Monday, February 28, 2011

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-8

20. கட்சியின் கள அணுகுமுறையும் மேல்மட்டத்தின் போக்கும் வேறு வேறாக இருந்தது எதனால்?
போராட்ட வடிவங்கள், உத்திகள்லயே இந்த முரண் வருது. பேச்சு வார்த்தைக்கு ஒத்து வராத பண்ணைகள்ட்ட பாடை கட்டி ஊர்வலமா போறதப் பத்திச் சொன்னேன். அது அமைதியான போராட்டமா? இந்த போராட்டம் நாகரிகமா இல்லையான்னு விவாதமெல்லாம் வந்தது. சில வி­யங்கள்ல நீங்க என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்க. எப்படியாவது பண்ணுங்கன்னு மாட்டத் தலைமைகள் கசப்பா சொல்லிட்டு விட்டுடுவாங்க.
நாங்க நடைமுறையில சங்கடப்பட்டு அனுபவிச்ச எதிர்விளைவுகள ஏத்துக்க வேண்டியிருந்துச்சு. எந்த செயலுக்குமான விளைவுகளை எதிர்கொள்ளவும், படிப்பினைகளின் அடிப்படையில் எதிர்வினை செய்யவுமான தேவை இருந்தது. அந்தப்படி எங்களோட போராட்டத்த மாவட்டம் பூராவும் நாடு பூராவும் விரிவுபடுத்திக்கனங்கிறது நாகை தாலுக்கா கமிட்டியோட, எங்களோட ஆழமான கோரிக்கை. இது நாகை தாலுக்கா அளவுல உள்ள செக்டேரியன் போக்கு என்பது மேல உள்ளவங்க நிலைப்பாடு. இதுதான் வெண்மணிக்கான எதிர் நடவடிக்கை என்பதிலும் எதிரொலித்தது.
21. வெண்மணி நினைவு தினம் குறித்து...
வெண்மணி தினம் இப்ப கொண்டாடுவது மாதிரி ஏதோ ஒரு குறிப்பிட்ட தியாகிகள் தினம் மாதிரியோ ஒரு பண்டிகை மாதிரியோ கொண்டாடக் கூடாது. அது அன்றைய நாகை தாலுக்காவின் (இன்றைய நாகை,திருவாரூர் மாவட்டங்கள்) விவசாயத் தொழிலாளர்களுடைய எழுச்சியின் சின்னம். அப்படியான உணர்வு தொனிக்கிற வகையில் நடத்தணும். அதற்கான பெயர் சூட்டணும்.
நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும், சாதி வெறியினுடைய ஆதிக்கத்தையும் எதிர்த்து நடந்த அந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் அந்த இரண்டும் தகர்க்கப்பட்டுருச்சு. அப்படிப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சிக்கோ, அந்த எழுச்சியின் சின்னமான நிகழ்ச்சிக்கோ சரியான வரலாற்குப் பதிவுகள் இல்லை. இலக்கிய நடையிலேயும், கதை நடையிலேயும் விபரங்கள் அடிப்படையிலேயும் சில புத்தகங்கள் வந்திருக்கு. எதுவாயிருந்தாலும் உண்மையான வரலாற்றுப் பதிவாக இல்லாதிருந்தால் அது வெண்மணி நிகழ்ச்சியோட, விவசாயிகள் எழுச்சியேட சின்னத்தைக் கொச்சைப்படுத்துவதாகத் தான் அமையும். அன்னைக்கு நடந்த நிகழ்ச்சி எல்லாம் வட விவசாயத் தொழிலாளர்களோட அரைப்புள்ளி தானே தவிர முற்றுப்புள்ளி இல்ல. ஆனா எதார்த்த நிலை என்னன்னா அதனோட தொடர்ச்சியே இல்லாம முற்றுப்புள்ளி வைச்ச மாதிரி விவசாயிகள் எழுச்சி நின்னு போச்சு.
22. சிறைக்குள்ளும் இயக்கம் நடத்துவது என்பது சர்வதேசப் பொதுவுடைமையாளர்களிடம் காணப்படுகிற புகழ் பெற்ற ஒரு அணுகுமுறை. இதை தாங்களும் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறீர்கள். அது பற்றித் தங்களோடு...?
என் சிறை வாழ்க்கை என்பது ஏறத்தாழ 24 ஆண்டுகள். அப்போ சிறைச் சூழ்நிலையும் கைதிகள் நடத்தப்பட்ட விதமும் மோசமாயிருந்தது. ஒருத்தன் சிறைப்பட்ட உடனேயே அவனது வாக்குரிமையும் பறிக்கப்பட்டு விடுகிறது. பின் அவன் இந்த நாட்டின் குடி மகனா? இல்லையா? குற்றம் நிருபணமான பிறகு தான் குற்றவாளி. அதுவரை குற்றம் சாட்டப்பட்டவன்தானே? அடிப்படையில சிறைவாசிகள்ன்னும், சிறையை இல்லம்ங்கிறதுமே தப்பு. சிறைவாசிகள் அல்ல சிறைப்படுத்தப்பட்டோர் ; இல்லம் அல்ல. அடைப்பான் என்பதே சரி. வெள்ளையன் வெளியேறிய பிறகும் அவன் விட்டுப்போன 1881 ஆம் ஆண்டின் சிறைச் சட்டங்கள் அடங்கிய சிறைக் கையேடு தான் பின்பற்றப்பட்டது. இதில் சிறைப்படுத்தப்பட்டோர் தொடர்பா அரசு வெளியிடகிற ஆணைகள் , உத்தரவுகள் எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. சிறை உணவு, சிறைப்பட்டோர் நடத்தப்படும் விதம் மிக மோசமாயிருந்தது. இதை எதிர்த்துப் போராட வேண்டும் என்று தீர்மானித்தோம்.  அதன் முதற் கட்டமாக திருச்சி மத்தியச் சிறையில் 1973 இல் சிறைப்படுத்தப்பட்டோர் நல உரிமைச் சங்கம் துவங்கப்பட்டது. அதன் ஒருங்கிணைப்புக்காகவும் போராட்ட ஆயுதமாகவும் உரிமைக்குரல் கைப்பிரதியேடு துவங்கப்பட்டது. சங்கம் தலைமறைவு சங்கமாகவே கட்டப்பட்டது. மொத்தமுள்ள 1100 பேரில் ஆயிரம் பேருக்கு மேல் உறுப்பினராயினர்.
காவலர்க்கும் நிறைய நிர்வாகக் கொடுமைகள். பகல்ல 3 மணி நேர டூட்டி பார்த்தால் வெளியே போய்த் திரும்பி அடுத்த டூட்டிக்கு வர இடை நேரம் கிடைக்கும். இரவுப் பண என்றால் சாயந்திரம் 6 மணிக்கு உள்ளே வந்தா அதோட மறுநாள் காலை 6 மணிக்குத்தான் வெளியே போக முடியும்.
இரவு கேட் பூட்டப்பட்டு சாவிய சிறைக் கண்காணிப்பாளர் கையில எடுத்துட்டுப் போயிடுவார். இதற்கிடையில் வர்ற நல்ல செய்தி, கெட்ட செய்தி, குடும்பப் பிரச்சனை எதுவானானும் அடுத்த நாள்தான் தெரியும். வெளியவும் போக முடியாது. ரொம்ப அடக்குமுறை. அவங்க குடும்ப நிலைமைகளும் சிறைக்குள்ள வந்து ஏதாச்சும் ஓசியில வாங்கிச் சாப்பிடணும்கிற மாதிரிதான். அவர்களுள் சிலர் ஒன்று பட்டு தங்களை நெறிப்படுத்திக் கொண்டு நிர்வாக அடக்குமுறைக்கு எதிராகச் சங்கமாகத் திரள்வதில் துணை நின்றோம். சிறைக் காவலர் நலன் வளர்ச்சிக் கழகம் துவங்கப்பட்டது. அவர்களுக்குத் தரப்படுகிற மெமோவுக்கு பதில் எழுதித் தருவது, மேல் முறையீட்டு விளக்கங்கள் எழுதுவது இப்படி அவர்களோடு ஏற்கனவே நமக்கு நல்ல உறவு இருந்தது. ஆக வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. ஒரு துண்டுச் சீட்டு கூட வெளியே கொண்டு போக முடியாது. கடுமையன சோதனைகள் இருந்தன. அப்ப ஒர்க்ஷாப் சிஸ்டம் இருந்தது. தையல், தச்சு, பைண்டிங்குன்னு ஒர்க்ஷாப்ல சிறைபட்டோருக்கு வேலை ஒதுக்கீடுகள் இருக்கும். தச்சுப்பட்டறையில் தயாராகிற லத்திகள்ல கூடாக்கி, பூண் மட்டும் போட்டு அனுப்புவோம். அதுல எத்தனை கடிதம், மனுக்கள் ஆனாலும் காவலர் மூலமாகவே வெளியே அனுப்பிடுவோம். இப்படி சகல வழிகளிலும் யுத்திகள் பண்ண வேண்டியிருந்தது.
26 கோரிக்கைகளை முன் வைத்து, மே 1, 1974 இல் (மே நாள்) போராட்டம் சிறைக்குள் துவங்கப்பட்டது. போராட்டத் துவக்க நாளிலேயே எல்லா தலைவர்கள், மத்திய, மாநில அரசுகள், அதிகாரிகள், அப்போ எதிர்க்கட்சித் தலைவர்கள் வாஜ்பேய், பிரதமர் இந்திராகாந்தி, இப்படி வெளியில 1000 பேருக்குக் கிடைக்கிற வகையில் கோரிக்கை மனுவும் போராட்டத் தகவலும் அனுப்பப்பட்டன. போராட்டத்தின் இன்னொரு வடிவமாக, சட்டபூர்வ போராட்டமாக, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்க தொடரப்பட்டது. போராட்டத்தை ஒடுக்குவதற்கு சகல ஆயுதங்களையும் பிரயோகித்தார்கள். முக்கியமானவர்கள் சேலம், கோவை, மதுரை என்ற சிறை மாற்றம் செய்யப்பட்டனர். எங்கே சென்றாலும் அங்கங்கே போராட்டத்தைத் தொடருங்கள் , போராட்டத்தை விரிவாக நடத்த கிடைத்த வாய்ப்பு என்று பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றோம்.
என்னைப் பாளையங்கோட்டைக்கு மாற்றினார்கள். அங்கே செவ்வொளி என்ற கைப்பிரதி தொடங்கி நடத்தினோம். இறுதியில் போராட்டம் வெற்றியுடன் முடிவுற்றது. சிறைத்துறை வரலாற்றில் முதன் முறையாகச் சீர்திருத்தங்கள் துவங்கின. பாதிப்புன்னு பார்த்தா சில காவலர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். அதற்கும் பொறுப்பேற்றுக் கொண்டு நம்முடைய ரெயில்வே தொழிற்சங்கத் தோழர்கள் மூலமாக அவர்களுக்கு ரெயில்வே துறையில் வேலை ஏற்பாடு செய்து கொடுத்தோம். ஒரு காவலர் மட்டும் வேலை வேண்டாம் என்று சொல்லி விட்டார். ஒரு இளைஞர் படிக்க விரும்புவதாகச் சொன்னார். நம்முடைய ஏற்பாட்டிலேயே அவரைப் படிக்க அனுப்பி வைத்தோம். இப்படி சிறை அனுபவங்களை, போராட்டங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். சிறையா, வெளியிலா என்பதல்ல பிரச்சனை. போராட்டம்ன்னா என்ன? சூழலைப் புரிந்து கொண்டு அதில் நம்மைப் பொருத்திக் கொண்டு மாற்ற உழைப்பது தான் போராட்டம். அது சிறையிலென்றாலும் சமூகத்திலானாலும் இதுதான் யதார்த்தம். உண்மை.

No comments:

Post a Comment