Tuesday, January 18, 2011

மனித உருவில் புதிய வடிவமே போராளி

மனித உருவில் புதிய வடிவமே போராளி

இணைமிகு தோழா!

 பாசறையில் பக்குவம் பெற்று களவாழ்வில் செயல்திறன் கொண்டு, பயிற்சியும் பக்குவமும் ஒரு சேர்ந்த வடிவமாய் போராளி உருவெடுக்கிறான்.  உண்மை, உழைப்பு, உறுதி, துணிவு, தொண்டு, இழப்பு, இத்துனையும் மொத்தமாய் கலந்த வடிவமல்லவா போராளி.
 போராளி தெருச் சண்டைக்காரனல்ல, வீண் வம்புக்காரனல்ல, எத்தர்களின் எடுபிடிகள் அல்ல; அரைவேக்காடுகளின் அடியாட்கள் அல்ல; தன்னிச்சையாய், தான் தோன்றியாய், பட்டதையும் கெட்டதையும் செய்பவன் அல்ல; இரவல் மூளைக்கு ஏங்குபவனும் அல்ல; இறுமாப்பு கொண்டவனுமல்ல.

போராட்ட வடிவத்தை புதுவடிவமாய் கொண்டவன்; உருவத்தில் மனித உருவே கொண்டிருந்தாலும், அவனது உள்ளடக்கத்தில், தன்மைகளில் புதிய வடிவத்திற்கான அகக்கட்டமைப்பைக் கொண்டிருப்பவன்.  அவனது பேச்சுக்கள், எழுத்துக்கள், செயல்பாடுகளில், குறிப்பாக அவனது அணுகுமுறைகளிலும், அனுபோகத்திலும், அர்ப்பணிப்புக்களிலும் அவ்வுள்ளடக்கத்தின் பண்பாடுகள் பிரகாசிக்கும்.

இயற்கையை எதிர்த்து தன்னந்தனியனாகப் போராட முடியாத சூழலில்தான், தன்னந்தனியனாக தனது தேவைகளை பூர்த்தி  செய்து கொள்ள முடியாது என்ற சூழலில்தான், தனது தேவைப்பூர்த்திக்கான பொருள் உற்பத்திகளை தன்னந்தனியாக செய்திட முடியாது என்ற சூழலில்தான் சமூகம் உருவெடுப்பது கட்டாயமாயிற்று என்பதை புரிந்திருப்பவன் போராளி.

தன்னந்தனியாக இருந்தாலும் சமூகத்தின் அங்கம் என்பதைப் புரிந்து சமூகத்திற்காக உழைப்பதும், சமூகம் அவனது தேவைகளைப் பூர்த்தி செய்வதும் அதில் பேதங்களுக்கு இடமில்லை என்பதையும் உணர்ந்திருப்பவன் போராளி.

இன்றைய சமூகம் வருணத்தால், சாதி மதங்களால், வர்க்கத்தால், பாலியல் வாழ்வால், பிளவுபட்டு, பேதப்பட்டு, உழைக்காமல், சமூக உழைப்பை உறிஞ்சி, சுரண்டி, திருடி ஆதிக்கபுரியில் வாழும் ஒரு கும்பலும், - உறிஞ்சிப்பட்டு, சுரண்டப்பட்டு, உரிமைகள் பறிக்கப்பட்டு, அடிமையாக்கப்பட்டுக் கிடக்கும் பெரும்பகுதி சமூகம், மொத்தமாய் சீர்குலைந்து கிடப்பதை தெரிந்து கொண்டிருப்பவன் போராளி.
தனி சிலரின் ஆதிக்க அராஜக வாழ்விற்காக, பெரும்பகுதி உழைக்கும் சமூகம் ஜீவனத்திற்கு பிழைக்க வேண்டிக்கிடக்கும் சூழலை, தலைகீழ் மாற்றிட, உழைப்பிற்கே மதிப்பு, உழைப்பின் படைப்பே சமூகம், அங்கே உளுத்தர்கள் நடமாட்டத்திற்கு வேலையில்லை என்பதை உணர்ந்து, உணர்த்திட தன்மானியாக உருவெடுத்திருப்பவனே போராளி.
அந்த போராளி தன்தேவை, தன்வாழ்க்கை, தன்விருப்பம் என்கிற நான், எனது, எனக்கு என்றவற்றையெல்லாம், நாம், நமது, நமக்கு என்ற சமூக வட்டத்திற்குள் அடக்கிக் கொண்டவன்; எனவே அவனிடத்தில் அர்ப்பணிப்பைக் காண முடியும்.

ஆனால், தான், தனது, தனக்கு என்ற தன் ஆசை, தனியாத ஆசையாகி பேராசையாய் உருவெடுத்து, தனியாதிக்கத்தை, சுரண்டலை ஒரு காலும் இழக்கமாட்டேன் என தடிதூக்கி நிற்கும் கும்பலிடம் அன்பு, பண்பு, பாசம், பரிவுகளைப் பார்க்க முடியுமா?  அர்ப்பணிப்பு களுக்கு அங்கு என்ன வேலை?

ஒரு போராளி வாழ்க்கைப் பள்ளியில் தன்னை ஆயுட்கால மாணவனாக இணைத்துக் கொண்டிருப்பவன்; ‘எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் பனங்கொட்டையை கரடி முட்டை’ என்று கதைத்த கதை போல அல்லாமல் தன்னடக்கத்தை தலைமேல் கொண்டவன்; ஆனால் அவனிடம் தலைசாய்த்து, தண்டனிட்டு, கொத்தடிமைக்கு உத்திரவாதமாக்கிக் கொள்ளும் சோரகுணம் ஒருபோதும் தலைகாட்டாது.  அவன் உல்லாசிகளுக்கும், சல்லாபிகளுக்கும் உயிர்க்கொல்லி.

பட்டம், பதவி, அதிகாரம், ஆணவம் என கூத்தடிக்கும் கூட்டத்திடம் சமூகம் சிக்கிச் சீரழிவதை கண்டு கொண்ட பின்பும், அந்த அக்கிரம, அநியாயக் கூட்டம் போராளிகளை அடையாளம் கண்டு அழித்தொழிக்க கங்கணம் கட்டி புறப்படுவதை கண்ணெதிர் கண்ட பின்பும், உணர்ச்சி கூட தட்டாமல் கிடப்போரை என்ன சொல்லுவது?

மந்தம், பிரமை, பிரேமை, சபலம், சஞ்சலம் என்பதா?  மண்டூகம், மடத்தனம், மரமண்டை, மரக்கட்டை, சூடு சொரணை ரோஷம் இழந்த பிரேதம் என்பதா?  இப்படிக் கிடப்பவர் களுக்கும் சேர்த்துத்தான் தன்னிழப்புக் கவசத்தை தரித்துக் கொண்டிருக்கிறான் போராளி என்பதாவது இவர்களுக்கு புரிய வேண்டாமா?

ஒரு போராளி தன்வாழ்நாளின் ஒவ்வொரு நாளும், கற்றலும் கற்பித்தலுமான நாட்கள் என உறுதிபூண்டிருப்பவன்.  அவன் யாரிடமிருந்து கற்கிறான்?  தன்னோடு சமூகத்தில் வாழும் மக்களிடமிருந்துதான்; யாருக்குக் கற்பிக்கிறான்?  தன்னோடு சமூகத்தில் வாழும் மக்களுக்குத்தான்.  என்ன தோழா?  வேடிக்கையாயிருக்கிறதா?  ஆம்! அந்த போராளிக்கு ஆசிரியர்கள் மக்கள்; மக்களுக்கு போதகர் அந்த போராளி.  உண்மையல்லவா?

அந்த போராளி கற்கும் போது மக்கள் தளமாயிருக்கிறார்கள்; போராளியின் போதனைக்குப் பின்தளமாயிருந்த மக்கள், களமாய் மாறி வரலாறு படைக்கிறார்கள்.

இந்த பட்டறிவுப் பாடம், பணக் கொழுப்பும், தலைக் கொழுப்பும் கொண்ட கூட்டத்திற்கு புரியுமா?  ஒரு காலும் புரியாது.  அவர்கள் விலைக்கு வாங்குவதில் வல்லவர்கள்; பழக்கப்பட்டவர்கள்; போராளிகளையும் விலைபேசி விடலாம் என நினைப்பதில் வியப்பில்லை.  ஆனால் போராளிகள் விலைபோக மாட்டார்கள். விலை கொடுத்தே வெல்வார்கள்.  யாரோ போராளி விலை போய்விட்டானாம் என்ற புரளி கேட்டால், அடித்துக் கூறலாம் அவன் போராளி அல்ல என்று.

ஏமாந்த பலர், எச்சில் பிழைப்புக்கு நடிப்பவர்களை பக்குவம் பெற்றவர்களாகவும், தில்லுமுல்லு தெகிடுதித்தம், ஏடாகூடம், இசகு பிசகில் கை தேர்ந்தவர்களை செயல் வீரர்கள் என்றும்; மானம் மரியதையிழந்து பேரம் செய்து பிழைக்க வந்தவர்களைப் போராளிகள் என்றும் விளம்பரம் செய்து பழக்கப்பட்டவர்கள் அல்லவா எதிரிகள்.  போராளி ஒருகாலும் பேமாளியாக மாட்டான்; கோமாளி ஒருகாலும் போராளியாக முடியாது.  அரிதாரம் கலையும் போது அல்லது கலைக்கப்படும் போது அடையாளர் காணப்படுவார்கள்.

ஒரு போராளி வார்த்தைகளை ஆளுமையோடு வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவனே தவிர,  வார்த்தைகள் தன்னை பேச அனுமதித்து, வாய்ச் சவடால், வாய்க்கொழுப்பு, வக்கனை பேசுபவனல்ல; சித்தாந்தவாதிகள் என்ற பெயரில் சித்த பிரமை கொண்டு உளறுவதையும், முற்றும் தெரிந்தவர்கள் என்ற போர்வையில் முழு மோசடி சொற்பட்டங்கள் பறக்கவிடுவதையும், செய்வதெல்லாம் சமூக துரோகம் தவிர வேறல்ல என தெரிந்தும், அதனை நியாயப்படுத்த வார்த்தை ஜாலமாடுவதையும் மலிவாகப் பார்க்க முடிகிறதல்லவா?

ஆனால், போராளி குறைவான பேச்சு, நிறைவான செயல்; தேவையற்று பேச்சே இல்லை. செயல், செயல், செயல் மட்டுமே என சமூகத்திற்கு உழைக்கும் பாட்டாளி; படைப்பாளி.

முழு சமூகமும் அவனை ஏற்றுக்கொண்டிருக்கிறதா என அவனுக்கு கவலையில்லை.  அப்படி ஏற்கும் காலம்வரை காத்திருக்க வேண்டிய கட்டாயமும் அவனுக்கு இல்லை.  கொண்ட ஈடுபாட்டில் தனக்கு லாபமா நஷ்டமா என கணக்கு பார்க்கவும் அவன் விரும்பவில்லை.  அவன் கொண்ட பார்வை ஒரே பார்வை; புதிய சமுதாயத்தை, தலைகீழ் மாற்றம் கொண்ட சமூகத்தை, பேதமற்ற சமூகத்தை உருவாக்குவது.  அதில் மரணம் என்றால் அவனுக்கு மகிழ்வே.  காரணம் அவனை தொடர்ந்து வரும் போராளிகள் அவனது சமாதி மீது காலூன்றி நிற்க, தளமாகிவிட்டானல்லவா?

அவனுக்கு பயமில்லை; ஓய்வில்லை; மூப்பில்லை; சாவில்லை; இந்த இல்லாமைகளை இல்லாததாக்கிக் கொண்டவனல்லவா போராளி; எப்படி?
எதிர்பார்த்தே ஆயத்தமாய் செயலில் இறங்குகிறான்; எனவே அதனை எதிர்நோக்கும் போது அச்சமில்லை; வாழ்வையே போராட்டமாக்கிக் கொண்டவன்.  போராட்ட மாற்றத்தில் அயர்வைக் களைந்து விடுகிறான்.  இளசாயிருந்தவன் பட்டறிவால் இளமை பெறுகிறான்; உடலால் முதமையடைந்தாலும் உள்ளத்தால் முதிர்ச்சி பெறுகிறான்; அவனுக்கு வயதென்ன குறுக்கீடு?  உயிர் வாழும்போது வரலாறு படைக்கின்றான்.  உயிர் போனப்பின் வரலாற்றில் வாழ்கிறான் அவனுக்கு ஏது மரணம்?
போராளி நிராயுத பாணியல்ல; சிந்தனை எனும் கூர்மையான ஆயுதத்தோடும், செயல் என்ற உடலோடு ஒட்டிவிட்ட கவசத்தோடும், புரட்சி அமைப்பு என்ற எதிரிகளும் துரோகிகளும் எண்ணிக்கூட பார்க்க முடியாத அரனோடும் அய்க்கியம் கொண்டவனல்லவா போராளி.
அமைப்பு என்றவுடன், ஆதாயம் தேட, எத்திப் பிழைக்க, ஏமாற்றிச் சுரண்ட, பணம் பட்டம் பதவி என்ற முதலீட்டில் சூதாட்டம் நடத்த, சமூக விரோத, துரோகக் காரியங்களுக்கு போர்வையாக்கிக் கொள்ள போட்டுக் கொள்ளும் கூடாரம் அல்ல.

கருத்தால், செயலால், நோக்கத்தால், உணர்வால் ஒன்றிவிட்ட போராளிகளால் உறுதிசெய்யப்பட்டு, அப்போராளிகளுக்கு உத்திரவாதம் அளிக்கும் உயிர்த் துடிப்புள்ள முகாமே அப்புரட்சியமைப்பு.  பண்பு மாற்றம் பெற்ற பாசறையே அது.

தெளிவான சித்தாந்தம்; வலிவான இலட்சியம்; வளமான கொள்கை; பலமான அமைப்பு; தளமாக மக்கள்; களம் காண சகாக்கள்; இம் மொத்தத்தின் கூடடு சக்தியை, ஆற்றலை, திறனை எது கொண்டு அளக்க வேண்டும்? அளக்க முடியும்?

No comments:

Post a Comment