நேற்று இன்று தொலை நோக்கல் -
இன்று நாளை நேர் காணல்
இணைமிகு தோழா!
சென்ற தடவை வரலாற்று இருப்பு முதல் வாத கண்ணாடியணிந்த உலகைப் பார்க்கத் தொடங்கி, ஆதிச் சமூகம் பற்றிய ஒரு பதிவிலகப்பட்டப் பகுதியை பார்த்தோம். சித்தாந்தக் கண்ணாடி கூடுதல் திறன் கொண்டதுதானே? கடந்து போன நீண்ட காலத்தை கண்டறிந்திட நுண்ணோக்கியாகவும், நிலவுகின்ற நிகழ்காலத்தைப் புரிந்திட உள்ளாழ் நோக்கியாகவும் இருக்கக்கூடியதல்லவா சித்தாந்தம்? சித்தாந்த வேதாந்தமல்லவே.
வேதாந்தத்திற்கு வேட்கை முருங்கை மரம் ஏறி முழம் போடும் வெறுங்கை வாழ்க்கை தானே? வீட்டுத் திண்ணையில் மல்லார்ந்து படுத்து மந்திரவாதி கொடுத்த மை வெற்றிலையில் மகிமை பார்த்தறிவதோ; பம்பையடி காதைக் கிழிக்க உடலைச் சிலிர்த்து உச்சாட்டம் கொண்டு ஆடும் கோவில் பூசாரியின் அருள்வாக்கு கேட்டறிவதோ, உடுக்கை கிடுகிடுக்க ஊரைக் கூட்டி, குடல் கும்பி வெளிநீட்ட கூச்சலிட்டு குறிகாரன் சொல்லுவதை கேட்டறிவதோ அல்ல உலகறிவது. சித்தாந்தவாதிகளாகத் தங்களைச் சித்தரித்துக் கொண்டு, பித்தம் தலைக்கேற, சித்த பிரமை கொண்டு தங்களை தத்துவ வாதிகளாக விளம்பரம் செய்து கொள்ளும் வேதாந்திகளின் வியாக்யானங்களினாலா உலகையறிந்திட முடியும்? உண்மை கண்டிட முடியும்?
புறநிலை எதார்த்தத்தைச் சரியான பிம்பமாக்கிக் காட்டும் முகக் கண்ணாடி மூலமோ, புறநிலை உண்மையை உள்ளது உள்ளபடி உள்ளார்ந்து பார்த்திடச் செய்யும் மூக்கு கண்ணாடி மூலமோ உலகை பார்த்திட்டால் தானே உண்மை தெரியும்? அப்படி தெரிந்து கொண்டால் தானே அதனை மாற்றிடும் படைப்பாளியாக நீ வாழ முடியும்.
உலகை மாற்றடவா- அது நடக்கக் கூடியதா? அது முடியுமா? அது ஆண்டவனால் மட்டும் தானே முடியும். அவனை நோக்கி தவம் கிடந்து, துணிபாடி தோத்திரம் செய்து, பிரார்த்தனை நிகழ்த்தி, வேண்டுதல் கடன் செலுத்தி, பரிகார நிவர்த்தி செய்து, அடுத்த உலகில் சொர்க்க வாழ்விற்கு இறைவனின் கருணைகழுவதே இவ்வுலகப் பயணம் எனக் கூறும் கூட்டத்தின் கூட்டுறவில், அரண்டு மிரண்டு, தடம்புரண்டு, தரணி மறந்து, தன்னையிழந்து, தளைப்பிணமாகி தரைவாழ் திரளை மீட்பதல்லவா உன் முன் சவால் விட்டு நிற்கும் வேலை?
அப்பணிக்கு ஆயத்தமாக, சென்றதன் தொடர்ச்சியை இக்கடிதத்தில் சற்று சுருக்கமாகவே பார்ப்போம்.
ஆதிச் சமத்துவம சமூகம், அதன் வளர்ச்சிப் போக்கின் அவசியத்தால் உற்பத்தி சக்திகளுக்கிடையில் ஒரு வெடிப்பு ஏறுபட்டது. இது திடீர் நிகழ்வல்ல, நீண்ட நெடிய நிகழ்ச்சிப் போக்கின் விளைவாலும், ஒரே நேரத்தில் உலகம் முழுதும் ஏற்பட்ட மாயவினோத மாற்றமல்ல. உபரி உற்பத்தி காலப்போக்கில் எங்கே தனியார் சொத்தாகும்?
அவசியமேற்பட்டதோ அந்தச் சூழலிலும் ஏற்பட்ட வெடிப்பாகும். ஆதிச் சமத்துவ சமூகத்தின் முன்னோக்கிய பயணத்தில் அதன் செழுமையான உயர்ந்த கட்டத்தை அடையும் வேகத்தில் சமூகம் சில இடை கட்டங்களை உள்ளடக்கிக் கொண்டிருந்தது. கடை, இடை, தலையென கொண்ட அம்மூன்று கட்டங்களில் இடை கட்டத்தில் மூன்று பிரிவு மாற்றங்களையும் உட்புரிதத்துக் கொண்டிருந்தது. ஆதிச் சமத்துவச் சமூகம் பேதப்படவும், பிளவுபடவுமான பலவீனங்களை வளர்த்துக் கொண்டிருந்ததால் உற்பத்தி சக்திகளுக்கும் உற்பத்தி உறவுகளுக்குமான முரண்பாட்டிற்கு தீர்வுகாணும் விஞ்ஞான அனுபவ அறிவாற்றலும், செயலாற்றலும் தகுதி, தரம், திறன் பெற்றிட முடியா நிலையில் அடிப்படையாக பேதப்பட்ட சமூக காலகட்டம் ஏற்பட்டது.
அக்காலக்கட்டத்தின் மூன்று பிரிவுச் சமூக மாற்றங்கள், அடிமை அல்லது எஜமானத்துவச் சமூகம் - பண்ணையடிமை அல்லது நிலப்பிரபுத்துவச் சமூகம் - கூலி அடிமை அல்லது முதலாளித்துவச் சமூகம் என்பனவாகும். இம்மூன்றுச் சமூகப் பிரிவுகளுமே உடமைக்குச் சொந்தக்காரர்கள் - உழைப்புக்குச் சொந்தக்காரர்கள்; உரிமை மானம் பறித்த உறுஞ்சிச் சுரண்டும் ஈனக் கூட்டம் - உழைப்பை விலை பேசி ஜீவித்தாலும் மான உணர்வு குன்றா மக்கள் திரள்; ஆதிக்கம் அதிகாரம் கொண்ட சிறு கும்பல் - அடிமைப்படுத்தப்பட்டு மீட்சிக்குப் போராடும் பெரும் திரள் என்ற நிலையில் தான் அமைந்தன.
சுரண்டல்காரர்களும் அவரது சித்னையாளர்களும், அவர்களது சுரண்டலுக்கு நியாயம் கற்பித்திட மோசடி சித்தாந்த மூக்கு கண்ணாடிகளை பல மாடல்களில் தயாரித்து உண்மைகளை உருமாற்றிக் காட்டுகிறார்களே தவிர உலகம் காட்டும் கண்ணாடியை அவர்கள் அறிந்திடவுமில்லை; அணிந்ததிடவுமில்லை. ஆனாலும் தங்கள் கண்ணாடிகள் காட்டுவது கண்கட்டி வித்தை என்பதை மட்டும் அனுபவத்தால் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.
அன்பு தோழா! இக்கடிதத்தில் நான் சுட்டிக்காட்ட வேண்டியதை சுருக்கித் தருகிறேன்.
ஒன்று, பேதப்பட்ட மூன்று சமூகக் கட்டங்களும், ஒன்று மற்றொன்றாக தொடர் மாற்றம் கொண்ட போதிலும், அந்த மாற்றங்கள், சுரண்டலின் தன்மை, உடமையின் தன்மை, உழைப்பை விலை பேசி பறித்த முறை, அடிமைப்படுத்திட்ட விதம், ஆதிக்கத்தின் தன்மை, அடக்க முறை கருவிகளின் தன்மை போன்றவற்றில் கடுமையும் கொடுமையும் உச்சமடைந்த போதிலும் சமூகத்தில் அடிப்படை மாற்றங்கள் ஏதும் நிகழ்ந்திடவில்லை. அம்மூன்று கட்டங்களிலும் உறிஞ்சும் கூட்டமும் உழைக்கும் மக்கள் திரளும் தொடர்ந்தன. சுகானுபவர்கள் சுகஜீவிகளாகவே கொழுத்துக் கொண்டிருந்தாலும் தங்களை தாங்களே சவமாக்கிக் கொண்டிருப்பதை அறிந்தாரில்லை. பேதப்பட்டச் சமூக கட்டங்கள் பல்வேறு வகைத் தட்டுக்களைக் கொண்டிருந்தாலும், அவை பல்வேறு வர்க்க முரண்பாடுகளைக் கொண்டிருந்தாலும், ஒவ்வொரு கட்டத்திலும் அடிப்படையாக பகை முரண் கொண்ட வர்க்கங்கள் இருந்தன. இம்முரண்கள் சமரசப்படுத்த முடியாதவையாகவும், வெடித்தேயாக வேண்டியவையாகவும், இவற்றின் தீர்வே அடிப்படை சமூக மாற்றங்களுக்கான தீர்வாகவும் இருந்தன.
முதலாவது கட்டத்தில் அடிமைகளுக்கும் எஜமானர்களுக்குமான முரண்பாடும், இரண்டாவது கட்டத்தில் பண்ணையடிக்கும் நிலப்பிரபுக்களுக்கமான முரண்பாடாகவும், மூன்றாவது கட்டத்தில் கூலி அடிமைக்கும் முதலாளிக்குமான முரண்பாடாகவும் அப்பகை முரண்பாடுகள் வெளிப்பட்டன.
இன்னொன்று; அடிப்படையாக பகைபட்ட வர்க்கங்களில் அடக்கப்பட்ட அடிமை வர்க்கம் அதன் பகைவனான எஜமானத்துவத்தை எதிர்த்து கடுமையான கிளர்ச்சிகள், வேகமுற்ற எழுச்சிகள், ரணகளமான மோதல்கள் போன்ற திடீர் நிகழ்வுகள் ஏற்பட்டாலும், அதுபோலவே பண்ணையடிமைகள் நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்து உக்கிரமமான மோதல்களையும் ரத்தக்களரியான சம்பவங்களையும், கதிகலங்கவடிக்கும் கலகங்களையும் உணர்ச்சி வயப்பட்ட நிகழ்வுகளாக்கினாலும், அடிப்படையான சமூக மாற்றங்களைச் செய்திடவில்லை; தங்கள் எதிரிகளை வீழ்த்திட முடியவில்லை.
அவ்விரு அடிமை வர்க்கங்களுக்கும், தங்கள் எதிரிகளுக்கு எதிராக சமூகத்தின் இதரத் தட்டுக்களில் இருந்த இதர வர்க்கங்களை ஈர்த்து, திரட்டி, தன்பின் அணிவகுத்து வரச் செய்து, அதற்கு தலைமை ஏற்கும் திறன் அவைகளுக்கு இல்லை. ஆனால், சுரண்டலின் கடைசி கட்டச் சமூகமான முதலாளித்துவச் சமூகத்தில், அடிப்படை முரண்பட்ட வர்க்கங்களில் ஒன்றான பாட்டாளி வர்க்கம் ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கங்களின், சமூகத் தட்டுக்களின் நம்க்கைக்குப் பாத்திரமாகவும், அவற்றைத் தன்பக்கம் ஈர்த்து திரட்டி, பகைவனுக்கு எதிராக பயிற்சியூட்டும் வல்லமையும், களம் இறக்கி, தலைமை ஏற்று, வழி நடத்தும் படைப்பாளியாகவும் தன்னை உருவாக்கிக் கொண்டுள்ளது; அச்சமூகம் அப்படி உருபெறச் செய்திருக்கிறது. தனது செயல்களுக்கு வழிகாட்டக் கூடிய தெளிவான சித்தாந்தத்தையும், அதன் வழி கோட்பாடுகளையும், சித்தாந்தம் செய்ய இணைப்பின் வடிவமான ஒரு புரட்சி அரசியல் அமைப்பையும் உருவாக்கிக் கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது. எந்த வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்ற வினாவை விட, எந்த வர்க்கத்திற்காக தன்னை இழக்கத் தயாரானவர் என்ற அடிப்படையில் எடைபோட்டு போராளிகளை உருவாக்கிக் கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது.
மற்றொன்று; ஆதிமனிதன் விலங்கிலிருந்து வேறுபட்ட உற்பத்தி உழைப்பே காரணியாயிருந்தது என்றாலும், உற்பத்திக் கருவிகளை தேடுவதற்குமுன், தன் உழைப்பின் தொடர்முயற்சியில் தனது கரங்களையே உற்பத்திக் கருவிகளாக வளர்த்தெடுத்துக் கொண்டான். கரங்களைக் கருவியாகக் கொண்டாரம்பித்து, தனது நீண்ட நெடிய அனுபவங்களில், அகப்பட்டதை கருவிகளாக பயன்படுத்தி பின் மரம், கல், உலோகங்களைக் கொண்டு கருவிகளை வடிவமைத்து, ஒழுங்குபடுத்தி, உயர்த்தி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்களுக்குப் பின் விரும்பிய ஆயுதத்தை விரும்பியபடிச் செய்து உபயோகப்படுத்திக் கொண்டான். உற்பத்திக் கருவிகளின் வளர்ச்சி, அதனால் ஏற்பட்ட வளப்பங்கள், அபரிமிதமானாலும் அவை உழைப்பைச் சுலபப்டுத்த பயன்படவில்லை, உழைப்பின் ஒப்பை அதிகப்படுத்தி அவனது வாழ்வை வளமாக்கிடவில்லை. உழைக்காது உபரியைத் திரடி, உழைப்பில் விளை பயனுக்கு சொந்தம் கொடாடும் உறுஞ்சும் கூட்டத்தை செல்வசீமான்களாக்கி பாமரத் திரளை பரதேசிகளாக பரிதவிக்கவிட்டது. சமூகத்திடமிருந்து பறித்து உப்பரிக்கை வாசிகளானவர்களிடமிருந்து உற்பத்திக் கருவி சாதனங்கள் பறிக்கப்படப் போவதையும், அப்பணி முடிக்கும் பாட்டாளி வர்க்கம் படைக்கப்பட்டுவிட்டதையும் எடுத்துக்காட்டும் உயர்ந்த கட்டம் தான் முதலாளித்துவச் சமூக கட்டமாகும்.
பிரிதொன்று; ஆதிச் சமத்துவச் சமூகத்தில் ஆண், பெண், மனிதர்கள் சமூக அங்கமாயிருந்தது, வரை முறைவற்ற உடலுறவின் மூலம் இனவிருத்திக் கடமையைச் செய்யத் தொடங்கி, அனுபத்தில் முறைப்படுத்தி, கட்டுப்படுத்தி பேதப்பட்டச் சமூகத்தில் இனக்குடும்பம், குழுக் குடும்பம், இணைக் குடும்பம் என்ற நிலை தொடர்ந்து, பல கணவர் மணம் பலதார மணம், ஒரு தார மணம் என் இறுதியாகி தனி உடமை, வருண வர்க்க சாதி காக்கும் பெட்டகமாகவும், மதம், மடமை, தெய்வங்கள், சாஸ்திரங்கள், சுயநலம், சுகபோகம் போன்றவற்றின் குடோன்களாகவும் குடும்பங்கள் மாறின. உடமைவர்க்க சமூகத்தின் இறுதி வர்க்கமான முதலாளித்துவத்தில், விஞ்ஞான வரைமுறையோடு கூடிய உடலுறவின் கூட்டுறவாக பரிணமிக்கப் போகும் அறிகுறிகளின் அடையாளர் தெரியத் தொடங்கியுள்ளது.
அடுத்தொன்று, ஆதிச் சமூகத்தில் உதவிடும் பொருட்பிற்கும், பணி நிவர்த்திக்குமான பிரிவுகள், உழைக்கும் ஒட்டு மொத்தம் பணிகளோடு இறுக்கமாகிப் போயிருந்தன. பேதப்பட்ட சமூகத்தில் உற்பத்தி உழைப்பை வெகுமக்கள் திரளிடம் விட்டு, அதனை ஓசிக்களிக்கவோ, விலைக்கு விற்கவோ வான கட்டாயத்தை ஏற்படுத்தி விட்டு, உற்பத்திக் கருவி, சாதன, சொத்துக்களை சமூகம் நம்பியிருந்த எந்த ஒரு சிறுக் கூட்டம் தங்களுக்குச் சொந்தமாக்கிக் கொண்டதால் வர்க்கங்கள் தோன்றின. சொத்தைப் பறித்து கூட்டத்தின் பதவிகளும், பகட்டும், பலசுரக் கொள்ளையும், பாதுகாப்பு அரண்களும் படிப்படியாக வளர்ந்துயர்ந்தன. பகை, பதற்றம், பரிதவிப்பு, உள்ளமுக்கம், புறவெடிப்பு போன்றவை பாசறையமைக்க நிர்ப்பந்தித்துக் கொண்டிருந்தன. சொகுசாளர்களின் வாழ்க்கைக்கு அந்திமம் தான முதலாளித்துவச் சமூகத்தின் இறுதிக் கட்டம் என்பதை அறியாமலேயே அவர்களின் சுயபோதை தலைக்கேறியிருக்கிறது.
தொடக்க காலத்தில் இலப் போர்களில் வென்று, சென்றவர்களை தின்று, பின் அவர்களை சமநிலையில் தங்களோடிணைத்துக் கொண்டு, அடுத்து வென்றவர்களை அவர்களது காலத்திற்கே திருப்பி அனுப்பி, அதையொட்டி வென்று படித்தவர்களில் பெண்களை தங்களோடு சேர்த்துக் கொண்டு ஆண்களை கொன்று போட்டு, கடைசியாக அவசியத்தால் அடிமைகளாக்கினர். முதலில் உயிருக்கு சொந்தமற்ற அடிமைகளாக்கி, பின் ஜீவனத்திற்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்ட பண்ணை அடிமைகளாக்கி, இறுதியாக உழைப்பை விற்கும் சுதந்திரத்தோடு கூடிய கூலியடிமைகளாக்கி, இதுதான் சாசுவதமானது என சாதித்து முடிவாக, தனது சாவிற்கும், அதனருகில் சவக்கிடங்கிற்கும் பத்திரமாகச் செல்லும் பாதையை முதலாளித்துவம் தானே உருவாக்கிக் கொண்டிருக்கும் கட்டத்திற்கு வந்திருக்கிறது.
வேறொன்று; காட்டில் காய்கனிகளைச் சேகரித்து உண்ண கைகளை கருவியாக கொண்ட கூட்டம், கல்லுலோக அயுதங்களை வடிவமைத்துக் கொண்டு விலங்குகளை கொன்று தின்று; பச்சையாய் தின்ற மாமிசத்தை பக்குவப்படுத்திட தீயை கண்டுபிடித்து, குகை தங்கி வாழத் தொடங்கி குடிசை போட கற்று; ஆடையின்றி திரிந்தது போக இலை தழையாய் மூடிக் கட்டத் தொடங்கிய சமூக உற்பத்தி, உழைப்பு, தொழில் பிரிவினைகளைக் கொண்டு, வேட்டையாடுதல், மீன்பிடித்தல், கால்நடை வளர்த்தல், விவசாயம் செய்தல், பண்டமாற்று, கைத்தொழில் கலைகள், பட்டரைகள், ஆலைகள் என உயர்ந்தது. உடல் மூளை உழைப்புப் பிரிவினையும் இத்தோடு உள்ளடங்கிப் போனது.
தனியாய் பறித்த உழைப்பின் உயர்மதிப்பாலை , பண்டமாற்று பண மாற்றிகி; வணிகம் வர்த்தகச் சந்தாட்டமாகி சேகரிக்கப்பட்டலாட்டும், பணத்தை பணத்தால் சுரண்டிய வோவேதி வங்கியாக திரட்டியலாட்டும் ஒன்றுவடி முதலாளிகளின் மூலதனங்களாக்கி, தொழில் வங்கி மூலதனங்கள் இணைந்து நிதி மூலதனமாகி குறிப்பிட்டோர் கைகளில் சிக்கி, அவர்களின் கூட்டில் அனைத்து உற்பத்தி வர்த்தக நிறுவனங்களும் உள்ளடக்கப்பட்டு ஏகபோக இறுதிக்கட்டதை எய்துகிறது. இந்த ஏகபோக கட்டமே முதலாளித்துவத்தின் கடைசி கட்டம்.
மேலும் ஒன்று, குலங்களை நிர்வகித்த தலைவர்கள், ஒழுங்கு கட்டுப்பாட்டிற்கு முயற்சித்த பொறுப்பாளர்கள், பாதுகாப்பிற்கு உத்திரவாதமளித்த போர் தலைவர்கள், வழிபாட்டு முறைகளையும் அதனையொட்டிய பழக்க வழக்க நெறிகளையும் வடிவம் தந்து வழிநடத்தியவர்கள் போன்றோர் பேதப்பட்டச் சமூகத்தில், ராஜபோகம், சொத்துபத்து ஆதிக்கம், பட்டம் பதவி படாடோபத்திற்கு உடமைகாரர்களாகி உழைக்கும் மக்களை ஒடுக்க முனைந்த போது அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள், மதவாதிகள் என கூடுபாய்ந்து கூட்டுச் சேர்ந்தார்கள்.
மொத்தத்தில் அரசு, ஆட்சி, அதிகாரம் ஆகியவற்றின் கொடூரதாக்குதலுக்கு வெகுஜனத்திரள் உள்ளாக்கப்பட்டது. அது கசப்பில் தொடங்கி, கவலை, பயம், திக்கற்ற நிலைகளில் தேங்கித் தவித்து, புழுங்கி, வெப்பமாகி, புகைந்து அனலாகி, கணிந்து கனற்று எரியத் தொடங்கி, தீயாகி, தீப்பிழம்பாகி, காட்டுத் தீயாய் ஓங்கி நிற்கிறது. தானே மூட்டிக் கொண்ட தீயில், தியாக ஜோதிகளும் கலந்திருப்பதை அறியாத முதலாளித்துவம், தனது கருவிகளான அரசு, அரசு எந்திரங்கள், மதங்கள் போன்றவற்றோடு அடங்கப் போவதும் அநீதியின் அடக்கத்தில் தானே.
பிரிதொன்று; தனிவுடைமை வர்க்கச் சமூகத்தின் கடைசிக் கட்டம் ஏகபோக முதலாளித்துவக் கட்டமே; அதன்பின் அதற்கு வளர்ச்சிஜிமில்லை, வாழ்வுமில்லை என்பதோடு வாழப்பிறந்துவிட்ட பாட்டாளிகள் வர்க்கத்தின் பக்குவத்திலும் மக்களின் ஆயத்தத்திலும் முதலாளித்துவம் அற்ப ஆயுளில் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. இதன் முடிவு விஞ்ஞான சமத்துவச் சமூகத்தின் தோற்றமே. மனிதமான மீட்பாளர்களான பாட்டாளிகளும், சம உடமைப் பாதையில் சென்று, சமூக உடமைக் கோட்டைக்குள் பிரவேசித்து தங்களின் வர்க்க ஆடையை களைந்தெறிந்து, வர்க்கங்கள் மறைந்த படைப்பாளிகள் மானிட வடிவத்தில் ஒன்று கலந்து விடுவார்கள்.
இறுதியாக ஒன்று, அடிமைச் சமூகத்திலிருந்து முதலாளித்துவச் சமூக கட்டம் வரையிலான உலகச் சமூகத்தின் பொதுத் தன்மைகளை இதுவரை கூறிவந்தாலும், இந்திய வரலாற்றுச் சூழலின் பிரத்யேக தனித்தன்மைகளையும் நுணுக்கமாக புரிந்திணைத்துக் கொள்ள வேண்டும்.
அன்பு தோழா! சுருக்கமான சில குறிப்புக்கள்; நான் உனக்கு மடல் தானே எழுதுகிறேன்; அவ்வளவுதான் முடியும்; இதனை விளங்கிட - விளக்கிட மார்க்ஸீயம், பெரியாரீய நூல்களை ஊன்றிப்படி, அடுத்த வருடனான விவாதத்தில் அர்hத்தம் புரிந்திடு; தேர்ந்தெடுத்து, வகைப்படுத்தி, முறையாக்கி, நிலை எடுத்துக் கொண்டு படி, படிப்பதிலும் சித்தாந்தத்தை புரிந்து கொள்ளபடி; அப்படிப் புரிந்து கொண்டாலும் அதனை அப்படியே பிடித்துக் கொண்டு தொங்கி ஊல்சலாடாமல், உனது செயல்பாட்டில் உரைத்துப் பார்த்து உறுதிப்படுத்திக் கொள். பேசுவதற்கு சித்தாந்தம் கூட ருசியாயிருக்கிறது; கேட்பதற்கு சித்தாந்தம் இனிமையாயிருக்கிறது; நடைமுறையில் அனுபவம் சித்தாந்தத்தைச் செழுமைப்படுத்துகிறதா, அனுபவம் தந்த படிப்பினைகள் சித்தாந்தத்தை புரிய வைக்கிறதா என ஊன்றி கவனித்திடு; வறட்டுத்தனமாக அதைப் பிடித்துக் கொண்டு நீயும் தொங்காதே; அதனையும் தொங்கவிடாதே; ஆனாலும் ஒன்றை மறந்து விடாதே ஒவ்வொரு நொடியிலும் அசைவிலும் உனது கருத்து செயலை வேதாந்தம் சுற்றிச் சுற்றி வளையவந்து கொண்டிருக்கிறது; அது கூடுவிட்டு கூடு பாயும் கலை தெரிந்ததல்லவா?
எதிர்காலத்தில் நிர்மானிக்கப்படப் போகும் உச்சகட்ட, உன்னத சமூகம் பற்றி விவாதித்திட இங்கு இடமில்லை. அப்புறம் கிடைக்கும் வாய்ப்பில் பார்ப்போம் என்றாலும் நாம் தொலைநோக்கில் காணும் அந்த உயரிய சீரிய சமூகத்தை நமது சந்ததிகளின் தலைமுறை நேரில் காணப் போகிறது என்பது மட்டும் உண்மையல்லவா?
விடமடல் -12 நன்றி: தன்மானம்
No comments:
Post a Comment