1. உங்களது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து இந்த நேர்காணலைத் துவங்குவது சரியாக இருக்குமென்று கருதுகின்றேன்...
நான் மாணவனாக இருந்த 1952 முதலே, திராவிடர் கழக ஈடுபாடும் தொடர்புகளும் உண்டு. எனத கள வேலைகளையும் அப்போது துவங்கி விட்டேன். கிராமங்களில் விவசாயத் தொழிலாளர் சங்கங்களைக் கட்டி அமைப்பாக்குகிற வேலை, பரவலாக அறியப்படுகிற வாய்ப்பு என்பது ,1957‡இல் நான் திராவிடர் கழகப் பேச்சாளராகக் கிளம்பிய பிறகு தான், பெரியார் பெருந்தொண்டர் நாகை எ ஸ். எஸ். பாட்சா அவர்களும் நானும் அப்போது பேசப் போனோம். மதுரை, சேலம் வரையுள்ள ஊர்கள், எங்கள் கால்படாத இடமில்லை என்கிற அளவிற்கு பிரச்சாரக் கூட்டங்கள் நிறைய இடங்களில் நடக்கும்.
2. பிரச்சாரம், களவேலை எதைப் பிரதானமாகக் கொண்டிருந்தீர்கள்?
பிரச்சாரம் என்பது மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படுகிற வாய்ப்பு என்பதற்காகச் சொன்னது. ஆனால் அடிப்படை வேலை திராவிட விவசாய சங்க வேலைகள். பின்னாளில் பொதுவுடமை இயக்கத்தில் என்ன செய்தேனோ அதை அப்போதே துவங்கி விட்டேன். திருவாரூர், கீவளூர் வட்டத்தில் பெரும்பகுதியான கிராமங்களில் அமைப்பு இருந்தது. ஏறத்தாழ 50,000 பேர் திராவிட விவசாய சங்கத்தில் இருந்தார்கள். பாவா நவநீதக் கிருஷ்ணன் என்கிற அர்ப்பணிப்புள்ள தலைவர், அந்த தோழருடன் சேர்ந்து வேலைகள் செய்து கொண்டிருந்தோம்.
திராவிட விவசாய சங்க வேலைகளில் தீவிரமாக இருந்த அந்த காலகட்டத்தில் தேர்தலில் காமராசரை ஆதரிக்கக் கட்சி முடிவெடுத்தது. மிராசுதாரர்கள் பெரும்பாலும் காங்கிரஸ்காரர்கள். கிராமங்களில் மிராசுதாரர்களை, அவர்களுடைய ஆதிக்கத்தை எதிர்த்துக் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்த நேரும்.
அதே வேளையில் அய்யா சொன்னபடி பச்சைத் தமிழர் காமராசரை ஆதரித்துக் கூட்டத்தில் பேச வேண்டிய நிலைமை. பல இடங்களில் மிராசுகள் கூட்டங்களுக்கு வர மாட்டார்கள். ஏ.ஜி.கே. வந்தா நான் வரமாட்டேம்பாங்க. நமக்க ஒன்னுமில்லை. அவங்க வந்தாலும் வராவிட்டாலும் நாம அதத்தான பேசப்போறோம். காமராசரை ஆதரிக்கிற விசயம் தானே. ஆனா ஸ்தல வேலைகள் என்ற நிலைமையல் அவங்களோடு நமக்கப் பிரச்சனை இருந்தது. பல இடங்களில் நம்ம மேல தாக்கதல் தொடுத்தாங்க. இதன் உச்ச கட்டமாக அந்தணப்பேட்டை, பாப்பாகோவில் இங்கெல்லாம் நம்ம வீடுகளையயல்லாம் கொளுத்தினாங்க. அப்போ அய்யா நாகப்பட்டினம் வர்றார்.
3. கட்சியின் தலைமை இநதப் பிரச்சினைகளை அணுகியது?
அதைப் பற்றித்தான் சொல்ல வர்றேன். நாகை அவுரித் திடலில் கூட்டம். ராதாகிருஷ்ண நாயுடுன்னு ஒரு டாக்டர். அவரு மிராசதார் சார்பா அய்யாவிடம் என்னைப் பற்றிக் கடுமையாக குறைபட்டிருக்கிறார். ஏ.ஜி.கே. எப்பவும் எங்களோடு தகராறு பண்ணிக்கிட்டிருக்கிறார். எல்லா ஊர்கள்லேயும் சண்டை. எங்களைப் பயப்படுத்திக் கிட்டே இருக்கார் அப்படின்னு குற்றச்சாட்டு. இதற்கிடையில் கூட்டத்திற்கு வருபவர்களை மிராசுதார்கள் வழியில் தாக்கப் போவதாகத் தகவல் வருகிறது.
பெரியாரிடம் செய்தி போன போது ஏ.ஜி.கே. யைக் கூப்பிடுன்னார். நீயும் , பாவாவும் போய் ஊர்வலத்தைப் பத்திரமா அழைச்சுக்கிட்டு வாங்கன்னார். தாசில்தார் ஜீப்பிலேயே போனோம். சிக்கல் பக்கதில் மூணிவாய்க்காங் கரைங்கிற இடத்தில் வாய்க்காலுக்குள்ள இரண்டு பக்கமும் ஆயுதங்களோட ஆட்கள் இருக்காங்க. வண்டியோட லைட் வெளிச்சத்தில தெரியுது. சரின்று போயிட்டோம். ஒரு பர்லாங் முன்னாடியே ஊர்வலத்த நிறுத்திகிட்டோம். ஊர்வலத்துல சுருளு, சிலம்பாட்டம் இப்படி வந்த ஆளுங்களை முன்னாடி போக ஏற்பாடு பண்ணினோம். ஏன்னா, அவங்க பயிற்சி பெற்ற ஆளுங்க. அடுத்ததா ஆண்கள், மேளதாளம் , ஆட்டக் காரர்கள், கடைசியா பெண்கள்.
முன்னாடி வர்ற ஆட்களுக்கு வேலை என்னான்னா அந்த குறிப்பிட்ட இடம் வந்த உடனே தாமதமில்லாம ஆயுதங்களோடு இரண்டு பக்கமும் குதிச்சி அவங்கள விரட்ட வேண்டியது. எப்பவும் ஊர்வலத்த பாதியில் புகுந்து தாக்குவது மாமூல் பழக்கம். அப்பதான் கூட்டம் கலைஞ்சி ஓடும். குழப்பம் வரும். அதற்கு வாய்ப்பு தராமல் இந்த எதிர்பாராத திடீர்த் தாக்குதல் நடத்தி பிரச்சனையில்லாம ஊர்வலத்தைக் கொண்டு வந்திட்டோம். அப்போ அந்தக் கூட்டத்திலேயே பெரியார் அறிவிக்கிறாரு. ஏ.ஜி. இருக்கிறாரே, கஸ்தூரிரங்கன். அவருக்கும் மிராசுதாரர்க்கும் நடக்கிற சண்டையிலே நம்ம கழகத்துக்கு எந்த சம்பந்தமுமில்லை அப்படின்னு அறிவிச்சுடறாரு.
4. உங்களிடம் பெரியார் எதுவுமே விசாரிக்காமலே அறிவிச்சிட்டாரா?
ஆமாம். என்னைக் கூப்பிட்டு எதுவுமே கேக்கல. அடுத்த 10 நாள்ல நிரவியில் கூட்டம். நிரவி வந்தா திரு. ரத்னவேலு வீட்டிலேதான் தங்குவார். அங்க போய் இப்படி அறிவிச்சிட்டீங்களே. என்ன ஏதுன்னு கேட்டீங்களான்னு கேட்பதற்காகவே பாபாவும் நானும் போனோம். வரச்சொல்லாத ‡வேணாம் அவன் அப்படின்னு சொல்லிட்டார். பிறகு மாலையில் கூட்டம் நடந்துச்சு. மேடைக்கு வந்தார் பெரியார். கூட்டத்தில் நாங்களும் இருந்தோம். அப்ப திடீர்னு ஏ.ஜி.யைப் பேசச் சொல்லுன்னாரு. எஸ்.எஸ்.பாட்சா மைக்கில் சொன்னார். நான் போகலை. இரண்டாவது தடவையா ஆளனுப்பிப் பேசக் கூப்பிட்டாங்க. வர முடியாது போன்று சொல்லிட்டு அதோடு திரும்பிட்டோம். பெரியார் சம்பந்தமில்லைன்னு பேசிய பிறகு மிராசுதாரர்களின் தாக்குதல் அதிகமாயிருச்சி. நாங்க பெரிய பின்னணி, அமைப்பு எதுவுமில்லாம எதிர்கொள்ள வேண்டிய நிலை. இந்த நிலைமையில் அவர்களின் பலமான தாக்குதலிலிருந்து தொழிலாளரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு. பிறகு கம்யூனிஸ்ட் கட்சியிடம் பேசினோம். திராவிட விவசாய சங்கம் முழுவதுமாக நாங்கள் 1962 கடைசியில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தோம்.

No comments:
Post a Comment