Tuesday, January 18, 2011

புரியாத புதிரல்ல சித்தாந்தம்

புரியாத புதிரல்ல சித்தாந்தம்
இணைமிகு தோழா!

 சித்தாந்தம் என்பது பற்றி சென்ற கடிதத்தில் கொஞ்சம் தொட்டோம்.  இப்போதும் அது பற்றிய ஒரு குறிப்பை அறிந்து கொள்ள முயற்சிப்போம்.
 சித்தாந்தங்கள் பற்றி முழுதும் அறிந்த, அறிய முயன்ற அல்லது தொட்டுப் பார்த்த தொட்டுவிட்ட அல்லது ஆய்ந்த விளக்கமறிந்தவனாக நான் இல்லை.

 அறிய முடியாதது எதுவுமில்லை.  ஆனால் அறிய வேண்டியதோ ஏராளம் உண்டு என்ற சிந்தனையோட்டம் என்னை உந்தியதால், சித்தாந்தங்கள் பற்றியறியவும் அது பொருந்தும் என்ற துணிவுதான் அதுபற்றி கொஞ்சம் சொல்லத் தூண்டுகிறது.  நீங்களும் அதுபற்றிச் சுயமாக சிந்தியுங்கள்.  சூழலில் ஊன்றி நின்று அறிந்தவற்றை வைத்துக் கொண்டும் சிந்தியுங்கள்.  நீங்கள் படித்த, பட்ட, கற்ற, ஆய்ந்த நிலைகளிலிருந்தும் சிந்தியுங்கள்.
சித்தாந்தம் என்பதைப் பற்றிச் சொல்லுகிறவர்கள், அது ஏதோ புரியாத, புரிந்துக்கொள்ள முடியாத, மதிநுட்பம் தொழில் நுட்பமுள்ளவர்களால் மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய புதிராகக் கூறுவதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம்.  அதனை விளக்கப் பயன்படுத்துகிற வார்த்தைகளும் ஒரு திட்டவட்டமான இலக்கண வரையரையோடு கூடியவை என்பதை விளக்கிவிட்டுக் கூறாமல் விளக்கப் பயன்படுத்திய வார்த்தைகளுக்கு குயுக்தியான வியாக்யானம் கூற முற்படுவது, பார்க்கிறவர்களுக்கும், கேட்கிறவர்களுக்கும் ஒரு சமயம் மலைப்பைத் தட்டிவிடுகிறதோ என நினைக்க வேண்டியுள்ளது.

எப்படியோ நடக்கட்டும், நாம் முடிந்த அளவு முனைவோம்.  முயல்வோம்.  சித்தாந்தம் என்பது மூளை இயக்கத்தின் விளைவு.  இவ்விளைவின் பயனே அறிவு.  ஒன்றை அறிந்து கொள்ளக்கூடிய பார்வைத் தொடக்கம்; ஒன்றை கண்டறிந்து கொள்ள சேகரிக்கப்படும் விடை தொகுப்புகளுக்கான வினா தொடுப்பு; சிந்தனைக்கும் அறிதலுக்குமான உந்து சக்தி; செயலுக்கான வழிகாட்டி; செயல் முடித்தோரின் ஆய்ந்தறிவால் செழுமை பெறும்.  வழி நடத்தி, அது சரியான, முறையான, ஒழுங்கான வழியில் அடையாளப்படுத்தப் படவில்லை என்றால் அது செழுமைப் படுத்தப்படுவதற்கு மாறாக சேதப்படுத்தப் படுவதாகவும் முடிந்து விடும் அபாயம் உண்டு.  அவ்வளவு தான்.

இதுகூட ஏதோ சுற்றி வளைப்பது போல தோன்றக்கூடும்.  அறிவு என்பது மூளை இயக்கத்தின் விளைபயன்.  விஞ்ஞானம் என்பது ஒழுங்கு படுத்தப்பட்ட, முறைப் படுத்தப்பட்ட அறிவு.  சித்தாந்தம் அல்லது தத்துவம் என்பது உண்மைக் கண்டறிவு - உண்மையைக் கண்ட அறிவு.  உண்மை ஆய்ந்தறிவு - உண்மையை ஆய்ந்த அறிவு, கண்டறிவு ருசுப்பித்தலோடு கூடிய அறிவு.  ஆய்ந்தறிவு விளக்கத்தோடு கூடிய அறிவு.  செயலறிவு பரிசோதனையோடும் அனுபவத்தோடும் கூடிய அறிவு.  இம்மூன்றின் மொத்தமே பகுத்தறிவு.  சீரமைக்கப்பட்ட பகுத்தறிவால் கருத்துருவாக்கப்பட்ட வெளிப்பாடே செயலுக்கான கோட்பாடு.  இவ்வறிவு வடிவங்களுக்கெல்லாம் அடிப்படையாகி இவ்வடிவங்களிலெல்லாம் இழையோட்டம் கொண்டு பிரகாசிக்கும் உண்மை என்கிற புறநிலை எதார்த்தங்களின் சரியான புரிதலே சித்தாந்தம்.

செயல்வடிவிலான போராட்டம் செயலறிவான பட்டறிவால் கருத்து வடிவிலான சித்தாந்தத்தை உறுதிப்படுத்தி, தூக்கிப்பிடித்து வழிகாட்டியாகவும், வழி நடத்தியாகவும் கொண்டு முன்னோக்கிப் பயனிப்பது தான், சித்தாந்தத்திற்கும் செயலுக்குமான பரஸ்பரம் - பாச நேசப்பிணைப்பு - இறுக்க நெறுக்க உறவு.  புரிகிறதா தோழா?
இந்த சித்தாந்தங்களைப் பற்றி இவ்வளவு பேசுகிறோமே இந்த சித்தாந்தம் நமக்கு அவசியம் தானா?  ஆம், அறிந்திட வேண்டிய அவசியத்தால் அறியப்பட்டது தானே சித்தாந்தம்.  அறியக்கூடிய அவயவங்கள், அறிய உதவு சாதனங்கள், அறியக்கூடிய அறிவு வளர்ச்சி, அறியக் கூடிய அக்கரை கொண்ட உழைப்பு ஆகியவை மனிதனிடமிருந்தாலும், இவற்றை எல்லாம் அறியவும், இன்னும் அறிய வேண்டியுள்ள ஏராளமானவற்றை அறியவும், மனித சமூகம் இயற்கையை எதிர்த்து போரிடவும், வெல்லவும் தனது ஆளுமைக்குட்படுத்தவும் அறிவது என்பது தவிர்க்கப்பட முடியாதிருப்பதால் அறிதலுக்கான பேராயுதம் அவசியமல்லவா?

இந்த அவசியம் கூட, மனித சமூகம் தனது தேவைப் பூர்த்திக்கும், தேவையானவற்றை உற்பத்திச் செய்து கொள்ளுவதற்கும், உற்பத்தி உழைப்பை ஒழுங்குபடுத்திக் கொள்ளுவதற்கும், முன்னோக்கிய வாழ்க்கைப் பயணத்திற்கும் , மொத்தத்தில் மனித சமூகம் பாதுகாப்போடு வாழ்வதற்கு, இயற்கையை எதிர்த்து போராடித்தானே ஆக வேண்டும்.  உன்னையறிந்து, உனக்கு வேண்டியதெதும் எனக்கு அப்பால் இல்லை என்றுணர்ந்து, அனைத்தையும் உள்ளடக்கியுள்ள என்னையறிந்து, முடிந்தால் உனக்கு வேண்டியதை என்னிடமிருந்து எடுத்து வளர்ந்து கொள் என இயற்கை விடுக்கும் சவாலை புரிந்து, செயல்பட மனித சமூகம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியமல்லவா?  சித்தாந்தத்தின் அவசியம் புரிகிறதா?
சித்தாந்தம் என்பது மனித அறிவுக்கு ஊற்றுக்கண்; மனித வாழ்விற்கு உந்து சக்தி; மனித உறவுக்கு ஊட்டச்சத்து; மனித உழைப்புக்கு திசைக்காட்டி; மனித பாதுகாப்புக்கு காவல் கவசம்; யார்? ஏன்? என்ன? - எது? எங்கே? எப்போது? எப்படி? எதற்கு? எவ்வளவு? என்ற தேடல்களுக்கான விடைமானி.  அதனிடம் தப்பிக்க முடியாமல் சிக்கிடும் உண்மைகளை வெளிப்படுத்தும் ஒளி ஒலி வீச்சு.

இயற்கை, சமூகம், சிந்தனை இவற்றை உள்ளடக்கியது பேரண்டம்; பேரண்டத்திற்கு அப்பால் எதுவுமில்லை; இப்பேரண்டத்தையும், இது உள்ளடக்கியுள்ள ஒவ்வொன்றையும், அதனில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுப் போக்குகளையும், அதனில் நடைபெறும் போராட்டங்களின் தன்மைகளையும், அதன் வளர்ச்சிப் போக்கையும் அறிந்து, புரிந்து விளக்குவதற்கு பேராயுதம் சித்தாந்தமே.  பல்வேறு துறை விஞ்ஞானங்களுக்கும் விஞ்ஞானமாக விளங்குவது சித்தாந்தமே.
உண்மை ஒன்றே என்பது போல, உண்மை உணர்வுக்குப்புறம்பே இயங்கிக் கொண்டும் மாறிக் கொண்டும் இருக்கும் நித்தியமான ஒன்று என்பது போல அந்த உண்மையைக் கண்டறியும் சித்தாந்தமும் ஒன்றே.  இதில் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டியதில்லை.  உண்மையைக் கண்டறிந்து, புரிந்து விளக்குவதற்கு மாறாக, பொய்யை உண்மையாக சித்தரிப்பதும், அதனை நியாயப்படுத்துவதும் சித்தாந்தமல்ல; உண்மைக்கு விரோதமாக அப்பட்டமான பொய்யை உண்மையாக அடையாளப்படுத்த அடம்பிடிப்பது வேதாந்தம்.  அதுவும் ஒரு சிந்தனைப் போக்கு என்ற பார்வையால் வேதாந்தமாகவும், சித்தாந்தமாகவும் சித்தரிக்கப்படுவதால் ஏற்படும் சிக்கல்களை சித்தாந்தவாதிகளாக கூறப்படுவர்கள் புரிந்து கொள்ளாமல் அமுத்தப்படுத்து கிறார்களே?  ஆனால் அதற்கும் காரணம் இருக்கவேச் செய்கிறது; பிரிதொரு நேரத்தில் பார்ப்போம்.

சித்தாந்தம் ருசுப்பித்தலுக்கான விஞ்ஞான சாட்சியங்களோடு இயங்குகிறது.  அது விளக்குவதற்காக தர்க்க நியாயங்களோடு இயங்குகிறது.  ஆனால் வேதாந்தம், அறியாமை வழி வந்த அச்சம், மடமையாலும் முழு கற்பனை யூகங்களாலும், வார்த்தை ஜால மாய் மாலங்களாலும் தலை காட்டுகிறது.  நிரூபனங்களுக்கும் தர்க்க நியாயங்களுக்கும் இடமில்லாமல் முழுக்க முழுக்க மூட நம்பிக்கையொன்றேயே மூலதனமாக்கிக் கொண்டு வியாபாரம் நடத்துவது வேதாந்தம்.  சித்தாந்தம் செயலக்கு வழிகாட்டி என்றால் வேதாந்தம் வெறும் திண்ணைப் பேச்சே. செயலின் முடமாக்கி.

சித்தாந்தமும் வேதாந்தமும் இருவேறுபட்ட எதிரும், புதிருமான சிந்தனைப் போக்குகள்.  ஒன்றை ஒன்று இறுதி வெற்றி கொள்ள ஜீவ மரண போராட்டங்களை நடத்துகின்றன.  இறுதியில் சித்தாந்தம் வெல்லும்.  வேதாந்தம் மடிந்து மறைந்தொழியும்.  சித்தாந்தம் தன்னை மேலும் மேலும் செழுமைப்படுத்திக் கொண்டு உயர்ந்து முன்னேறிச் செல்லும்.
இன்றைய காலகட்டத்தில் சித்தாந்தத்திற்கும், வேதாந்தத்திற்கும் இடையில் ஊசலாடும் எண்ணற்ற சிந்தனைப் போக்குகள் இருக்கின்றன.  இவையெல்லாம் நாளாவட்டத்தில் காலப்போக்கில், முட்டி மோதி, தட்டுத் தடுமாறி தாக்குப்பிடிக்க முடியாமல் மறைந்தோ அல்லது மேற்சொன்ன இரண்டில் ஒன்றில் இணைந்தோ, கரைந்தோ போய்விடும், நிலையற்ற சிந்தனைப் போக்குகளேயாகும்.

பேரண்டத்தைப் புரிந்து, விளக்குவது தானே சித்தாந்தம், இயற்கை, சமூகம், சிந்தனையை உள்ளடக்கியதுதானே பேரண்டம்.  இயற்கையின் தோற்றம், நிகழ்வு, வளர்ச்சிப் போக்குகளை விளக்குவதற்கு மூல முதல் ‘பொருள் அல்லது இருப்பு’ என்கிறது சித்தாந்தம்; ஆனால் வேதாந்தமோ ‘ஆண்டவன்’ என்கிறது.

சமூகத்தின் தோற்றம் நிகழ்வு வளர்ச்சிப் போக்குகளை விளக்குவதற்கு மூல முதல் ‘பொருளாதாரம் அல்லது பொருள் உற்பத்தி’ என்கிறது சித்தாந்தம்.  ஆனால் ‘ஆத்மா’ என்கிறது வேதாந்தம்.

சிந்தனையின் தோற்றம் நிகழ்வு வளர்ச்சிப் போக்குகளை விளக்குவதற்கு மூல முதல் மூளை அல்லது புறநிலை எதார்த்தம் என்கிறது சித்தாந்தம்; ஆனால் ‘மனம் என்கிற உணர்வு’ என்கிறது வேதாந்தம்.
சுருக்கமாகச் சொன்னால் பேரண்டத்தை புரிந்து விளக்கவும், வாழ்க்கை போராட்டத்திற்கு வழிகாட்டவும், சித்தாந்தத்தின் பிறப்பு பொருள் என்ற இருப்பில் இருந்தா?  அல்லது ஆண்டவன் என்ற உணர்விலிருந்தா?  என்பது தான் விடை காணப்பட வேண்டிய வினா?

இந்த வினாவிற்கு விடையும், விடையளிக்கப்படுவதையும் அதற்கு பின்னர் நிற்கக்கூடிய சக்திகளையும், சற்று ஆழமாக ஆனால் சுலபமாக சற்று விரிவாக ஆனால் தெளிவாக பார்க்க வேண்டுமல்லவா?
நவம்பர் 2003-தன்மானம்

No comments:

Post a Comment