உயர்ந்த உணர்வே தோழமை உறவு
இணைமிகு தோழா!
இயக்கத்தைக் கட்டுவது பற்றி சென்ற கடிதத்தில் பார்த்தோம். இயக்கத்தைக் கட்டுவது ஒரு தனித்த செயலல்ல. இயக்கத்தைப் பாதுகாப்பதோடு பிணைந்த செயல். அதுபோலவே இயக்கத்தைக் கட்டுவதும் பாதுகாப்பதும் அதற்கு உணர்வூட்டுதோடும் வழிகாட்டுவதோடும் பிணைந்ததாகும்.
இந்த அம்சங்களில் ஏதோ ஒன்றைச் செய்வதை மட்டும் இயக்கத்தைக் கட்டுவதாக கருதிக் கொள்ளக் கூடாது. இதில் எவ்வொன்று இல்லாமலும் இயக்கத்தைக் கட்டிவிட முடியாது. இத்துணையம்சங்களையும் ஒருவரால் மட்டும் நிறைவு செய்துவிட முடியாது. இணைவும், இசைவுமான, விமர்சன, சுயவிமர்சனத்தை அஸ்திவாரமாகவும், ஆதரமாகவும் கொண்ட ஒரு குழுவால் மட்டுமே இதனைச் செய்திட முடியும். இதனை ஆழமாகவும் , அழுத்தமாகவும் புரிந்து கொள்ள தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.
உணர்த்தலும் உணர்தலும் என்ற அஸ்திவாரத்தில் எழுப்பப்பட்ட இணைவும், இசைவுமான குழு என்பது பற்றி ஏற்கனவேயே நிறைய சொல்லியிருந்தாலும் இங்கும் ஒரு சிலவற்றை நினைவூட்டிக் கொள்ளுவோம். அந்த குழுதான் எதிர்கால விரிவாக்கத்தில் புரட்சிகர தலைமையின் வழிகாட்டுதலும் , வழி நடத்துதலும் தானே எதிர்காலத்தைப் படைப்பது.
அதாவது, நிலவுகின்ற சூழலை புரிந்து, அதனில் பொருந்தி, அந்தச் சூழலை மாற்றுவது தானே எதிர்காலத்தைப் படைப்பது. சூழலைப் புரிந்து கொள்ள தெளிவான சித்தாந்தம் வடிவிலான இலட்சியமும் வளமான கொள்கையும் தேவை. சூழலில் பொருத்திக் கொள்ள, அதிலிருந்து தனிமைப்பட்டு போகாதிருக்க சுயவிமர்சனமும், அதில் கலந்து கரைந்து விடாதிருக்க விமர்சனமும் தந்து தனித்துவத்தைப் பாதுகாத்துக் கொள்ள அனுபவ ஞானமும் தேவை. இதனைப் புரிந்து வாழ்பவர்களைக் கொண்டதே அந்தக் கருத்து செயல் உணர்வு கொண்டக் குழுவாகும்.
அந்த குழு இயக்கத்தைக் கட்டிப் பாதுகாக்க, உணர்வூட்டுவதும் வழிகாட்டுவதும் அவசியமாகும். நிலவுகின்ற எதார்த்தச் சூழலின் சரியான பிரதிபிம்ப உணர்வு என்பதால். நிலவுகின்ற எதார்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்வது உணர்வு பெறுதலாகும். அந்த எதார்த்தம் வின்னப்படாமல் அடுத்தவர் புரிந்து கொள்ளச் செய்வது உணர்வூட்டுவதாகும்.
ஒரு புரட்சிக் குழு ஒருமித்த உணர்வைப் பெற்றிருக்கும் போது தான், அது வெகு மக்கள் திரளுக்கு உணர்வேற்படுத்துவது சாத்தியமாகும். அது மாத்திரமல்ல. வெகுமக்களுக்கு உணர்வை ஏற்படுத்துவது என்பது இயக்கத்திற்கு மேலும் குழுக்களை அமைத்தல், இயக்கத்தை பாதுகாத்தல், இயக்கத்தைக் கண்காணித்தல் போன்ற வேலைகளை நிறைவேற்றுவது என பொருளாகும்.உணர்வுபூர்வமான அமைப்பு, வெகு மக்களின் உணர்வறிந்து இப்பணிகளை நிறைவேற்றுவதில்தான் இயக்கத்தின் வெற்றிய மைந்திருக்கிறது.
இந்த உணர்வேற்படுத்தலும் கொள்கை வழிப்பட்ட அகக் கட்டையும், செயல்வழிப்பட்ட புறவடிவதத்தையும் கொண்டதாக அமையும் போதுதான் அது காரியத்தின் - இயக்கத்தின் வெற்றியாய் பரிணமிக்கிறது. இதனை விளக்கிட கிளர்ச்சிப் பிரச்சாரம் ஆயுதமாய் பயன்படுகிறது.
உணர்வூட்டுவது என்பதை, வெறி ஏற்றுவதாக, உணர்ச்சி மயமாக்கி குறுக்குவழி செலுத்துவதாக கருதி விடக் கூடாது. உண்மையை உணர்த்துவதற்கு மாறாக, மூளைச் சலவையால் சிந்தனையை முடமாக்கி விடக் கூடாது. மெய்மையை உறுதிப்படுத்துவதற்கு மாறாக மேடைச் சலாங் கூடுகளால், உண்மையை ஊனப்படுத்திவிடக் கூடாது. மொத்தத்தில் , உணர்வேற்படுத்துவதற்கு மாறாக, உள்ளத்தில் விமேற்படுத்தி விடக் கூடாதல்லவா? ஆனால் அதைத்தான், இன்றைக்கு புரட்சிகர அரசியலாகக் கருதிப் புலம்பிக் கொண்டிருக்கிறவர்கள், புரட்சிக்கு புதைகுழி தோண்டிக் கொண்டிருப்பதை உணர மறுக்கிறார்கள்.
உணர்வூட்டுவது என்பது வியாபாரம் நடத்துவதல்ல. பேரம் பேசுவதல்ல. அதற்கு தேவை வழிகாட்டலே. வழி காட்டுவது என்பது வழி நடத்துவதை உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. வழி காட்டாத வழி நடத்தலோ, வழி நடத்தாத வழி காட்டலோ, அரைகுறை பிரசவக் கதையல்லவா?
உணர்வூட்டுவதும், வழி காட்டுவதும், வழி நடத்துவதும் பிண்ணிப்பணைந்தவைகள். உணர்வூட்டுவதாகச் சொல்லி உணர்ச்சியை நிலை மிஞ்சி உசுப்பிவிடுவதும், வழிகாட்டுவதாகச் சொல்லி கலங்கரை விளக்கை உதாரணமாக்கி கல்சுவராக நின்று விடுவதும், வழி நடத்துவதாகச் சொல்லி இடம் மாறி, தடம் மாறி, பதறிச் சிதறி ஓடுவதும் இயக்கமாகி விடாது. ஆனால் இதுதானே இன்றைய அரசியலில் நாயகர்களின் நாடகப் பாத்திரமாக இருக்கிறது. இதனால் தானே மதிப்பிழந்தவர்கள் மக்களின் தலைவர்களாகவும் மதியிழந்து அத்தலைவர்களை நம்பிக்கையோடு நாடி, வடிவிழந்த கூட்டமும் அரசியலை அசிங்கப்படுத்திக் கொண்டிருக்க முடிகிறது.
உணர்வூட்டி, வழிகாட்டி, வழி நடத்த சாதனங்கள் தான் தீர்மானம். முடிவு. முழக்கம் என்பவைகளாகும். அமைப்பு ஒரு பேராயுதம் என்றாலும் அது ஆயுதங்களை தயாரிக்கும் ஆயுதம் என்பதை மறந்து விடக் கூடாது.
இயக்கம் வடித்தெடுத்துக் கொண்ட தீர்மானம் உணர்வூட்டவும் முடிவு வழிகாட்டவும், முழக்கம் வழி நடத்தவுமான வெளிச்சங்களாகும். இவ்வொவ்வொன்றுக்குமிடையேயான இழையோட்டம் அறுபட்டுவிடக் கூடாது. உணர்வூட்டுவது பிரச்சார போதனைகள் மூலமும், வழிகாட்டுவது கோரிக்கைகள் மூலமும் வழி நடத்துவது கட்டளைகள் மூலமும் செய்யப்பட வேண்டியவைகளாகும். விளக்கங்கள், வினாவிடைகள் மூலம் பிரச்சார போதனைகளும், விவாதங்கள் விமர்சனங்கள் மூலம் கோரிக்கைகளும், தற்காப்பு தாக்குதல், முன்னேற்றம் ஆகிய முனைப்பில் கட்டளைகளும் நிறைவேற்றப்பட வேண்டியவைகளாகும்.
இத்தனையும் பற்றிய மொத்தமான ஆய்வுகள், எடுத்த வேலை முடிந்து, கிடைத்த அனுபவத்தை வெளிச்சமாகக் கொண்டு, நடத்தப்பட வேண்டும். அதனில் விவாத நேரத்தில் கட்டளைகளுக்கோ, களத்தில் நிற்கும் போது விவாதங்களுக்கோ இடமிருக்கக் கூடாது. முடியாது. அது திட்டமிட்ட செயல்பாட்டை சீர்குலைத்து விடும். இதே நிலையைத்தான் அது அதைச் செய்ய வேண்டிய நேரத்தில் அது அதை செய்யாமல் விடுவதும் ஏற்படுத்தி விடும்.
இத்தனை வேலைகளையும் மொத்தமாக ஒருவர் செய்திட முடியுமா? இவ்வேலைகள் ஒவ்வொன்றிலும் ஒரே நபர் திறனுடையவராக இருக்க முடியும். என்றாலும், அத்தனையையும் மொத்தமாக ஒருவரே செய்ய முயற்சிப்பதும், அதனை அனுமதிப்பதும் இயக்கமாயிருக்காது. அமைப்பின் செயல் முறையாக அமையாது. மாறாக, அத்தனையையும் மொத்த குத்தகையாக எடுத்துக் கொண்ட தனிநபரின் தான் தோன்றித் தனமாகவும் தாதாக்களின் நடைமுறையாக மட்டுமே இருக்கும்.
சுருக்கமாகச் சொன்னால், அனைத்துமே நடத்தப்பட ஒரே வழி கட்டளையிடுவதும் அதனை அட்டியின்றி தட்டாமல் கடைபிடிப்பதும் என்ற வட்டத்தில் அடங்கி விடும். இதனை இராணுவக் கட்டுப்பாடு என்று கூட பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள. அதனில் பலி கொடுக்கப்படும் அப்பாவிகளுக்கு தியாகிகள் என நாமம் சூட்டுவார்கள். என்றாலும் அவர்கள் தன்னிழப்பாளர்களாகி விட முடியுமா? கூலிக்கு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்களாகவும், வேலை செய்ய விலைக்கு வாங்கப்பட்டவர்களாகவுமே கருதப்படுவர்.
இத்தகைய காரியங்களை புரட்சிகர குழுக்களால் மட்டுமே செய்திட முடியும். அதனை வெற்றிகரமாகவும் செய்திட முடியும்.
அன்பு தோழா! புகை வண்டி இயக்கம் பற்றி நீ நன்றாகவே அறிவாயல்லவா? குறிப்பிட்ட ஒரு இடத்திலிருந்து குறிப்பிட்ட ஒரு எல்லையை அடைய இரயில் புறப்படுகிறது. அவசியத்தையும் காரணத்தையும் முன்னிட்டு அந்த இரயிலில் பயணிக்க விரும்புகிறார்கள். அதில் ஏறிக் கொள்கிறார்கள். பல தனித்தனி வண்டிகள் இணைப்பில் தொடராக்கப்படுகிறது.தொடர்வண்டியை இழுத்துப் போக என்ஜின் உண்டு. அதனை இயக்கிட ஓட்டுநரும் உதவியாளர்களும் இருப்பர். அத்தொடரின் கடைசி பகுதியில் நடத்துனரும் இருப்பார். எச்சரிக்கைச் சாதனங்களும் அவர் கைவசமிருக்கும். என்ஜின், பயணிகள், தொடர் ஓட்டம், இரயில் ஆகியவற்றிற்கென பாதுகாப்பாளர்களும் உண்டு.
எங்கெங்கே நிறுத்த வேண்டுமோ அங்கங்கே வண்டி நிறுத்தப்படும். இறங்குகிறவர்கள் இறங்குவார்கள். ஏறிக்கொள்கிறவர்கள் ஏறிக்கொள்வர். ஓட்டம் தொடரும். அந்த வண்டி ஓட்டம் தொடர்வதற்கு சில புற ஏற்பாடுகளும் உண்டு. பாதையை தெளிவாக்கிக் கொள்ள, அவ்வழியில் அனுமதிக்க, பாதைகளை பாதுகாக்க, ஒவ்வொரு கட்டத்திலும் வண்டியை வரவேற்க ஏறுகிறவர்கள், இறங்குகின்றவர்களை முறைபடுத்த, தொடர் ஓட்டம் தொடக்கம் முதல் எல்லை வரை சென்றடைவதை கண்காணிக்க, ஒழுங்குபடுத்த என அத்தனைக்கும் ஏற்பாடுகள் உண்டு.
இவை எல்லாம் இருந்தாலும் எதிர்படுகின்ற, எதிர் நோக்குகிற சில பிரச்சனைகளும் உண்டு. அவை சந்திக்கப்பட வேண்டியவைகளாகும்.
வண்டியில் பழுதுகள் ஏற்படலாம். அவை சரிபடுத்தப்படும். வழியில் தடைகள் வரலாம். அவை உடைத்தெறியப்படும். வண்டிக்கு விபத்துக்கள் ஏற்படலாம். எச்சரிக்கையோடு தவிர்க்கப்படும். தொடர் தேக்கப்படலாம். அது துடைத்தெறியப்படும். ஆனாலும் வண்டித் தொடர், தொடர் ஓட்டத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
வண்டியிலிருந்து சிலர் வலுகட்டாயமாக இறக்கப்படலாம். சிலர் வண்டியிலிருந்து இறக்கப்பட்டு ஒழுங்கு முறை நீதிக்கு முன் நிறுத்தப்படலாம். தண்டிக்கப்படலாம். ஓடும் வண்டியிலிருந்து வெளியே பாய்ந்து சிலர் தற்கொலையும் செய்து கொள்ளலாம். ஆனாலும் வண்டித் தொடரோட்டம் தொடர்ந்து கொண்டேயிருக்கும்.
ஓட்டம் ஒரு எல்லை நோக்கி என்றாலும், எல்லை எல்லையற்றது அல்லவா?
மேலே விவரித்த தொடர்வண்டியோட்டத்தின் ஒவ்வொரு சொல்லப்பட்ட, சொல்லப்படாத அம்சங்களையும் ஒரு புரட்சி அமைப்போடு ஒத்திட்டுப் பார் தோழா! நீ புரிந்து கொள்வாய்! அத்தனையும் உள்நுழைந்து விவரிக்க நான் விரும்பவில்லை. உளவாளிகளும் துரோகிகளும் அறிய ஆவலோடு ஆர்வம் பெறும். அதற்குள் நாம் செல்ல விரும்ப மாட்டோம். அவர்களது ஆசை நமக்குத் தெரியாததா?
ஆனாலும் அவர்களுக்கு பாடம் நடத்த அதெற்கெனறே ஆசான்கள் இருக்கிறார்கள். எதிரிகள், அவர்களைக் கொண்டு உளவாளிகளுக்கும் துரோகிகளுக்கும், காலம் தவறாமல், காலம் கடத்தாமல் பாடம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். இவர்களுக்குத் தான் திருவள்ளுவர் சொன்னாரோ என்னவோ, கற்றதனாலாய பயனென் கொல், வாலறிவன் நற்றாள் தொழாள் எனின் என்ற குறளை. அதனைக் கற்ற அந்த உளவாளிகளும் துரோகிகளும், மக்களின் விரோதிகளான அந்த எஜமானர்களின் பாதங்களை நக்கிக் கொண்டும் தொழுது கொண்டும் இருக்கிறார்கள். நாம் கூட அந்தக் குறளைப் பயன்படுத்திக் கொள்வோம் ஒரு சிறு மாற்றத்தோடு, வாலறிவன் நற்செயல் புரிவானெனின் என்ற பார்வையில். இத்தோடு நிற்கட்டும். மேலே செல்வோம்.
சமத்துவச் சமூகம் நிர்மாணிக்கப்படுவதை இறுதி எல்லையாக்கிக் கொண்ட ஒரு புரட்சி அமைப்பு, முதல் கட்டமாக இனமானப் புரட்சியை வெற்றிகரமாக நிறைவேற்றும் நோக்கத்திலும், அதற்கான திசை வழியிலும் பயணிக்க தொடங்கியுள்ள போது, எதிர் வருகின்ற எண்ணற்ற பிரச்சனைகளுக்கு ஈடுகொடுத்து, எதிர் நீச்சலில் காரியங்களாற்றுவது எப்படி? என கேள்வி எழக் கூடும்.
புரட்சி அமைப்பு அதனை வெற்றிகரமாக நிறைவேற்றிடும். இது குறித்து ஏற்கனவே சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. என்றாலும் கொஞ்சம் கூடுதலாகப் பார்ப்போம்.
அமைப்பு, அதன் தட்டுகளிலும், மட்டங்களிலுமுள்ள குழுக்களுக்கு உள்ளும் புறமுமான வேலைப் பிரிவினைகளால் காரியங்களை வெற்றியாக்கும். வேலைப்பிரிவினை என்பது உண்மையோடும் ஒழுக்கத்தோடும் உறுதியோடும், துணிவோடும், அடக்கத்தோடும் செய்யப்பட வேண்டிய பொறுப்பு. அதுவும் இசைவோடு ஏற்றுக் கொண்ட கடமை. தானடிச்ச மூப்பாகவோ தன்னகங்காரத்தோடோ செய்யப் படுவதல்ல பிரிவினை செய்து கொள்ளப்பட்ட வேலை. மற்றவர்கள் பிரித்தேற்றுச் சென்ற வேலைப் பகுதிக்கு இடையூறு இன்றி, எடுத்த வேலையில் கொள்ளும் ஈடுபாடு மொத்த வேலைக்கும் ஒத்திசைந்த வகையில் முடித்திட வேண்டிய கடமையல்லவா?
அந்த வேலையை கொடுத்தது அமைப்பு. அமைப்பின் அவ்வேலையை பகிர்ந்து செல்கிறது. அந்த வேலை அமைப்பையும் அங்கத்தையும் இறுக பிணைத்திருப்பது மட்டுமல்ல, அந்த வேலையின் வெற்றிகர பூர்த்திதானே அமைப்பின் ஜீவ ஓட்டம். அந்த இறுக்கத்தில் எந்த ஒரு சுருக்கத்திலும் ஏற்படும் சறுக்கலும், தொய்வும், காயமும், மொத்த அமைப்பை பாதிக்கக் கூடும் என்பதையும், அந்த பாதிப்பு அங்கங்களுக்கும் பாதிப்பாகும் என்பதையும் எச்சரிக்கையோடு எண்ணத்தில் தாங்கி ஈடுபட வேண்டிய கடமையல்லவா வேலைப்பிரிவினை?
அப்படி வேலைப் பிரிவினையை ஏற்றுச் சென்றவர்கள், காலத்தில் கடமையாற்றி, பொறுப்பான பணிமுடிப்பை அமைப்பிடம் ஒப்புவித்து, நிறை வேற்றப்பட்ட வேலைகளை இணைத்து வடிவாக்கும் போது தானே பலாபலங்களை பார்த்தறிய முடியும். ஒவ்வொரும் பங்கேற்றுச் சென்ற வேலைகளில் ஈடுபட்ட போது ஏற்பட்ட அனுபவங்களையும் கூட்டாக பகிர்ந்து கொள்ளும் போது, அதுவும் அவ்வடிவத்தோடு இணைந்து ஒரு பாடமாகிறது. அமைப்பு அப்பாடத்தின் படிப்பினைகளைப் போதனையாக பகிர்ந்தளிக்கிறது போது, அங்கங்களின் திறனுக்கு மெருகூட்டி திறம்படச் செய்கிறது. அந்த திறன், அடுத்ததொரு வேலையை பகிர்ந்து செல்லும் போது, தெளிவான பார்வையோடும், திட்டவட்டமான புதிய வழிகளிலும் காரிய மாற்றிட, பக்குவத்தை அளிக்கிறது.
இதில் மற்றொரு அம்சமும் உண்டு. அங்கங்கள் பிரித்தெடுத்துச் செல்லும் வேலையில், ஓரிரு பகுதிகளில் ஏற்படும் பாதகமான விளைவுகள், இதர பகுதி வேலைகளின் வெற்றித் திறனால் சமன் செய்யப்பட்டு விடும். அதனால் பாதகமான விளைவு வெற்றியல்ல என்றாலும், தோல்வியாகி விடாது. அதுவும் கூட பாடமாகி எதிர்கால தொடர் வேலை. அதனை வெற்றியாக்கிவிடும் என்பது ருசுபிக்கப்பட்ட உண்மை.
இந்தச் சந்தர்ப்பத்தில் ஒரு கேள்வி எழும். ஒரு அமைப்பின் இத்தனை வேலைகளையும் நிர்வகிப்பது யார்? இவ்வினாவிற்கு விடை தேடி அலைய வேண்டியதில்லை. வேலைப்பிரிவினையில் பொறுப்பேற்று, கூட்டு உறவில் வேலைகளை முடித்து, வடிவம் தந்து கூட்டு அனுபவத்தில் பாடம் கற்று பக்குவம் பெற்று, கூட்டுச் சிந்தனையால் திறன் பெற்று, கூட்டாகவே விளைவுகள் ஏற்க துணிந்து விட்ட அமைப்பு, கூட்டு நிர்வாகத்தில் முத்திரைப் பதிப்பதில் என்ன கோளாறு? ஏது தடை?
பட்டதைச் சொல்ல ஒரு தலைவர். அதனை அட்டியின்றி ஏற்றிடும் எடுபிடிகள். காட்டிய பாதையில் செல்ல குழப்பிவிடப்பட்டிருக்கும் ஒரு பெரும் கூட்டம். மடமையில் ஆழ்ந்த மக்கள் அதிலிருந்து மீள முடியாமல் ஏதோ ஒரு கவர்ச்சியால் ஆழ்த்தி வைத்து ஆதாயம் கண்டிடும் கோஷ்டிகளின் கூட்டும் குடும்பமும் என்ற போக்கில் பண்ணை நடத்துவதல்ல அமைப்பு.
அமைப்பை நிர்வகிப்பதும் கூட்டு பொறுப்பிலான கூட்டு நிர்வாகம். பரஸ்பர நேசம். நம்பிக்கை, அக்கறை, மரியாதை, ஒத்துழைப்பதில் உறுதி கொண்ட குழு நிர்வாகத்தையும் வேலைப் பிரிவினையால் முறைப்படுத்தி முழுமைப் படுத்திக் கொள்ளும். அத்திறனை அக்குழு பெற்றிருக்கும்.
அக்குழுவிலுள்ள திறன் பெற்ற, திறன் பெற்றுக் கொண்டிருக்கிற, அமைப்பினுள் ஈர்க்கப் பட்டவர்கள் கொள்ளும் உறவு தோழமை உறவு. தலைமை அமைப்பானாலும் அமைப்பு மட்டங்களானாலும், வழிகாட்டுதலுக்குரிய அமைப்பானாலும் அவற்றில் அங்கம் பெற்ற அனைவரின் உறவுகளும் தோழமை உணர்வு கொண்டதே. திறன் வேறுபடலாம். பொறுப்புகள் வேறுபடலாம். உறுப்புகள் வேறுபடலாம். பயிற்சி பக்குவங்கள் வேறுபடலாம். ஆனால் உறவில் அவர்களுக்கிடையே வேறுபாடில்லை. இருக்க முடியாது. எல்லோரும் எல்லாவற்றிலும் திறன் பெற்றிருப்பது இயலாதது. இல்லாதது. எல்லாவற்றையும் பற்றிய ஒரு பொதுவான கண்ணோட்டமும், குறிப்பிட்ட துறையைப் பற்றிய ஆய்வாய்ந்த புரிதலும், எல்லாவற்றோடுமான ஒரு பொதுவான அணுகுமுறைப் பண்பும், குறிப்பிட்டத் துறையுடனான ஒரு ஆழமான அணுகுமுறைத்திறனும் கொண்டிருப்பது தான் இயல்பானது. சாத்தியமானது. என்றாலும் இந்த வேறுபாட்டால் தோழமை உறவிலும் உரிமையிலும் பேதமிருக்காது. இருக்க முடியாது. இருக்கக் கூடாது.
தோழமை உறவை, அறிந்து, தெரிந்து, தெளிந்து, புரிந்து கொண்டால் இயக்கத்தைக் கட்டுவதில், காப்பதில், கனலேற்றுவதில், களமிறக்குவதில், களம் காண்பதில் , களம் சந்திப்பதில், தளம் களம் இணைப்பதில் எவ்வித சங்கடமும் இல்லை. இயக்கம் வீச்சும் விரிவும் பெறச் செய்வதில் எவ்வித தடைக்கும் வழியில்லை. அப்படி ஏற்பட்டாலும் தாண்டிச் செல்லுவதில் தடையில்லை.
விடுமடல் - 19
No comments:
Post a Comment