Tuesday, January 18, 2011

புரிந்திடு - பொருந்திடு - மாற்றிடு - போராடு

புரிந்திடு - பொருந்திடு - மாற்றிடு - போராடு

இணைமிகு தோழா!

தமிழர் தன்மானப் பேரவை - களப்பணியாளர்களை உருவாக்கியளிக்கும் பாசறை என்பதையறிந்தே, அர்ப்பணிப்புத் தன்மையோடு அதில் நுழைந்து, கற்றும் பெற்றுமான பக்குவத்தில் தன்னந்தனியாக அல்லாது, குழு உணர்வு கொண்ட வடிவமாக கூட்டுணர்வு கொண்ட குழுவாக நாம் ஒவ்வொருவரும் ஆக்கப்பட்டிருக்கிறோம் என்பது நம் உறவையும், உறைவிடத்தையும் உணர்த்துகிறதல்லவா?

கருத்து, செயல், சிந்தனையில் மேலும் வலுவாகிட, வடிவுற, சிந்தனையால் செயலை ஒழுங்குபடுத்தி, செயலால் சிந்தனையைச் செழுமைப்படுத்தி களப்பணியில் ஈடுபடும் போது நம் திறன் வெளிப்படுகிறது.  அச்செயல் திறனைக் கொள்ளும்போது தான், நாம் செயல் வீரர்களாக தகுதி பெறலாம். அந்த திறனைப் பெறுவது என்பது களப்பயிற்சியில்தான் கருவுற்று வளரத் தொடங்கும்.  கூட்டுணர்வோ அல்லது குழு உணர்வோவான வடிவம் தான், கையிலெடுக்கும் அல்லது ஈடுபடுத்திக் கொள்ளும் ஒரு பிரச்சனையில், எதிர்படும் அல்லது எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையில், எதிர்வரும் அல்லது எதிர்நோக்கும் ஒரு பிரச்சனையில் தீர்வு காண அது எடுக்கும் நிலைப்பாடே வெற்றிக்கு அடிப்படையாகும்.

நிலைப்பாடற்ற ஈடுபாடு, உணர்ச்சி வயப்பட்டதே தவிர உணர்வு வயப்பட்டதல்ல.  உணர்ச்சி அளவு மாற்றத்தால் ‘வெறி’ யாகிவிடும்.  வெறி தோல்விக்கு அறிகுறி.  உணர்ச்சி, அறிவால் செழுமைப்படுத்தப்பட்டால் அது உணர்வாகும்.  உணர்வு அளவு மாற்றத்தால் ‘எழுச்சி’யாகிவிடும்.  எழுச்சி வெற்றிக்கு அறிகுறி.  அத்தகைய நிலைபாடுகளை எடுக்கக்கூடிய திறன்தான் தகுதி பெற்ற செயல் வீரர்களை அடையாளம் காட்டுகிறது.
அச்செயல் வீரர்கள் களப்பயிற்சியில் காணும் வாழ்வு களவாழ்வு, களவாழ்வு களவு வாழ்வல்ல, மாறாக கட்டமைந்த வாழ்வு, அது கட்டிலறையில் களிப்பூட்டும் காம போக வாழ்வு அல்ல.  மாறாக சுய இழப்புக்கு பக்குவப்பட்ட சுய மரியாதை வாழ்வு, அது அராஜக, அலங்கோல, அடாவடி வாழ்வல்ல, மாறாக அர்ப்பணிப்புத் தன்மை கொண்ட அரவணைப்பு வாழ்வு.  இதுதானே நம் வாழ்வாக இருக்க வேண்டும்.
நிலைபாடு எடுப்பது என்றால் என்ன?  வாழ்கின்ற சமூகத்தில், நிலவுகின்ற சூழலை சரியாகப் புரிந்து கொண்டு, அச்சூழலில் தன்னைச் சரியாக பொருத்திக் கொண்டு, இலட்சிய நோக்கிற்குகந்த சூழலை உருவாக்க நிலவுகின்ற சூழலை மாற்றவும், இச்சூழலில் தோன்றியுள்ள பிரச்சனைக்கு தீர்வு காணவும் போராட எடுக்கும் முடிவே நிலைபாடு.
சூழலைப் புரிந்து கொள்வது, சூழலில் பொருத்திக் கொள்வது, சூழலை மாற்றுவது, நிலைபாடு கொள்வது, போராடுவது ஆகிய அம்சங்களைக் கொண்டதே செயல்திறன்.  இச்செயல் திறனை கொண்டவனே செயல்வீரன்.  இச்செயல்வீரர்களாக நாம் ஆக வேண்டாமா?
சூழலை புரிந்து கொள்வது என்றால், தான் கண்டதை, கேட்டதை, சுவைத்ததை, சொன்னதை, பட்டதை, படித்ததை, யூகத்திலும், கற்பனையிலும் கலவை போட்டு சிருட்டித்தக் கொள்வது என்று கருதுகிறவர்கள் உண்டு.  அவர்கள் அஸ்தி வாரமில்லாமலே அறுபது மாடி கட்டப்பார்ப்பவர்கள்.
இயற்கை, சமூகம், சிந்தனை  ஆகியவற்றை உள்ளடக்கிய பேரண்டத்திற்கப்பால் எதுவும் இல்லை.  எப்போதும் இருந்ததில்லை.  இதற்குட்பட்டு இருப்பவை எதுவும் ஏகாந்தமாய் இருப்பதில்லை.  எப்போதும் இருக்க முடியாது.  இருப்பதை எதுவொன்றும் படைத்ததில்லை, ‘இருப்பு’ ஒன்றிற்கே படைக்கும் ஆற்றல் உண்டு.  இது என்ன புதிர் என்று எண்ணுகிறாயா?  இது பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.  இங்கே சுட்டிக்காட்ட விரும்பியது, மனிதன் உள்பட எந்தவொரு இருப்பும், தன்னந்தனித்து ஏகாந்தமாய் இருக்கவில்லை.  விரிந்த அல்லது குறைந்த பரப்பில், இடைவிடாது ஒன்றோடொன்று பாதிப்பு நிகழ்த்திக் கொண்டிருக்கும் எண்ணற்ற சுற்றுச் சார்புகளுக்கு மத்தியில்  தான் இருக்க முடியும். இருந்து  தீர வேண்டும்.  சமூகத்தின் நிலையும் இதுதான் என்பதையேயாகும்.

அந்தச் சுற்றுச்சார்புகளை, அவற்றிற்கிடையேயும், அவற்றோடும் உள்ள முரண்பாடுகளை எத் தன்மையான எவ்வகை முரண்பாடுகள் என்பதை, அம்முரண்பாடுகளுக்கிடையேயான போராட்டங்களை, அப்போராட்டத்தின் தன்மைகளை, வடிவங்களை, ஒட்டு மொத்தமாக புரிந்து கொள்வதுதான் சூழலைப்புரிந்து கொள்வது என பொருள்.

எதனை, நிர்மாணிக்கும் லட்சியத்தோடும், நோக்கத்தோடும் களம் வந்தோமோ, அதனை நிர்மாணிக்கத் தக்கச் சூழலை உருவாக்கவும், அதற்கு எதிராக நிலவுகின்ற சூழலை மாற்றிடவும், அந்த மாற்றத்திற்கான போராட்டத்தை நடத்திடவும், இருக்கின்ற சூழலை புரிந்து கொள்ள வேண்டியது தவிர்க்க முடியாதது.  தட்டிக்கழிக்கவும் கூடாதது.
இப்பேரண்டத்திலுள்ள எந்தவொன்றும் இயங்காதிருப்பதில்லை.  இருப்பின் இலக்கணமே இயக்கம்.  இயங்கி வருகின்ற எந்தவொன்றும் மாறாதிருப்பதில்லை. மாறாதிருக்கும் ஒன்று மாற்றம் மட்டுமே.  மாறுகின்ற எந்தவொன்றும் வளராதிருப்பதில்லை.  மாற்றத்தின் வடிவமே வளர்ச்சி, வளர்ச்சி, எக்காலும் பின்னோக்கி சென்றதில்லை, முன்னோக்கி மட்டுமே செல்லும்.  முன்னோக்கிய வளர்ச்சியை தற்காலிகமாக தடுக்கலாம், தேக்கலாம், முடக்கலாம் ஆனால்  அதனை அழித்திட முடியாது.  அந்த தற்காலிக தேக்கம்கூட வளர்ச்சி, அந்த தடுப்பை உடைத்தெறிய எடுத்துக் கொள்ளும் அவகாசமே தவிர வேறல்ல.  இதை மட்டும் இப்போதைக்கு மனதில் பதியவைத்துக் கொள்வோம்.  இது பற்றி பிறிதொரு சமயத்தில் பார்ப்போம்.

நிலவுகின்ற சூழலை மாற்ற போராடுவது நமது கடமையல்லவா?  இந்தச் சூழலில் வாழ்கின்ற சுற்றுச் சார்புகளிலே நாமும் இருப்பதால் இது நமது கடமையாகிறது.  கடமை உரிமையின் மறுபக்கமல்லவா?  அது துண்டாடப்பட்டு கிடக்கும் சூழலில் உரிமையை பெறுவது கடமையாகிறது.  உரிமையை பெற்றாலே விடுதலை கிட்டும்.  விடுதலை கிடைத்தாலே சுதந்திரம் மலரும்.  கடமையும் உரிமையும் இரண்டறக் கலந்ததல்லவா சுதந்திரம்.  எனவே சுதந்திர தாகம் சூழலை மாற்ற, போராட சக்தியூட்டுகிறது.

தனிநபர் நலனுக்கும் ஆதிக்கத்திற்கும் சுரண்டலுக்குமான அநியாய, அட்டூழிய, அடாவடி நடவடிக்கைகளைக் கூட போராட்டம் என சித்தரிக்கும் கேவலமான போக்கை இன்றைய காலத்தில் பார்க்கிறோமல்லவா?  அதுவெல்லாம் பேயாட்டமே தவிர போராட்டமல்ல.

ஒரு சமூகப் பார்வையோடும், லட்சிய கண்ணோட்டத்தோடும், உரிமை, விடுதலை, சுதந்திரத்திற்கான உணர்வோடும், அர்ப்பணிப்புத் தன்மையோடும், திட்டமிட்டு, ஒழுங்குப் படுத்தப்பட்டு, வரையறுக்கப்பட்டு நடத்தப்படும் மோதுதலே போராட்டம்.  இதன் உயர்ந்த கட்டமே போர்.
நிலவுகின்ற சூழலை புரிந்து கொண்டு, அதை மாற்றுவதற்காக நடத்தப்படும்  போராட்டத்தை எங்கிருந்து நடத்துவது?  மாற்றப்பட வேண்டிய சூழலின் மையத் திலிருந்தே, மாற்றத்தை விரும்பாத, மாற்றத்தை தடுக்கக்கூடிய நிலவும் சூழலை பாதுகாக்கின்ற சுற்றுச் சார்புகளுக்கு மத்தியிலிருந்து கொண்டே அச்சூழலை மாற்றப் போராடியாக வேண்டும்.  நிலவுகின்ற சூழலில்  தன்னைப் பொருத்திக் கொண்டு இந்த போராட்டத்தை நடத்தியாக வேண்டும்.

நீ  உற்றுப் பார்ப்பது புரிகிறது.  ஆம், களவாழ்வு கடினமானதுதான், களப்பணியை கண்டு மலைப்பவர்கள் அதற்கு பயிற்சி பெறாதவர்கள், பெற விரும்பாதவர்கள் அவ்வாழ்வை நடத்துவது கடினம்தான்.  ஆனால் அது நமக்கல்லவே.

வாழ்க்கையை போராட்டமாக, போராட்டத்தை வாழ்வாக அமைத்துக் கொண்டு, ஓய்வின்றி போராட்டத்திலும், ஓய்வு கொள்வது போராட்ட மாற்றத்திலுமாக வாழ்வு கொண்டால் நமக்கென்ன மலைப்பு, களைப்பு.
சூழலில் பொருத்திக் கொள்வது என்றால் என்ன?  நிலவுகின்ற சூழலில் தான், தனிமைப்பட்டு விடாமலும், நிலவுகின்ற சூழலில் தன்னை கரைத்துக் கொள்ளாமலும், நிலவுகின்ற சூழலில்  தனது தனித்துவத்தை இழந்துவிடாமலும் இருந்து கொண்டு அச்சூழலை மாற்றப் போராடுவது என்று பொருள்.

தனித்துவத்தின் மகத்துவத்தை எடுத்துணர்த்தி, அதன் பக்குவத்திற்கு உதாரணமாய் தன்னை அமைத்துக் கொண்டு, அந்த உறுதியின் பால் சுற்றுச் சார்புகளை ஈர்த்தெடுத்து, நிலவுகின்ற சூழலை நிரந்தரப்படுத்த, நியாயப்படுத்தும் உதிரிகளை ஓரங்கட்டி, ஒதுக்கித்தள்ளி, அந்த உதிரிகள் ஒன்றுபட்டு எதிரிகளாய், ஏவல் பூதங்களாய் எதிர்பட்டால், எதிர்த்து நின்று அவர்கள் உக்கிரமமாகி ஓங்காரமிட்டால் எந்த அக்னி பரீட்சைக்கும் ஆயத்தமாகி, சூழல் மாற்றமே புதிய வாழ்வின் வடிவ மாற்றம் என உணர்வு பெற்றோரை ஒருமை கொள்ளச் செய்து, அவர்கள் நம்பிக்கை கொள்ளவும், அவர்களை நம்பவுமான நிலைமையை உருவாக்குவது தானே புதிய சூழலுக்கான கரு.

இந்த பொருந்துதலை புரிந்து கொள்ளாமல், தனிமைப்பட்டு போகிறவன் நடைப்பிணம், தன்னை கரைத்துக் கொள்ளுகிறவன் மிதவை பிணம், தனது தனித்துவத்தை இழந்தவன் தற்கொலைப் பிணம்.
புதியச் சூழலின் கருவை உருவாக்க ஒருவனால் குத்தப்படும் முத்திரை, எத்தனையோ, சோதனை, சவால்களை, இன்னல், இடையூறுகளை, கசப்புக்கள், இழப்புக்களை எதிர்கொண்டு பெற்ற வெற்றியல்லவா?  அந்த வெற்றிக்குரியவன்தான் செயல் திறன் கொண்டவன்.  செயல்வீரன்.  அத்தகைய செயல் வீரர்களின் எளிய குடிலாக, உறுதிப் படுத்தப்பட வேண்டியது தானே தமிழர் தன்மானப் பேரவை.
 புரிகிறதா? ஏன் விழிக்கிறீர்கள்? நாம் மக்களிடமிருந்து கற்றுக் கொண்டதை தானே நினைவுபடுத்துகிறேன்.

ஆகஸ்ட் 2003, விடுமடல்-4

No comments:

Post a Comment