Tuesday, January 18, 2011

கெடுமைக்கு குடும்பமா? கடமைக்கு குடும்பமா?

கெடுமைக்கு குடும்பமா? கடமைக்கு குடும்பமா?

இணைமிகு தோழா!

குடும்பம் என்ற சொல்லும், வடிவமும், பிறப்பெடுத்த ஒவ்வொரு பிறவியோடும் நெறுக்கமாக பிணைப்புற்ற, இறுக்கமாய் கலந்துவிட்ட ஒன்றாகும்.  குடும்பம் என்றால் என்ன?  இனவிருத்தியை வடிவமாக்கிக் காட்டும் ஒரு குறியீடு.  தொடக்க காலத்தில் பாலுறவை மட்டுமே குறிக்கும் அந்த சொல், சமூக வளர்ச்சிப் போக்கில் பல்வேறு கேடான அம்சங்களை உள்புதைத்துக் கொண்டு, அத்தனையின் மொத்த வடிவமாக உருமாற்றம் கொண்டுவிட்டது.  ஆனாலும் பால்உறவு இனவிருத்தி என்ற அம்சங்களை மட்டும் அன்று தொட்டு இன்றுவரை அதன் மையப்புள்ளியாகக் கொண்டிருக்கிறது.  அக்குடும்பம் என்ற வடிவத்தின் மையத்திலிருந்து பால் உறவு இனவிருத்தி என்ற அம்சங்களை மட்டும் நீக்கிவிட்டால் குடும்பம் என்ற சொல்லின் கதி என்னவாகும்?  அந்த சொற்கூட்டில் உள்நுழைந்து, உருமாற்றம் கொண்டு, உறுதிப்படுத்திக் கொண்டிருக்கும் பல்வேறு அம்சங்களின் கதி தான் என்னவாகும்?
இதனை பற்றிச் சற்று விரிவாகப் புரிந்து கொள்ள ஆணிகால சமூக வரலாற்றுப் போக்குகளை கொஞ்சம் திரும்பிப் பார்த்திட வேண்டும்.
இயற்கையின் பரிணாமப் போக்கில் உயிரி தோன்றிய பின் இனவிருத்தி என்பது இயற்கை வழி இயல்பாயிற்று.  தன்னியக்கம் பெற்றுவிட்ட அனைத்தும் உயிரியாதலால், தாவரங்களிலிருந்து மனிதன் வரையான உயிரி பல பிரிவுகளை, வகைகளை, கட்டங்களை கொண்ட வடிவங்களைப் பெற்றிருந்தது.  அவசியத்திற்கானவை வடிவெடுத்தும், அவசியமற்றவை வடிவிழந்துமான நிலையில் நடந்த பரிணாமத்தின் விளைவுதான் மூளை என்ற உறுப்பின் சிந்திக்கும் திறனும், கரங்கள் என்ற கருவியின் உழைக்கும் ஆற்றலும் ஆகும்.   உணர்வு என்ற புறநிலை உண்மையின் பிம்பத்தை கண்டறியும் வல்லமையும், தன்மீது நிகழ்த்தப்படும் பாதிப்புக்களுக்கு திட்டமிட்டு எதிர் செயல்புரியும் வல்லாண்மையும், விரும்பா விளைவுகளையும் ஏற்று, விரும்பிய விளைவுகளை தோற்றுவிக்கும் வல்லாளுமையும் பெற்றதனால் மனிதன் ஆனான்.  மறுஉற்பத்திக்கான இனவிருத்தி இயல்பை இயற்கையாய் பெற்றான்.

விலங்கிலிருந்து வடிவெடுத்து வேறுபட்ட மனிதன் இனவிருத்திக்கு வரைமுறையற்ற புணர்ச்சி முறையை முறையோடு கடைபிடித்தான்.  நாளாவட்டத்தில் அவனது சோத்திரம் குழுக்களாகி பின் இனங்களாகி, அது குலங்களாகி, அடுத்து மக்களினமாகி, இன்று நாட்டினம் என்ற கட்டத்திற்கு உயர்ந்திருக்கிறது.  நீண்ட நெடிய இந்த வளர்ச்சிக் கட்டத்தில், பல்வேறு துறைகளிலும் முன்னோக்கி நாகரீகம் பெற்று வளர்ந்து கொண்டிருந்த போது, இனவிருத்தி முறையிலும் சில வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டியவர்களானார்கள்.

இரத்த உறவு குடும்பம், பிணை குடும்பம், இணை குடும்பம் என்ற கட்டங்களில் முன்னோக்கி நகர்ந்த இனவிருத்தி வரைமுறையற்ற புணர்ச்சி, தாயோடு உடலுறவு தவிர்ப்பு, உடன் பிறந்தாரோடு பாலுறவு தடை, ஒன்றுவிட்ட சகோதர்களோடு உடலுறவு நிறுத்தம், என உடல் உறவுக்கு கட்டுப்பாடுகளை வகுத்துக் கொண்டனர்.  உடலுறவுக்காக ஆணும் பெண்ணும் கொண்ட இணைவை மணம் என்றனர்.  அம்மண முறைகளும், வரைமுறையற்ற புணர்ச்சியானாலும் ஒரு வரைமுறையோடு நடந்து, தாய் வழி சந்ததி அடையாளம் காணப்பட்டபின், குழு மணம், பல கணவர் மணம், பலதார மணம், ஒருதார மணம் என்ற படிகளில் முன் சென்றது.  இன்றைய கட்டம் ஒருதார மண முறைக் கட்டம் என்றாலும் பழய அம்சங்களின் வாடை இன்றும் தொடர்கிறதல்லவா?
சகோதரன் மகளை மணம் செய்து கொள்ளாத சகோதரன், சகோதரியின் மகளை மணம் செய்து கொள்வதும், சகோதரியை திருமணம் செய்து கொள்ளாத சகோதரன், தாயில் சகோhதரனது மகளை திருமணம் செய்து கொள்வதும், சகோதரி மகளை திருமணம் செய்து கொள்ள உறவு கொண்டிருப்பதும் அந்த வாடையின் வீச்சுதானே?

இனவிருத்திக்காக ஏற்பட்ட குடும்பத்தின் இன்றைய நிலை என்ன?  ஒன்று, இன- விருத்திக்குக் காரணமான ஆண்-பெண் உடலுறவை அடிப்படையாக வைத்தே குடும்பம் என்ற வடிவம் தரப்பட்டது.  பாலியல் பேதமற்ற சமுதாயத்தில், தனிவுடைமை தோற்றத்தோடு குடும்பவடிவும் புதிய அழுத்தத்தோடு புணரமைக்கப்பட்டது.  தனிவுடைமை பாதுகாப்பு குடும்பத்தின் மையமாயிற்று, இனவிருத்தி பின்தள்ளப்பட்டது.
இரண்டு, உற்பத்தி உழைப்பில் ஆண்களோடு பங்கேற்று வந்த பெண்கள் அதிலிருந்து துண்டிக்கப்பட்டு, குடும்ப வேலைக்காரியாகவும், ஆண்களின் போகப் பொருளாகவும், வாரிசு உற்பத்தி ரோபோவாகவும் மாற்றப்பட்டு குடும்ப கூட்டில் சிறை வைக்கப்பட்டார்கள்,  பெண் அடிமையாக்கப்பட்டாள்,  ஆண் ஆதிக்கம் குடும்ப மையத்தோடு இணைக்கப்பட்டது.
மூன்று, சமூக விரிவுக்கான இனவிருத்தி என்பதற்கு பதில், தனக்குப்பின் தன் குடும்ப ஆதிக்கத்துக்கும், வாரிசு தயாரிப்புக்குமான கூடமாக குடும்பம் வடிவமைக்கப்பட்டு, ஆண்களை மட்டுமே வாரிசாக வரையறுத்து கொண்டு, இனவிருத்தி என்பதல்லாமல் வாரிசு உற்பத்தி என குடும்பம் கோணல்படுத்தப்பட்டது.

நான்கு, சமூக உடமையான உற்பத்தி கருவிகள், உற்பத்தி சாதனங்கள், உற்பத்தி பொருள்கள் தனியாருக்குச் சொந்தமாக்கப்பட்டு, தனிநபர் பங்களிப்பு, பங்கேற்பு, சமூக உறவுகள் பகைப்படுத்தப்பட்டு, மொத்தத்தில் ‘நாம்‘ என்ற உணர்வும் உண்மையும் தனிவுடமை குடும்பத்தால் ‘நான்‘ என்ற உணர்ச்சியும் பொய்மையுமாக்கப்பட்டு ‘தான்‘ என்ற ஆதிக்கத்தில் தனிநலனின் ஆயுதமாகவும், கேடயமாகவும் குடும்பம் வடிவுதரப்பட்டது.  அதன் விளைவு நான் உண்டு, என் குடும்பம் உண்டு, எனக்காகவே என் குடும்பம், என் குடும்பத்திற்காகவே நான், என்ற குறுகிய வட்டத்தில் சிக்கவைக்கும் வலையாக குடும் உருபெற்றது.

அய்ந்து, இயற்கையின் நிகழ்வுப் போக்குகளை, அதன் விளைவுகளை, புரிந்து கொள்ள முடியாமல், அதனின்று மீளவும், காத்துக் கொள்ளவும், அதனையே இறைஞ்சி வழிபடத் தொடங்கி காலப் போக்கில் அச்சம், அறியாமை காரணமாக பல கற்பனை வடிவங்களை தெய்வங்களாக்கி, குடும்ப வடிவம் கண்டபின் ஒவ்வொரு குடும்பத்துடனும் ஒரு குலதெய்வத்தை பிணைத்துக் கொண்டு குடும்பத்தையே கோயிலாக்கினர்.

ஆறு, தனியுடமைச் சமூகம் உருவெடுத்து, உழைப்பு பிரிவினைகளும் தொழில் பிரிவினைகளும் தோன்றி, சமூகம் பேதப்பட்டு, பல வர்க்கத்தட்டுக்கள் வகைப்படுத்தப்பட்டு, வர்க்கதன்மை குடும்பத் தன்மையோடு இணைக்கப்பட்டு, தனியுடமை அமைப்பு இருக்கம் பெற குடும்ப அமைப்பு தளமானது.

ஏழு, பார்ப்பனர்கள் தங்களது சமூக ஆதிக்கத்தை நிலை நாட்டிக் கொள்ள, பூர்வீக குடிகளின் வாழ்முறை அமைப்பில் தங்களது வருணாசிரம முறையை மோசடியாய் புகுத்தி, பெரும் திரளான பூர்வீக குடிகளை தங்களது ஆதிக்கத்திற்கு அடிபணிய வைக்க, சாதிப் பிரிவுகளை வர்க்கத்தட்டுக்களோடு சிக்கலாக்கி பிணைத்தனர்.  தொழில் பிரிவுகளை சாதிகளாக்கி, உட்பிரிவுகளை உள்சாதிகளாக்கி, பின் சாதி உட்சாதி பிரிவுகளை பிறவி ரீதியாக்கி, நால்வருண முறையோடு இறுக்கிக் கட்டினர்.

ஆந்த நால்வருண முறையை பகவான் படைத்ததாகக் கூறி, அதனை மீறுவது வணங்கும் ஆண்டவனின் ஆணைக்கும் விரோதம் என பயமுறுத்தி, தண்டனைக்கு விளக்கங்களை சாஸ்திரங்களில் சொல்லி வைத்தனர்.  இந்த வருண சாதி பிரிவுகளை வர்க்கப் பிளவுகளோடு பிணைத்து குடும்பத்தின் மையத்தில் ஆழமாக புதைத்து விட்டனர்.  வருண வர்க்க சாதிகளைப் பிணைத்து மணமுறையை தீர்மானித்து குடும்பம் தீர்மானிக்கும் சக்தியாக்கப்பட்டுவிட்டது.

எட்டு, உடல்நிலை கெட்டால் பூசாரி, மனநிலை கெட்டால் மந்திரவாதி, பிணக்குகள் வந்தால் பில்லிசூனியம், முக்காலமறிந்திட சாதக ஜோதிடம், நடப்பதறிந்திட குறிகாரன், எதிர்காலம் அறிந்திட கிளி ஜோஸ்யம், நினைத்தது நடக்க நேரம் நாள் நட்சத்திரன், வந்த தொல்லை நீங்க வேண்டுதல் பிரார்த்தனை, சங்கடம் தீர்ந்து விட்டால் வேண்டுதல் கடன், காணிக்கை, ஆபத்தண்டாதிருக்க முடிகயிறு, தாயத்து, வேலை தொடங்குமுன் சகுணம், சாஸ்திரம்.  இப்படி எண்ணற்ற மூடநம்பிக்கைகளை குடும்பத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் இணைத்து பிறவியிலேயே மூளைக்கு விலங்கிட குடும்பம் சாதனமாக்கப்பட்டது.
ஒன்பது, வேதம், புராணம், இதிகாசம், ஆகமம், சாஸ்திரம், ஆச்சாரம், அனுஷ்டானம் போன்றவைகளால் கடவுள் என்ற ஒற்றைச் சொல்லில், கடைந்த, செதுக்கிய, வரைந்த, பிடித்துவைத்த, உருவங்களை எல்லாம், வணங்கி வழிப்பட்டு வந்த வழிக்கு விடியல் தேடிக் கொள்ள சிந்தனையை சாகடித்த மடமைத்தனங்களையெல்லாம் குடும்ப ஐயூகமாக பிணைத்துக் கொண்டு, தேர் திரவிழா, பண்டிகை கொண்டாட்டங்கள், பூஜை புனஸ்காரம், அர்ச்சனை ஆராதனை, அபிஷேக கும்பாபிஷேகம் என கூத்தடித்து இருப்பதையும் கிடைப்பதையும் இழந்துவிட்டு, பசிக்கு வேலையும் வசிக்க கூலியுமாய் தேடியலைவதே ஆயுள் முழுதும் குடும்ப கடனாக்கப்பட்டது.  கடனாளியாகவும் ஆக்கப்பட்டது.  அதிலும் ‘இந்து‘ என்றால் எந்தமத தேர் திரவிழாவையும் கடவுளையும் விடமாட்டான்.  தூணிலும் இருப்பான், துறும்பிலும் இருப்பான், தூரத்திலும் இருப்பான் என்பதை குடும்பப் பிறவியாய் கற்றுக் கொண்டவனல்லவா?  ஆனால், துணிவும் துயரமும் இருக்கும் இடத்தில் மட்டும் அவன் இருக்கமாட்டான் என்பது புரியாத பிறவி.

பத்து, ஒரு குடும்பத்தில் ஒரு குழந்தை பிறந்தவுடன் தொடங்கும் கர்ப்பதோஷம் கழிப்பு - மாமன் தோஷ நிவர்த்தி - ஜாதகம் குறிப்பு - பிரசவத்தீட்டு கழிப்பு - தலைக் கூற்றல்  -நாமகரணம் சூட்டு - சுவடித்தூக்கு - கர்ணபூஷனம் - குல தெய்வ பூஜை - ருதமங்கள ஸ்நானம் - பெண் வீடு பார்ப்பு - மாப்பிள்ளை வீடு பார்ப்பு - ஜாதகப் பொருத்தம் - நிச்சயதார்த்தம் - பெண்ணழைப்பு - விவாகம் - சாந்தி முகூர்த்தம் - மறுவீடு அழைப்பு - சீதன சமர்ப்பனம் - கிரகப்பிரவேசம் - சீமந்தம் என தொடர்ந்து, செத்தபின்னும் விடாமல் அந்திமக்கிரியை - பால்தெளி - எட்டு - பதினைந்து - பாஷானஸ்தாபனம் செய்து கல் நிறுத்தல் - உத்திரக்கிரியை - திதி - திவஷம் - வருஷாப்பியம் - மாளைய அம்மாவாசை என வரிசைப்படுத்தப்பட்ட கருமச் சடங்கு சம்பிரதாயங்கள் ஒவ்வொருவருக்கும் என ஆக்கி, அவனே குடும்பஸ்தன் என கூறி குடும்பத்திலேயே அவளது அஸ்தமனம் என்ற நிலைக்கு உழலச் செய்ய குடும்பம் பயன்படுத்தப்பட்டது.

மேற்கண்ட அம்சங்களையெல்லாம் சேர்த்துக் குழப்பி கலவையாக்கி குடும்பம் என்ற பிறவிச் சிறையில் ஆயுள் கைதியாக ஒருவனை அடைத்துவிட்டால், குடும்பத்தைத் தவிர, அவனை காத்து வளர்த்துவருகிற சுற்றுச் சார்பு சூழலை, சமூகத்தை, உலகை, பார்க்க முடியாத குரடனாக்க சிறந்த ஆயுதம் வேறென்ன வேண்டும்?

தான், தன்வேலை, தன்  பெண்டு பிள்ளை, தன் சொந்தபந்தம், தன் ஜாதி என்ற செக்குமாட்டுப் பார்வைக்கு ஆளாக்கப்பட்டு, இயற்கை சமூகம் பற்றிய வரலாற்றுப் பார்வை ஏதமில்லாமல் தன் குடும்பத்தை மட்டுமே பார்க்கும் வகையில் குதிரைப்பட்டயம் கட்டப்பட்டிருக்கிறான்.

இதுவெல்லாம் கடவுள் இட்டவழி.  முன் வினைப்பயன், எழுதிய படிதானே நடக்கும் என விரக்தியினால் நடைப்பிணமாகி, இந்த கட்டுத்தளைகளை பாதுகாப்பதே குடும்ப மானம், குடும்ப கடமை என கருதத் துணிந்துவிட்டான்.  ‘நாம்‘ என்ற நிலையில் சமூக வாழ்வு நடத்திய பாரம்பரியத்தில் வந்த ‘நாம்’, ‘நான்’ என்ற வட்டத்தில் புதைக்கப்பட்டது ஏன்?  யார் செய்த சதி என எண்ணிப் பார்க்க வேண்டாமா? இன விருத்தி என்ற மறு உற்பத்திக்கு ஏற்பட்டக் குடும்பம் மக்களின் முழு அடிமைத்தனத்திற்கு அரணாகி, அவர்களது இழிநிலைக்கு அடித்தளமாயிற்று.  மறு உற்பத்தியும் மனிதர்கள் தான் செய்ய வேண்டும் என்ற அவசியமில்லாது ஆகிவிட்ட விஞ்ஞான உலகில், இயற்கை பசி தீர்வுக்கு ஆண் பெண் உறவு என்பது தவிர வேறென்ன இருக்கிறது?  எல்லா சக்திகளும் கநைகளம் சங்கமமாகும் குடும்பம் என்ற குப்பைக் குழியில் உழன்றாகத்தான் வேண்டுமா?  யோசிக்க வேண்டாமா?  அதற்குரிய காலம் கணியவில்லையா?

வெகுமக்களைச் சுரண்டும் உடமைவர்க்கமும், சமூக மேலாதிக்கம் செலுத்தும் உச்சி வருணமும் சேர்ந்து கொண்டு குடும்பத்தைக் கொடுமையின் குடோனாக்கி வைத்திருக்கிறது.  வருண வர்க்க ஜாதி பாலியல் பேதங்களை பத்திரமாக பாதுகாக்க, தாங்கள் அபகரித்துக் கொண்டிருக்கும் அரசியல் ஆதிக்கம், அரசு எந்திரங்கள் மட்டும் போதாமல் அனைத்தையும் உடமைப்படுத்திக் கொள்ள அனைத்து போதைகளும் ஊட்டப் பட்ட குடும் அமைப்புக்களும் அதற்கு தேவைப்படுகிறது.  குடும்ப வெறியூட்டி சொந்த, பந்த, பாச, நேச ஆசைகளைக் காட்டி, சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் எதிராக வெகுமக்கள் எழுச்சியுறுவாகி விடாமல் முடக்க வேண்டிய அவசியம் உச்சி வருணத்திற்கும் உடமை வர்க்கத்திற்கும் தேவைப்படுகிறது.

சமூக வளர்ச்சி சுரண்டும் ஆதிக்கக் கூட்டத்தின் விருப்பப்படி நடப்பதல்ல, அதற்கு மாறாக சுரண்டும் கூட்டத்தை ஒழிக்கும் படையை அவர்களே உறுவாக்கிக் கொண்டிருப்பது அவர்களே அறியாதிருக்கிறார்கள்.  அந்த அறியாமை குடும்பங்களில் சரப்பு  விஷயத்திற்கும் பொருந்தக் கூடியதல்லவா?

அன்பு தோழா! இந்த உண்மைகளைச் சொல்லும் போது, உதவாக்கரை உன்மத்தர் கூட்டம், இவர்கள் குடும்பத்தை ஒழிக்கச் சொல்லுகிறார்களா?  குடும்பமே கூடாதா?  குடும்ப பாரம்பரிய பழக்க வழக்க நடைஉடை பாவனைகளை ஒழித்துவிட்டு, காட்டு விலங்கு வாழ்க்கை வாழச் சொல்லுகிறார்களா?  என கூக்குரலிட்டு கூச்சல் போடுவது கேட்கிறாதா?
ஆதி சமத்துவச் சமூகம் பேதப்பட்ட சமூகங்கள் ஊடாக இறுதியில் விஞ்ஞான சமத்துவச் சமூகமாக மலரும் வளர்ச்சிப் போக்குகள் பற்றி ஏற்கனவேயே நாம் விளக்கியிருக்கிறோம்.  அப்படி ஏற்படும் வளர்ச்சிப் போக்கியான மாற்றங்களில் குடும்பம் மட்டும் அப்படியே இருந்து விடுமா?  முடியுமா?  அதுவும் மாற்றம்  கொண்டு ஒரு விஞ்ஞான நடைமுறையில் தன்னைப் பொருத்திக் கொள்வது தானே நியதி அப்படி மாற்றமுற்ற நியதியை குடும்ப ஒழிப்பு என்று அவர்கள் கருதினால், பொருள் கொண்டால் நிச்சயம் அதுதானே நடக்கும்.  சமூக பிளவு பேதங்களையும், மடமைகளையும், ஒழித்த இடத்தில் புதியவை நிர்மானித்துக் கொள்ளப்படுவதைப் போலவே, குடும்பம் என்பதற்கும் வாழ்க்கை அகராதியில் நடைமுறை அர்த்தம் உருதரப்படும் அல்லவா?  இன்றைய குடும்ப வளர்ச்சி திசை இதற்கான அறிகுறியை காட்டுகிறதல்லவா?  இதற்கான முன்னோடிகளை வரலாறு பதிவிட்டு விடுவதும் புரிகிறதல்லவா?

குடும்பத் தளையில் முற்றாக மூழ்கிக் கிடந்தவர்கள், சமூகத்திலிருந்து குடும்பங்கள் தனித்து சுருக்கப்பட்டிருப்பதையும், குடும்பங்களின் கூட்டாக சமூகம் இருப்பதையும், சமூக ஆதிக்கவாதிகளின் கருவியாக குடும்பங்கள் இருப்பதையும், குடும்பவாதிகள் சமூகவாதிகளானாலே ஆதிக்கவாதிகளின் அடிமைத்தனத்திலிருந்து மீளமுடியும் என்பதையும் அனுபவத்தில் புரிந்து கொண்டு, ஆதிக்கவாதிகளின் அடிமைத்தளையை ஒழித்திட குடும்பத்தளையின் கட்டுக்களை அறுத்தெறிய உணர்வு கொண்டனர்.
அதன் விளைவு பெரும்குடும்பங்கள் குலைந்து தனிக்குடும்பங்களானதும், உடன்கட்டை ஏறுதல் மாறி உடன் ஒன்றி வாழ்ந்ததும்; வருண வர்க்க பாலியல் கொடுமைகள் ஒழிக்க விடுதலை உணர்வுகள் ஓங்கியதும்; குடும்பக் கட்டுத்தளைகளைப் புரிந்து அதனை ஒவ்வொன்றாய் அறுத்தெறிய முனைந்ததும்; சொந்த பந்தங்கள் குறைந்து வருணவர்க்க பந்தங்கள் தலைதூக்கியதும்; மானப்பறிப்பு தெரியவந்து ஈன ஒழிப்பு எண்ணம் எழுந்ததும்; தனி நலவழி இழிவுவழி என கண்டு சமூக நலவழியே வாழ்வுக்குவழி என உணர்ந்ததும் படிப்படியாக எழுந்து, அசைந்து, நகர்ந்து விரைவுபட்டதன் மூலம் அடிமைத் தனம் அம்பலமானது; விடுதலை எழுச்சி வீச்சு பெற்றது.

இனிய தோழா! இன உணர்வு இன்றைய குடும்ப உணர்வு, இன உறவே இன்றைய குடும்ப உறவு; இன விடுதலையே இன்றைய குடும்ப விடுதலை, இன விடுதலையே நாட்டு விடுதலை; குடும்ப விடுதலையே சமூக விடுதலை; இனமானப் புரட்சியாகவும் பரிணமித்துக் கொண்டிருக்கிறது.
இந்த பரிணாமத்தை விரும்பாத சுரண்டலாதிக்கவாதிகள் மக்களைப் பார்த்து சொன்னார்கள்; நாடு உனக்கு, என்ன செய்தது என்று கேட்காதே; நீ நாட்டுக்கு என்ன செய்தாய் என்று, சொல்?  என கேட்கின்றனர்.  உன்னையும் உன்குடும்பத்தையும் சுரண்டி தன்னையும் தன் குடும்பத்தையும் கொழுக்க வைத்துக் கொண்டவர்கள்.

ஆனாலும் ஒவ்வொரு குடும்பத்தினரும் ஒன்றை புரிந்து கொண்டு வருகிறார்கள்; புரிந்து கொண்டாக வேண்டும்.  என்ன தெரியுமா?  நான் இல்லாமல் சமூகம் இல்லை; சமூகம் இல்லாமல் நான் இல்லை, நான் சமூகத்திற்குழைத்தேன்; என் உழைப்பைச் சமூகத்திருடர்க்ள் கொள்ளையிட்டனர்; கொள்ளையை மறைக்க குடும்பச் சிறையிலடைத்தனர்; கைதியான பின்னும் என் உழைப்பை விதவிதமாய் சூறையிடுகின்றனர்;  சிறையிலடைத்த அவர்கள் நோக்கமும் அம்பலமானது போக்கும் வெளிச்சமானது; ஏற்கனவேயே கட்டி வைத்த குடும்பச் சிறையில் என்னை கைதியாக்கிடவில்லை;  இனவிருத்தி இயற்கைதாபத்தில் இணைந்த எங்களைச் சற்றி கொடுமைகள் என்றும் சுவற்றைக் கட்டி அடைத்துவிட்டனர்.  நான்கு சுவற்றுக்கு  மத்தியிலான என் நடமாட்டத்தைத் தான் நான் பெற்ற சுதந்திரமாய் பறையறிவிக்கின்றனர்.  என் வாரிசுகளோ சிறை பிறப்புக்கள்.  இப்படிப்பட்ட அனுபவ அலறல் மெலிதாக கேட்கிறதல்லவா?

நேசமிகு தோழா!  குடும்ப வாழ்வை சமூக வாழ்வாக்கிக் கொண்டால், குடும்ப பணியை சமூகப் பணியாக்கிக் கொண்டால், இனவிருத்தி உணர்வும் உறவும், இனவிடுதலை உணர்வும் உறவுமாக மலர்ந்தால், இனவிடுதலைக்குப் போராடும் இனமானக் குழுவாக குடும்பங்கள் பரிணமிக்கும்.  இனவிடுதலை எழுச்சியுற்று இன போரில் தங்களை இணைத்துக் கொண்ட குடும்பங்கள் எதிர்கால வரலாற்றில் வாழ்வு பெற்ற குடும்பங்கள்; குடும்ப ஐயூகத்தில் மூழ்கி குடும்ப பழமைகளிலிருந்து மீளாது, இன உணர்வு, விடுதலை, போராட்டத்திலிருந்து துண்டிக்கப்பட்ட கடும்பங்களுக்கு அந்த குடும்பம் சிறை கூடம் மட்டுமல்ல சவக்கிடங்காகவும் ஆகிவிடுகிறது.  இன விடுதலை பெற்றச் சமூகத்தில் குடும்பத்தின் வடிவம் புதிய பொருள் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது. 
இந்த இன உணர்வு, உறவு, விடுதலை, போராட்டம் ஆகியவற்றில், இன்றைய உங்களின், உங்கள் குடும்பத்தின் பங்கென்ன?  என்பதே விடைகான எமந்துள்ள விண்மீன் தோற்றம் ஒத்த உணர்வோடு பங்கேற்பவை சத்தான குடும்பங்கள்.  தடம் மாறி இதை மறந்த, மறைத்த, மறுத்த குடும்பங்கள் சொத்தைகள் தானே?  இடும்பைக்கெல்லாம் வித்தான குடும்பத்தை கடமைக்குச் சத்தாக்கும் கடமைகள் நம்மீது சுமத்தப்பட்டிருக்கிறதல்லவா?

No comments:

Post a Comment