Tuesday, January 18, 2011

அமைப்பே பேராயுதம்

அமைப்பே பேராயுதம்

இணைமிகு தோழா!

உனது தொடர்ந்த நச்சரிப்பால், நான் உனக்காகவே எழுதிக் கொண்டிருந்த மடலம்சங்களை சற்று நிறுத்திவிட்டு, அமைப்புப் பணிகளை எப்படிச் செய்வது என விளக்கிடக் கூறிய உனது விருப்பத்தையும், நிறைவேற்றிட நினைத்து இம்மடலை தொடங்குகிறேன். இதனை எழுதுவது முழுக்க முழுக்க எம்மவருக்கும், நம்மவருக்கும் தானே தவிர, நம் அமைப்பிற்கும் நம்மமைப்பில் இணைந்து வினையாற்றிடும் உம் போன்றோருக்கும் தானே தவிர, வேற யாரோடும் வேறெந்த அமைப்போடும் பொருத்திப் பார்த்திட, இணைத்து எடைபோட, எள்ளளவும் கருதிடாதே. அதனை நீ செய்ய நினைத்தால் இதனை ஏற்றிட விரும்பாதோர் எரிச்சலடைவார்கள். இதனைப் பற்றிட முடியாதோர் தூற்றிட முனைவார்கள்.
நம் அமைப்பு ஒரு அறுதியிட்ட  அரசியல் புரட்சியமைப்பு. யானை போன்ற துடிப்புள்ள தோழர்கள் நம் அமைப்பில் ஆர்வமாக செயல்படுகிறீர்கள். எண்ணிக்கையில் குறைவானவர்களே என்றாலும் எண்ணியதை முடிப்பதில் நீங்கள் எண்ணிக்கையற்றவர்கள். எண்ணிக்கையற்று திரண்டு ஏமாந்ததன் விளைவாக எடுபிடிகளாகி, காக்க வேண்டியவைகளை கை கழுவிவிட்டு, நீக்க வேண்டியவைகளை நெஞ்சிலே திணித்துக் கொண்டு, நிலைமாறி, நினைவு தடுமாறி, நியாயவழி தவறி, நீதி முறைகெட்டு நீசர்களால் ஏனோதானோ வாக்கப்பட்டு, வாழ்ந்து கொண்டிருக்கும் பரிதாபத்திற்குரிய பெரும் கும்பலைவிட , குறைவான, அளவான, நிலையான, உறுதியான, உள்ளத்திடமான, உண்மை கண்டு, உறவறிந்து செயலாற்றும் வல்லமை கொண்ட உம்மையயாத்தவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். பாராட்டுக்குரியவர்கள்.

அப்படிப்பட்ட உம்மொத்தவர்களை என்னைப் போன்ற கிழடுகள் எச்சரித்துக் கொண்டும், எடுத்துரைத்துக் கொண்டும், ஈடுபட்ட செயலில் ஏற்பட்ட அனுபவங்களை தொகுத்து பாடமாக்கி, தொடரும் பாதைக்கு புதுமெருகூட்டிக் கொண்டும் இருப்பது உம்மவர்களுக்கு உரமூட்டவே தவிர உபத்திரவப்படுத்த வல்ல என்பதை புரிந்து கொண்டால் எங்களுக்கு மகிழ்ச்சி; என்ன மகிழ்ச்சி? நாங்கள் எங்கள் வரலாற்று கடமையைச்  செய்துவிட்டதில் ஏற்பட்ட பூரிப்பு.

வயதிலே முதுமை, உடலிலே கிழடு எனினும், அனுபவத்தால் இளமை உள்ளத்ததால் வாலிபம், இதுதான் முதியவர்கள் என்பதும், வயதிலே இளமை உடலிலே துடிப்பு என்றாலும் அனுபவத்தால் இளசு, மனத்தால் இளநீர் வழுக்கை, இதுதான் வாலிபர்கள் என்பதும், நாம் புரிந்து கொண்டிருக்கிறோம். நாங்களும் உங்களது உள்ளம் புரிந்து, உணர்வு கண்டு உட்புகுத்திடும் எங்களது அணுகுமுறைதான் தலைமுறை இடைவெளி ஏற்படுத்தி விடாது உறவிலே நேசமும், நெருக்கமும் கொள்ள, பாலமாய், பணியிடமாய், பரிணமித்திருக்கிறது.

நீங்களும், இணக்கத்திற்குரியவர்களல்ல. வணக்கத்துரியவர்களே. முதியவர்கள் என்றோ, அப்புறப்படுத்த வேண்டிய அந்த காலம், கழுத்தறுக்கலாமா இந்த காலத்தில் என்றோ, கருதி  தூர ஓடாது கடந்த கால பாடங்களை கற்று, நிகழ்கால படிப்பினைகளோடு இணைத்து எதிர்கால படைப்புகளைச் செய்ய மூத்தவர்களின் தொண்டும் தோழமையும், புதிய முத்திரை பதிக்கும் கருவி புரிந்து கொண்டதன் விளைவு, இறுக்கமான உறவாய், ஈடற்ற இணையாய் நம் பாசறையை உரம் கொடுத்து உருவாக்கியிருக்கிறது.

நம் அமைப்பு கருத்து செயல் இணைப்பின் கட்டமைப்பு, களப்பணியாளர்களின் வசிப்பிடம்; கருத்து செயல் பயிற்சிக்கு வகுப்பறை ஓர்மை உறவில் ஒத்த முடிவு, மொத்த செயலில் வேலைப்பிரிவு என்ற கூட்டு வாழ்வின் பணியிடம்; சித்தாந்த வழி கருத்து செயல் அறிக்கை கண்டு, சிந்தனை வழி அறிந்து,  விவாத வழி அதனில் தெளிந்து, அனுபவ வழி அதனில் கற்று, ஆய்வு வழி அதனை விளக்கி, வாடிடும் மக்கள் தளத்தில் நின்று இழப்பில் இன்பம் காணும் பண்பாளர்களின் பாடிவீடு. இதுதானே நம் அமைப்பு.

மடத்தில் கூடும் ஆண்டிகளைப் போல மடமையில் கூடி, புரட்டர்கள் விடும் சரடுகளைப் போல, வறட்டரட்டை அரங்கம் நடத்தி, வந்து சேர்ந்த வதந்திகளுக்கு வாய்ப்பந்தல் வரவேற்பளித்து, உண்மையை களைந்துவிட்டு உள்ளத்தை நிர்வாணமாக்கி, மனதுக்கு போதை ஏற்றி செய்து பிரிதலும், மறுநாள் கூடலுமாக கூடிக்கலைவதுதான் அமைப்பு என்ற நினைப்புள்ளவர்கள், வெந்ததாக நினைத்து வேகாததை தின்பவர்கள்; சாரம் என எண்ணி சக்கையை மெல்லுவர்கள்; இவர்கள்தான் அலங்கோலத்தை அமைப்பு என்பார்கள்.

நம் அமைப்பு ஒரு அரசியல் புரட்சியமைப்பு என தொடக்கத்திலேயே குறிப்பிட்டடோம். இது தேர்தல் கட்சியல்ல. மாறாக போராட்ட அமைப்பு. இது அரசாங்கத்தை கைப்பற்றும் கட்சியல்ல. அரசை கைப்பற்ற கருதும் அமைப்பு.

இது பட்டம் பதவிகளுக்கும் நாடாளுமன்ற நாற்காலிகளுக்கும் நாக்கை நீட்டும் கட்சியல்ல. ஒரு புரட்சியின் மூலம் ஆட்சியதிகாரத்தை மக்களைக் காக்கும் அமைப்பு. இது சபல மூட்டி சலுகை தந்து மக்களை வலையில் வீழ்த்தும் கட்சியல்ல. எழுச்சியை யூட்டி, அறிவைக் கூட்டி, வெகுமக்களை பயிற்றுவிக்கும் அமைப்பு. இது பணத்தை முதலீடு செய்து, பயமுறுத்துதலை அச்சாரமாக்கி, ஏழை எளிய பாமா வெகுஜனத் திரளை, சிறைபடிக்கும் கட்சியல்ல. இழப்பை வித்தாக்கி, விளை வேற்பை நாற்றாக்கி, களவாழ்வால் பயிராக்கி, தள உறவை காப்பாக்கி, கூட்டுழைப்பால் அறுவடை செய்து மகசூலை மக்களைக் காக்கும் அமைப்பு.

இதை படிக்கும் ஒரு கூட்டம், வார்த்தை அலங்காரங்களால் சொல்ஜால வித்தை காட்டி, சொகுசு வாழ்வுக்கு, சுரண்டல் நடத்த திட்டமோ என சொல்லக் கூடும். வாசகத்தின் மேனி பளபளப்பில் மயங்கி வாய் பிளப்பவர்களல்ல நாம்.வாசகத்தின் உள் நுழைந்து, அர்த்தம் கண்டு அர்த்தம் பொதித்து, எய்திடும் திசை கண்டு, பிரயோகிக்க வாழ்நிலையால் கற்றவர்கள்; சூழ்நிலையில் புரண்டல்ல, சூழ்நிலையை தலைகீழ் புரட்டிட.
களப்பணிக்கு அடித்தளமாக, காரியமாற்றிட காரணமாக அமைந்திடும் அமைப்புப்பற்றி மேலும் சில பார்த்திட வேண்டும்.
ஒரு சித்தாந்தம், ஒரு இலட்சியம், ஒரு நோக்கம், ஒரு கொள்கை, ஒரு குறிக்கோள், ஒரு திட்டம், ஒரு இலக்கு, கருத்து செயல் நிலைபாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் கருத்து செயல் அறிக்கையை இறுதிப்படுத்தி, அதனைப் புரிந்து, ஏற்று விசுவாசத்துடனும் அர்பணிப்புத் தன்மையோடும் அமுல்படுத்த உறுதி கொண்டு, நிலையயடுத்து செயலாற்றும் பேராயுதமாக வடிவமைத்துக் கொள்வது அமைப்பு. அப்படி வடிவம் தரப்பட்டது தான் நம் அமைப்பு.
நாலுபேர் அங்கத்தினரானாலும் நாலுகோடி அங்கத்தினரானாலும் அதுவும் அமைப்புதான் என்றால் அவை போலி அமைப்பு அல்லது புரட்டர்கள் அமைப்பு, புரட்சியமைப்பல்ல. புரட்சி அமைப்பு என்றால் அதற்கு ஒரு லட்சணம் ஒரு இலக்கணம் இருக்க வேண்டாமா?
கோஷ்டிகளின் கூட்டு, அமைப்பாகுமா?  தாதாக்களின் கோஷ்டி, அமைப்பாகுமா?முதலீடு போட்டு அரசியல் வியாபாரம் செய்ய ஆள் திரட்டும் ஒரு கூட்டம் அமைப்பாகி விடுமா? காட்சிகளைக் காட்டி, சூழ்ச்சியால் மக்களை மயக்க உருவெடுக்கும் கும்பலெல்லாம் அமைப்பா? ஒட்டு மொத்த சுரண்டல், ஆதிக்கத்திற்கு ஊரைச் சுரண்டி உலையில் போட்டு, ஆளைச் சுரண்டி அடிமையாக்க புறப்பட்டோரெல்லாம்  கூடினால், அதற்கு லேபிள் அமைப்பென்பதா? அன்னச் சத்திர அரசியல் நடத்தி அகப்பட்டதைச் சுரண்டிக் கொழுக்க, சேர்ந்த கூட்டம் அமைப்பாகி விட முடியுமா? ஒருகாலும் முடியாது. ஆக்கத்திற்கும் ஊக்கத்திற்குமுரியது அமைப்பு. அழிவிற்கும் நலிவுக்குமுரியது சிதைப்பு. அமைப்பு வேலை செய்வதை போன்ற போலி நடிப்பால் சிதைப்பு, அமைப்பாகி விடாது. கண்டு, தெளிந்து, அறிந்து, புரிந்து அமைப்பை அடையாளம் கண்டிட வெகு மக்கள் திரளுக்கு வெகுகாலமானாலும் அமைப்பு சிதைப்பாகி விடாது.
அமைப்பு என்றால் ஏதோ நமக்கு அப்பாற்பட்டது. நம்மை இரட்சிக்கக் கூடியது என கற்பனைக் கடவுளுக்கு தரும் மடமை விளக்கங்களை, புரட்சி அமைப்பிற்கும் கொடுத்து, அமைப்பை புரிந்து கொண்டதாக தலை யாட்டிட முடியாது. கூடாது.

கூட்டிணைந்த அங்கங்களின் பரஸ்பரத்தை அடிப்படையாகக் கொண்டது அமைப்பு. பரஸ்பர நம்பிக்கை, பரஸ்பர நேசம், பரஸ்பர விசுவாசம், பரஸ்பர அக்கறை, பரஸ்பர ஒத்துழைப்பு, பரஸ்பரம் கொண்ட சிந்தனை, உறவு, வாய்ப்பு, வாழ்முறை போன்றவற்றால் இறுக பிணைக்கப்பட்டது அமைப்பு.
இது மிகையாகத் தோன்றுகிறதா? தோன்றச் செய்யும். இப்படி ஒன்றைக் கட்ட முடியுமா என அய்யம் ஏற்படுகிறதா? ஏற்படச் செய்யும். பேதப்பட்டச் சமூகத்தில் பேதப்பட்ட வாழ்வு கொண்டிருப்போருக்கு, சமூகவுடமைச் சமூகத்தில் பேதப்பட்ட வாழ்வு கொண்டிருப்போருக்கு, சமூகவுடமைச் சமூகத்தில், மக்கள் வாழ்நிலையை மனதால் புரிந்து கொள்வது கடினமானது தான். சமூக உடமைச் சமூக வாழ்வை இறுதி லட்சியமாக ஏற்றுக் கொண்டிருக்கும், தொலை நோக்கு கொண்டவர்களாகிய நாம், எண்ணிப்பார்ப்பதில் இடையூறு என்னவிருக்கிறது? அப்படி நம்மிலும் யாருக்காவது தோன்றினால், அது பக்குவப் பற்றாக்குறை பாடமும், பயிற்சியும் அத்தட்டுப்பாட்டைப் போக்கும். ஆனாலும் முயற்சியே செய்யாது, முனைப்புக் கொள்ளாது, முடிவுக்கு வந்து நின்று எங்களத தான் புரட்சிக் கட்சி என புளகாங்கிதம் கொள்வது புல்லுறுவித்தனமல்லவா?
விவாதித்தல் , முடிவெடுத்தல், பாதுகாத்தல், அமல்படுத்தல், ஆய்ந்தறிதல், அனுபவமாக்கள் விளைவேற்றல் ஆகிய இதனை முறையாக, முழுமையாக, தடுமாற்றம் தடம் புரளலின்றி பொறுப்புணர்வோடு கடைப்பிடித்து நடைமுறைப்படுத்துகிறவர்களின் கூட்டுறவும் கூட்டிருப்பும்தானே அமைப்பு. இதுதானே புரட்சி அமைப்பு. அதனை விட்டுவிட்டு, அங்கா, இங்கா, எங்கே அமைப்பிருக்கிறது என கண்டுபிடிக்க கண்ணாமூச்சு விளையாடுவது அமைப்பை அறியும் இலட்சணமா?
தன்மை மட்டும் தனிமைப்படுத்தி, தன்னை மட்டுமே பார்ப்பதும், தன்னை விட்டு, எட்டா தூரம் எட்டிப் பார்ப்பதும், எங்கும் காணோமே நாம் சொன்ன அமைப்பை என ஏங்கி, ஏக்கப் பெருமூச்சு விடுவதும் எளிதான வேலை. என்றாலும் அமைப்பு கண்ணில் படாது. ஆனால் உன்னை விட்டு, என்னை விட்டு, நான் விட்டு நீ விட்டு நம்மை சுற்றிப் பார். அமைப்பின் நிழல் தெரியும்.

நான் தான் அமைப்பு. நான் மட்டும் அமைப்பல்ல. நான் இல்லாமலும் அமைப்பில்லை. தோழமை உறவில் தோற்றுவிப்பது அமைப்பு. கருத்தால், செயலால், நோக்கத்தால், உணர்வால் ஒன்றுபடுவது தோழமை. தோழமையின் உறைவிடம் அமைப்பு. உறைவிடம் கொண்டோரின் ஒட்டு மொத்தமே அமைப்பு. ஒருவர் மட்டுமே அமைப்பல்ல. ஒருவர் இல்லாமலும் அமைப்பல்ல. உறவால் காண்பது அமைப்பு. அமைப்பைக் காணும் உறவே தோழமை. அத்தகைய உறவில் நெருக்கம் கொண்டதால் தானே இணைமிகு தோழா என உன்னை விளிக்கிறேன்.

விவாதமில்லாத முடிவு. முடிவு இல்லாத இரகசியம். இரகசிய காப்பு இல்லாத செயலாக்கம். செயல்பாடற்ற விளைவேற்பு. விளைவேற்பற்ற ஆய்ந்தறிவு. ஆய்ந்தறிவற்ற  அனுபவம் ஆகியவை ஒரு போதும் அமைப்பாகாது.

எஜமானனின் சாட்டை வீச்சிற்கு பயந்த சேவகத்தை, பண்ணையாரின் ஆணைக்குப் பணிந்த அடிமைத்தனத்தை, தாதாவின் சுட்டுவிரல் நுனி பார்த்து பாயும் கூலி மாரடிப்புகளை, அவை ஆயிரக் கணக்கில் திரண்டு ஆட்டம் போட்டாலும் அமைப்பாகி விட முடியாது. அது சர்க்கஸ் விளையாட்டுக்களே. சர்க்கஸ் வித்தைக்காரர்களே.
புரட்சியமைப்பின் தோழமை கொண்ட சகாக்கள் சம உரிமை, சம உறவு சம வாய்ப்புக்குரியவர்கள். தோழர்களில் சிலருக்கு பொறுப்புகள் தரப்படலாம். அத்தகையோர் ஏற்பது பட்டம் பதவியல்ல. மாறாக உறுப்புக்கு தரப்பட்ட கூடுதல் சுமை. பொறுப்பு உறுப்பில் யாருக்கும் வெறுப்பல்ல. ஏனெனில் சிறப்பறிந்த வேலைப்பிரிவினை மற்ற  உறுப்புக்கும் பொறுப்பளித்துவிடுகிறது.

தன்னறிவு, தன்னம்பிக்கை, தன்னுறுதி, தன்னூக்கம், தன்முயற்சி, தன்னடக்கம், தன்னிழப்பு ஆகியவற்றின் கூட்டையும் கூட்டுறவையும் அகக் கட்டாக்கிக் கொண்டு அமைப்பு வடிவமையும் போது கூட்டிணைவும், கூட்டு முடிவும், கூட்டுச் செயலும், கூட்டு இழப்பும் கூட்டு ஏற்புமாக கூட்டு வாழ்வு மலர்வது அமைப்பு. அம்மலர் உண்மை, உழைப்பு, ஒழுக்கம், உறுதி, துணிவு, தொண்டு, தியாகம் ஆகியவற்றின் கூட்டால் மனங்களைக் கவரும் மணம் தருவது இயல்பே. இதுவெல்லாம் நல்ல கற்பனை, நல்ல ஜோடனை, ஆனால் நடக்கக் கூடியதா? என நம்பிக்கையற்றோரும் உண்டு. அப்படியயாரு அமைப்பு உண்டா என்றும் உரக்க கேட்பார்கள். அவர்களைப் பற்றி அலட்டிக் கொள்ள வேண்டியதில்லை. அவர்கள் வரலாற்றை மறந்தவர்கள். மறைப்பவர்கள். மறுப்பவர்கள்.

பேதப்பட்ட சமூகத்திலிருந்து மக்கள் எழுச்சியுறச்  செய்து புரட்சியாக்கி சம உடமைச் சமூகத்தை வடிவமைத்து, சமூக உடமைச் சமூகம் நோக்கி பயணிக்க வழிகாட்டுவது அந்த புரட்சி அமைப்பே என்பதை எவரும் மறுத்திட முடியாது. அதனைக் கட்டியமைப்பது, கடினமான செயலே என்றாலும் அதனைக் கட்டிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். வாய்ச் சவடால், வக்கனைப் பேச்சால் எதையோ, அதாக ஆக்கிட முடியாது. வரலாற்றுக் கடமையை ஆற்ற, தங்களை முழுமையாக கொடையாக்கிக் கொண்டவர்களால் தான் அது முடியும். முளைவிட்ட அந்த துளிரை தழைக்கச் செய்யும் முழு பொறுப்பும் எம்மவரையும், நம்மவரையும் சாரும் என நாம் உறுதி கொண்டிருக்கிறோம்.

அமைப்பும் சிதைப்பும் எதிர்புதிர் ஜீவியம் கொண்டவை. அவைகளுக்கிடையே எண்ணற்ற உரு கொண்டவை இருப்பினும் அவை நிலையற்று, நிலையாடி, ஒன்று நிலையான அமைப்பில் கலந்து சிறக்கும் அல்லலு சீர்குலையும் சிதைப்பில் சேர்ந்து சிதையும் அல்லது நிலையிழந்து இடையிலேயே மறையும்.

அன்புத் தோழா! நாமே அமைப்பாக, அமைப்பே நாமாக தவறியும் கீழே போடாது, எந்நோக்கமும் தரித்திருக்க வேண்டிய கேடயம் ஒன்றுண்டு. அக்கேடயம் தரித்த தோழனைத் தான் அங்கத்தினர் என்று கூற வேண்டும். கூற முடியும். அதனைத்தான் உணர்த்தலும் உணர்தலும் என்போம் அல்லது விமர்சனமும் சுயவிமர்சனமும் என்போம். இவ்வாயுதம் அமைப்பு வழி விரும்பாதோருக்கு கசப்பான மருந்து. வெறுப்பூட்டும் விருந்து. இக்கேடயத்தை தூக்கியயறிபவன் எக்காலத்தும் தோழனாக முடியாது. அமைப்பை அடையாளம் காண முடியாது.

வருமுன் அறியவும், எதிரிகளை எம்முனையிலும் எதிர்கொள்ளவும், இருப்பு முதல் எண்ணம் பெறவும், காலத்தில் களப்பணியாற்றவும், கட்டமைப்பில் வீரர்களை கூட்டமைக்கவும், உள் நுழைந்து ஒண்டிக்கிடக்கும் உளவாளிகளை உடன் கண்டழிக்கவும், நம்மவனாய் உள்பதுங்கி பகைவனுக்கு ஆளாயிருக்கும் துரோகிகளை அடையாளம் கண்டழிக்கவும் இக்கேடயம் தரித்த அமைப்பால் மட்டுமே முடியும். இதனை அழிக்க எவராலும் முடியாது. எதிரியை இது அழிக்காமல் தடுக்கவும் எதனாலும் முடியாது.

இனிய தோழா! அமைப்பைப் பற்றி புரிகிறதா? ஆம். அமைப்பாயில்லாதவன் அனாதை‡அமைப்பை இழந்தவன் அகதி. அமைப்பாயிருப்பவன் ஆளுமையாளன். இத்தகைய புரட்சியமைப்பாய் நாம் வீச்சும், விரிவும் பெற அதனை கட்டுவதெப்படி? அடுத்து பார்ப்போம்.

No comments:

Post a Comment