Monday, February 28, 2011

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-4

9. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி யானவைகள் என்னென்ன?
முதல் கட்ட போராட்டங்களில் வேலைப் பளுவைக் குறைக்கணும். 8 மணி நேரம் வேலை நேரம் நிர்ணயிக்கணும் என்பதுவும் ஒன்று. காலையில் ஐந்தரை , ஆறுக்க வேலையத் துவங்கினா இருட்டின பிறகுதான் கரையேற முடியும். உடனேயே கூலியும் பெற முடியாது. ஆட்கள் வேலை முடிந்த பிறகுதான் அன்றைய வேலையை மிராசதார் ஆழமா சர்வே பண்ணுவார். அடுத்த நாள் வேலை விவரமெல்லாம் காரியக்காரர் கிட்ட சொல்லி முடிச்சு அவரு வீட்டுக்கு வர ஏழு, ஏழரை ஆகும். அதுக்கு மேல பத்தாயத்த தொறந்து கூலி போட எட்டரை மணியாகிவிடும். பிறக அதைக் குத்தி அரிசியாக்கிச் சமைச்சுச் சாப்பிபட்டுப் படுக்க பதினொன்று, பன்னெண்டு ஆகிவிடும். அடுத்த நாள் வேலைக்க எழுந்து ஓடணும்.இப்படிச் சங்கடமான நிலைமை. அப்ப இதுக்காகப் போராட வேண்டியிருந்துச்சு. போராடி ஜெயிச்சாச்சு.
அதாவது காலையில் 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிறக 2 மணி முதல் 5 மணி வரையும் வேலை. 5 மணிக்கு வேலை முடியணும். அடுத்த கட்டம் என்னன்னா, உரிமைக்காகப் போராடுகிறது, ஜெயிக்கிறது பெரிசில்ல. அதை நடைமுறைக்குக் கொண்ட வர பெரிய போராட்டம் செய்ய வேண்டியிருந்தது. சாயந்தரமானா இன்னும் 5 மணி ஆகலைன்னு இருட்டுற வரைக்கும் வேலை வாங்கிறது. உடனே அதுக்கும் ஒரு முடிவு பண்ணினோம். வேலை துவங்கிற நேரம், சாப்பாட்டு நேரம், வேலை முடியற நேரத்தில் நம்ம விவசாய சங்கத்து ஆள் மரத்து மேல ஏறி தம்பட்டம் அடிப்பான். சில இடங்கள்ல தப்பு. சில ஊர்கள்ல கொம்பு ஊதுவான். அது ஒன்று, ஒன்ரை மைல் வரை கேட்கும். இப்படி அத நிலை நாட்டினோம்.
10. எல்லா ஒடுக்குமுறைகளிலும் முதல் இலக்கு பெண்கள் தான். இங்கே அவர்களின் நிலை எப்படி இருந்தது?
பொதுவாக வேலைகள் காரியக்கார், அடியாட்கள், பந்தோபஸ்து இந்த கட்டுப்பாட்டுக்குள்தான் நடக்கும். இதுல ஆண், பெண், குழந்தைகள்னு வித்தியாசமில்லாம ஒடுக்குமுறைக்கு ஆளாக வேண்டியிருந்தது. ஆட்கள், நடவாள்கள் வேலை செய்வாங்க. கைக்குழந்தைகளைக் கூட கருவ மரத்திலேயே தொட்டி கட்டிப் போட்டிருப்பாங்க. பெண்கள் நட ஆரம்பிச்சா குனிஞ்சபடியேதான் நடணும். நிமிரவுட மாட்டானுங்க. நடவு நடக்கும் போது பின்னாலேயே நிலப் பிரபுவோ, காரியக்காரனோ வருவான். கரையேறவும் முடியாது. தப்பித் தவறி ஒன்னுக்குப் போகனும்னா கூட வயல்லயே தான். அதுக்கும் இவன் பின்னாடியே நின்னா எப்படி? பின்னாடி நிக்காத ; முன்னால போ என்பதற்கே போராட வேண்டியிருந்தது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள். அவர்களை இழிவு படுத்துறது, மான ஈனப்படுத்துறது என்பதெல்லாம் ரொம்ப சாதாரணமா நடக்கம். நிலப்பிரபு மட்டுமல்ல ; அவனோட காரியக்காரன், அடியாட்கள் அத்துமீறலும் நடக்கும். திடீர்னு தெருவுக்குள்ள நுழைஞ்சு ஒரு பெண்ணைப் பிடிச்சு இழுத்துக்கிட்டுப் போவான். யாரும் கேட்க முடியாது கேட்க மாட்டார்கள். திரும்ப அவனா விடும்போது தான் வர முடியும். இதற்கெல்லாம் ஒரு மரண அடி கொடுத்தோன்.
மிராசுதாரர்களிடம் சொல்லியாச்சு. இனிமே இது மாதிரி எதுவும் நடக்கக் கூடாது. மீறி நடந்தால் எதிர் நடவடிக்கை இருக்கும்னு சொன்ன பின்னாலும் கேக்கல. நாங்களும் அப்படி நடந்தா அவன் எந்த கையாலும் இனி தொடக்கூடாதுங்கிற ஒரு கடுமையான முடிவு எடுக்க வேண்டியிருந்தது. நம்ம மக்கள் கிட்டயும் சொல்லியாச்சு. வாழறது மானத்தோட வாழனும். மானம் மானம்னு நான் சொல்றது உரிமையும், மரியாதையும் , நிலப்பிரபு சில நேரங்களில் உரிமையக் கூடத் தருவான் ; ஆனா தனக்குச் சமமான மரியாதை தர மாட்டான். அவன்என்னவோ அதையே தான் போலீசும் செய்யும்.
வடவூர் ஏ.எம்.பி. பண்ணையில் காரியக்காரர் சாம்பசிவம் சேர்வையின் மச்சான் ராஜமாணிக்கம். அது ஆய்மழை மைனர் ஏரியா. வடவூர்ல மதுரை, இராமநாதபுரம் பகுதிகள்லேர்ந்து ஆட்களைக் கொண்டு வந்து குடியாகவே வச்சிருந்தாங்க. பக்கத்திலேயே செட்டிச்சேரின்னு 10,15 வீடுகள் உள்ள நம்ம ஆளுக. மிராசுதார் பயம் காரணமா ரொம்ப நாள் நம்ப கட்சிக்கு வராம இருந்தவங்க.
அந்த ராஜமாணிக்கம் ஒரு நாள் மத்தியானத்துல வந்தான். வெள்ளையம்மான்னு ஒரு பொண்ணு. அத கைய புடிச்சிருக்கான். உடனே நம்ப ஆட்கள் அவனைக் கும்பலா கூடி அடிச்சு அவன் பிரக்கினை இல்லாம போனதும் பயந்து ஓடிட்டாங்க. நம்ம ஆள் ஒருத்தன் மட்டும் ஓடலை. அவன் ஓட முடியாதபடி நோயாளி. சோவை. ஒரு 25 வயசு ஆள்னானம் ஒன்னும் முடியாத ஆள். அவன் யோசிச்சுருக்கான். எப்படியும் செய்தி தெரிஞ்சு ஆள் திரண்டு வந்தா நாம மாட்டிக்குவோம். கொன்னுடுவாங்க. சாகப் போறது நிச்சயம். இவனுக்கு ஒரு பாடம் குடுத்துட்டுச் சாவோம்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கான். மெதுவா வீட்டுக்குள்ள போயி, அருவாள எடுத்து வந்து, அடிப்பட்டுக் கிடந்த ராஜமாணிக்கத்தோடு ஒரு கையை மட்டும் வெட்டித் தூக்கிப் போட்டுட்டான். அவனுங்க வந்த பாத்தாங்க. ஆள் யாரும் இல்ல. இவன் மட்டும் நிக்கிறான். அடிச்சா செத்திருவான்டான்ன சொல்லி எத்திவிட்டுட்டு ராஜமாணிக்கத்தை தூக்கிக்கிட்டு போயிட்டானுங்க. எதுக்குச் சொல்லேன்னா. ஒன்னுமில்லாதவனுக்குக் கூட இப்படி உணர்வு வரும். அதைக் கட்சி சரியா செஞ்சது. அதற்குப் பிறகு இந்த மாதிரி அத்து மீறல்களும், அயோக்கியத்தனங்களும் ஒரு முடிவுக்கு வந்துச்சு.

No comments:

Post a Comment