Tuesday, January 18, 2011

உலகைக் காட்டும் கண்ணாடி

உலகைக் காட்டும் கண்ணாடி

இணைமிகு தோழா!

கடந்த இரு கடிதங்களில் தத்துவம் பற்றி ஓரளவு - என் அறிவுக்கு பட்ட அளவு - தொட்டுப் பார்த்தோம்.  இந்த கடிதத்தில் இன்னும் கொஞ்சம் தலை நுழைப்போம்.

சித்தாந்தம் என்பது அடிப்படை, போதனை, கோட்பாடு, படிப்பினை நிரூபணம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிக் கொண்டிருப்பது. வேறு வார்த்தைகளில் கூறினால், தத்துவம் என்பது உண்மை, வழிகாட்டி, வழிநடத்தி, செயல்பாட்டு சாட்சியம் ஆகிய அம்சங்களை இணைவாக பிணைத்துக் கொண்டிருக்கிறது என்பதாகும்.

சித்தாந்தத்திற்கு எதிரான வேதாந்தமோ, தத்துவத்திற்கு நேர் பகையான அம்சங்களை உள்ளடக்கிக் கொண்டு பவனி புறப்பட்டிருக்கிறது.  அதாவது பொய்மை, புரட்டு, புளுகு, மடமை, கற்பனை ஆகியவற்றில் முழுக்க முழுக்க புறையோடிக் கிடக்கிறது.  வேறு வார்த்தைகளில் கூறினால், அச்சம் அறியாமை, தனிநலம், பேராசை, புராண இதிகாசம், மூட நம்பிக்கை, மூட பழக்க வழக்கம், யூகம் விரக்தி போன்ற சகதிகளில் சங்கமித்துக் கொண்டுவிட்டது.

சித்தாந்தம் செயலுக்கு உந்துசக்தி, வாழ்வுக்கு ஊக்கமூட்டி. வேதாந்தம் விரக்திக்கு இருப்பிடம். வேறுலக வாழ்வுக்கு பிறப்பிடம்.
முதலில் சித்தாந்தம் பற்றிய ஒரு குறிப்பைப் பார்ப்போம்.  ‘முரண் வாழ் இருப்பு முதல் வாதம்’.  இது விஞ்ஞான சித்தாந்தம்.  ‘இருப்பு’ இருந்து கொண்டேயிருக்கிறது.  இது யாராலும் படைக்கப்பட்டதல்ல, அப்படிப் படைக்கப்படாததால் தான் ‘இருப்பை’ யாராலும் அழிக்க முடிவதில்லை;  இருப்புதான் எல்லா இருப்பிற்கும் அடிப்படை;  இருப்பின்றி படைப்பில்லை; வடிவில்லை.

இவ்விருப்பு, முரணில் வாழ்வதால் போராட்டத்தில் ஜீவிக்கிறது.  போராட்டத்தின் விளைவான இயக்கத்தில், தோற்றத்தில், மாற்றத்தில், மறு உருவேற்றத்தில் தானேயாகி நிற்கிறது.  இவ்விருப்புத்தான் ஆதி முதலும் அந்தமும் என விளக்குவது தான் உண்மை சித்தாந்தம்.  இந்த சித்தாந்தம் எந்தவொன்றின் வளர்ச்சிப் போக்கிற்குமான அடிப்படை வளர்ச்சி விதிகளை விவரிக்கிறது.  தெளிவாக்குகிறது.

அடிப்படை வளர்ச்சி விதிகள்தான், ஒன்றின் வரலாற்றைக் கண்டறிவதற்குச் சாதனமாகும்.  கடந்த நிகழ், எதிர்காலங்களில் ஒன்றின் வளர்ச்சிப் போக்கின் மொத்தமே அவ்வொன்றின் வரலாறாகிறது.  கடந்த கால பரிணாம பாய்ச்சல்கள் நிகழ்காலத்தால் முன்னோக்கி உந்தப்பட்டு, எதிர்கால பரிணாம பாய்ச்சல்களாகிய படைக்கும் கட்டங்களை உள்ளடக்கிக் கொண்டிருப்பது அதன் வரலாறு.  அடிப்படை வளர்ச்சி விதிகள் எவை?

ஒன்று, ‘உடன்படுதலும் முரண்படுதலும் அல்லது ஒன்றிடுதலும் போராடுதலும்’ என்ற விதி.  இரண்டு, ‘பரிணாம மாற்றம், பண்பு மாற்றத்தில் முடியும் அல்லது இயல்பு மாற்றம் இயைபு மாற்றத்தில் முடியும்’ என்ற விதி.  மூன்று, ‘அழித்தமர்வின் அழித்தமர்வு அல்லது இருத்தல் மறுத்தலின் இருத்தல் மறுப்பு’ என்ற விதி.  இவ்விதிகளைப் பற்றியும் மிக மிகச் சுருக்கமாக புரிந்து கொள்வோம்.

முதலாவது உடன்படுதலும் முரண்படுதலும் என்ற விதி.  நேர்மறை எதிர்மறை இணைவில் வடிவம் பெற்றுள்ள இருப்பு அல்லது படைப்பு, நேர்மறை எதிர்மறை முரண்பாட்டில் போரிடுவதும், அதனில் காணும் உடன்பாட்டால் ஒன்றுபடுதலும் அதன் தொடர்ச்சியான இயக்கம் தான் வளர்ச்சிக்கான உத்வேகமும், மாற்றமும் ஆகும்.  நேர்மறை முன்நோக்கிச் செல்லும் ஆற்றல் கொண்டது.  எதிர்மறை அதனை தடுக்கும், தேக்கும் சக்தியாகும்.  இவ்விரண்டின் இணைவில் இருப்பு அல்லது படைப்பு இருப்பதால், நேர்மறை எதிர்மறையை வென்று  இசைவோடு முன்நோக்கி செல்லுகிறது.  சமயங்களில் அவசியமாக நேர்மறை முன்னேறிச் செல்ல முடியாது.  பலமான தடையாக எதிர்மறை அமையுமானால், நேர்மறை அத்தடையை உடைத்தெறிந்து தனக்கு பொருத்தமான வேறொரு எதிர்மறையுடன் இணக்கம் பெற்று முன் செல்லும்.

இரண்டாவது பரிமாணாம மாற்றம் பண்பு மாற்றத்தில் முடியும் என்ற விதி.  எந்தவொன்றின் அளவில் ஏற்படுகிற மாற்றங்கள், இறுதியாக அந்தவொன்றில் குணமாற்றத்தில் முடியும்.  அப்படி பரிணாம மாற்றம், பாய்ச்சலில் முடிகிற போது, அம்மாற்றத்திற்குள்ளான அவ்விருப்பு அல்லது படைப்பு, பழயதினின்று அடிப்படையாக மாறுபட்ட புதியதொன்றாகவே இருக்கும்.  மீண்டும் பரிணாமம் தொடரும்.

மூன்றாவது, அழித்தமர்வின் அழித்தமர்வு என்ற விதி.  காலம் கடந்த ஒன்றை அப்புறப்படுத்தி காலத்தில் ஒன்று அவ்விடத்தில் நிலை கொள்வது தவிர்க்க முடியாதது.  எதிர்காலத்தில் அவ்வொன்றும் அவசியத்தால் மற்றொன்றால் அப்புறப்படுத்தப்படக் கூடியதாகவே இருக்கும்.

இம்மூன்று அடிப்படையான விதிகளின் ஒழுங்கில் தான் வளர்ச்சிப் போக்குகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.  இவ்வொழுங்கு விதியை ஒழுங்காக கடைப்பிடிப்பதன் மூலமே இயக்கம் மாற்றத்தை உருவாக்கும் போதே மாற்றங்கொண்டு முன் செல்லுவதே வளர்ச்சிப் போக்கு தொடர்வதாகும்.  சில நேரங்களில் வளர்ச்சிக்கு முற்றான சீர்குலைவை ஏற்படுத்தும் முட்டுக்கட்டை எதிர்படும் அல்லது எதிர்நோக்கும் போது அத்தடையை உடைத்தெறிந்து முன் செல்ல விதி மீறல் செய்து விதி ஒழுங்கை பாதுகாப்பதும் விதிமுறையேயாகும்.

இவ்விதி ஒழுங்கை காப்பதற்கான விதி மீறல் என்பது வளர்ச்சிப் போக்கு ஒருகாலும் பின்னோக்கிச் செல்வதில்லை.  முன்னோக்கி மட்டுமே செல்லும் தன்மை கொண்டது என்பதற்கு சாட்சியமாகி விடுகிறது.  எந்த ஒன்றின் முன்னோக்கிய வளர்ச்சியை தேக்கலாம்-தடுக்கலாம்-தாமதப்படுத்தலாம்-குறிப்பிட்ட காலம் முட்டுக் கட்டைப் போடலாம். என்றாலும் வளர்ச்சிக் போக்கை முற்றாக அழித்து விடவோ, அதனை பின்னோக்கி செலுத்திவிடவோ ஒருகாலும் முடியாது.

வளர்ச்சிப் போக்கு செங்குத்தாக முன் செல்லுவதுமில்லை, சக்கர வட்டத்தில் சுழன்று கொண்டிருப்பதுமில்லை.  மாறாக வளர்ச்சி வளைவாக.  ஆனால் வட்டப் பாதையல்லாத, முன்னோக்கி, ஆனால் நேர் செங்குத்தாக வின்றி, துள்ளிப் பாய்ந்து , ஆனால் மையத்தை விட்டு தூர விலகி விடாமல் புரிவில் வடிவிலான முன்னேற்றம் கொண்டதே வளர்ச்சி.  மிகச் சிக்கலான கரடுமுரடான பாதைகளில் தடுத்தழிக்கப்படாது, நெளிவு சுழிவோடு ஒரு ஒழுங்கில் முன்னோக்கிப் பயணிப்பது தான் வளர்ச்சியாகும்.

மேலே கண்ட இந்த வளர்ச்சி விதிகளை விளக்குவதுதான் தத்துவத்தின் தத்துவம்.  ‘முரண்வாழ் இருப்பு முதல் வாதம்’ என்ற சித்தாந்தம்.  இதுதான் மார்க்ஸீயம்.  இதனை நிரூபித்துக் கொண்டிருப்பது தான் விஞ்ஞானம். இதனை உறுதிப்படுத்திக் கொண்டிருப்பவை தான் விஞ்ஞான கண்டுபிடிப்புகள்.

அடிப்படை வளர்ச்சி விதிகளை பிரயோகப்படுத்தி இப்பேரண்டத்தைக் கண்டறிய சில விஞ்ஞான, வழிநடத்தும் அளவுகோல்களையும் இவ்விஞ்ஞான தத்துவம் முன்வைத்தது.  எந்த ஒன்றையும் அல்லது எந்தவொரு நிகழ்வுப் போக்கையும் சரியாக கண்டறிந்து உண்மையை வெளிப்படுத்த அவ்விஞ்ஞான அளவுகோல்கள் அவசியமாயிருந்தது.  அவை தான்

1. ஒன்றின் தனித்துவமும் பொதுமையும்.
2. ஒன்றின் அகக் கட்டமைப்பும் வடிவமும்
3. ஒன்றின் அகதன்மையும் புறதோற்றமும்
4. ஒன்றின் காரணமும், காரிய வெளிப்பாடும்.
5. ஒன்றின் கட்டாயமும் திடீர் நிகழ்வும்.
6. ஒன்றின் எதார்த்தமும் சாத்தியமும்.

மேற்கண்டவை ஒவ்வொன்றிலும், அமைந்துள்ள கூட்டிணைவு ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பினைந்தவை.  பிரிக்கப்பட முடியாதவை, இறுக்கமான தொடர்புள்ளவை.  இதனை மொத்தமாக போட்டு குழப்பிக் கொள்வதோ, ஒன்றை விட்டு ஒன்றை தொடர்பறுத்து பார்க்க முனைவதோ, ஒவ்வொன்றுள்ளும் தனித்து உட்புகுந்து பார்த்திட தவறுவதோ, ஒன்றைப் பற்றிய முபமையான கண்டறிவை பெற்றிட முடியாது.
இதனை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு இக்கடிதத்தில் நாம் உள் நுழையப் போவதில்லை.  அவகாசமும் இல்லை.  அதற்காக இத்தோடு விட்டு விடாதே.  சுயகல்வி, சுயமுயற்சி, சுயபயிற்சி உன்னோடு ஒட்டிக் கிடக்கும் போது இதனை உள் நுழைந்தறிவதில் உனக்கேது தடை?  இந்த விஞ்ஞான அளவுகோல்களை பயன்படுத்தும் போது ஒவ்வொரு அசைவிலும், நாம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்போமே விஞ்ஞான வினாக்கள் அதனை எழுப்பி விடை காண்பது தான் முக்கியம். யார்? ஏன்? என்ன? எது? எங்கே? எப்படி? எப்போது? எவ்வளவு? ஏதற்காக? என்பவை தானே ஞானக் கேள்விகள்.

மேலே சொன்னவைகளையெல்லாம் மொத்தமாக உள்ளடக்கிக் கொண்டிருக்கிற முரண்வாழ் இருப்பு முதல்வாத சித்தாந்த வழியில் இந்த பேரண்டத்தில் நாம் அறிய முடியாதது எதுவுமில்லை.  ஆனால் அறிய வேண்டியதிருக்கலாம்.  இவ்விஞ்ஞான சித்தாந்தம் தான் செயலுக்கு வழிகாட்டியாயிருப்பதால் நாம் செய்ய முடியாதது எதுவுமி ருக்க மடியாது.  ஆனால் செய்தாக வேண்டியது இருக்கலாம்.

அன்பு தோழா! சித்தாந்தங்கள் பற்றி சொல்லும் போது வார்த்தைப் பிரயோகங்களை முறையாக வரையறுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தால் உனக்கு கொஞ்சம் எரிச்சல் தட்டுகிறதா? எரிச்சல் தட்டினாலும் பரவாயில்லை, தட்டுக்கெட்டு தடுமாறி  தடம் மாறிவிடக் கூடாதல்லவா?

இந்த விஞ்ஞான சித்தாந்தம் தான் அறிவுக்கு ஆழ் ஊற்று. அறிதலுக்கு நுண்சுரப்பி, ஆற்றலுக்கு வலுவூட்டி, செயலுக்கு துணிவூட்டி, மொத்தத்தில் வழிகாட்டி. மற்றொன்றையும் மறந்துவிடாதே.  இந்த விஞ்ஞான சித்தாந்தத்தை, விஞ்ஞான கோட்பாட்டை அதாவது வழிகாட்டியையும், வழிநடத்தியையும் ஒவ்வொரு நொடியும் செழுமையூட்டி, நிரூபணம் செய்து கொண்டிருப்பதில் விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் முதன்மை வகித்தாலும், படைப்பாளி மனிதன் செயல்படும் போது கிடைக்கும் படிப்பினைகள் இதனை செழுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.  எனவே தான் சித்தாந்தம் வழிகாட்டியாக, கோட்பாடுகள் வழிநடத்தியாக, படிப்பினைகள் செயல்படுத்தியாக, மனித சமூகத்தை இயற்கையை வெல்லும் போர்வீரர்களாகவும், புது உலகைப் படைத்து பாதுகாத்து வளர்க்கும் படைப்பாளியாகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த விஞ்ஞான தத்துவத்திற்கு பகை சித்தாந்தம்தான். ஆத்மீக உணர்ச்சி முதல் வாதம் என்ற வேதாந்தம்.  அதனைப் பற்றி மிக விரிவாக இங்கே விளக்கிடப் போவதில்லை என்றாலும் ஒரு சில குறிப்பிட்ட அம்சங்களைப் பற்றி சொல்லித் தானேயாக வேண்டும்.

பேரண்டத்தில் அனைத்திற்கும், ‘ஆதி முதல்’ ஆண்டவன் என்கிறது வேதாந்தம்,  அவனால் தான் பேரண்டமும் அதனிலுள்ள அனைத்தும் படைக்கப்பட்டது.  அவ்வொவ்வொன்றையும் அசைவுக்கு அசைவு அவனே இயக்குகிறான்.  அவை இயங்குவதற்கும் அவனே விதியை வகுத்து விட்டான்.  அவ்விதிப்படி அவை தோன்றும், வாழும், அழியும்.  மனிதனை அவனே படைத்தான்.  ஆத்மாவை படைத்து மனிதனுள் புகுத்தி அவனை இயங்க விட்டான்.  அந்த இயக்கத்திற்கு அவன் தலையில் விதியை எழுதி வைத்தான். தலை விதிப்படிதான் ஒவ்வொரு மனித வாழ்வும் நடந்து கொண்டிருக்கிறது.  ஆத்மா அகன்ற உடல் பிரேதம்; உடலை விட்டு பிரியும் ஆத்மா, மேலுலகில் விசாரணைக் குட்படுத்தப்பட்டு சொர்க்கம் அல்லது நரக தண்டனை அளிக்கப்படும்.  சொர்க்க வாழ்வு, ஆத்மாவுக்கு சுகபோக வாழ்வு. தண்டனை பெற்ற ஆத்மா நரகம் அனுபவித்து பின் முன்வினைப் பயனை அனுபவிக்க, மீண்டும் மனித உடலில் புகுத்தப்பட்டு மறுபிறவியளிக்கப் படுமாம்.  இதற்கெல்லாம் ஆதாரங்கள் உண்டா?  சாட்சியமுண்டா?  என கேட்டுவிடக் கூடாது.

ஆண்டவன் அரூபி. ஆனால் பக்தர்களுக்கு காட்சியளிப்பான்.  இறைவன் ஏகாந்தன் ஆனால் எல்லாவற்றையும் படைத்தவன்.  கடவுள் அனைத்தையும் கடந்தவன்.  ஆனால் அனைத்திலும் நிறைந்தவன்.  அவனுக்கு காதில்லை-கேட்பான், வாயில்லை-பேசுவான், கண்ணில்லை-பார்ப்பான், நாக்கில்லை- ருசிப்பான், கரம் இல்லை-படைப்பான், காலில்லை- ஈரேழுலகமும் சுற்றி வருவான், உடலில்லை-உணர்வான், இந்த எதிர்புதிர் நிலை கொண்டு ஒன்றிருக்கிறது என்றால் ஏற்க கூடியதா?  பரலோகத்தில் அவன் அரசாட்சி, இகலோகத்தில் அவன் திருவிளையாடல், உருவமேயற்றவன், ஆனால் ஆனாக அடையாளம் காட்டப்படுகிறான்.

இதுவெல்லாம் நம்பக் கூடியதா?  அணுவிலும் இருப்பானாம் ஆனால் யாருக்கும் அகப்படமாட்டானாம். இவன் ஞானிகளை மட்டும்  சந்திக்கின்றானாம். விஞ்ஞானிகளைக் கண்டால் தலைமறைவாகி விடுவானாம்.

ஆத்மாவை நம்புகிறவர்கள் ஆன்மீகவாதிகள்.  இருக்கிற உலகத்தை ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் உலகாயத வாதிகள்.  இதுதானே உண்மை.
இந்த ஆன்மீக வாதிகளுக்கு வேதாந்தம் வழிகாட்டி.  ஆத்மா வழிநடத்தி, மூட நம்பிக்கை செயல்படுத்தி, அஞ்ஞான ஆளமைக்குட்பட்டவர்கள்.  ஆக்கலும் இயக்கலும், வளர்த்தலும், காத்தலும், அழித்தலுமாய் இருப்பவன் ஆண்டவனே என்ற அஞ்ஞானத்தின் மொத்த தொகுப்பாய் வேதாந்தம் இருக்கிற போது அறிவுக்கும், ஆய்வுக்கும், ஆய்வின் அளவுகோல்களுக்கும் என்னதான்  வேலை இருக்க முடியும். சரித்திரமாக புராணங்கள், சட்டமாக சாஸ்திரங்கள், கட்டுப்படுத்த ஆச்சாரம், கடைபிடிக்க அனுஷ்டானம் என மூளை பறிப்பு செய்தபின் சிந்தனைக்கு இடமுண்டா?  இத்தனைக்குப் பிறகும் இறைவன் இருக்கின்றான் என கூற முடியுமா?  நிச்சயம் முடியாது, கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பது உண்மை கண்ட பெரியாரின் கூற்றல்லவா?

கடவுள் இருக்கிறார் என்பதை எங்களால் நிரூபிக்க முடியவில்லைதான்.  ஆனால் அவர் இல்லை என உங்களால் நிரூபிக்க முடியுமா? என எதிர்கேள்வி போட்டு நம்மை மடக்க முனைகிறார்கள்.

 பரிதாபத்திற்குரியவர்கள்.  இருப்பு இல்லாத வேறெதுவுமில்லை, இருப்பைத் தவிர வேறொன்றில்லை, இருப்புக்கு அப்பாலும் எதுவுமில்லை.  இருப்பதெல்லாம் இருப்பு மட்டுமே என்பது நிரூபிக்கப்பட்டபின், அதுவல்லாத ஆண்டவனும் இல்லை தானே?  அப்படியானால் ஆண்டவன் தோன்றியதெப்படி?  இதனை வேதாந்தத்தால் விளக்க திராணியிருக்காது.  ஆனால் ‘முரண்வாழ் இருப்பு முதல் வாத’த்தால் விளக்கிட முடியும்.
விஞ்ஞான அறிவும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் தோன்றி வளராத தொடக்க காலத்தில், மனிதனுக்கு முன் தோன்றிய இயற்கை மற்றும் இதர நிகழ்வுகளுக்கும், அதனையொட்டிய பல்வேறு பிரச்சினைகளின் தீர்வுக்கும், சோதனை சவால்களின் சந்திப்பிற்கும் விடை காண முடியாது தவித்த நேரத்தில் அவனுக்கு ஏற்பட்ட அச்சம், அறியாமை, ஆசையின் விளைவால் மனிதனால் ஆண்டவன் படைக்கப்பட்டான்.

அப்படி, தானே கற்பனையில் படைத்துக் கொண்ட ஆண்டவனை, அண்டசராசரம் அனைத்துக்கும் மீறிய சக்தி கொண்டவனாக சித்தரித்துக் கொண்டான்.  ஆனால் அவன் உண்மையிலேயே தான் படைத்துக் கொண்ட சமூகத்தின் ஆற்றல், வலிவு அனைத்தையும் விஞ்சியது என்பதை அறிந்தானில்லை.

வாழ்வில் எதிர்பட்ட சோதனைகள், எதிர் நோக்கிய சவால்களுக்கு தானே கற்பித்துக் கொண்ட ஆண்டவனிடம் கோரிக்கை வைத்து வழிபட்டான்.  அதற்கு இசைவாக சடங்கு சன்மானம் சம்பிரதாயங்களை வகுத்துக் கொண்டான்.

அந்த கால கட்டத்தில் கட்டாயத்தை முன்னிட்டு மனிதர்களிடையே தோன்றிய மார்க்கியவாதிகள் தங்கள் அறிதலுக்கும் புரிதலுக்குமான வழிகாட்டுதலுக்காக மனிதக் கூட்டத்தின் கட்டுப்பாட்டை நிலை நிறுத்த இல்லாததென தெரிந்தும் இறைவனை துணைக்கழைத்துக் கொண்டனர்.
ஆண்டவன் வழிபாடு, சடங்கு சன்மான சம்பிரதாயம் ஆகியவற்றின் மொத்தமும் மார்க்கவாதிகளின் போதனைகளும் மார்க்கங்களும் ஒன்றுடன் ஒன்று கலப்படம் செய்யப்பட்டு மதமாக ‘உரு’ கொடுக்கப்பட்டது.  அந்த மதம் வேத சாஸ்திர புராணங் களால் போதையேற்றப்பட்டு பக்தி, பிரார்த்தனை, வேண்டுதல், பரிகாரம் என மயக்கமூட்டும் கருவியாக பயன்படுத்தப்பட்டது.  நாளாவட்டத்தில் அரசியலுக்கு, ஆட்சியதிகாரத்திற்கு ஆதரவாக ஆட்களை திரட்டும், மக்களை கவரும் மாயவலையாகவும், வெகுமக்கள் திரளை வெறுமையாக்கிடவும், உழைக்கும் மக்களை உறுஞ்சி அடிமையாக்கிடவும், உடமையாளர்களுக்கு கவசமாகவும் வளர்க்கப்பட்டது.  இது பற்றியெல்லாம் வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆதிக்க வெறிகொண்ட சுகபோகிகளான சுரண்டல் கூட்டம், கூலிக்கு ஆள்பிடித்து வேதாந்தத்தையும் ஒரு சித்தாந்தமாக வியாக்கியானம் செய்யத் துடித்தது.  ஆத்மா தான் மனிதனுக்கு உணர்ச்சி ஊட்டுகிறது.  உணர்ச்சியின் மூலம்தான் அவனால் உலகை காண முடிகிறது.  உணர்ச்சி இல்லையேல் உலகு இல்லை.  இல்லாத மாயா உலகை இருப்பதாக மாயை காட்டுவது உணர்ச்சி தான், ஆத்மா தான், என எதார்த்தத்தை தலைகீழ் புரட்டி தத்துவம் என்பது வேதாந்தமே என விளக்கம் தருகின்றனர்.

இப்படிக் கூறுவதற்கு சான்றுகள் இல்லை. சாட்சியமில்லை. இதவல்லாத  கண் மூடி நம்பிக்கை இருந்தால் தான் அதை கண்டிட முடியுமென்றால் அது மூட நம்பிக்கை தானே?  வேதாந்தத்தை மூடத்தனம் என கூறிட சித்தாந்தத்திடம் ஆதாரம் உண்டா? என வினவுகிறார்கள்.

உலகம் இருப்பதால் உணர்ச்சி தோன்றுகிறதா?  அல்லது உணர்ச்சி இருப்பதால் உலகம் இருப்பதாக தெரிகிறதா?  இதுதானே கேள்வி.  உலகம் இருப்பது உண்மை.  அது உணர்ச்சிக்கு புறத்தே இருக்கிறது.

 புறத்திலிருக்கும் உலகம் புலன் உறுப்புகளில் ஏற்படுத்தும் தாக்கம் உணர்ச்சி. நிஜம் தான் நிழலாக பிரதிபலிக்கிறது.  நிழல் நிஜத்தை தோற்றுவிப்பதில்லை, நிஜம் எப்போதும் நிரூபனத்திற்குட்பட்டது.  ஆதிமுதல்‘ இருப்பே’ நிஜம், இருப்பின் பிம்பமே உணர்ச்சி, அதன் விளைவே எண்ணம்.  அதன் வளர்ச்சியே கருத்து.  கருத்து சிந்தனை உலையில் வார்க்கப்பட்டு செயலாகவும், அறிவாகவும் வடிவம் பெறுகிறது.  அறிவால் செழுமைப்படுத்தப்பட்ட உணர்ச்சி உணர்வாகிறது, செழுமைப்படுத்தப்படாத உணர்ச்சியின் வளர்ச்சி வெறியாகிறது.

முரண் வாழ் இருப்பு முதல் வாதம் பற்றிய இந்த குறிப்பு இப்போதைக்கு போதுமானது,  இந்த சித்தாந்த கண்ணாடியில் மனித சரித்திரத்தைப் பார்க்க வேண்டுமல்லவா?

No comments:

Post a Comment