Tuesday, January 18, 2011

கண்ணாடி காட்டும் உலகம்

கண்ணாடி காட்டும் உலகம்

இணைமிகு தோழா!

சென்ற கடிதத்தில் உள்ளது உள்ளபடி உலகத்தைப் பார்க்க எந்த சித்தாந்த கண்ணாடியை அணிந்திட வேண்டும் என பார்த்தோம்.  இந்த கடிதத்தில் அந்தக் கண்ணாடியின் மூலம் அகிலத்தைப் பார்ப்போம்.

இயற்கைவியல், சமூகவியல், பொருளியல், அரசியல், பண்பியல், அறிவியல், அமைப்பியல் ஆகியவற்றையும், இவை ஒவ்வொன்றும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிற பல்வேறு துறைகளையும், பிரிவுகளையும் ஒட்டு மொத்தமாக தன்னகத்தே ஈர்த்து தழுவிக் கொண்டிருப்பதே உலகம் என கூறுகிறோம்.

இயக்கவியல் சித்தாந்த விஞ்ஞான கண்ணோட்டத்தில், பொருளியல், அரசியல், பண்பியல், அமைப்பியல் ஆகியவற்றை தனது மேல் நோக்கிய வளர்ச்சிக்கு அவசியமாகவே தன்னுள் கொண்டிருக்கிற, மனிதச் சமூக வரலாற்றை ஆய்ந்தறிவதைத்தான் வரலாற்று இருப்பு முதல் வாத சித்தாந்தம் என குறிப்பிடுகிறோம்.  இது ஒரு சமூக விஞ்ஞானம்.
ஆதி முதலான இருப்பு தனது இயக்கத்திலும் மாற்றத்திலுமாக பல்வேறு படைப்புகளைப் படைத்தது எனவும், அத்தகைய படைப்புக்களின் தொடர்ச்சியாக இறுதியில் மனிதனைப் படைத்தது எனவும், அந்த மனிதன் இயற்கையின் படைப்பாக மட்டுமல்ல, அதன் வாரிசான படைப்பாளியாக உருபெற்றான் எனவும் நாம் அறிவோம்.

விலங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என விஞ்ஞானம் ருசுப் பித்திருக்கிறது.  விலங்காயிருக்கும் போதே மந்தையாயிருந்தது.  மந்தை வாழ்வே அதன் வாழ்க்கைக்கு உத்திரவாதம் தந்தது.  அவசியமற்றவை தேய்ந்து குறைந்து மறைவதும், அவசியமானவை உருபெற்று வளர்வுற்று,  உயர்ந்து நிலை கொள்வதும் தொடர்ந்த பரிணாமத்தின் பகுதியல்லவா?
இந்த முறையில் தான் மந்தையான விலங்கினமும் மனிதக் கும்பலாக உருவெடுத்தது.  மனிதக் கும்பல் நாளாவட்டத்தில், காலப்போக்கில் கும்பலான வாழ்வை கூட்டமான வாழ்வாக்கி பல்வேறு வகைகளிலும், அம்சங்களிலும் உறுதிப்படுத்திக் கொள்ளுவதைத்தான் மனிதச் சமூகம் என குறிப்பிடுகிறோம்.  ஆதிகால மனிதன் தன்னந்தனியனாகப் பிறந்து வாழத் தொடங்கி, பின்னர் கூட்டமாகி விடவில்லை.  தொடக்கத்திலேயே மந்தையாயிருந்த நிலையில் தான் மனித கும்பல் பிறப்பெடுத்தது.
மந்தையில் தோன்றிய மனிதன், கும்பலாய், கூட்டமாய் வாழ்ந்த போது, இயற்கை உணர்வில் இனவிருத்தி செய்து பிறந்த போது தனிமனிதனாக பிறந்தாலும் பிறந்ததென்னவோ தனிப் பிறவி தான் என்றாலும், சமூகத்திலிருந்தே ஒரு தாயை அடையாளப்படுத்தி பிறந்தான் என்றாலும், பிறந்து தரை வீழ்ந்த பின் அச்சமூகத்தின் குழந்தையாகவே வளர்ந்தான்.  ஆகவே நாம் என்ற சூழலிலும், உணர்விலும் தான் மனிதப் பிறப்பிருந்தது.  ‘நான்’ என்ற சூழலிலும் உணர்விலும் அவன் பிறப்பெடுக்கவில்லை.
இருப்பு தனது இயக்கத்திலும் மாற்றத்திலும் வடிவம் கொண்டு, வளர்ந்து மறைந்து, புது உருவெடுத்து தொடர்ந்தது.  மனிதன் மனிதனாக உருவெடுத்து, மனிதச் சமூகத்தை தொடர்ந்து நிலை நாட்டியது மட்டுமல்ல, விலங்கிலிருந்தும் வேறுபட்ட வாழ்வு  கொண்டான்.  அதற்கு காரணம் ஒரு இயற்கையான விதிமுறை மட்டுமல்ல, நோக்கத் தோடு கூடிய உழைப்பைச் செலுத்த மனிதனால் முடிந்ததாலும் ஆகும்.  திட்டமிட்ட உழைப்புத்தான் - உழைப்பு என்ற ஆயுதத்தை அவன் இயல்பாகவே பெற்றது தான் அவனை மனிதனாக்கியது.

உழைப்பு ஒவ்வொருவரதும் என்றாலும், அது சமூகத்திற்கு சொந்தமானது.  உழைப்பை மூலதனமாகப் பெற்றச் சமூகம், தனது வாழ்க்கைக்கு ஏற்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவ்வுழைப்பை பயன்படுத்தியது.  ஓரு இயற்கைச் சூழலில் சமூகம் பிறப்பெடுத்திருந்ததால், அது தன் தேவைகளை இயற்கையிடமிருந்தே பூர்த்தி செய்து கொள்ள வேண்டி ஏற்பட்டது.  அத்தேவைகள் பூர்த்திக்கான முயற்சியில்  உழைப்பை செலுத்தும் போது தான் இயற்கையை எதிர்த்து அதனை வென்று அதனைத் தன் ஆளுமைக்குக் கொண்டுவந்து அத்தேவைப் பூர்த்திகளை செய்து கொள்ள முடியும் என்ற கடுமையான பணியை புரிந்து கொண்டான்.
இந்த இயற்கையை எதிர்த்துக் கட்டுப்படுத்தும் கட்டாயப் பணியில் சமூகத்தை ஈடுபடுத்தி, உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய சமூகப் பணிகளையும் புரிந்து கொண்டார்கள்.  பிறப்பெடுப்பிலிருந்து அதுவரை‘ நான்’  என்பதையே அறியாத ‘நாம்’ ஆகவே வாழ்ந்தார்கள்.

தோழா!  இதுவரை நான் மனிதனை ‘அவன் - இவன்‘ என்று குறிப்பிட்டு வந்தாலும் ஆண், பெண் உள்ளிட்ட சமூக உறுப்பினர்களின் மொத்தத்தையே அப்படிச் சுட்டிக் காட்டினேன் என்பதை நினைவில் கவனப்படுத்திக் கொள்.

‘கடமை’ என்ற வடிவம் பெற்ற அவ்வுழைப்புத் தான் சமூகத்திற்கு மதிப்பைத் தந்தது.  மரியாதையைத் தந்தது.  இயற்கை வளப்பங்களைத் தந்தது, உரிமையைத் தந்தது, உறவைத் தந்தது, அறிவைத் தந்தது, அனுபவத்தைத் தந்தது, சிந்தனையையும் மொத்தமாக ஒரு பெட்டகமாக உருமாற்றிக் கொண்டு ‘மானம்‘ என்ற சொல்லுக்கு இலக்கணம் தந்தது.  சமூக மானத்தை உணர்ந்த அங்கம் தன்மானியாகவும், தன்மானி சமூக மானத்தைக் காக்கும் மனிதமானியாகவும் ஒவ்வொருவரும் பிணைப்புடன்  வாழ்ந்தனர்.  இது ஆதிகாலச் சமத்துவச் சமூகம் அல்லது தொடக்கக் கால மனிதமானச் சமூகம் ஆகும்.

ஆதிகாலச் சமத்துவச் சமூகத்தில் நிறையவே பலவீனங்கள் இருந்தன.  அனைத்து கோணங்களிலும், வகைகளிலும், முறைகளிலும், துறைகளிலும் பலவீனங்கள் மலிந்து கிடந்தன என்றாலும் மனித மானமிருந்தது;  தன்மானமிருந்தது; உழைப்பு போராட்ட வடிவம் கொண்டபின், மனித வாழ்வு அதாவது சமூக வாழ்வு போராட்டத்தோடு பிணைக்கப்பட்டது; சமூகம் வாழ போராட்டம்; போராடவே சமூக வாழ்வு என வடிவம் கொண்டது.
இயற்கை வளங்கள் சமூகத்திற்குச் சொந்தம். சமூக உழைப்பு சமூக தேவை  பூர்த்திக்காக; தேவைப்பூர்த்திக்கான உழைப்பு உற்பத்திக்கு உழைப்பு; உற்பத்தி துணைபுரிவது உற்பத்தி கருவிகள்; துணை நிற்பது உற்பத்திச் சாதனங்கள்; உற்பத்தி கருவிகளின் வளர்ச்சி சமூக வளர்ச்சி; உற்பத்தியில் மனிதர்களுக்கிடையேயான உறவு உற்பத்தி உறவு ; சமூகம் உற்பத்தியில் ஈடுபடுகிறது; உற்பத்தி பொருள்களை சமூகம் தேவைக்கு பகிர்ந்து கொள்ளுகிறது; உறவால் நெருக்கம் கொண்ட மனிதர்கள் தங்கள் கருத்து பரிமாற்றத்தின் கட்டாயத்தால், சைகைகாட்டி, ஓலமிட்டு, ஓலத்தை ஒழுங்குபடுத்தி, ஒழுங்கோடு உணர்வைக் கலந்து, உணர்வை வகைப்படுத்தி வார்த்தைக்கு வடிவம் தந்து மொழிக்கு உயிரூட்டினர். கருத்து பரிமாற்றத்துக்கு தோன்றிய மொழி கண்டு பிடிப்புகளுக்கும் கருவிகளின் வளர்ச்சிக்கும் ஊக்கமூட்டி, ருசிகரமான உறவு நெருக்கத்துக்கும், ருசுப்பித்தலுக்கான சான்றுகளுக்கும் சாட்சியமானது; சமூக முன்னேற்றத்திலும், மனிதர்களின் வாழ்விலும் உணர்விலும் ஒன்றிக் கலந்துவிட்டது.  காலப்போக்கில் பேச்சாய் தொடங்கிய மொழி வரலாற்றுப் போக்கில் இலக்கணக் கட்டமைப்போடு எழுத்து வடிவம் பெற்றது.
பசிக்கு உற்பத்தி, பட்டபாட்டிற்கு உற்பத்தி, பற்றாக்குறை உற்பத்தி, போதுமான உற்பத்தி, பல்முனை உற்பத்திகளும் ஒரே மட்டமல்லாத உற்பத்தி என்ற நிலைகளில் வளர்ச்சி பெற்றுவந்தாலும், ஜீவனத்திற்கு மட்டுமல்ல, இயற்கைச் சூழலில் சமூகம் தன்னை தகவமைத்துக் கொள்ளவும், இயற்கையை புரிந்து கொள்ளவும் அதனை நெருங்கவும், எதிர்க்கவும், வெல்லவும், கட்டுப்படுத்தவும், வேலை வாங்கவுமான கட்டாயக் கடமைகளை சமூகம் உணர அவசியங்கள் நிர்ப்பந்தித்தன.
அறியாமை கோலோச்சிய காலம்; யூக கற்பனைகள் அச்சமூட்டிய காலம்; மடமை உள்நுழைந்து ஆளுமை பெற்ற காலம்; இவற்றை எதிர் கொள்ள முடியாது சமூகம் தவித்த காலம்; ஆனாலும் சமூகம் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இயற்கைக்கெதிரான உற்பத்தி பணியில்  இறங்கித் தீர வேண்டிய காரணங்கள் நிர்ப்பந்தித்தன.  இதன் விளைவாக அனுபவம் அறிவையூட்டியது; அறிவு உணர்வையூட்டியது; உணர்வு முயற்சிக்கு துணையானது; முயற்சி தன்னம்பிக்கையூட்டியது; நம்பிக்கை ஊக்கமூட்டியது என்றாலும் அந்நம்பிக்கை அறிவார்ந்த தன்னம்பிக்கை, அறியாமையோடு கூடிய அதீதநம்பிக்கை ஆகிய இரண்டிற்குமிடையே சமூகம் ஊசலாடியது.

இந்த ஊசலாட்டத்தில் உற்பத்திப் பணியை கைவிட முடியாத நிலையில் அச்சம் அறியாமை ஆசைகளால் ஏற்பட்ட மடமைக் களைகளை, பயண காலத்திற்கேற்ப விளக்க வியாக்யானங்களை செய்து சமூகத் தளையாக்கிக் கொண்டு உற்பத்திப் பணி தொடர்ந்தது.  சமூக வளர்ச்சியில் ஏற்பட்ட, எதிர்ப்பட்ட, எதிர்நோக்கிய தேவைகளை பூர்த்திப் செய்யும் சமூகப் பணியும் தொடர்ந்தது.

உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகளினது முரண்பட்டும் முறைப்பட்டுமான வளர்ச்சிப் போக்கில் சில உற்பத்தியின் பங்கீட்டிற்கதிகமான உபரி, சில தேவைகளின் பூர்த்திக்கு வழியற்ற நிலை, அதனை நிர்வகித்து ஈடுகட்டுவதற்கான பணி போன்றவை புதிய உழைப்பு பிரிவினைகளுக்கான அவசியத்தை ஏற்படுத்திற்று.  உற்பத்தி பங்கீட்டை ஒழுங்குபடுத்தும் வேலை, வளர்ந்து கொண்டிருக்கும் சமூகத்தை நிர்வகித்து நெறிப்படுத்தும் பணி போன்ற கட்டாயங்களும் உழைப்பு பிரிவினைக்குக் காரணங்களாயின.

இப்படிச் சமூக வளர்ச்சி முன்னோக்கிப் பயணித்தது.  இவ்வளர்ச்சியில் உற்பத்திச் சக்திகள் தான் தீர்மானகரமான சக்தி என்றாலும் உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் முரண்பட்டும் உடன்பட்டுமான இசைவில் வளர்ச்சிக்கு துணை புரிய வேண்டும்.  அத்தகைய துணையாயிருக்க முடியாது, உற்பத்தி சக்திகளின் வீச்சுக்கும் விரிவுக்கும் இணைக்கப்பட முடியாத நிலை மட்டுமல்ல, அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போட்டு தேக்கவும், உற்பத்தி உறவு முனையும் கட்டம்  ஏற்படும். ஆனால் வளர்ச்சி அழிக்கப்பட முடியாததாகையால் உற்பத்தி சக்திகள் அத்தடையைத் தகர்த்தெறிந்து தனக்கிசைவான வேறொரு உற்பத்தி உறவுகளுடன் வளர்ச்சிப் பயணத்தை தொடரும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது.  இதுதான் ஆதி சமத்துவச் சமூகத்திலும் நடந்தது.
‘வரலாற்று இருப்பு முதல் வாதம்’  என்ற விஞ்ஞானப்பார்வை ஆதிச்சமத்துவச் சமுதாயம் பற்றி ஒன்றை தெளிவாக்கிவிட்டது.  சமுதாயம், உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அஸ்திவாரத்தின் மீதுதான் கட்டப்பட்டிருக்கிறது.  அந்த அஸ்திவார கட்டமைப்பில் ஏற்படுகிற மாற்றங்கள் தான் சமூக வடிவில் பிரதிபலிக்கின்றன.

ஆதி சமத்துவச் சமுதாயம், அதன் வளர்ச்சிப் போக்கில் தடைபடாது தொடர வேண்டிய அவசியத்திலும்; அறியாமை, அச்சம், ஆசை, யூகம் போன்றவை தலைதூக்கிய நிலையிலும், விஞ்ஞானம், அனுபவம், சித்தாந்தம் போன்றவை வளர்ச்சியற்ற நிலையிலும், பேதப்பட்டச் சமூகமாக பிளவுபட வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.  சமத்துவச் சமுதாயம் வர்க்கச் சமூகமாக பிளவுபட்டது; பிளவுபட்ட சமுதாயத்தில் அடிப்படையாக முரண்பட்ட, பகைபட்ட வர்க்கங்களும், வர்க்கத்தட்டுக்களும் தோன்றின; சமத்துவச் சமூகத்தில் பிணைப்பு கொண்டிருந்த உரிமை, கடமை, மரியாதை, மதிப்பு, அனுபவம், அறிவு, உறவு, உடமை ஆகியவற்றின் ஒருமை சிதறடிக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டது.  வர்க்க போராட்டத்தின் வரலாறே சமூகத்தின் வரலாயிற்று.

உபரி உற்பத்தியும், உற்பத்திக் கருவி சாதனங்களும், உற்பத்தி பொருள்களும் சமூகத்தின் பெரும் திரளான பகுதியினரிடமிருந்து பறிக்கப்பட்டு, சிறுகுழு - கும்பலுக்குச் சொந்தமாக்கப்பட்டது.  சமூக உடமைகள் தனி உடமையாக உருவெடுத்தன; ஆண் ஆதிக்கம் பிறப்பெடுத்தது; தனி உடமையை பாதுகாக்க ஆதிக்கம், ஆட்சி, அதிகாரம், ஆளுமை தேவைப்பட்டது.  உடமைக்கும்பல் வெகுமக்கள் மீது ஆளுமை செலுத்தும் வர்க்கமாக தன்னை அமைத்துக் கொண்டது; சமூகத்தின் மேல்கட்டுமானத்தை உருவாக்கி, ஆதிக்க, அதிகார, ஆளுமை கொண்டது.  வெகுமக்கள் திரளோ உழைப்பை மட்டுமே கொண்டு நின்றது; அச்சுரண்டல் கூட்டம், அடிமையாய் உழைப்பை தானமாக்கி, அல்லது விற்று ஜீவிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உழைப்பைச் சாக்கிட்டு உயிரைப் பறித்தோ    அல்லது உழைப்பை கஞ்ச பஞ்ச விலை கொடுத்து பறித்தோ  உழைக்கும் மக்களை ஓட்டாண்டியாக்கி ஒடுக்கிப்போட்டது.
சொந்த சுகபோகத்திற்காக சுரண்டல் கூட்டம் வெகுமக்களை அடக்க அரசு தேவைப்பட்டது; போராட்ட எழுச்சியை ஒடுக்க அரசு எந்திரங்கள் தேவைப்பட்டன; மக்களின் உணர்வை மழுங்கடிக்க மதங்கள் தேவைப்பட்டன; மக்களுக்கு எதிரான பாதகத்தை பாதுகாத்துக் கொள்ளவும், அநியாய அட்டூழியங்களை நியாயப்படுத்திக் கொள்ளவும் ஊடகங்களும், இலக்கியங்களும், பிரச்சாரங்களும் வேண்டியிருந்தன.  தனி உடமை உழைப்பு உற்பத்தி கருவி சாதனம் இவற்றின் விளைபயன் ஆகிய மொத்தத்தையும் தனக்கே உடமையாக்கிடவும், பெண்ணுரிமை பறிக்கப்படவும் குடும்ப அமைப்பு அவசியப்பட்டது.  படைப்பால், அனுபோகத்தால் ஒன்றிய உறவால் கொண்டிருந்த கலாச்சாரம் அழிக்கப்பட்டு மக்கள் மீது மயக்க, ரசிக, மடமை அடிமை கலாச்சாரம் திணிக்கப்பட்டது.  ஆக மொத்தத்தில் இத்துணைக்குமான நச்சறிகுரி ஆதி சமத்துவச் சமூகத்தின் இறுதிக் கட்டத்தில் தென்பட்டது.  இந்தச் சமூகத்தின் பலமும் பலவீனங்களும்,  நிலையானதும் நிலையற்றதுமான அம்சங்களுக்கிடையேயான போட்டா போட்டி தொடர் நிகழ்ச்சியாக தொடர்ந்தது.

இனிய தோழா! வரலாற்று இருப்பு முதல்வாதம் என்ற கண்ணாடி நுண்நோக்கியாக உலகச் சமூகங்களின் பரந்துபட்ட தோற்றத்தையும், தொடக்க கால சமத்துவச் சமூகங்களையும் படைப்பாளிகளுக்கு காட்டியதை கூர்ந்து கவனித்தாயா?  அக்கண்ணாடி உள்நோக்கியாக காட்டியிருக்கும் இடைக்கால வர்க்க சமூகங்கள் பற்றியும், அது தொலைநோக்கியாக காட்டியிருக்கும் இறுதியாக அமைந்து தொடரும் விஞ்ஞானச் சமூகம் பற்றியும் இங்கு எழுத இடமில்லை; ஆனால் கண்ணாடி உன் கையில் இருக்கிறது; அவசரமின்றி அணிந்து கொண்டு பாரேன்.

No comments:

Post a Comment