Tuesday, January 18, 2011

படியுங்கள்! பரப்புங்கள்! பலப்படுத்துங்கள்

படியுங்கள்! பரப்புங்கள்! பலப்படுத்துங்கள்!
இணைமிகு தோழா!
எதிர்பார்த்து கிடந்த வீட்டில், ஒரு குழந்தை பிறப்பெடுத்திருக்கிறது.  அந்த குடும்பத்திற்கு எவ்வளவு மகிழ்ச்சி!

சில ஆண்டுகள் ஏங்கிக் கிடந்து, பின் பத்து மாதங்கள் பாரம் என தோன்றாமல் தூக்கிச் சுமந்து, படாத அவதிகளையெல்லாம் பட்டு முடித்து கடைசி பத்து நொடிகளில் தனித்துவம் பெற்ற குழந்தை வீறிட்டு குரல் எழுப்பியதைக் கூட அரை மயக்கத்தில் செவிமடுத்து, வயிற்றில் கிடந்த போது கூட அக்குழந்தை வெளிவர நடத்திய போராட்ட உணர்வை மனதில் அசை போட்டபடியே பூரித்து கிடந்தாள் அந்த தாய்.

‘குவா’ சத்தம் கேட்டதில் அந்த குடும்பத்திற்கு எவ்வளவு மகிழ்ச்சி.  பிள்ளை பிறப்பெடுத்த செய்தி, பிரிந்து கிடந்த அக்குடும்பத்தினரை பிணைத்தது.  முரண்பட்டுக் கிடந்த உற்றார், உறவினர்களை உறவில் நெருக்கம் கொள்ளச் செய்தது.  எட்டவே நின்று வேடிக்கைப் பார்த்த அக்குடும்ப நண்பர்களை இடைவெளி உணர்ந்து கிட்ட நெருங்க வைத்தது.  பகைபட்டு அக்குடும்பத்திற்கு எதிராக நின்ற பலரையும் கூட, அர்த்தமற்று பகைத்துக் கொண்டோமோ, அதில் நியாயமிருக்கிறதா? என சிந்திக்கச் செய்தது.  இப்படியெல்லாம் ஒரு பந்த பாச சூழலைத் தோற்றுவிக்கிறது அக்குழந்தைப் பிறப்பு.

ஆனால், அக்குடும்ப ஒழிப்பையே தன் குறியாகக் கொண்ட எதிரிகள், என்ன!  குழந்தை பிறந்திருக்கிறதா?  அந்த குட்டி பிள்ளைதாச்சியாயிருந்தாளா?  குழந்தை உயிருடன் தான் இருக்கிறதா?  எந்தவொரு வின்னமுமில்லாமலா பிறந்திருக்கிறது?  எதிர்பார்க்க வில்லையே! என ஏக்கப் பெமூச்சு விட்டு, எதிர்கால வாரிசு முளைத்துவிட்டதோ என பொங்கிப் பொருமுவதிலும், வெம்பிப் புலம்புவதிலும் வியப்பிருக்க முடியாதல்லவா?

அக்குழந்தை சுகமாகவும், சுமூகமாகவும் வெளியுலகைக்காண உற்ற துணையாக உதவிகள் புரிந்த மருத்துவச்சியும் மகிழ்ந்தாள்.  அதோடு கடமையைத் தொடர்ந்தாள்.  குழந்தை வெளிவந்தாலும் தாயின் உடலோடு கொண்ட பிணைப்பை ஒட்ட வைத்துக் கொண்டிருந்த தொப்புள் கொடியை வெட்டி விட்டு அதன் மீதுள்ள கழிவுகளை அகற்றி தொட்டில் நீரில் தேய்த்துக் கழுவி, தலைகீழாக தூக்கிவந்து கிடத்தி துடைத்து, அங்க வடிவங்களெல்லாம் குறைவும் குறையுமின்றி இருக்கிறதா என நோட்டமிட்டு சரிபார்த்து, கை,கால், காது, மூக்குகளை நீவி, மண்டையைக் கூட உருட்டி விட்டு, சற்று  கை, கால்களை உதைத்துக் கொண்டு அலறட்டுமே என அதனை சீண்டிவிட்டு போராட தகுதி பெற்ற குழவிதான் என்ற மனநிறைவில், அப்படியே அள்ளிவந்து தாயின் அருகில் கிடத்தி, அவள் மார்பை இழுத்து அக்குழந்தையின் வாயில் நுழைத்து முதல் அறிமுகத்தை செய்து வைக்கிறாளே அந்த செவிலித்தாய், அவள்  மனவோட்டத்தை புரிந்து கொள்ள முடிகிறதா?

ஆனால், அக்குடும்ப எதிரிகளோ தன் முகாமில் கூடி யோசிக்கிறார்கள்.  என்ன தெரியுமா?  தாய்ப்பாலின் ருசியும், உணர்வும், ஊட்டமும் அக்குழந்தைக்கு கிடைக்கு முன் அதனை மரித்திட, அல்லது மாற்றிட அல்லது மறைத்திட ஏதாவது செய்தாக வேண்டுமே.  அது அந்தச் செவிலித்தாயின் துணையோடு தானே முடியும், அவளை தங்கள் செல்வாக்கு, பணம், பயமுறுத்தல் போன்ற ஏதாவதொன்றால் சரிகட்டிவிட முடியுமா?  என பேதலித்து, சரிக்கட்டியாக வேண்டும் என முடிவெடுத்து, அதற்கேற்றவனை தூதனுப்பி அவனும் அந்தச் செவிலியிடம் ஆசைகாட்டி பேரம் தொடங்கிய போது தான், அந்த தாயும் சேயும் மருத்துவ மனையைவிட்டு பாதுகாப்பாக இல்லம் சென்றுவிட்ட செய்தி கிடைத்தது.
ஏமாந்தவர்கள் எரிச்சலுறுவதும், எரித்துக் கரித்துக் கொட்டுவதும், பண்பும், பாசமும் கொண்ட செவிலி, இப்படியும் இருப்பார்களா மனிதப் பிசாசுகள்.  இத்தகைய பேரத்தில் மயங்குகிற செவிலிப் பேய்களும் உண்டோ?  என எண்ணி வேதனைப்படுவதும் வியப்புக்குரியதல்ல தோழா!

வீடு வந்த அந்த குழந்தை, தன் உணர்வுகளை ஓலத்தால் வெளிப்படுத்தி, தேவைப்பூர்த்திக்காக கை, கால்களை உதைத்துப் போராடி, அதுவே அதற்கு உடற்பயிற்சியாகவும் அமைந்து, சூழலை புரிந்து கொள்ள முடியாத நிலையில், அப்போராட்ட சூழலில் வளர்ச்சியுற்று, சிரிக்கக் கற்றுக் கொண்டு, மல்லாந்தே கிடந்த அக்குழந்தை, சொந்த முயற்சியில் குப்புறக் கவிழ்ந்து, மூக்கடிப்பட்டு, தாயின் தடவலால் ஆறுதல் பெற்று, நெஞ்சால் ஊர்ந்து, பின் நிமிர்ந்து, அமர்ந்து, நகர்ந்து அடுத்து மண்டியிட்டு, இடம் பெயர்ந்து, எழுந்து விழுந்து மீண்டும் எழுந்து தள்ளாடி நின்று, தடுமாறி நடந்து உணர்ச்சியால் உந்தப்பட்டு பொக்கைவாய் திறந்து சிரிக்கிறது.
இதுவெல்லாம் சுற்றியுள்ளவர்களை குதூகலப்படுத்துகிறது.  உற்று நோக்குபவர்களை உறவு கொள்ளச் செய்கிறது.  அருகிலிருப்பவர்களை ஈர்த்திழுக்கிறது.  அதை அவர்கள் கட்டியணைத்து, தூக்கி முத்தமிட்டு ஏதோ கொஞ்சுகிறார்கள்.  அதற்கு புரியவில்லை.  அத்துணையும் கவனித்துக் கொண்டிருக்கும் அதன் தாயோ, அக்குழந்தையின் எதிர்கால எதிர்பார்ப்புக்கள் குறித்து கனவு காண்கிறாள்.  கனவிலே ஆழ்ந்துவிட்ட அத்தாயை, சூழல் நினைவுக்கு கொண்டு வருகிறது.  கனவு நினைவா? அல்லது நினைவு கனவா? என தெரியாது தயங்கியவளை கடமை செயலக்கிழுக்கிறது.  புரிந்து கொள்ள முடிகிறதா தோழா!

அந்த குழந்தைதான் நம்முன் பிறப்பெடுத்திருக்கும் ‘தன்மானம்’.  ‘தன்மானம்’ என்ற குழந்தையை சிந்தையில் இறுத்தி இதுவரை நீ மேலே படித்தவைகளோடு பொறுத்தி மீண்டும் ஒரு முறை வரிவரியாகப் படித்துப் பார்.  அந்த வரிகளுக்கும், அதிலுள்ள வார்த்தைகளுக்கும் புதிய பொருள் ஏதாவது தென்படுகிறதா?

படித்து முடித்து விட்டு பட்டறிவுக்கும் சம்பந்தமில்லாத யூகங்களில் மூழ்கிவிடாதே!  பரிசோதனையறிவுக்கு புறம்பாக கரை கடந்த கற்பனையில் ஆழ்ந்து விடாதே, உனக்கு ஒரு பழமொழி தெரியுமல்லவா? ‘உண்மை உள்ளிருந்து வீட்டு வாசலுக்கு வருமுன் வதந்தியும், யூகமும் ஊரையே ஒரு சுற்று சுற்றிவிட்டு வாசலுக்கு வந்துவிடும்’ என்பது பழமொழி ஆனால் உண்மையை கண்டறிந்து, ஊக்கத்தில் உறுதி கொண்டு களத்தில் கடமையாற்ற கற்றுக் கொள்வோம்.

அறிய முடியாதது எதுவுமில்லை.  ஆனால் அறிய வேண்டியதோ நிறையவுண்டு.  செய்ய முடியாதது எதுவுமில்லை, ஆனால் செய்ய வேண்டியதோ நிறையவுண்டு, என்ற கூற்றில் பொதிந்துள்ள ஆழமான அர்த்தங்களை அறிந்திட ஆழமாகவே சிந்திப்போம்.
கற்றறிவு கை கொடுக்க, பட்டறிவின் வெளிச்சத்தில் கடமையாற்ற புறப்படுவோம்.  தோல்வி என்பது எக்காலும் நம்மை அண்ட முடியாது.  வெற்றியில்லை என்பது தோல்வியல்ல.  வெற்றி மட்டுமே நமக்குச் சொந்தம்.

இந்த உணர்வில் ‘தன்மானம்’ தொடர்ந்து வெளிவரட்டும், தன்மானம் படியுங்கள்.  பரப்புங்கள், பலப்படுத்துங்கள், நாம் அதை இழக்க முடியாது, கூடாது.  அது நம்மை இழக்காது, நம்மோடு ஒட்டிப் பிறந்தது.  ஒன்றிவிட்டது.  குறுதியோடு கூடிவிட்டது.  கருத்துக்குத் தெளிவூட்டும் களப்பணிக்கு வழிகாட்டும், ‘தன்மானம்’ உயர்த்திப் பிடிக்க வேண்டிய பேரவையின் பேராயுதம்.

சூன் 2003-விடுமடல் -2 , தன்மானம்

No comments:

Post a Comment