Tuesday, January 18, 2011

அமைப்பைக் கட்டுவதெப்படி?

அமைப்பைக் கட்டுவதெப்படி?
இணைமிகு தோழா!
சென்ற மடலில் அமைப்பைப் பற்றி பார்த்தோமல்லவா? அதனைப் பற்றி ஆழமாக யோசித்தாயா? ஒன்றைப் பற்றிய தொடர்ந்த சிந்தனைதான் அதனை ஊடுறுவி துளைத்து உட்புகுந்து அறிய உதவும் துரப்பணமாகும். ஒன்றைப் பற்றிய தொடர்ந்த சிந்தனை தூக்கத்தில் முடியும் போலிருந்தால், சிந்தனையை வேறொன்றுக்கு மாற்றினால் தூக்கம் விலகியோடும். பின்னர் ஏற்கனவே விட்ட இடத்திற்கு திரும்பி வி­யத்தைத் தொடர்ந்திடு. அதுதான் துரப்பணத்தைக் கூர்த்தீட்டிக் கொள்வதாகும். இந்த வழி உனக்கு சோர்வு தராது. களைப்பூட்டாது. மாறாக சிந்தனைக்கு ஊக்கமுட்டும். உத்வேக மூட்டும். சிந்தனையால் வடித்த முடிவை சிந்தனையால் மட்டும் உறுதிப்படுத்திவிடாதே. அதனை செயலில் வடித்து, வடிகட்டி முடிவாக்கிடு. அது வாழ்க்கைக்கு வழிகாட்டியாய் வடிவம் பெறும்.
சரி. அமைப்பைக் கட்டுவது என்பதில் ஆர்வம் கொண்டு விட்டீர்கள். நல்ல முடிவு. அமைப்பு என்றால் இயக்கம். அமைப்பைக் கட்டுவது என்றால் இயக்கத்தைக் கட்டுவது என்று பொருள். ஒரு புரட்சியமைப்பை எப்படிக் கட்டுவது என்பதை கொஞ்சம் பார்க்கலாம்.

அமைப்பு பல தட்டுக்களை, மட்டங்களைக் கொண்டது. அது இயங்கிட, அதனை இயக்கிட, சில விதி முறைகளால் நெறி படுத்தப்படும். அதன் இயக்கம் அரசு சட்டங்களுக்கு உட்பட்டதா அல்லது சட்டமற்ற பாதையையும் உள்ளடக்கிக் கொண்டதா அல்லது சட்ட முறைகளுக்கே எதிரானது என்பதைக் கொண்டு அதற்கு வடிவம் தரப்படும். இதனைப் பற்றியயல்லாம் நான் இந்தக் கடிதத்தில் எழுதப் போவதில்லை. அது பற்றி எழுதுவது, உளவுத்துறையின் செவிக்கும், உளவாளிகளின் பசிக்கும், துரோகிகளின் ருசிக்கும் வேண்டுமானால் மிக விரும்பிய விருந்தாக இருக்கலாம். அதற்குள் நாம் போக வில்லை. அவரவர்கள் அமைப்பின் இவ்வுள்ளம்சங்களை அவரவர்கள் நோக்கத்திற்கேற்ப அமைத்துக் கொள்ளட்டும். நாம் ஒரு சித்தாந்த திசைவழிப் பாதையில் சில இலட்சியங்களை ஏற்றுக் கொண்டிருக்கிற போராளிகளைக் கொண்ட ஒரு அமைப்பைக் கட்ட விரும்புகிறவர்கள். அத்தகைய அமைப்பால் மட்டுமே சமூக அடிப்படை மாற்றத்திற்கான ஒரு அரசியல் புரட்சியை உருவாக்கி, வழிகாட்டி, வெற்றிக் கொடி நாட்டிடச் செய்ய முடியும்.

சந்துக்கொருகட்சி.பொந்துக் கொரு கட்சி. தெருவுக்கொன்று, ஊருக்கொன்று என கட்சிகள், தடுக்கி விழும் இடமெல்லாம் கட்சிகள், தடுக்கி விழுவதே கட்சிகளால் என்ற நிலைமையில் இதுவும் ஒரு கட்சிக் காளானா? என ஏளனங்கள் எதிர்படுவதில் ஆச்சரியமில்லை. இன்றைய நாட்டுச் சூழலில் ஒரு அரசியல் புரட்சியை நடத்திட, தலைமை தாங்க தகுதியுடைய புரட்சியமைப்பு இன்றும் அடையாளப்படுத்தப்பட வில்லை. புரட்சியின் பாதையில் மக்களை ஈர்க்கும், புரட்சித் தலைமை இன்றைய எந்த கட்சிக்கும் இருப்பதாக மக்கள் ஏற்றிடவில்லை. நம்பகத் தன்மையும் ஏற்படவில்லை.

நமது அமைப்புதான் அத்தகைய புரட்சியமைப்பாகப் போகிறது என்று ஆரூடம் கணிக்க நாம் முற்படவில்லை. ஆனால் அத்தகைய அமைப்பின் அவசியத்தை மக்கள் உணரவும், அத்தகைய அமைப்பில் ஒன்று திரள, சிதறிக்கிடக்கும் போராளிகள் புது இணைப்பு கொள்ளவும், வரலாற்றைப் படைக்கும் மக்கள் அந்த வழிகாட்டும் அமைப்பிற்கு வடிவம் தர உதவிடவும் நாமும் நமது அமைப்பும் தரமாக விதைத்திருக்கிறோம் என்பதை மட்டும் உறுதியாக அறுதியிட்டு கூற முடியும். போலி விதையுமல்ல, உரமெல்லாம் விதையுமாகா. பண்படா நிலமுமல்ல. நிலப்பசிக்கு விதையுமல்ல.

அந்த விதை முளைவிடவும், பயிர் வளரவும், விளைச்சல் விளை பயனாகவும், நாமும் நமது அமைப்பும் பாதுகாவலாக நிற்போம் என்பதை மட்டும், தன்னிழப்பை மூலதனமாக்கிக் கொண்ட நம்மால் உறுதியாக சொல்ல முடியும். விதையை தோண்டும் பெருச்சாளிகள், மூளையைத் தின்றும் வி­ப் பூச்சிகள், பயிரைக் கெடுக்கும் களைகள், விளைமலரை கத்திரிக்கும் எலிகள், விளைச்சலை நாசமாக்கும் காட்டு விலங்குகள், விளைபயனை அபகரிக்கும் கூத்தறுப்பு கொள்ளையர்கள் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடும் இயற்கையின் இடைக்கோளாறுகள். இத்தனைக்கும் எதிர்நின்று, எதிர்த்தொழிக்கும் பணியே நமதும், நமது அமைப்பினதுமான பணி. அற்பணிப்புக்கு மக்களிடமிருந்து வந்த நாம் தயார். அறுவடைக்கு மக்கள் தயார். பணியை நிறைவேற்றுவதில் நமக்கென்ன தடை. தடைகளை தகர்ப்பதுதானே நம் பணி.

அத்தகைய புரட்சியமைப்பைக் கட்டுவது எப்படி? என்பதுதான் இம்மடலில் விளக்கு முனையும் நமது முயற்சி. கருத்து செயல் பற்றியயல்லாம் நாம் பல சந்தர்ப்பங்களில் பரிசீலித்திருக்கிறோம். அந்த வழியில் உறுதியாக நின்று இயக்கத்தைக் கட்டிட வேண்டும்.
விளக்கப் பிரச்சாரத்தால் கருத்தை விளக்கி, காரியத்தின் நியாயத்ததைப் புரிய வைத்து, கிளர்ச்சிப் பிரச்சாரத்தால் மக்களுக்கு உணர்வூட்டி, காரியத்தில் இறங்க வேண்டிய அவசியத்தைப் புரிய வைத்து, போராட்ட வடிவமைப்பால் களத்தில் இறங்கி, காரியத்தின் கட்டம் உயர்த்தி, அனுபவத்தால் கற்றலும் கற்பித்தலுமாக வளர்த்தெடுத்து, மக்களை ஈர்த்தெடுத்து, முன் நின்று, முன்நோக்கி நகரவும் நகர்த்தவும் வேண்டும்.
இதனைச் செய்ய பயிற்சியும், தேர்ச்சியும், முதிர்ச்சியும் பெறுவது இயக்கத்தைக் கட்டுவதில் திறன் பெறுவதாகும். பிரச்காரப் போராட்டத்தில் இயக்கத்ததைக் கட்டி, கட்டிய இயக்கத்தால் பிரச்சாரப்  போராட்டத்தை முன்னோக்கி உயர்த்தி, மாறி மாறி தொடர்ந்து செல்லும் இத் தொடர்பாதையில் வலிவும், வீச்சும், விரிவும் பெறச் செய்ய வேண்டும். இதனைத் தானே நீங்கள் செய்கிறீர்கள்?. செய்ய வேண்டும்.
இந்த வேலைகளை  கடமை புரிந்து செய்ய முனையாமல் முனைப்பு காட்டாமல், முன் நிற்கத் துணியாமல், முடிவோடு செயல்பட முடியாமல், வெறுமனே நின்று கொண்டு வேலைகள் செய்ய துடிப்புள்ளவர்கள் போல நடிப்பு காட்டுபவர்கள், என்ன செய்வது? எப்படி செய்வது? எதை செய்வது? எங்கே செய்வது? என புலம்புவதும் தெரிகிறது.

இயக்கத்தைக் கட்ட மக்களை ஈர்க்க வேண்டும். கொள்கை வழிபட்ட ஒரு சிறிய கூட்டு, தனது திட்டவட்டமான முடிவில், வேலைப் பிரிவினையோடு மக்களை நெருங்கி, அவர்களோடு நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, அவர்கள் ஒன்று திரளவும், கட்டுப்பாடு கொள்ளவும் முடியாமல் குறுக்கிட்டுள்ள தளைகளை அவர்களே உடைத்தெறிய பக்குவப்படுத்துவதன் மூலம் அவர்களை வென்றெடுக்க வேண்டும்.
வென்றெடுப்பது என்பதை, மந்திர ஜாலம் செய்து மயக்குவது என்றோ, காசு பணம் கொடுத்து விலைபேசுவது என்றோ, இல்லாத பொல்லாத, இயலாத, செய்யாத வாக்குறுதிகளைக் கொடுத்து வசியம் செய்வது என்றோ அவர்களுக்கு எடுபடியாக, வால் பிடித்து ஓடுபவர்களாக மாறி, அவர்களின் இரக்கத்திற்கும் கருணைக்கும் பாத்திரமாகி அவர்களை சரிகட்டுவது என்றோ, அச்சுறுத்தி, அராஜகம் செய்து, அடிதடி மூலம் அடிமையாக்கி ஆள் சேர்ப்பது என்றோ அர்த்தம் செய்து கொள்ள கூடாது.

இயக்கத்தை கட்ட முனைபவர் செல்ல வேண்டியது மக்கள் கூட்டத்திடம். யாரோ ஒருவரை வழிமறைத்து, தனியேயமர்த்தி மூளைச்சலவை போட்டு, நப்பாசைகளையூட்டி, சலனங்கொள்ளச் செய்து, வாய்பேச்சால் வளையம் கட்டி, அவர் மனதைக் கூட ஊடுறுவிப்பார்த்து அவர் வாழும் சூழலைக் கூட புரிந்து கொள்ளாமல் அலட்சியப் படுத்திவிட்டு, அந்த ஒருவரை மட்டும் சம்மதிக்க வைப்பதல்ல இயக்கம் கட்ட தொடங்குவது. இது வாடகைக் குதிரையை சவாரிக்கு தேடுவது போலவாகும்.

இயக்கம் கட்டத் துணிவோர், தான் வாழும் ஸ்தலம் மற்றும் அதனைச் சுற்றிய பகுதியிலோ அல்லது தான் தொழில் புரியும் அரங்கத்திலோ திரண்டிருக்கும் மக்களிடம் உரையாடி, உறவு கொண்டு அவர்களை புரிந்து கொண்டு, தன்னைப் பற்றி அவர்களும் புரிந்து கொள்ளச் செய்து, இதன் வழி தன்மீது நம்பகத்தன்மையை ஏற்படச் செய்வது, இந்த நட்பில் அவர்களது பிரதேச, தொழில் துறைகளில் தீர்வுக்கு அவசியமாகியுள்ள பிரச்சனைப் புரிந்து கொண்டு, அதனில் தலையிட்டு, ஆலோசனைகள் கூறி, நிலைபாடுகள் எடுக்க உதவி, அவர்களின் ஒன்றுபட்ட செயலின் மூலம் அத்தீர்வில் வெற்றி காணச் செய்து அவர்களது நம்பகத்தன்மையை உறுதிப்படுத்திக் கொள்வது.

ஒரு கட்டத்தில் தன் மீது அந்த மக்கள் கொண்ட நம்பிக்கையை, தனது அமைப்பின் மீதான நம்பிக்கையாக அவர்கள் உணரவும், கொள்ளவும் செய்வதே அவர்களை வென்றெடுப்பது என பொருள் அத்தகைய மக்கள் அமைப்பின் .....ஈர்த்தெடுக்கப்பட்ட மக்களாக அடையாளப் படுத்தப்படுவர்.
அப்படி வென்றெடுக்கப்பட்ட மக்கள் கூட்டம், மூன்று முக்கிய பணிகளுக்கு தங்களை இசைவாக அமைப்புடன் இணைத்துக் கொண்டிருக்கிறது. ஒன்று, தங்களுக்குப் புறத்தே, தாங்கள் தொடர்பு கொண்டிருக்கும் வெகுஜனத்திரளை, தங்களது அமைப்பின் பக்கம் ஈர்க்க, தளமாக பணியாற்றும். அமைப்பின் அர்ப்பணிப்புத் தன்மையோடு பணியாற்றும் போராளிகளை அடையாளம் காட்டி பாதுகாத்து அமைப்பைப் பலப்படுத்தும் தளமாகவும் பணியாற்றும். வெகுஜனத் திரளுக்கெதிரான எதிரிகளை எதிர்த்து களப்பணிக்கு அரணாகவும் பணியாற்றும். அதுவே புரட்சிகரத் தளமாகும். இதனைச் செய்யும் போது, அமைப்பில் இணைவு கொண்ட ஒவ்வொரு அங்கமும் ஒரு விதத்தில்  தன்னை பக்குவப்படுத்திக் கொண்டிருக்கும். தன்னை பாதுகாக்கும் பொறுப்பு அமைப்புக்கு உண்டு என்பதையும், தனது தனிப்பட்ட நடவடிக்கையால் ஏற்படும் விளைவுகள் பாதகமானதாயிருந்தால் அதை தானே ஏற்றும், சாதகமானதாயிருந்தால் அதனை அமைப்பிற்கான ஆக்கியுமான பாத்திரம் வகிக்க பக்குவம் கொண்டிருக்கும். அந்த பக்குவத்தை ஏற்படுத்துவது தானே இயக்கத்தைக் கட்டுவது? இதுவும் புரியவில்லையா?

அமைப்பை போர்வையாக்கி, ஆதாயத்தை தனாக்கி, அராஜகத்தை முதலாக்கி, அகப்பட்டவர்களை அடிமையாக்கி, சுரண்டலை தொழிலாக்கி, சுகபோகத்தை வாழ்வாக்கி, நீதியை நிர்மூலமாக்கி, நீசத்தை நிர்வாகமாக்கி வாழ, கூடுவதும், கும்பலாவதும், கும்மாளமிடுவதும் அமைப்பைக் கட்டுவதாகிவிடாது. மாறாக ஆதிக்கத்தை நிலை நாட்டுவதாகும். அதற்கு தேவைப்படுவது அநியாய வழியும், அட்டூழிய செயலும் அரிவாளைத் தீட்டுவதும் தான். இவை, வெகுமக்கள் திரளை ஈர்க்கும் வழிக்கும், எதிரிகளை, அவர்கள் மக்களையும் அமைப்பையும்  தாக்கவரும் அவர்கள் கோணத்திலேயே எடுக்கும் எதிர் செயலுக்கும், அமைப்பு என்ற பேராயுதத்தை கூர்மை தீட்டுவதற்கும் எதிரானதாகும்.
அப்படியானால் அமைப்பைக் கட்டுபவருக்கு தேவை தான் என்ன? சித்தாந்தம், கொள்கை, செயல் வழி தெளிவும், புரிவும் அடிப்படையாகத் தேவை என்பது ஏற்கனவேயே விளக்கப்பட்டிருக்கிறது. மேலும் குணம், மனம், இதம் பதம், முயற்சி, பயிற்சி, அறிவு, பரிவு, கடமை, உரிமை, அன்பு, பண்பு, பாசம், நேசம், அக்கறை, மரியாதை போன்றவைகளைக் கொண்ட அணுகுமுறை அவசியமாகும். அவை தெளிவானதாகவும் திட்டமிட்டதாகவும், புரிதலோடும், எச்சரிக்கையோடும் கூடியதாயிருக்க வேண்டும். இந்த அணுகுமுறை மக்கள் திரளில் உள்நுழைந்து, உறவு கொண்டு, அனுசரிப்போடான ஈடுபாட்டில் உறுதிப்படுத்திக் கொண்டு, செழுமை படுத்திக் கொள்ள வேண்டியதே தவிர, கடையில் விற்கும் சரக்கல்ல. விலைக்கு வாங்கும் பண்டமுமல்ல. சுயஈடுபாடு, சுயகல்வி, சுயசிந்தனை, சுயநம்பிக்கையோடு கற்றாக வேண்டிய, பெற்றாக வேண்டிய சுயஅனுபவமல்லவா?

அமைப்பைக் கட்டும் பணியிலிறங்கும் போது, தங்களது கொள்கை, திட்டங்களை திணிப்பது தான் மக்களை ஈர்ப்பது என அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. அந்த கொள்கை திட்டங்களின் அவசியத்தை புரிந்து கொள்ளச் செய்வதே மக்களை ஈர்ப்பதில் முதல் பணி.
பேதப்பட்டச் சமூகத்தில் பிரச்சனைகளை புதிதாக உருவாக்க வேண்டியதில்லை. புதிதுபுதிதாக தோன்றிக்கொண்டிருப்பதையும் தடுக்க முடியாது. அந்த பிரச்சனைகளின் சரியான தீர்வுக்கு போதனையளித்து, போராட்டக் களத்தில், வழி காட்ட முனைந்தால் மக்களை வென்றெ டுப்பதில் சிக்கல் இல்லை. அத்தகைய அமைப்பு இல்லாவிட்டால் ஏமாற்றுக் காரர்களும் எத்தர்களும் சுயஇலாப சுகபோக நோக்கிலான பித்தலாட்டக் காரர்களும், போலித்தனமாக அமைப்பு, இயக்கம் என்ற பேரால், மேடை லாவணிகளில் வழிதேடி அலையும் மக்களை மயக்கி, அலைகழித்து, அலுத்து சலிக்கச் செய்து விரக்தியாக்கி, சீரழித்து விடுவார்கள். அதைதான் இன்று செய்து கொண்டிருக்கிறார்கள்.
இச்சந்தர்ப்பத்தில் ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும். இயக்கத்தை கட்டப் புகுந்தவர்கள், நிலவுகின்ற சூழலைப் புரிந்து, பொருந்தி அதில் கரைந்து விடாது, தனித்துவத்தை இழந்து விடாது, தனிமைப்பட்டும் விடாது, அச்சூழலை மாற்றுவது என்ற மனவோட்டத்திலும் செயல் நாட்டத்திலும் மக்களைத் திரட்டி அவர்கள் மனதை சிறிது கிண்டி, கிளறிவிட்டால் அவர்கள் போட்டு புதைத்திருக்கும் புழுக்கங்களும் இரகசியங்களும் மடைதிறந்து வெளிப்படும்போது அவர்களது உணர்வுகளில் எழுச்சிகள் கொப்பளித்துவருவது தெளிவாகப் புரியும்.

அத்தகைய எழுச்சிகளை கண்டவுடன், இயக்கம் கட்டுவோர் உணர்ச்சி வெறியூட்டி, அவ்வெழுச்சிகளை வெறியாக்கி, சிக்கலாக்கி  சீர்குலைத்து விடக் கூடாது. கேட்டறிந்த, கண்டறிந்த உண்மைகளை உறுதிப்படுத்திக் கொண்டு, அமைப்பு வழிமுறையில் நின்று திடமான நிலை எடுத்து, அதற்கான மக்களின் உணர்வு மட்டத்தை உறுதிப்படுத்தி, மக்களின் திறன் வெளிப்பட முன்னின்று வழிகாட்டுவது கட்டுவோரின் கடமையாகும்.
இதுவெல்லாம் சரிதான். இயக்கத்தைக் கட்ட பணம் வேண்டாமா? இதுவும் கேள்விதான். ஆனால் அலட்டிக்கொள்ள அவசியமில்லாதது. தோற்றுவிக்கப்படும் அமைப்பு, கொள்கை செயல் திட்டங்களையும் நெறிமுறைகளையும் தீர்மானித்துக் கொள்வது போல, இந்த பிரச்சனைக்கும் தீர்வு கண்டுகொள்ளும். கண்டு கொள்ள வேண்டும்.
ஆனாலும் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்றுண்டு. அமைப்பைத் தொடங்கும் போதே, நவீன விளம்பரங்கள் , கூலிக்கு கூட்டம் திரட்டல், மேடை அலங்கார கவர்ச்சிகள், குதூகல விருந்துகள் போன்றவைகளோடு தொடக்குவது. அந்த பகட்டோடே தொடர்வது என்பதல்ல புரட்சி அமைப்பைக் கட்டுவது. முதல் போட்டு நடத்தும் நிறுவனத்தில் ஒன்றல்ல அமைப்பு.

மக்கள் அமைப்பை நம்புகிறார்கள். நேசிக்கிறார்கள். மக்களை அமைப்பு நம்புகிறது.நேசிக்கிறது. அதோடு கூட அர்ப்பணிப்பாளர்களின் கோட்டையாக இருக்கிறது. மக்கள் பிரச்சனைகளை தூக்கிக் கொண்டு தீர்வுக்கு முனைகிறது. முன்நிற்கிறது. முன்செல்கிறது. மக்கள் அதனை தங்கள் அரணாக கருதுகிறார்கள். ஆளை நம்பி அமைப்புக்கு வந்து, அமைப்பையே அரணாக்கி கொள்கிறார்கள்.  ஆனால் ஆளை அல்ல. அந்த ஆளும் மக்கள் தன் மீது வைத்த நம்பிக்கையை அமைப்பிற்குரியதாக்கு கிறாரே தவிர, தன்மீதும், தன் குடும்பத்தின் மீதும், தன் நலனின் மீதும் மட்டும் பத்திரப்படுத்திக் கொள்வதில்லை. காரணம் அந்த ஆள் தன்னை தனி ஆளாக கருதுவதில்லை. அமைப்பின் வாழ்வில் தன் வாழ்வை பிணைத்துவிடுகிறாரல்லவா?

எனவே தங்களுக்கு அரணான அமைப்பை பாதுகாப்பது மக்களின் வாழ்வோடு பிணைப்புற்ற ஒன்றாகிவிடும் போது, பாதுகாப்பு அம்சங்களில் ஒன்றான பொருளாதாரம், மக்களின் வாழ்வு அம்சங்களோடு பிணைந்து விடுகிறதல்லவா? கட்டுபவருக்கு ஏன் தனிக்கவலை?
அன்பு தோழா!அது சரி. விளக்கம் வியாக்கியானம் கேட்பதற்கு இரம்மியமாகத்தான் இருக்கிறது. கட்டுகிறவனுக்கல்லவா கஷ்டம் தெரியும் என நீ முறைத்து பார்ப்பது தெரிகிறது. நீ சற்று நிதானமாக எனது விளக்கத்தின் உள் நுழைந்து, கொஞ்சம் நுணுக்கத்தோடும் நுட்பத்தோடும் புரிந்து கொள்ள முயற்சித்தால், முகக்கடுப்பு மாறி முக மலர்ச்சி தோன்றும்.

இயக்கத்தைக் கட்டுவது ஒருவழிப்பாதையல்ல. புரட்சி வெற்றி பெறவும் அதற்கான திரள், தளம், களம், தயாரிப்புக் கூடம் போன்றவற்றில் பணியாற்றிடவும், உகந்த வகையில் கட்டப்பட வேண்டிய பிரிவுகளைக் கொண்டது இயக்கம். எதுவாயிருந்தாலும் புரட்சியை நோக்காக, இலக்காக, எல்லையாகக் கட்டப்படுவதாகும்.

ஒரு காலத்தில் அமைக்க எட்ட நின்றவர்கள், பின் எட்டிப் பார்த்தவர்கள், அடுத்து தொட்டு இரசித்தவர்கள், அதன்பின் தலை நுழைத்து அறிமுகமானவர்கள், தொடர்ந்து பழகியவர்கள், இணைந்தவர்கள், பட்டறிவால் தளத்தில், களத்தில், பட்டறையில் பயிற்சி பெற்றவர்கள், பாடம் கற்றவர்கள், இறுதியாக கற்கவும், கற்பிக்கவும், செய்யவும் செய்விக்கவும், தேர்ச்சியுற்று வழிகாட்டியாக வளர்ந்துள் ளவர்கள். அத்தகைய வழிகாட்டியாகிய நீங்கள் புரட்சி திசைவழியிலான பயணத்தில் பல்வேறு பொறுப்புகளைச் சுமந்து வேலைப்பிரிவினைகளை நிறைவேற்றி, ஒட்டுமொத்த வேலைக்கும் ஒத்த பொறுப்பேற்கும் நிலைக்கு உயர்ந்திருக்கிறீர்கள்.

இதனை அறியாதவர்களும், அறிந்து மறந்துவிடுபவர்களும் பலருண்டு. ஒருவரைப் பார்த்தவுடனே நம்மாளாகி விட்டார் என கண்டு கொண்டு, அவனை எட்ட உதைத்து எட்டிக் காயாய் எண்ணுவதும் ஏற்படுகிற தல்லவா? ஏன்? கண்ட அவனை, நம்மாளாக வேண்டியவர் என்று கருதுவது சரியானது. ஆனால் அவன் நம்மவராகிவிட்டார் என்ற பார்வை பழுதுதானே?  காதல் பார்வையில் கட்டுவதல்ல இயக்கம். புரட்சியின் நோக்கில் எச்சரிக்கையோடு கட்டியியக்குவது இயக்கம் என்பதை விழிப்பாக்கிக் கொண்டிருக்க வேண்டும்.

கால கட்டம் கண்டறிந்து, கடமையாற்றிட வேண்டியவர்கள், கயமைத்தனத்தால் அடிமையாக்கிடும் சாதகர்களை, அடையாளப்படுத்தி அம்பலமாக்கி, அந்த காலிகளை அழித்திட கடமையாற்றும் திரளில் புகுந்து, கட்டறுந்து நிற்பவர்களை, ஒரு கட்டமைப்பில் வென்று கட்டுப்பாடு டையவர்களாக்கி, கடமையை புரிந்து கொள்ளச் செய்து விழித்தோம்! எழுந்தோம்! நடந்தோம்! வீறு கொண்டு வேகம் பெற்றோம்! விரைந்திட தயாரானோம் என்ற எழுச்சியுணர்வில் செல்லும் எல்லை நோக்கிச் செல்ல அவர்களை ஏற்றிச் செல்வது தானே அமைப்பு? மக்கள் இதனை ஏற்கச் செய்து விட்டால் அமைப்பு அவர்களின் பேராயுதமாகிவிடுமல்வா? இதைதானே இயக்கத்தை கட்டுவது என்கிறோம்.

அமைப்பு நான் தரித்து விட்ட ஆயுதம். அதனை நான் யாரிடமும் தர மாட்டேன். அது எனக்கு மட்டுமே பாதுகாப்பு என எண்ணி அதை இறுகப்பிடித்துக் கொண்டால் என்னவாகும்? கத்தி என்ற ஆயுதம் கூர்மையானது தான். அதுவும் தீட்டப் பட்டுக்கொண்டேயிருந்தால் மிகவும் கூர்மையானது. தீட்டாமல் விட்டால் கூர் மழுங்கித் துருபிடிக்கும். அதனை எனக்கு மட்டுமே உரியது என இறுக்கிப் பிடித்தால் , எதிரி மீது பாய வேண்டிய கூர்மை தீட்டியவன் மீதே பாயாது என்பதற்கு உத்திரவாத முண்டா? இதனை புரிந்து தானே ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும்.
அமைப்பு என்ற ஆயுதத்தை படைத்திடும் தனிநபர் ஆற்றலைவிட பன்மடங்கு ஆற்றல் கொண்டதாக மாறிவிடும் படைப்பாகி விடுவதல்லவா அமைப்பு? அத்தகைய அமைப்பை கட்டிடு! அதில் கலந்திடு! அமைப்புதான் தெரிகிறது. அதன் மூலம் அதிலுள்ளோரின் ஆற்றல் தொகுப்புதான் தெரிகிறது. அவர்களின் முகங்கள் தெரிவதில்லை. ஒரு கூட்டில் ஒன்றுபட்டு இரண்டறப் பிணைந்துவிட்ட ஆற்றலைப் பிரித்துப்பார்க்க எதிரிகளுக்கு புத்தியில்லை. முடியாது. அந்த புத்தியை ஆற்றலின் எழுச்சி சாகடித்துவிடும்.

இனிய தோழா! இத்துனைக்கும் பின்பும், அமைப்பை எப்படிக் கட்டுவது என்ற வினாவைக் கிளப்புகிறவர்கள், கரையில் உட்கார்ந்து கொண்டே, சுழலும் புழலும் நிறைந்து பாய்ந்தோடும் ஆற்று நீரில் நீந்தி கரை சேர்வதாக கற்பனை செய்யும் பிறவிகள் அல்லவா? கட்டுமஸ்தான உடல் பெற்ற கட்டழகன், கற்பனைகளை மிஞ்சிவிட்ட கட்டழகியை கட்டிப் பிடித்தபடி, கட்டிலில் கிடக்கும் காளை, உடலின்பம் கண்டு உணர்வின்பம் கொள்வதெப்படி என கேள்வி எழுப்புவதை விட இவர்கள் மோசமானவர்களல்லவா?

No comments:

Post a Comment