு அனுகலை; மங்கிடும் மறைந்திடும் முனுகலே.

சிந்தியுங்கள் - சந்திப்போம்!

 அன்பு,
 ஏ.ஜி.கே.

No comments:

Post a Comment