போலி லேபிளா ஓட்டு? லேபிளை ஒட்டுபவர் ஓட்டரா? ஒட்டிக் கொண்ட போலிகள் புனிதராவரோ?
இணைமிகு தோழா!
இந்த வெளியீடு தேர்தல் சிறப்பேடாக வெளிவருகிறது. தேர்தல் அல்லோகலத்தில் நாமும் பங்கெடுத்துக் கொள்ளாமல் ஒதுங்கிவிட முடியுமா? ஊரே உற்று கவனிக்கிறது, நாடே ஆவலோடு எதிர்பார்க்கிறது!உலகே உற்று நோக்குகிறது! என்ற விளம்பரங்கள் வீதி உலா புறப்பட்டு விட்டன. ஏனாம்? நாடாளுமன்ற தேர்தல் முடிவை எதிர்பார்த்தோம்.
ஆம்! உண்மைதானே. இந்திய துணை கண்டம் 100 கோடிக்கு மேலான ஜனத்தொகை கொண்டதல்லவா? இந்த நாட்டில் ஒரு மத்திய அரசாங்கம், ஏக போக குத்தகைதாரர்களின் ஏஜண்டாக அமைகிறது என்றால் உலக வல்லரசுகளும் நோக்கும். வல்லூறுகளும் பார்க்கும். வல்லுநர்களும் கவனிப்பார்கள். உலக மக்களும் கூட காண நினைப்பார்.
அவர்கள் மட்டுமல்ல? உள்நாட்டிலும் உல்லாசபுரிகளும், கோட்டை கொத்தளங்களும் கூர்ந்து நோக்கும். ஏழை பாழைகளும், ஏதுமறியா தெருவோரங்களும், நாம் தானே ஓட்டு போட்டோம் என்பதை மறந்து, தன் வேலையை கவனிக்கும். எத்தர் எடுபிடிகளும், மானமறியா ஈனங்களும் பகட்டாக பட்டாசு வெடித்து, எஜமான விசுவாசத்தில் எகிறிக் குதிக்கும்.
இத்துணைக் கண்டத்தில் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி. உள்ளாட்சிகளின் தேர்தல்களானாலும் சரி நமது நிலை தெளிவானது. அதனை தமிழ் மக்களுக்கு தெரிவிப்பது அவசியமானது. வாக்காளர்களுக்குப் புரிய வைப்பது கட்டாயமானது.
அதை தான் இந்த இதழின் இதர பக்கங்களில் நமது தோழர்கள் பல்வேறு தலைப்புகளில் பல்வேறு விரிவான விளக்கங்களை உள்ளடக்கிய சிறுசிறு சொற்கோவைகளாக்கி மக்களின் அகன்ற, ஆழ்ந்த பார்வைக்கு வைத்திருக்கிறார்கள்.
அன்பு தோழா! நீயும் உன்னை ஒத்த தோழர்களும், பல சந்திப்புகளில் அதனைக் குறித்து விவாதித்து, விளக்கங்கள் பரிமாறி, மக்களுக்கு விவரிக்க வியாதாரங்களைப் பெற்றிருந்தாலும், மீண்டும் உள்ளேடுகளில் உள்ளவற்றைப் படி. நிதானமாகப் படி. வாக்கியங்களில் ஊடுருவி, வார்த்தைகளில் உள்நுழைந்து சொற்களின் இலக்கண வரையறையில் ஊன்றி நின்று, புரிந்து கொள்ளுவது மட்டுமல்ல, ஒவ்வொரு வாக்காளருக்கும் புரிய வைப்பதும், அவர்களைப் படிக்க வைப்பதும் உனது தேர்தல் கால கடமையாகிவிட்டது.
நமது பேரவையும் அங்கம் பெற்று அமைத்துள்ள தமிழ்த்தேச முன்னணியினது தமிழ் மக்களது எழுச்சியின் வழி தமிழ்த்தேசிய புரட்சியின் மூலம் தமிழ்த் தேச குடியரசை நிர்மாணிக்கும் பிரகடனத்திற்கேற்ப, இன்றையச் சூழலில் தேர்தலைப் புறக்கணிப்பதும், புறந்தள்ளச் செய்வதும், நமது புரட்சிகர கடமைகளில் ஒன்றல்லவா? இது தானே நமது தேர்தல் காலப் பணி.
பிறவி ரீதியாக, பொருளியல் ரீதியாக, பாலியல் ரீதியாக பேதப்பட்டு, பிளவுப்பட்டு கிடக்கும் இந்தச் சமூகத்தில் உழைக்காமல் சுரண்டுகிறவர்களுக்கும், உடமைகளைப் பறித்துக் கொண்டு ஆதிக்கம் செய்பவர்களுக்கும் ஆயுதமாக இருக்கும் இன்றைய அரசமைப்பைப் பாதுகாக்க பணிவிடை செய்யவுள்ள அரசாங்கத்திற்கு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்படுவது தானே தேர்தல். அதில் கருத்தாலும், கரத்தாலும் பாடுபடுவோருக்கு என்ன பலன்?
வேறு வகையில் சொன்னால், பண்ணை யாருக்கு பணிவிடை செய்ய காரியஸ்தர்களை , பண்ணையாட்களை விட்டே தேர்ந்தெடுக்கச் செய்வத வேடிக்கைக்குரிய நாடகமல்லவா? அது போலத்தானே பார்ப்பனர்கள், பெரு முதலாளிகளின் சுரண்டல் காட்டைப் பாதுகாக்கும் அரசியல் தாதாக்களை, அவர்களாலே அடக்கி ஒடுக்கப்படும் அன்றாடங்காய்ச்சிகளே தேர்ந்தெடுப்பது, எஜமானர்களின் ஏஜண்டுகளை ஏழை பாழைகளே தேர்ந்தெடுப்பது வினோதமல்லவா? இதற்கு பெயர்தான் ஜனநாயகமா? அதனால் தான் பெரியார் சொன்னார், இது ஜனநாயகமல்ல, பார்ப்பன நாயகம், பணக்கார நாயகம், காலிகள் நாயகம் என்று. அரசாங்கமே அமைத்த ஓரா கமிட்டி அறிக்கை கூறுகிறது, அரசியல்வாதிகள், அதிகாரிகள், கிரிமினல்கள் ஆகியோரின் ஆதிக்கத்தில் தான்ஆட்சியதிகாரம் நடைபெறுகிறது என்று. வேறென்ன சாட்சி வேண்டும். மக்கள் அனுபவமும் அதைத்தான் உண்மை என்கிறது.
இனிய தோழா! பேதங்களை நீக்கிடவும், போக்கிடவும், தமிழின உணர்வு வீறு கொண்டு, உரிமைகளுக்கு கிளர்ச்சியும், விடுதலைக்கு எழுச்சியும், பாடுபடுவோர் ஜனநாயகத்திற்கு புரட்சியும் தான் வழியே தவிர, அரசியல் கட்சிக்கும் அதிகாரப் போக்கிற்கும், புரட்டர்களின் சாதிக்கும், கொள்ளையர்களின் கூத்துக்கும், அராஜக ஆட்சிக்கும் ஆட்பட்டு, அவதிப்பட்டு, அல்லல் பட்டு, தொல்லையனுபவிக்க தூண்டில் போடும் தேர்தல் மாயையில் மானமுள்ள மக்கள் மாட்டிக் கொள்ள வேண்டுமா? அதனால் தான் கூறுகிறோம்,
• நிராகரிப்போம் தேர்தலை- நீங்கட்டும் அரசியல் சூழ்ச்சி -நிலவட்டும் தமிழின உணர்ச்சி!
• விலக்வோம் தேர்தலை -விலகட்டும் அதிகாரப் போக்கு -விரியட்டும் தன்மான நோக்கு!
• புறக்கணிப்போம் தேர்தலை -புதையட்டும் புரட்டர்கள் கூட்டு -போர் தொடரட்டும் உரிமைகள் கேட்டு!
• புறம் தள்ளுவோம் தேர்தலை -புரியட்டும் போலிவாக்குறுதி-பரவட்டும் மக்கள் மன உறுதி!
• ஒதுக்குவோம் தேர்தலை ‡ ஒழியட்டும் கொள்ளைக் கூட்டம் -ஓங்கட்டும் விடுதலை நாட்டம்!
• மறுப்போம் தேர்தலை -மடியட்டும் மனித இகழ்ச்சி- மலரட்டும் மக்கள் எழுச்சி!
• வெறுப்போம் தேர்தலை -வீழட்டும் அராஜக ஆட்சி -வெல்லட்டும் தமிழினப் புரட்சி!
பாசமிகு தோழா!
இன்றைய தேர்தல் நடத்தப்படும் முறை, அதில் ஈடுபடுவோர் நிலை எவ்வளவு இழிவாக இருக்கிறது தெரிகிறதா? மாண்புமிகுவாகப் போகிறவர்கள் மக்களை நாடிவந்து, இந்நாட்டு மன்னர்களே என மனதறிந்து பொய் சொல்லி, அவர்களிடம் மண்டியிட்டு, மாயாஜாலங்கள் புரிந்து, ஒட்டுவாங்கிச் சென்று, நாற்காலியில் ஒட்டிக் கொண்டு இனி என்னை அய்ந்து வருடத்திற்கு ஆட்டவும் முடியாது. அசைக்கவும் முடியாது என சவால் விட துணிகிறார்களல்லவா? ஓட்டு வாங்கிப் போன இடத்தை வந்தாவது பார்க்கிறார்களா? பார்க்க வேண்டியவர்களைப் பார்த்து, சட்டைப்பை, கைப்பை, தோள்பை, அட்டைப்பெட்டி, அலமாரி, வங்கி முதலீடு, வணிக முதலீடு என வரிசையாக வாரி நிரப்பவே நேரமில்லையே.பாவம் என்ன செய்வார்கள்? அப்படிப்பட்ட வாக்குறுதி மறந்த பொய்யர்களை, அனுப்பிய மக்கள் திருப்பி அழைக்கவாவத உரிமை உண்டா? இல்லையே.
ஆனால் எந்த பண்ணையில் எடுபிடியாக, தெண்டனிட்டு தொண்டூழியம் செய்கிறார்களோ, அங்கே கொஞ்சம் கசப்பென்றாலும் மறுவினாடியே தேனிலவில் சுகம் கண்டாலும் தெருவிருட்டுக்கு துரத்தி அடிக்கப்படுவார்கள். பரிதாபத்திற்குரியவர்கள்! எப்படியோ போகட்டும் மக்கள் நிலை...?
அரசமைப்பு என்ற தண்டாயுதத்தை கையில் வைத்திருக்கும் பார்ப்பனர்களும் பெரு முதலாளிகளும், நிலப்பிரபுக்களும் தான். ஆள்பவர்கள் அவர்களது எடுபிடிகள்தான். இந்த மாண்புமிகுக்களும், மந்திரிகளும் மக்களை ஒடுக்க, நசுக்க, சுரண்ட, இவர்களை மக்களே தேர்ந்தெடுத்து அனுப்புவது அபத்தமல்லவா?
இன்னொன்றைப் பார்த்தாயா? ஒரு சிறு கும்பல் மக்கள் பிரதிநிதிகள் என்ற பேரால் ஒட்டு மொத்த மக்கள் மீதும் ஆதிக்க அதிகாரம் செலுத்தி சுரண்டலுக்கு துணை நிற்கும் கேவலத்தை இந்தியாவில் மொத்த ஜனத்தொகை சுமார் 100 கோடிக்கு மேல், அதில் வாக்காளர்கள் சுமார் 60%‡ 60 கோடி, அந்த வாக்காளர்களில் வாக்களிப்போர் சுமார் 60% ‡36 கோடி, உதிரிகளையயல்லாம் கணக்கில் உதறிவிட்டாலும் , ஊன்றி நிற்கும் அணிகள் சுமார் 15 கோடி, வாக்குகள் பெற்றால் போதும். ஒரு அணியில் 20 கட்சிகளுக்கு குறைவில்லை. இதில் 2 கோடி பேரை வாக்கு வங்கியாக ‡ கட்சி உறுப்பினராக அல்ல‡ பெற்றிருக்கும் கட்சி தான் கொள்கைக் கூட்டுக்கு தலைமையேற்கும் தகுதியான கட்சி. இந்த 2 கோடி வாக்கு வங்கி மூலதனத்தில் ஏக போகமாக மத்திய அரசாங்க மந்திரி சபையை அமைத்துக் கொண்டு விரல் விட்டு எண்ணக் கூடிய பார்ப்பனத்துவ பெருமுதலாளித்துவ கும்பலுக்கு எடுபிடி சேவகம் செய்யும் கூட்டம் ஒட்டு மொத்த 100 கோடி மக்கள் மீது ஆட்சி அதிகாரம் செய்வதுதான் மக்களாட்சியா? மக்களை மடையர்களாக நினைப்போரின் மண்டைகனமல்லவா இது.
அத்தகைய யோக்கியர்களின் கோங்களை கேட்டாயா? ஒருவர் இந்துத்துவ வழியில் இந்தியாவை ஒரு வல்லரசாக்குவோம்! அடுத்தவர் வளமான தமிழகம், வலிமையான பாரதம்! இன்னொருவர், உறவுக்கு கை கொடுப்போம். உரிமைக்கு குரல் கொடுப்போம்! மற்றொருவர் பாரதத்தாயிடம் தமிழகச் செல்வியை முதன்மை பிள்ளையாக்குவோம்!
இன்னும் கூட பல புரட்சிக் கூத்துக்கள், பாராளுமன்றத்தைப் பயன்படுத்தி மக்கள் ஜனநாயகப் புரட்சியாம். நாடாளுமன்றத்திற்குள் புகுந்து கொண்டு தேசிய ஜனநாயகப் புரட்சியாம். திரும்பிப் பார்க்குமிடமெல்லாம் புரட்சி. புரட்சித் தலைவி, புரட்சிப் புயல், சேரிப்புயல், இப்படி புரட்சியும் புயலும் கிளம்பி அழிக்கப்போது யாரை? அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடிக் கொண்டிருக்கும் மக்களைத்தானே ?இந்த அவலத்தில்தான் இந்தியா ஒளிர்கிறது என விளம்பரம்.
மற்றொரு விசித்திரத்தைக் கேளேன். தேர்தல் கால கூட்டுக்கள்தாள் கொள்கைக் கூட்டாம். இலட்சிய இணைவாம். என்னய்யா கொள்கையில் கூட்டு என்றால், எதிரிக்கு எதிரி நண்பன். இதுவே எங்கள் அடிப்படை என்கிறார்கள், வெட்கம் கெட்டு. அனுபவம் என்ன கூறுகிறது? தேர்தலுக்கு முன்எதிரிக்கு எதிரி நண்பன். தேர்தலுக்கு பின் நண்பனுக்கு நண்பன் எதிரி. இவர்களல்லவா அசல் அரசியல் ஜோக்கர்கள்.
அருமை தோழா! அப்படியானால் தேர்தலே எப்போதும் கூடாதா? அதில் ஒரு நாளும் பங்கெடுக்கக் கூடாதா? ஜனநாயகத்தை நம்பாத இப்போக்கு தீவிர வாதமல்லவா? எனக் கேட்டு மக்களைக் குழப்புகிறவர்களையும் நாம்அறிவோம்.
ஓட்டுப் போடுவதும் போடச் சொல்வதும் எப்படி ஜனநாயக உரிமையோ, அது போலத்தான் ஓட்டு போடாதிருப்பதும், போடாதீர்கள் எனக் கூறுவதும் ஜனநாயக உரிமையே. கண்டிப்பாக ஓட்டுப் போட வேண்டும் என்று சொல்கிறவர்கள் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒரு சின்னமும், அதற்கான பொத்தானும் வைத்திருப்பதைப் போல, யாருக்கும் போட விரும்பவில்லை என்பதைக் குறிக்க ஒரு சின்னமும், ஒரு பொத்தானும் அந்த வாக்கு எந்திரத்தில் பொருத்தியிருக்க வேண்டுமல்லவா? அப்படி இல்லாததால் யாருக்கும் போட விரும்பாதவர்களுக்கு வாக்குச் சாவடி பக்கமே போக வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இவர்கள் தீவிரவாதிகளா?
கள்ள ஓட்டு போடும் கயவர்கள். சாவடியையே முற்றுகையிடும் சதிகாரர்கள். ஓட்டுப் பெட்டிகளையேச் சூறையாடும் சூதுமதியினர். ஓட்டு போட வருபவரை மிரட்டித் துரத்தும் அரசியல் அடியாட்கள் போன்ற தீயவர்களல்லவா சமூக விரோதிகள்.
தேர்தலே கூடாது என்று நாம் சொல்லவில்லை. தமிழ் மக்கள் இன்னும் விடுதலை பெறாதிருக்கும் போது, பார்ப்பனத்துவ பெரு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசின் ஆளுமையில் அடிமைப்பட்டு கிடக்கும் போது, தமிழ்த் தேசியத்தை இல்லாத இந்திய தேசியம் தலையயடுக்க விடாமல் தடுத்துக் கொண்டிருக்கும் போது, தேர்தல் என்பது அர்த்தமற்றது. அபத்தமானது.
சபலமூட்டியோ, மயக்கியோ, மிரட்டியோ, தாக்கி யோவான நிர்ப்பந்தத்தில் எண்ணபூர்வமோ, இஷ்டபூர்வமோ இல்லாது, கந்து வட்டிக்காரனிடம் கடனுக்கழுகிறோம் என்ற கசப்புணர்வில் வாக்களிப்பது தானே இன்றைய வாடிக்கை. இந்த கசப்புணர்வை¼ இனிப்புணர்வாக மாற்றித்தர சில கட்சிகள் இடைத்தரகர்களாக செயல்படுவதையும் புரிந்து கொண்டு எச்சரிக்கையாயிருத்தல் வேண்டும். யார் அவர்கள்?
நாங்கள் தேர்தலில் பங்கெடுப்பதில்லை என்பார்கள். ஏன் எனக் கேட்டால், அதில் ஈடுபடுபவர்கள் அரசியல்வாதிகள். அவர்களெல்லாம் ஓட்டு பொறுக்கும் அயோக்கியர்கள். அவர்களால் மக்களுக்கு எந்த பயனுமில்லை. அந்த சகதிக் குட்டையில் நாங்கள் குளிக்க மாட்டோம். நாங்கள் மக்கள் தொண்டர்கள் என்பர். அந்த கட்சியின் தலைவரோ நான் அந்த தொண்டர்களுக்கெல்லாம் தொண்டன் என பறைசாற்றிக் கொள்ளும் தலைமை மடாதியாக புனிதம் கொள்வார்.
ஆனால் தேர்தல் வந்தவுடன் ஏதாவது ஒரு தேர்தல் கூட்டணிக்கு ஏஜண்டுகளாகி, அதுவே மக்களணி அதற்கே ஓட்டளியுங்கள் என அவர்களின் ஒலிபெருக்கியாகி ஒப்பாரி வைப்பார்கள்.
மக்கள் அவர்களைப் பார்த்து, நேற்றுவரை அரசியல்வாதிகளெல்லாம் ஓட்டு பொறுக்கிடும் அயோக்கியர்கள் எனக் கூறினீர்களே அவர்களில் ஒரு சாராருக்கு நீங்களே ஓட்டு பொறுக்கலாமா? என கேட்டால் முழு அயோக்கியனை வரவிடாமல் முக்கால் அயோக்கியனை மக்கள் பிரதிநிதியாக்கி மக்கள் தொண்டு செய்கிறோம் என்கின்றனர்.
பரிதாபத்திற்குரியவர்கள். அடுத்த தேர்தலில் அவர்களைப் பார்த்தால் சென்ற தேர்தலில் ஆதரித்த முக்கால் திருடன் முழு திருடாகிவிட்டதாகவும் அன்றைய முழுத் திருடன் இப்போது முக்கால் திருடனாகியிருப்பதாகவும் கூறி அவனுக்கு தோள் போடும் கூலி பிணந்தூக்கிகளாகி விடுவதையும் மக்களுக்கு விளக்கிட வேண்டுமல்லவா?
ஆகவே, மக்கள் இன உணர்வு கொண்டு, விடுதலைக்கான எழுச்சியுற்று, அரசியல் ஆளுமை ஓங்கி, அடக்கியயாடுக்கி ஆதிக்கம் புரிவோரை அடையாளம் கண்டு அவர்களை அப்புறப்படுத்தி தங்களுக்கான அரசை தாங்களே அமைத்துக் கொள்ளும் அவசியத்தை உணர்ந்து எழுந்து நிற்கும் போது தான் தேர்தல் நிர்ப்பந்தமற்ற முறையில் மக்கள் வாக்களிக்கும் தேர்தலாக அமையும். அதனில் நாம் பங்கெடுப்போம். மக்கள் பங்கெடுப்பார்கள்.
அத்தகைய சூழல் பக்குவம் பெறும்வரை,
ஓங்கட்டும் உணர்வுகள்! அடையட்டும் உரிமைகள்!
கிளம்பட்டும் கிளர்ச்சிகள்! எழும்பட்டும் எழுச்சிகள்!
விரியட்டும் தளங்கள்! அமையட்டும் எழுச்சிகள்!
கொடுபடட்டும் விலைகள்! அறுபடட்டும் களங்கள்!
கிடைக்கட்டும் விடுதலை! தழையட்டும் தமிழ்த்தேச குடியரசு!
அப்படி தமிழ்த்தேச குடியரசு அமைவதையயாட்டி முன்னும், பின்னும் அமைந்திடும் சூழல், மக்கள் மகிழ்ச்சியோடு , கட்டுத் தளையின்றி கலந்து பங்கெடுக்கும் தேர்தலாக மலரும். அந்த மக்கள் தேர்தலில் மக்கள் பங்கெடுப்பாரகள். எனவே இன்றையச் சூழலில் நடக்கும் தேர்தல்,
சமதர்மத்துக்கு எதிரான மனுதர்ம தேர்தல் இது!
சம உரிமைக்கு எதிரான தனி உரிமை தேர்தல் இது!
சம உடமைக்கு எதிரான தனி உடமை தேர்தல் இது!
சமூக உடமைக்கு எதிரான சுரண்டல் கூட்ட தேர்தல் இது!
சமத்துவத்திற்கெதிரான ஆதிக்கக் கூட்ட தேர்தல் இது!
சகோதரத்துவத்திற்கெதிரான அதிகாரக் கூட்ட தேர்தல் இது!
சுதந்திரத்திற்கெதிரான ஆணவக் கூட்ட தேர்தல் இது!
வருண சாதி பேதங்களை நிலைநாட்டி, வர்க்க பேதத்தை உறுதியூட்டி, பாலியல் பேதத்திற்கு வலுவூட்டிட நடத்தும் இந்த மக்கள் விரோத தேர்தலை நிராகரிப்போம்!
புறக்கணிப்போம்! வெறுத்தொதுக்குவோம்! போலி லேபிளை ஒட்டிக் கொள்ளுவதால் போலிகள் புனிதராவரோ?
விடுமடல் -11 நன்றி: தன்மானம்
No comments:
Post a Comment