Tuesday, January 18, 2011
நமது சித்தாந்தம் பெரியாரீயம்
இணைமிகு தோழா!
நாம் ஏற்றுக் கொண்டிருக்கும் தத்துவம் பெரியாரியம். நமது சித்தாந்தப் பார்வை பெரியாரீயமே. பெரியாரீயம் என நாம் உச்சரிக்கும் வார்த்தையின் இலக்கண வரையரை, இந்தியத் துணை கண்டச் சூழலில், ‘செழுமைப்படுத்தப்பட்ட மார்க்ஸீயமே பெரியாரீயம்’ என்பதாகும்.
‘இயக்கவியல் பொருள் முதல் வாத’மும், அவ்வியக்கவியல் பொருள் முதல் வாதத்தைப் பிரயோகித்து பிரபஞ்ச தோற்றம் வளர்ச்சி, நிகழ்வுப் போக்குகள் பற்றி ஆய்ந்து வெளிப்படுத்திய ‘வரலாற்று பொருள் முதல் வாத’மும் இணைந்த சித்தாந்தமே மார்க்ஸீயம்.
‘வரலாற்று பொருள் முதல் வாத’ப் பார்வையில் சமூகப் புரட்சியை கண்டறிய முற்பட்ட மார்க்ஸ், அன்றைய வரலாற்றுக் கட்டத்தில் வளர்ச்சி மட்டத்தில் உயர்ந்திருந்த ஆங்கில பொருளாதாரத்தையும், பிரன்ஞ்ச் சோஷலிஸத்தையும், ஜெர்மன் தத்துவத்தையும் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டார்.
உலக வரலாற்றில் கருத்து முதல் வாதத்திலிருந்து மயிரிழைத் தொடர்பையும் முற்றாகத் துண்டித்துக் கொண்டு பாய்ச்சல் வேகத்தில் புதிய வடிவம் பெற்ற புரட்சி சித்தாந்தமே இயக்கவியல் சித்தாந்தம். இந்த பெரும்படைப்பின் கர்த்தாதான் காரல்மார்க்ஸ். புதிய படைப்பின் அவசியத்திற்கான காலக்கட்டத்தின் கட்டாயத்தில் தனது பாத்திரத்தின் பங்கை குறையும் குறைவுமின்றி செலுத்திய படைப்பாளியாக மார்க்ஸ் இருந்தார். எனவே அதனை மார்க்ஸீயம் என்கிறோம்; இது தானே உண்மை.
மார்க்ஸீயம் உலக வரலாற்றில் விஞ்ஞானத்தால் உறுதிப்படுத்தப்பட்ட புரட்சி சித்தாந்தம். இச்சித்தாந்தம் சமூக வரலாற்று வளர்ச்சிப் போக்கில் மேலும் மேலும் செழுமைப்படும், செழுமைப்படுத்தப்படும். இடையில் அதைக் கொச்சைப்படுத்த குறுக்கீடுகள் எதிர்பட்டாலும் காலப்போக்கில் அவை முறியடிக்கப்பட்டு அது செழுமைப்படும்; படுத்தப்படும். முன்னோக்கித் தொடரும். ஆனால் அழியவோ அழிக்கப்படவோ முடியாத புறநிலை உண்மையின் பிரதிபலிப்பு. பிரபஞ்சத்தின் அடிப்படை வளர்ச்சி விதிகளுக்கு சித்தாந்தம் விதி விலக்காக முடியாதல்லவா?
உலக முழுதிலுமுள்ள புரட்சியாளர்கள், புரட்சியமைப்புகள் இச்சித்தாந்தத்தை தங்களது ஆயுதமாகக் கொள்வதில் வியப்பிருக்க முடியாது. அவ்வாயுதத்தின் தகுதி, தரம், தன்மை, தெம்பு, திறன் ஆகியவை அவ்வப்போதைய அதன் பிரயோகத்தை அனுபவ உரைகல்லில் உரசி உறுதிப்படுத்திக் கொள்வது புரட்சியாளர்களின், புரட்சியமைப்பின் கடமை.
‘இயக்கவியல் பொருள் முதல்வாத சித்தனைப் போக்கு’ தன்னை ஒரு சித்தாந்தமாக, ஒரே சித்தாந்தமாக நிலைநாட்டிக் கொண்டுவிட்டது. இதற்கு நேரிடை எதிரும் புதிருமான சிந்தனைப் போக்கு, வெற்று நம்பிக்கையை மட்டும் அடிப்படையாக்கி, அறிவியல் ரீதியான அஸ்திவாரங்கள் ஏதுமற்ற, தர்க்க ரீதியாகவும், விஞ்ஞான ருசுப்பித்தலாலும் முறியடிக்கப்படக் கூடிய நிலைமையில், அழிவு ஜீவியம் கொண்டுள்ள சிந்தனைப் போக்காகும். இந்த ஆன்மீக கருத்து முதல் வாத சிந்தனைப் போக்கும், ஒரு சிந்தனைப் போக்குதானே என்ற முறையில் சிலர் இதனையும் ஒரு சித்தாந்தமாக சித்தரித்து விடுகின்றனர். இதையுமொரு சித்தாந்தம் எனக்கூறி குழப்பிக் கொள்வதை அல்லது குழப்பிவிடுவதை விட இதனை தெளிவாக அடையாளப்படுத்த வேதாந்தம் என பச்சையாக சொல்லிவிடுவது தெளிவாக இருக்குமல்லவா?
இந்த வேதாந்தம் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் தன்னை தக்கவைத்துக் கொள்ள துடிக்கும்; அல்லது தட்டுத் தடுமாறி நியாயம் கற்பித்து, தப்பித்து வாழ முயலும். ஆனால் எதிர்காலத்தில் அழிந்து போகவோ அல்லது அழிக்கப்படவோ கூடிய சவக்குழி ஜீவியம் கொண்டதேயாகும். பிரபஞ்சத்தின் வளர்ச்சியில் அடிப்படை விதிகளுக்கு வேதாந்தமும் விதிவிலக்காயிருக்க முடியாது. காலம் கடந்தவைளும், காலத்தில் தன்னை தகவமைத்துக் கொள்ள முடியாதவைகளும் காலத்தில் காலத்தால் அப்புறப்படுத்தப் படுவதும், அழித் தொழிக்கப்படுவதும் காலத்தின் கட்டாயமல்லவா?
மார்க்ஸீயம் என்பது செழுமைப்பட்டுக் கொண்டும், செழுமைப்படுத்தப்பட்டுக் கொண்டுமிருக்கிற ஒரு சித்தாந்தம் என்பது தெளிவு. அந்தந்த நாட்டுச் சூழலை, அந்தந்த தேசிய இனங்களின் வாழ்வியலை சரியாகப் புரிந்து கொண்டு மார்க்ஸீயத்தைப் ‘பொருத்துவது’ தான் ஒரு புரட்சியாளனின் - முரண்வாழ் இருப்பு முதல் வாதியின் திறனாகும். பொருத்துவது என்பது ‘ஒரு வழி நடத்தி ஒரு வழிகாட்டுதலை சரியாக கண்டறிந்து வகுத்துக் கொள்ளும் கோட்பாட்டை உருவாக்கிக் கொள்வது’ என்று பொருள். இந்த கோட்பாடே, ‘செயல் நடத்தியாக’ பரிணமிக்கும் என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.
இந்த அடிப்படையில் ஒரு நாட்டின் பிரத்தியோகச் சூழலை புரிந்து, அதனில் சரியாக பொறுத்தி, மார்க்ஸியத்தைச் செழுமைப் படுத்திய புரட்சியாளர்கள் உலகின் பல நாடுகளில் தோன்றியிருக்கிறார்கள்; வழி நடத்தியிருக்கிறார்கள், வாகை சூடியிருக்கிறார்கள் என்பது வரலாறு.
அந்த வகையில் இந்திய தீபகற்ப சூழலின் சிறப்புத் தன்மைகளை கண்டறிந்து, அதில் தனது கோட்பாடுகளைச் சரியாக பிரகடனம் செய்தவர் பெரியார் அவர்கள்.
இந்தியா ஒரு துணைக் கண்டம்; ஒரே நாடாக ஒருபோதும் இருந்ததில்லை; ஒரே இனமாகவும் மக்கள் இல்லை, ஒரே கலாச்சாரத்தை மட்டும் கொண்டிருக்கவில்லை; ஆங்கிலேயர்கள் தங்கள் காலனிப் பகுதிகளை ‘இந்தியா’ என பெயரிட்டழைத்தனர்; இந்திய தீபகற்பத்தின் பூர்வீகக் குடிகள் திராவிடர்கள்; இங்கு வந்து புகுந்த முதல் அந்நியர்கள் ‘ஆரியர்கள்’.
இந்திய தீபகற்ப பூர்வீக குடிகளை ஒரு பண்பாட்டு ஆக்கிரமிப்பின் மூலம் பெரும்பான்மையினரை கூறுபோட்டு சிறுபான்மையினராக உருகாட்டி, சிறுபான்மை யினரான தங்களின் சுரண்டலையும், ஆதிக்கத்தையும், நலனையும் ஸ்திரமாக நிலை நாட்டிக் கொள்ளத் தக்க விதத்தில், சமூக ஒழுங்கமைப்பு என்ற முறையில் ஒரு சமூக சீர்குலைவை திட்டமிட்டு அரங்கேற்றி முடித்தனர்.
வருண சாதி பிளவுகளை வர்க்கப் பிரிவுகளோடு சாதுரியமாக நுழைத்திறுக்கி, இந்துமதக் கட்டுக் கோப்புக்குள் வைத்தனர். தொழில் ரீதியாக உருகொடுக்கப்பட்ட சாதிகளை பிறவி ரீதியான ஜாதிகளாகவும், ஜாதி ரீதியான தொழில்களாகவும் கட்டமைத்தது பார்ப்பனத்துவ மாபாதகக் கொடுமை; அது போலவே பெண்ணுரிமை யிழக்கடிக்கப்பட்ட பெண்ணடிமைத் தனத்தை ஆண் உடைமையாக பெண்ணை ஆக்கிவிட்ட கொடுஞ்செயல் பார்ப்பனத்துவத்தின் கொடூரம்.
இந்த சாதிகள் வருணத்திற்குட்பட்டது. இந்த வருணங்கள் இந்து மதத்திற்குட்பட்டது. இந்து மதம் கடவுள்களுக்கு கட்டுப்பட்டது. கடவுள்கள் வேத, மந்திர, சாஸ்திர, ஆச்சார, அனுஷ்டானங்களுக்குள் அடக்கப்பட்டது. இந்த வேத மந்திர சாஸ்திர வகையறாக்கள் பார்ப்பனர்களின் ஆளுமைக்கு உட்பட்டது என பார்ப்பனர்கள் தங்களது சுரண்டல் ஆதிக்கத்தை ஸ்தாபித்துக் கொண்டனர்.
அவ்வாதிக்க ஆளுமையில் சிக்கிய ஜாதிகளில் தோன்றி வளர்ந்த உடமை வர்க்கங்கள், தங்களது வளர்ச்சிக்கு பார்ப்பனர்களோடு சமரசம் செய்து கொண்டு, பார்பனத்துவ நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சுரண்டல் ஆதிக்கத்திற்கு ஏதுவான சமூகமாக ஸ்திரப்படுத்திக் கொண்டனர்.
அன்றைய உலக மற்றும் இந்திய தீபகற்பச் சூழலில், எதிர்கால உறவுகளையும் கருத்தில் கொண்டு, ஆங்கிலேயர்கள் ஆட்சியதிகாரத்தை, பார்ப்பனர்கள் பெருமுதலாளிகள் தலைமையிலான காங்கிரசிடம் கை மாற்றிக் கொடுத்தனர். இதுதான் 47 ஆகஸ்ட் 15ல் நடந்தது.
தங்கள் கைகளில் கிடைத்த ஆட்சியதிகாரத்தை பார்ப்பனர்களும் பெரு முதலாளிகளும் பத்திரப்படுத்திக் கொள்ள, இந்திய தேசிய பக்தியை புகட்டுகின்றனர். இந்திய தேசிய வெறியை ஊட்டுகின்றனர். இந்திய தேசியம் இந்துமத தேசியம், இல்லாத இந்த தேசிய மாயையிலிருந்து தமிழர்களை விடுவிக்க, தமிழின உணர்வை ஊட்டி, தமிழ்த் தேசியத்தை மீட்க, காக்க, நிலைநாட்ட, ‘நாம் தமிழர்கள், நம் நாடு தமிழ்நாடு; சுதந்திர தமிழ்நாடு நமது லட்சியம்’, என பிரகடனம் செய்து, பொய்மைக்கும் புரட்டுக்கும் மௌன சாட்சிகளாய் இருப்பதை விட்டு, புதுமைக்கும் புரட்சிக்கும் இரத்த சாட்சிகளால் மாறுங்கள் என தமிழர்களுக்கு அறை கூவல்விடுத்து மக்கள் இயக்கம் கண்டவர் பெரியார்.
இந்த சுருக்கமான வரை கோட்டில், இந்திய துணைகண்டத்தில், ஆன்மீக கருத்து முதல்வாதம் அல்லது வேதாந்தம் கொடி நாட்டி கொக்கரிக்க எடுத்துக் கொண்ட வடிவம் பார்ப்பனீயம்; பார்ப்பனத்துவ, முதலாளித்துவ, மதவாத சிந்தனைப் போக்குகளின் திட்டவட்ட வடிவம் கொண்டது தான் பார்ப்பனீயம், பார்ப்பனீயத்தை எதிர்த்தொழிக்கவும், வருண, வர்க்க பாலியல் பேதமற்ற சமத்துவத்திற்கான சமூக புரட்சியை உருவாக்கவும் வழி காட்டுவது தான் பெரியாரீயம். இந்தியச் சூழலில், ‘ஆன்மீக கருத்து முதல்வாத சிந்தனைப் போக்கு’ வளர்ச்சியின் உயர்ந்த கட்ட வேதாந்தம், ‘பார்ப்பனீயம்’; இதற்கு நேர் எதிரான ‘இயக்கவியல் பொருள் முதல் வாத சிந்தனைப் போக்கினது வளர்ச்சியின் சித்தாந்தம் செழுமைப்படுத்தப்பட்ட மார்க்சிய’மான பெரியாரியம்; இதில் என்ன குழப்பம்?.
பெரியாரீயம் ஒரு பூர்ஷ்வா சித்தாந்தம், அதற்கும் மார்க்சீயத்திற்கும் சம்பந்தமில்லை, அது வர்க்க போராட்டத்திற்கு எதிரானது. அதன் கடவுள் மறுப்பும் பார்ப்பன எதிர்ப்பும் புரட்சிக்கு எதிரானது என மார்க்ஸீய வியாபாரிகளான பல சில சிவப்புகளும், மார்க்ஸீயம் வேறு, பெரியாரீயம் வேறு, இந்தியாவில் மார்க்ஸீயம் எடுபடாது. அது அந்நியநாட்டு சித்தாந்தம், உலக சித்தாந்தம் பெரியாரீயம் தான். அதனை இந்தியா பூராவும் உலக முழுதும் எடுத்துச் செல்வதே இப்போதைய உடனடிப் பணி என பெரியார் நாமாவளிகளான பல கருப்புகளும் தான் மக்களைக் குழப்புகிறார்கள். ஆனால் பரிதாபம்! தேர்தல் மேடைகளில் மட்டும் ஓங்கி குரலெடுத்து, ஒரிஜினல் சிவப்பும், ஒரிஜினல் கருப்பும் ஒன்று சேர்ந்து விட்டது. வெற்றி எங்கள் பக்கமே என வெற்றுக் கூச்சல் போடுவதில் அவர்களுக்கு கொஞ்சம் கூட லஜ்ஜையில்லை.
ஒன்றை மட்டும் மனதில் ஆழமாக பதியவைத்துக் கொள் தோழா! சித்தாந்தம் அறிந்தவர்களானாலும், அறியாதவர்களானாலும், மேதைகளானாலும், பேதை களானாலும், படித்து பட்டம் பெற்றவர்களானாலும் படிப்புவாசனையே அற்றவர் களானாலும் இத்தகையோர் உள்ளிட்ட எவரொருவரது எத்தகையதொரு செயலுக்குப் பின்னாலும் சித்தாந்தமோ அல்லது வேதாந்தமோ ஒளிந்து கிடக்கிறது என்பது திட நிச்சயம்.
மற்றொன்று சித்தாந்தவாதிகள் என தங்களை சித்தரித்துக் கொள்ளும் சிலர், சித்தாந்த வழியிலான இலட்சியம், நோக்கம், கொள்கை, கோட்பாடு, நிலைபாடு ஆகியவைகளைப் பிரித்து பார்க்கவும் அவற்றினூடேயான சித்தாந்த இழையோட்டத்தை துண்டுபடாது துல்லியமாய் பார்க்கவும் பயிற்சியின்றி ஒன்றாய் போட்டுக் குழப்பிக் கொள்ளுகிறவர்களும் இருக்கிறார்களே என்ன செய்வது?இந்த விஷயங்கள் பற்றியெல்லாம் பின்னால் பார்ப்போம்.

No comments:
Post a Comment