அப்ப கட்சி ஒழுங்கு தீவிரமா கடைபிடிக்கப்பட்டது. 12 1/2 ரூபா செலவுக் கணக்க சரியா சொல்லலைங்கிறதுக்காக ஒரு தாலுக்கா கமிட்டி செயலரையே கட்சி நீக்கியது. அப்படியயல்லாம் கறாரா இருந்த நேரம். அதே போல கட்சி அலுவலகங்கிறது வேலைகள் கலந்தக்கிறதுக்காக, திட்டமிடலுக்காக, வருகிற இடமா மட்டுந்தான் இருந்தது. மற்ற நேரமெல்லாம் ஜனங்க மத்தியில் வேலை செய்யறதுதான். ஆபீஸ்ல எல்லாம் தங்கி அரசியல் நடத்தாதீங்க. எதுவானாலும் இருந்த இடத்திலேயே ஸ்தலத்தில தான் வேலை செய்யனும்னு கறாரா சொல்வாங்க. அதே போல கலெக்டர், போலீஸ் இப்படி எந்த அதிகாரிகள் கிட்டேயும் நேர்ல போய் பேசுங்க. அப்பதான் உங்க முகத்தைப் பார்த்துப் பேசுவாங்க. போன்லயயல்லாம் பேசுனா மத்தவங்க கிட்ட கண் சாடை காட்டி கேலியா கூடப் பேசுவான் அப்படிம்பாங்க. எதையும் ஒரு சீரியஸா, உணர்வுப் பூர்வமாக அணுகனுங்கறது அன்றைய நடைமுறை.
அப்போ ஜனங்க மத்தியிலே பேசுறது, மேடையில் பேசறதுங்கறத வேலைகளைப் பத்தின அறிக்கையாத்தான் இருக்கும். பேசுறது நடைமுறையினுடைய விரிவாகத்தான் இருந்தது. மேடைப் பேச்சே, பேச்சு வழக்காத்தான் இருந்துச்சு. பின்னால வந்த முதலாளித்துவ அரசியல்ல தான் பேச்சுங்கிறது ஒரு தொழிலாயும் சாதியாவும் மாறிப் போச்சு.
15. அந்தப் போராட்டச் சூழலில், நினைவில் எட்டுகிற சில சம்பவங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?
நாகைத் தோழர்கள்னாலே கட்சியல் விசேமான மரியாதை உண்டு. மாநாடுகள் நடக்கும் போது, குறிப்பாக, மேற்கு வங்கத்தச் சேர்ந்தவங்க நாகைத் தோழர்களைத் தேடி வந்து வாழ்த்து சொல்வாங்க. நம்முடைய தோழர்களைத் தங்கள் தோள்களில் தூக்கிக் கொண்டு கோம் போட்டதும், ஆடியதும் கூட உண்டு. நமக்குத் தீவிரமான போராட்டக்காரர்கள் என்கிற ஒரு மரியாதை இருந்தது.
பண்ணைக்கள்ல போராட்டம் நடந்த போது எந்த பேச்சுவார்த்தைக்கும் அடங்காம ரொம்ப வீம்பா இருந்தவனும் உண்டு. மாங்குடி கிருஷ்ணமூர்த்தி அய்யர்னு ஒரு மிராசுதார். ரொம்ப கிராதகமான அய்யர். நம்ம போராட்டத்தை மீறி அவங்களே அறுவடை பண்றதுன்னு முடிவு பண்ணி வெளியூர் ஆட்கள், அடியாட்களோட ஊர்வலமா போறாங்க. முன்னாலே தலைமை தாங்கி இந்த கிருஷ்ணமூர்த்தி அய்யரே தப்படிச்சுக்கிட்டுப் போறாரு. அத நம்ம தோழர்கள் தடுத்த போது (அவங்க அறுவடை செய்யக் கூடாதுன்னு) நடந்த போராட்டத்தில் தான் பூந்தாழங்குடி பக்கிரிசாமி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
தலையாமழை ஏ.எம்.பி. செட்டியார் பண்ணையில ஆலமழை சின்னத்தம்பின்னு ஒரு காரியக் காரர். எப்பவும் அரிவாளும் கையுமா இருப்பார். அசந்த நேரமே கிடையாது. ஆளுகள அச்சுறுத்தி வேலை வாங்கிறவர். நம்ம தோழர்கள் திட்டம் போட்டு ஒரு நாள் அவர் தூங்குற போது அரிவாள மட்டும் எடுத்துட்டு வந்துட்டாங்க. தன் அரிவாள ஒருத்தன் பறிச்சிட்ட பிறகு தன் வீரமே பறி போயிட்டதா நினைச்ச, அதோட பண்ணைய வேலையை விட்டுட்டார். பிறகு கட்சிக்கும் வந்துட்டார். அதோட கடைசி வரை சிவப்புச் சட்டையில் தான் இருந்தார்.
அப்படித்தான் வடவூர் பண்ணையில காரியக்காரர் மச்சான் கைவெட்டுப்பட்ட ராஜமாணிக்கத்தைப் பத்திச் சொன்னேன் அல்லவா? பிற்காலத்தில் அவரும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்திட்டாரு. யாருகிட்ட கையாளா இருந்தாரோ, யாரு அவரக் காப்பாத்துவாங்கன்னு நினைச்சாரோ அவங்கெல்லாம் கைவிட்ட பிறகு, தான் செஞ்ச தவறுக்குப் பரிகாரமா இங்கேயே வந்திட்டாரு. இப்படிப் பல சம்பவங்கள்.
16. வெண்மணிச் சம்பவத்திற்கு முந்தைய சூழல், வெண்மணியின் விவசாயத் தொழிலாளர் போராட்டம் பற்றி...?
முதல்ல வெண்மணிச் சம்பவத்த ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியா பார்ப்பதோ, அத அப்படி குறுக்கி விடுவதோ தவற. 63 க்குப் பின்னாடி நாகைப் பகுதியிலே வளர்ந்து வந்த போராட்டச் சூழலின் ஒரு உச்சக்கட்டமாகத்தான் அது நடந்தது. அந்தச் சூழல் இல்லாமல் இந்தச் சம்பவம் இல்ல. இப்படியான பார்வை பொதுவுடைமை கட்சியிலேயே குறைவாகத்தான் இருக்கு. அப்போதைய போராட்டச் சூழல் என்பது நிலப்பிரபுக்களின் திட்டமிட்ட தாக்கதல்களும், நம்முடைய தற்காப்புக்கான தாக்குதலும் அதிகமாகிப் பதட்டமான சூழ்நிலை. அதன் ஒரு கட்டமாக நம்முடைய பல தலைவர்களைப் பலி கொண்டார்கள். ஆய்மழை தங்கவேல், சிக்கல் பக்கிரிசாமி, இரிஞ்சூர் சின்னப்பிள்ளை, கேக்கரை இராமச்சந்திரம் இப்படிப் பலரும் கொலை செய்யப்பட்டார்கள். குடிசைகள், வீடுகள் கொளுத்தப்பட்டன. விவசாயத் தொழிலாளர் மீது நிலப்பிரபுக்கள் கட்டவிழ்த்து விட்ட காலித்தனங்களும், கொடுமையும், அதை எதிர்த்து வாழ்வா? சாவா? என்ற நமது ஜீவ மரணப் போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன.
நெல் உற்பத்தியாளர் சங்கம் துவங்கிய ஆய்மழை மைனர், எங்க எதிர்ப்பைச் சமாளிக்க முடியாம எதிரடி வாங்கின பிறகு இப்போ அதன் தலைவரா இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு வர்றார். நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைகளை நன்றாகக் கற்றுத் தேர்ந்த கொடுங்கோலன். திருமணமாகாதவர். ஜாதிக்கட்டு உள்ளவர்ங்கிற கூடுதல் பலத்தோடு வர்றார். எங்கெங்கே விவசாயத் தொழிலாளர் போராட்டம் நடக்கிறதோ அங்க 3 டிராக்டர்ல அடியாட்களோடு இவரும் துப்பாக்கியோடு ஜீப்பில் வருவார். இப்படிப் பல இடங்கள்ல நேரடியாகவே தாக்குதல் நடத்தினார். அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டும், வேலை தராம விவசாயிகளை வெளியேத்தாதே! என்றும் நரியங்குடியில ஒரு போராட்டம். இவருடன் வந்த அடியாட்கள் தாக்க இவர் துப்பாக்கியால சுடுறார். போலீஸ் கண்ணீர் புகை வீசுது. இப்படி எல்லோரையும் அச்சப்படுத்தி நமது போராட்ட வலுவை ஒழித்துக் கட்ட நினைக்கிறார். அவர் எந்த ஊர்கள அடக்குமுறையில வச்சுகிட்டு மத்த இடங்கள்ல சுதந்திரமாக ரவுடித்தனம் பண்றாரோ, அந்த அவரோட இடத்திலேயே அவரக் கிளம்ப முடியாம பண்ணனும். அங்கேயே நம்முடைய கட்சிய வலுவாக்கவும், போராட்டத்தைக் கடுமையாக்கவும் செஞ்சோம். அதனால் அந்தப் பகுதிகள்ல நம்ம கட்சி கடுமையான எதிர்ப்புக் கிடையில வேலை செய்ய வேண்டியிருந்துச்சி. இந்தப் போராட்டச் சூழல்ல தான் வெண்மணிப் போராட்டம் நடந்தது.
17. கூலி உயர்வு கோரிய போராட்டந்தானே வெண்மணிப் போராட்டம்?
கூலி உயர்வு கோரிக்கை மட்டுமல்ல ; விவசாயத் தொழிலாளர் மரியாதையும் ; உரிமையும் பெறுவதற்காக நடத்திய போராட்டந்தான் அது. 5 படி நெல் கூலியை 6 படியாக உயர்த்திக் கொடுக்கணும். அறுவடை செஞ்ச நெல் அனைத்துக்கும் கூலி தரணும்னு இரண்டு கோரிக்கைகள். நெல் அறுவடை முடிந்து களத்தில் நெல் குவிக்கப்படும். ஏறத்தாழ பாதிக்க மேல் மூட்டை போட்ட பிறகு வண்ணான், பரியாரி, கோவிலுக்கு, கிராமத்துக்குன்னு பண்ணையார் அளந்து போடச் சொல்வார். இந்த வரு சம்பளத்தின் மூலமும், பராமரிப்பின் மூலமுந்தான் கிராம சாதிப் படிநிலை, சேç செய்கிற சாதி முறைகள் நில உடைமை முறையை உயிரூட்டி வச்சிக்கிட்டாங்க. இந்த முறையில நெல் விநியோகிச்ச பிறகு, அறுவடையான மிச்ச நெல்லுக்குத் தான் கூலி கணக்கிடுவார்கள். இப்படிக் கூலி போடும் போது, முதல்ல அளந்து கட்டுன பாதிக்குத் தான் கூலி கிடைக்கும். மீது களத்தில் செலவாகும் நெல்லுக்குக் கூலி கிடைக்காது. களத்திலே செலவாகும் நெல்லும் கூலிக்கு அறுத்ததுதானே! அதோட களத்தில் செலவெல்லாம் முடிஞ்சு ஒவ்வொரு குவியல்லேயும் ஒன்றரை களம், 2 களம் நெல்லு கிடைக்கும். அத அடிப்பொலின்னு சொல்லி அதையும் கூலி கொடுக்காம அள்ளிக் போட்டுக்குவான். என்னன்ன கேட்டா அது பட்டறைக் காய்ச்சலுக்குன்னு சொல்லிடுவான்.
நமது கோரிக்கை என்னன்னா அறுவடை செய்த அனைத்து நெல்லையும் மூட்டை போட்டு அத்தனை மூட்டைக்கும் கூலி போட வேண்டும் என்பதுதான். ரெண்டு கோரிக்கைகள்ல கூலியை உயர்த்திக் கொடுக்க சம்மதித்த பண்ணைகள் அறுவடை செஞ்ச நெல் அனைத்துக்கும் கூலி என்பதை மறுத்து விட்டனர். இதுவரை இருந்த பாரம்பரிய முறையை மாற்றுவது தங்கள் கெளரவத்தைப் பாதிப்பதாகக் கருதி மறுத்தனர். செய்த வேலை முழுமைக்கும் கூலி பெறுவது தங்களின் மரியாதைக்கும் உரிமைக்கும் கிடைக்கும் அங்கீகாரமாகத் தொழிலாளர்கள் முடிவு செய்தனர். இதுதான் வெண்மணிப் போராட்டத்தின் அடிப்படை.
No comments:
Post a Comment