1962 கடைசியில் நான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தேன். ஒரு நெருக்கடியிலிருந்து வந்த எனக்கு இங்கும் ஒரு நெருக்கடி காத்திருந்தது. 47 இல் துவங்கிய தத்துவார்த்த சண்டைகள் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மிகத் தீவிரமாகியிருந்த நேரம். அதன் காரணமாகக் கட்சியில் அதிகாரம் செலுத்திய, பொறுப்புகளில் இருந்தவர்களுக்கும், கட்சியின் உள் அணிகளுக்கமான முரணாகவுமிருந்தது. அவரவர் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ள அரசியல் வகுப்புகள் நிறைய நடைபெற்றன. அப்போது நடைபெற்ற தத்துவார்த்த சண்டைதான் மார்க்சியத்தைப் பற்றி அதிகம் தெரிந்த கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
முதலில் நான் தி.க. வில் இருந்தபோது மார்க்கியத்தை விமர்சிப்பதற்காகப் படித்தது போக, இப்போது சித்தாந்த்தைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக இது அமைந்தது. கட்சிப் பிளவின் போது கீழத் தஞ்சையின் நிலைமை என்பது ‡ கட்சிப் பொறுப்பிலிருந்தவர்கள் சி.பி.ஐ. கட்சி அணிகள் சி.பி.எம். நாங்கள் (சி.பி.எம்) புதிதாகக் கிளைகள், அமைப்புகள் கட்ட வேண்டிய சூழல். சி.பி.எம். கட்சித் திட்டம் 1964 மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அடிப்படையான வர்க்க நிர்ணயிப்பு செய்யப்பட்டது. அரசைத் தேசிய முதலாளிகளின் அரச என்றது சி.பி.ஐ. பெருமுதலாளிய,நிலப் பிரபுத்துவ அரசு என்பது எங்களது நிர்ணயிப்பு. மொத்தத்தில் போராட்டத்தில் இயக்கத்தைக் கட்டுவதும் இயக்கத்தின் மூலமாகப் போராட்டத்தை நடத்துவதும் என்பதில் தீவிரமாகச் செயல்பட்ட நேரமாக இருந்தது.
6. குறிப்பாக அறுபதுகளில் கீழத்தஞ்சையின் நிலவரம் எப்படி இருந்தது?
கீழத் தஞ்சை மாவட்டத்தில் நிலப் பிரபுக்கள் ஆதிக்கம் அதிகமாயிருந்தது. பெரிய ஆட்கள், மிட்டா மிராசுகளுக்கு இங்கு மைனர் பட்டம். ஆய்மழை மைனர், ஆவராணி மைனர், கருங்கண்ணி மைனர், கீழப்பிடாகை மைனர் இப்படி ஊரின் பெயரில் இரண்டு மூன்று ஊர்களுக்கு ஒரு மைனர் இருப்பார். அதே மாதிரி பெரும் பெரும் பண்ணைகள் ஆதிக்கம். ஐவநல்லூர், செல்லூரில் சிக்கல் கோவில் பண்ணை, பெருங்கடம்பனரில் சூரியமூர்த்தி செட்டியார், மஞ்சக்கொல்லையில் ஆர்.எம்.சம்மந்தமூர்த்தி முதலியார், ராஜகோபால் முதலியார், திருநாவுக்கரசு முதலியார், பாப்பாகோவிலில் கோவிந்தராஜ் பிள்ளை, ஆய்மழையில் எஸ்.எஸ்.ஆர். இராமநாதத் தேவர், வடுவூர் தலையாமழையில் ஏ.எம்.பி. செட்டியார் பண்ணை, இப்படி பண்ணைகள்.
அதே நேரத்தில் நிலப்பிரபுவினுடைய கொடுமைகள். விவசாயத் தொழிலாளர்க்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடிகள். தாக்குதல்களிலிருந்து தப்பிக்க அமைப்பு தேவை என்ற தொழிலாளர்கள் உணர்ந்து ஒன்று திரண்ட நிலைமை. நாகை மாவட்டத்தில் ஏறத்தாழ எல்லா பகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான இயக்கமாகப் பரவியது. விவசாயத் தொழிலாளர் மேல் தாக்குதல் நடத்தி, பழைய அமைப்பை அப்படியே தொடர்ந்து கொண்டு போக வேண்டும் என்று நிலப்பிரபுக்களும் ஒன்று திரண்டார்கள். அதற்கொரு அமைப்பாகவே நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடங்கினார்கள். ஆய்மழை மைனர் எஸ்.எஸ்.ஆர்.இராமநாதத்தேவர் அதன் தலைவர். அதன் தொடக்கவிழாவுக்கு நடிகர் சிவாஜி கணேசனை அழைத்து அவர் கையால் ஆய்மழை மைனருக்கு ஜீப் ஒன்று வழங்கினார்கள். அவர்களின் முழு முதல் திட்டம் கம்யூனிஸ்ட் கட்சியையும், அமைப்பாகத் திரண்டிருக்கிற விவசாயத் தொழிலாளர்களையும் ஒடுக்குவதுதான். ஆய்மழை என்பது ஒரு குட்டி சாம்ராஜ்யம். மேலப்பிடாகை, கருங்கண்ணிக்க வடக்கே, பாப்பா கோவிலுக்குத் தெற்கே, வேளாங்கண்ணிக்கு மேற்கே, இந்தப் பகுதி கிராமங்கள் பூராவும் அவரது ஆதிக்கம்தான். போலீஸ் கூட அவரைக் கேட்காம உள்ளே நுழைய முடியாது. அவர் வச்சதுதான் சட்டம். அவர் தலைமையில் தான் சங்கம் துவங்கினார்கள்.
நம்முடைய இயக்கமும் மிகவேகமாக விரிவடைந்து பலமாக எழந்து நின்றது. ஆய்மழை மைனர் வீட்டிற்குச் சற்று தூரத்தில் இருந்த தலித் பகுதி உள்பட எல்லா ஊர்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி பலமானதாக இருந்தது. அவர்களுடைய முதல் தாக்குதலாக வேலை கொடுப்பதில்லை என்று முடிவெடுத்தார்கள். அரிசிப் பிடி ஆட்கள் என்ற பெயரில் மதுரை, இராமநாத புரம் பகுதியில் இருந்தவர்களை வேலை செய்ய அழைத்து வந்தார்கள். அவர்கள் தங்குவதற்குப் பெரிய கொட்டகை போட்டு, சாப்பாடு உள்பட எல்லாம் ஆள் வைத்துச் செய்தார்கள். பாதுகாப்புக்குப் பயிற்சி பெற்ற அடியாட்களையும் அழைத்து வந்தார்கள்.
7. இதைப் பொதுவுடைமைக் கட்சி எப்படி எதிர்கொண்டது?
இப்படி தருவிக்கப்பட்ட வெளியாட்கள், அரிசிப்பிடி ஆட்களை வெளியேற்றுவதும், எங்களுக்கு வேலை வேண்டும் வேலை கொடு என்பதும் நம்முடைய போராட்டமாயிருந்தது. அடியாட்களோடு அவர்கள் தாக்குதல் செய்யும் போது தற்காப்புக்காக நாமும் பல இடங்களில் கைகலப்பு செய்ய மோதல் நிலை ஏற்பட்டது. நிறைய வழக்குகள் போட்டார்கள். ஒவ்வொரு இடத்திலும் 30,40 பேர் மேல் வழக்குப் போடுவார்கள். எங்கேயும் 30 பேருக்குக் குறைஞ்ச வழக்கேயில்லை. ஒரு நேரத்தில் குறைந்த பட்சம் 100 வழக்குகள் இருந்துகிட்டே இருக்கும். அப்போ சனிக்கிழமையும் கோர்ட் உண்டு. எனக்கெல்லாம் ஞாயிற்றுக் கிழமையைத் தவிர மற்ற நாளெல்லாம் கோர்ட்.
8. இதில் காவல்துறையின் தலையீட எப்படி இருந்தது?
லோக்கல் போலீஸ் மட்டுமல்ல ; கிசான் போலீஸ் என்ற அதன் தனிப்படைப் போலீசான மலபார் போலீஸ் எல்லா இடங்களிலும் கொண்டு வந்த இறக்கினார்கள். எல்லாப் பண்ணைகளிலும் அரிசிப்பிடி ஆட்கள் தங்கியிருந்தது போல கிசான் போலீஸ் கூடாரம் ஒன்றும் இருக்கம். போலீஸ், கோர்ட், அடியாட்கள், பண்ணைகள், வழக்க, வேலை செய்ய வந்த வெளியாட்கள் இப்படி எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வழக்குப் போட்டான்னா ஆஜராகவே ஒரு வாரம் தலைமறைவாக இருக்கணும். ஆஜராகி சப்‡ஜெயிலில் ஒரு வாரம் கிடக்கணும். அப்புறம் வழக்கு நடக்கும். எங்களுக்குக் கட்சிக் கூட்டம் நடத்தக் கூட முடியாது. வாரம் முழுக்கக் கோர்ட்டிலே இருந்தா எப்படி? அதனால் கோர்ட் வெளியிலேயே தான் கட்சிக் கூட்டம், கமிட்டிக் கூட்டம், சென்டர் கூட்டம் எல்லாமும். நாம தொடர்ந்து வேலை செய்ய அது அவசியமாக இருந்தது.

No comments:
Post a Comment