களப்பணிக்கு மூலதனம் பணமா? பக்குவமா?
இணைமிகு தோழா!
தன்மானச் சமுதாயத்தைச் சமைப்பது என்ற லட்சியத்தோடும், இன நலம், இன பாதுகாப்பு, இன கண்ணோட்டம், இன உரிமை என்ற பார்வையிலான சமூக, அரசியல், பொருளாதார பண்பாட்டுக் கொள்கைகளோடும், இன விடுதலை என்ற இழையோட்டமான நோக்கத்தோடும் ஒரு இனமானப் புரட்சியின் மூலம் ஒரு இனமானக் குடியரசை நிறுவுவதற்கான திசை வழியில், தமிழின மக்களை ஓரணியில் திரட்டுவதற்கான பெரும் பணியில் நாம் ஈடுபட்டிருக்கிறோம்.
இப்பணிக்கான பாதை, சொகுசு வாழ்வு, சுகபோக குடியிருப்பு, மேனா மினுக்கிகள் புடைசூழ எச்சில் வாழ்க்கைக்கு தன்னையே விற்றுவிட்ட எடுபிடிகள் முன் ஓட, எஜமான விசுவாசிகள் பின் தொடர, சிகப்புக் கம்பள விரிப்பின் மீதான நடை, ‘துட்டு’ என்றவுடன் தட்டுகெட்ட மட்டரகப் பேர்வழிகளின் துதிபாடல் போன்றவைகளோடு கூடிய ராஜபோக பாட்டையல்ல.
அதற்கு முற்றிலும் மாறான, கல்லும் முள்ளும் நிறைந்த, கரடுமுரடான, நாட்டினுள் நடமாடும் காட்டு மிருகங்கள் எதிர் கொண்டுபாய, தன் மீதும் தன் குடும்பத்தின் மீதும் இம்முனைத்தாக்குதல்தான் என சொல்ல முடியாத எம்முனைத் தாக்குதலுக்கும் ஈடு கொடுத்து நடமாடி, ஒரு தலை கீழ் மாற்றம் காண, நீண்ட நெடிய தூரம் கடந்தாக வேண்டிய, அல்லல் தொல்லைகளும் அவதிகளும் நிறைந்த பாதை.
இந்த பாதையில் பயணம் செய்ய நினைக்கும் போதே ஒரு பூதாகாரமான அச்சம், ஒரு தேக்கம், ஒரு விரக்தி, ஒரு சபலம் மனதைக் குடையும். அதற்காகவே எதிரிகளால் திட்டமிட்டே ஏற்படுத்தப்படும் சலனங்கள், எடுத்து வீசப்படும் எச்சில் இலைகள், அவ்விலையில் காணப்படும் எலும்புத் துண்டுகள், மோக, ரசிக வாழ்க்கைக்கு கவர்ந்திழுக்கக் காட்டப்படும் மோகினியாட்டங்கள் போன்றவை எல்லாம் சேர்ந்து ஒரு நப்பாசையூட்டும்; மனதை ஊசலாடச் செய்யும்; நமக்கேன் தொல்லை; ஊர் வம்பு; இருப்பதையும் கிடைப்பதையும் கூட இழந்து, இந்தத் தலைமுறையில் முடியுமா என தெரியாத ஒன்றிற்காக ஏன் கஷ்டம்; நாமுண்டு நம் வேலையுண்டு நம் வீடு உண்டு என கிடந்திடுவோம் என்றெல்லாம் தடுமாறச் செய்யும்.
அந்த நிலை வந்துவிட்டால் தனி நலம் தலைதூக்கி, சமூகம் பற்றிய சிந்தனை மங்கி, சமூகம் வாழாமல் தான் மட்டும் வாழ்ந்திட முடியும் என கருதி, அந்த வாழ்வு எப்படியும் இருக்கலாம் என எண்ணி இறுதியாக எதிரிகளுக்கு அடிமைப்படும் நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பது அனுபவப் பாடம். இப்படி சமூகத்திலுள்ள ஒருவொருவரையும் வீழ்த்தி விட்டால் சமூகமே தமது சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் அடிபணிந்து கிடக்கும். வருணத்தால், வர்க்கத்தால் பேதப்பட்ட சமூகம் சேதப்படாமல் பாதுகாக்க நினைக்கும் சுரண்டும் கும்பலின் சுகபோக வாழ்விற்கு அடித்தளமாகும் என்பது அவர்கள் கற்ற அழிவுப் பாடம்.
இப்படிச் சமூகம் என்ற பார்வை மங்கி தான் மட்டுமே என்ற குருட்டுத்தனம் ஏற்பட்டுவிட்டால், ‘நாம்’ என்கிற உணர்வு மறைந்து ‘நான்’ என்ற உணர்வு தலைதூக்கி விட்டால், அது வரலாற்றுக்குச் செய்யும் துரோகம். எதிர்கால சந்ததிகளுக்கும் தலைமுறைக்கும் தோண்டி வைக்கும் சவக்குழி என்பது மட்டும் திட நிச்சயம்.
மக்களைத் திரட்டும் பணி பற்றி மற்றொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம். இந்த கடிதத்தில் நான் சொல்ல வந்ததது அந்தப் பணிக்கு இந்தச் சமூகத்தில் நாம் நம்மை பக்குவபடுத்திக் கொண்டோமா? அப்படி பக்குவப்படுத்திக் கொண்டவர்களின் பாசறையாக தமிழர் தன்மானப் பேரவை உருவாக வேண்டும் என உறுதி கொண்டுள் ளோமா? என்பது குறித்துத்தான், அப்படி நம்மை பக்குவப்படுத்திக் கொள்ள வேண்டும்; பேரவையை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என சொல்லத்தான்.
அய்ம்புலன்களால் அறிதல் தொடங்கி, பால பாடங்களைப் பட்டறிவால் கற்றுக் கொண்டு, பட்டறிவாளர் பாடங்களைப் படிப்பறிவால் புரிந்து கொண்டு, பரிசோதனையறிவால் படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு, பழக்க அறிவால் பயிற்சியில் உறவு கொண்டு, மொத்த ஆய்ந்தறிவால் பகுத்தறிவை எட்டிவிட்டால் நாம் பக்குவத்தை தொட்டு விடுவோம். பகுத்தறிவு என்பது வெறும் ஆறாவது அறிவு என்று மட்டும் அர்த்தப்படுத்திக் கொள்ளக் கூடாது. அந்த பகுத்தறிவின் பாதையைத்தான் சிந்தனைப்போக்கு, சித்தாந்தம் எனக் கூறுகிறோம். சித்தாந்தம் செயலுக்கு வழிகாட்டி; செயலுக்கு வழிகாட்டாத சித்தாந்தம், வேதாந்தம் அல்லது வறட்டுத்தனம். சித்தாந்த தெளிவற்ற செயல் ஆச்சாரம் அல்லது குருட்டுத்தனம்.
இந்த அடிப்படையில், தமிழர் தன்மானப் பேரவை ஏற்றுக் கொண்டிருப்பது, இந்திய துணைக்கண்டத்தில் செழுமை படுத்தப்பட்ட மார்க்ஸீயமே, ‘‘பெரியாரியம்’’ என்ற சித்தாந்தம். நம்முடைய ஒவ்வொரு செயலுக்கும் பின்னால் பெரியாரீயம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதா அல்லது நழுவிடப்பட்டிருக்கிறதா என புரிந்து கொண்டால் நாம் பக்குவத்தை தொட்டுவிட்டோம். செயலுக்கு பின்னால்தானே சித்தாந்தம் செழுமைப் படுத்தப்பட்டிருக்கிறதா என்பதை புரிந்து கொள்ள முடியும். அது மட்டுமல்ல செயலுக்குப் பின்னால்தான் செய்த தவறுகள் கூட தெரியும். அந்தத் தவறுகளை சீக்கிரத்தில் புரிந்து கொண்டு சுலபமாக திருத்திக் கொள்வதுதானே புத்திசாலித்தனம். தவறு செய்வது மனித இயல்பு. தவறே செய்யாதவன் செயலே புரியாதவன். தவறை சரிபடுத்திக் கொள்ளாமல் நியாயப்படுத்தி விடாக்கண்டனாக இருப்பவன் தெரிந்து தவறு செய்த குற்றவாளியாவான். அவன் பெரியாரீயத்தின் விரோதியாகவும் மாறிவிடுகிறான்.
இப்படி பக்குவத்தைத் தொட்டுவிட்டால் மட்டும் போதாது. மக்களை ஈர்த்தெடுத்து, வென்றெடுத்து வழி நடத்த வேண்டாமா? அதில்தானே நமது பக்குவத்திறன் வெளிப்படும். அல்லது பக்குவத்தை தொட்டு...தொட்டு விட்டதாயல்லவா முடியும்?
அப்படி மக்களை ஈர்த்தெடுப்பது என்பது ஒரு மாயாஜால வித்தைக்காரன் மோடி வைத்தெடுப்பதை பார்க்க கூடும் கூட்டமா? ஒரு கம்பங்கூத்தாடி பிச்சையெடுக்க சிறு பிள்ளைகளைத் தயார் செய்து, நடத்திக் காட்டும் கண்கட்டு வித்தைகளைப் பார்க்க சேரும் கூட்டமா? சர்வ நோய்களுக்கும் சர்வரோக நிவாரணி இந்த அற்புத லேகியம் என கதையளக்கும் மருந்து விற்பவனைச் சுற்றி நின்று பேதலிக்கும் கூட்டமா?
அது மட்டுமல்ல, சோற்றுக்கில்லாமல் சோர்ந்து நின்றாலும் முட்டி மோதி, முண்டியடித்து சினிமா கொட்டகையில் நுழைந்து அனுபவிக்க முடியாததையெல்லாம் பார்த்து ரசித்து, ஏக்கப் பெருமூச்சு விட்டு வீடு திரும்பும் கூட்டமா? அல்லது அரசியல் மேடைகளுக்கு எதிரே கூடி உட்கார்ந்து, எனக்கல்ல ஊருக்கு உபதேசம் என்று உரக்கக் குரலெடுத்து கர்ஜிக்கும் வீர வசனங்களைக் கேட்டு, எல்லோரும் தட்டுகிறார்கள் நானும் தட்டினேன் என கை தட்டிவிட்டு எழுந்து ஒட்டிய மண்ணையும் ஓங்கி தட்டிக் கொண்டே, கேட்டதை மறந்துவிட்டு நாளைப் பாட்டைப் பற்றிய சிந்தனையில் மூழ்கித்திரும்பும் கூட்டமா? அல்லது, தேர்த்திருவிழாவில் தெய்வ தரிசனம் பெற சென்று, நெரிசலில் சிக்கி மிதிபட்டு, கண்ட இடங்களில் இடிபட்டு, இடிப்பதற்காகவே வந்தவர்கள் இஷ்டபூர்த்தி செய்வதை கண்டு, விடுபட்டு, கையூட்டு பெறாதவர்கள் நாட்டில் எங்குமே இல்லை; அதற்கு கடவுளும் விதிவிலக்கல்ல என காணிக்கைச் செலுத்தி விட்டு, உயிரைக் காக்க ம...ரையும் கொடுத்து, கருதிய காரியம் கைகூடும் என்ற ஆசையில் குடும்பத்துடன் குதூகலிக்கிறார்களே அந்த கூட்டமா?
அல்ல ... அல்ல... தோழா! அதுவெல்லாம் வென்றெடுக்கப்பட்ட கூட்டமல்ல. வீணர்களின் வலையிலே சிக்கிச் சீரழியும் பெருங்கூட்டம். அது வரலாறு படைக்கும் கூட்டமல்ல. வழி தெரியாது தடுமாறித் தவிக்கும் கூட்டம். நாம் சொல்லுவதோ வரலாறு படைக்கும் கூட்டம். எண்ணிக்கையில் அல்ல என்றாலும் எண்ண உறுதியிலும் எதிரிக்கு எதிரான எழுச்சியிலும் திரளும் படை. திக்கெட்டும் இருள் சூழ திணறிக்கிடப்பவரை திசைமாறி, வழிமாறி தட்டித்தடுமாறி, தடம் மாறி, தறிகெட்டு நிற்பவரை ஓரணியில் திரட்டும் படை. அந்த படையைப் படைக்கும் படைப்பாளியாக, நாம் திறன் கொண்டால் தான் நாம் பக்குவத்தை தொட்டுவிட்டோம் என்பதோடல்லாமல் நாம் பக்குவத்தை பெற்று விடலாம் என்ற நிலை வரும்.
இதற்கெல்லாம் மூலதனம் வேண்டாமா? முதலீடு செய்ய வேண்டாமா? அதில் ஆதாயம் பெருக்க வேண்டாமா? என சிலர் கேட்பது புரிகிறது. ஆம் தோழா! வேண்டும். நிச்சயம் வேண்டும், அவசியம் வேண்டும். கண்டிப்பாய் வேண்டும்.
பணமா? பதவியா? அதிகாரமா? பகட்டு பங்களா வாழ்வா? ஏடுபிடிகள் கூட்டமா? குண்டர்கள் கும்பலா? இந்த மூலதனங்களுக்கெல்லாம் நம்மிடம் வழியுமில்லை; அதுவெல்லாம் நம் வழியுமல்ல; நம் வாழ்வுமல்ல. நாம் பெற வேண்டிய மூலதனங்கள், தன்னறிவு, தன்னம்பிக்கை, தன்னுறுதி, தன்னூக்கம், தன் முயற்சி, தன்மானம், தன்னடக்கம் அவ்வளவுதான், அவ்வளவே தான்.
பாதாளம் வரை பாயும் பலம் பெற்ற பணம், ஒருவனது தன்னுறுதியைத் தாண்டி அடியெடுத்து வைத்திடுமா? எதையும் செய்திட முடியும் என்று எக்காளமிடும் பதவி, ஒருவனது தன்னம்பிக்கைக்கும் முன் தலைகாட்ட முடியுமா? எவராயிருந்தாலும் அடக்கி ஒடுக்க முடியும் என கொக்கரிக்கும் அதிகாரம் ஒருவனது தன்ஊக்கத்திற்கு முன் தலைதூக்க முடியுமா? கூலிக்கு மாரடிக்கும் குண்டர்களின் கூட்டமெல்லாம் தன்னிழப்பு தன்மை கொண்ட தொண்டர்களிடம் தாக்குபிடிக்குமா? எஜமானர்களின் ஏவல் நாய்களான எடுபிடிகளெல்லாம், தன் முயற்சி கொண்ட தன்னறிவுக்காரனிடம் தலை நிமிர்ந்து நின்றிடுவாரா? பங்களா, பகட்டு, படாடோப வாழ்வெல்லாம் தன்மான வாழ்வின் கால் தூசியை அண்ட முடியுமா? எண்ணிப்பார் தோழா! உண்மை வரலாறும், உலக நடப்புக்களும் உணர்த்துவது இதைத்தானே? இந்த மூலதனங்கள் நம்மிடம் இல்லையா? கருத்தாலும், கரத்தாலும் உழைக்கும் ஏழை எளிய இனமக்களின் புதையலாய் இவை கிடப்பதை உணர முடியவில்லையா? சற்று நிதானமாகத் தோண்டிப் பார்த்தால் கண்டறிய முடியாததா? அதனை கையில் எடுத்துவிட்டால் அதனை எதிர்கொள்ளும் சக்தி ஒன்றுண்டா?
இம் மூலதனங்களை உணர்ந்துவிட்டாலும், கண்டு விட்டாலும், எடுத்து விட்டாலும் நாம் தாண்டிக் குதிக்க மாட்டோம்; தறிகெட்டு ஆட மாட்டோம்; தான் தோன்றியாய் நடக்க மாட்டோம்; தலைகனம் கொள்ள மாட்டோம். காரணம் இம் மூலதனங்களின் சொந்தக்காரன் ‘‘தன்னடக்கம்’’ உள்ளவன் என்பதால் தன்னடக்கம் தான் இம் மூலதன பொக்கிஷத்தை பாதுகாக்கும் பெட்டகம். இம்மூலதனத்தை நாம் பெற்றுவிட்டால், பக்குவத்தை பெற்றுவிட்டோம் என்பது உறுதியாகிவிடும்.
இம்மூலதனச் சொந்தக்காரர்களைக் கொண்ட பாசறை தான் தமிழர் தன்மானப் பேரவை. அந்த பாசறையில் நுழைந்தவர்கள்தான், பயிற்சியால் தனது பக்குவத்தை உறுதிசெய்து கொண்டு மக்களைத் திரட்டும் பணியில் ஈடுபடக்கூடிய களப் பணியாளர்கள். அந்தக் களப்பணியாளர்கள் தான் செயல் வீரர்களாக, போராளிகளாக, புரட்சியாளர்களாக வரையறுக்கப்பட்ட பயிற்சிக் கோட்டை நோக்கி, அதைத்தாண்டி முன்னேறுவார்கள்.
அந்தக் களப்பணியாளர்களுக்கு ஓய்வில்லை, மூப்பில்லை, பயமில்லை, சாவில்லை, எப்படி?
No comments:
Post a Comment