Monday, January 17, 2011

அந்தம் -அந்திமமல்ல!

அந்தம் ‡ அந்திமமல்ல!

இணைமிகு தோழா!
சென்ற கடிதத்தில் இருப்பு என்ற படைப்பாளியை கொஞ்சம் பார்த்தோம். இக்கடிதத்தில்  ஆதியில் தோன்றி அந்தத்தில் தொடரும் சமூகம் பற்றி மிகச் சிறிது பார்ப்போமா? ஆம். அவசியம் அறிந்திட வேண்டியது தான்.
 ஆதியில் படைக்கப்படா படைப்பாளி, படைப்பாளியைப் படைக்க, படைப்பாளிகள் திரள் ஆதி சமுகத்தைப் படைக்க, நாளாவட்டத்தில் பறிப்பாளிகள் தோன்றி சமூகக் கெடுப்பாளர்களாக, கால போக்கில் படைப்பாளிகளுக்கும் பறிப்பாளிக்களுக்கும் தொடர்ந்த போர். அந்தமாக பறிப்பாளிகளை ஆழப் புதைத்து, படைப்பாளிகளின் அரங்கமாக படைப்புச் சமூகம் வடிவம் கொள்ளும்.

அது தான், இன்றையச் சமூகத்தில் வாழும் நாம், எதிர்காலத்தில் சமைத்திட விரும்பும் இலட்சிய சமுகம். வரலாற்றில் நமது சந்ததி நிர்மானித்திடும் கனவுச் சமூகம். எதிர்காலத்தில் நமது தலைமுறைத் தொடர்ச்சி ஏற்று,காத்து, உயர்த்தி, தொடர்ந்திடும் எதார்த்த சமூகம்.
ஆதியில் மனிதன் தோன்றினான். வாழ்க்கைப் போராட்டத்தில் தோன்றி வாழ்வுப் போராட்டத்தில் தொடர்ந்தான். மானத்தோடு வாழ்ந்தான். மூளை என்ற உறுப்பைப் பெற்று மனிதனானான். அறிதல், தெரிதல், தெளிதல், புரிதல், விளக்கல் என்ற அறிவின் படிநிலைகளைப் பெற்றிருக்கவில்லை. அதனை அய்ம்புலன்களறிவால் மட்டுமின்றி, பழக்க அறிவு, பட்டறிவு, படிப்பறிவு, பரிசோதனையறிவு, பகுத்தறிவு ஆகியவற்றின் மொத்தத்தால் தானே அப் படிநிலைகளை இணைத்திட முடியும். அதற்கு  மூளையின் விளைவான சிந்தனை என்பது தான் நமக்குக் கிடைத்த மிகப்பெரும் ஆயுதம்.

எனவே ஆதிமனிதனுக்கிருந்த அறியாமை அவனுக்கு அச்சத்தை ஏற்படுத்திற்று. அந்த அச்சத்தால் ஒன்று(ம்)பட்டான். அதீத கற்பனையும் கொண்டான். காரணத்தைக் காணமுடியாதக் கற்பனை, கடவுளைக் கற்பித்து விட்டது. காணப்பட முடியாத கடவுளை நம்பி மடமையால் விளைந்த மூட நம்பிக்கை மூடபழக்க வழக்கங்களில் மூழ்கிப் போனான்.
ஆனாலும் வாழ விரும்பினான். உழைப்பை மூலதனமாய் கொண்டான். உழைப்பில் கண்ட உபரியை சுருட்ட நினைத்தக் கூட்டம் மூடத்தனத்தைப் பரப்பிவிட்டது. மனிதத் திரளின் மானத்தைப் பறித்தனர். கடமை, உரிமை, உடமை, மரியாதை சமத்துவம் ஆகியவற்றின் மொத்தமான மானத்தைப் பறித்ததன் மூலம் சமூகம் பேதப்பட்டது. பிளவுபட்டது.
பேதப்பட்ட சமூகத்தில் வாழும் அடிமைப்படுத்தப்பட்ட பாட்டாளி சமைத்திட விரும்பும் சமுதாயம் தான் மனிதமானச் சமூகம். மானத்தோடு தோன்றி வாழ்ந்த மனிதன், சுக போகிகளின் சூது, சூழ்ச்சி சுருட்டலால் மானம் பறிக்கப்பட்டு, வரலாற்றுப் போக்கில் மான உணர்வு பெற்று, எழுச்சியுற்று, புரட்சியின் மூலம் சதிகாரர்களை சவக்குழிக்கனுப்பி பரஸ்பர பிணைப்பிலான மனிதமானச் சமுகத்தைப் படைக்கிறான்.
இயற்கையால் படைக்கப்பட்ட படைப்பாளி மனிதன். சமூகத்தைப் படைத்தான். அஞ்ஞானத்தால் பேதப்பட்டச் சமூகம் அதே படைப்பாளி மனிதனால் விஞ்ஞான ஆயுதம் தரிக்கப்பட்டப் படைப்பாளிச் சமூகமாக புதுவடிவம் பெறுகிறது என்பது எதார்த்தத்தோடு ஒட்டிய தொலைநோக்குக் காட்சியே. அவ்விலக்கை நோக்கிதான் நமது இலட்சிய பயணம் தொடர்கிறது. அந்தப் பயண முடிவில்இலட்சியவாதிகள் கனவில் கண்டு நனவாக்கத் துடிக்கும் மனிதமானச் சமூகம் எது என்பது பற்றி மிக மிகச் சுருக்கமாகவே வரிசைப்படுத்தி விடுகிறேன்.

கடவுள் சிந்தனையே இல்லாத - தன்னம்பிக்கை, தன்னுறுதி, தன்னூக்கம் தலைதூக்கிய,
மதங்களில்லாத -மனித நேயம் மக்களின் வாழ்நெறியாகிவிட்ட,
ஜாதிகளில்லாத-சகோதரத்துவப் பிணைப்போடு ஒன்றிவிட்ட
வருணங்களில்லாத-தனியயாருவரும் சமூகத்தோடு சங்கமித்துவிட்ட,
வர்க்கங்களில்லாத-உழைப்பு சமூகத்தன்மை பெற்றுவிட்ட,
உயர்வு தாழ்வில்லாத -ஒருவர் எல்லோருக்குமாக எல்லோரும் ஒருவருக்காக என்றாகி விட்ட,
மூடநம்பிக்கைகளில்லாத-பகுத்தறிவும் பட்டறிவும் செழுமைப்பட்டுக் கொண்டேயிருக்கிற,
மூடப்பழக்க வழக்கங்களில்லாத- விஞ்ஞானம் வாழ்க்கையில் நடைமுறையாக இணைந்துவிட்ட,
பாலியல் பேதமற்ற- ஆண் பெண் சம உரிமை சம, அந்தஸ்து பெற்று சமூக அங்கமாகிவிட்ட,
அடிமைத்தனமேயில்லாத -சமத்துவமும் சுதந்திரமும் சமூக வாழ்முறையாகிவிட்ட,
நகர, கிராம வேறுபாடில்லாத - விஞ்ஞான பயன்பாட்டால் உலகமே சுருங்கிவிட்ட,
மூளை உடல் உழைப்பில் பேதமற்ற‡ கூட்டுறவு, கூட்டுழைப்பு கூட்டுமுடிவு சமூக நெறிமுறையாகி விட்ட,
உழைப்பு, பிழைப்பாயில்லாத - திறனுக்கு பங்களிப்பும் தேவைக்கு பங்கெடுப்பும் பழக்கமாகி விட்ட,
குற்றங்குறைகளில்லாத - பட்டறிவில் பாடம் கற்றுத் திட்டமிட்ட செயல்முறை நிலை பெற்றுவிட்ட,
குடும்பம் கோத்திரமில்லாத -முதியோர், குழந்தைகள் சமூக பாதுகாப்பு பெற்ற,
அரசு இல்லாத-மாறிக் கொண்டிருக்கும் மரபும் நியதியும் வழிகாட்டு முறையாகிவிட்ட,
அரசு எந்திரங்களில்லாத- வேலைப் பிரிவினையால் சமூகக் கடமைகள் நிறைவேற்றப்படக் கூடிய,
நான் என்ற தன்னகங்காரமில்லாத -நாம் என்ற உணர்வே மேலோங்கித் தழைத்த,
தேவைப் பூர்த்தி முற்றுப் பெறாத-இயற்கை எதிர் போராட்டம் செழுமைப்பட்டுக் கொண்டேயிருக்கிற,
அகராதி தேவை இல்லாத-அனைத்தும் வாழ்க்கை நடைமுறையாகிக் கொண்டிருக்கிற,
அறிய முடியாதது எதுவுமில்லாத - அறிய வேண்டியதோ ஏராளமிருக்கிற,
செய்யமுடியாதது எதுவுமில்லாத -செய்ய வேண்டியதோ நிறையவிருக்கிற,
எவ்விதச் சுரண்டலுமில்லாத-அனைத்தும் அனைவருக்குமொன்றாகிவிட்ட,
இல்லாமை, இயலாமையில்லாத -எல்லாமே, எல்லோருமே, எல்லோருக்மே என்ற போராட்டம் முற்றுப்பெறாத - இயற்கையை வென்று, கட்டுப்படுத்தி, கடமையற்றிக்கொண்டேயிருக்கிற,
உயர்ந்த - சிறந்த -உன்னதச் சமுதாயம். இதுதான் சமைக்கப்பட வேண்டிய இலட்சியச் சமூகம்.

தோழா! ஏன் ? என்னவாயிற்று? மலைப்புத் தட்டிவிட்டதா? மயக்கம் கண்ணை மறைக்கிறதா? சந்தேகங்கள் சல்லாபமிடுகிறதா? கிரக்கம் உறக்கமூட்டுகிறதா? நடக்கட்டும். சற்று சிந்தியுங்கள். சிந்தனையின் பிறப்பிடம் சந்தேகங்களின் சவக்கிடங்கு. மலைப்பின்  மரணக் குழி. கிரக்கத்தை எரிக்குமிடம்.

மேலே சொன்ன எதார்த்தத்தோடு ஒட்டிய எதிர்காலப் பார்வையை ஏதோ எவருமே எண்ணத் துணியாத கற்பனைகளின் கப்சா எனவும், சொர்க்கத்தில் ஆத்ம சுகம் காணும் தெய்வ ஞானம் விட்டு, மாயா உலகில் பேயாய் அலையும் மரணப் புலம்பல் என்றும் கச்சை வரிந்து கட்டிக் கொண்டு கொச்சைப்டுத்துவோரை அடையாளம் காணத் தவறிவிடாதீர்கள். அவர்கள் தங்களின் சவப்பெட்டிக்கு காத்துக் கிடப்பவர்கள்.

நாம் வாழும் காலமோ உண்மைக்கு உரமூட்டும் காலம். ஒழுக்கம்  உணர்வூட்டும் நேரம். உறுதி பலமூட்டும் வேளை. துணிவு களம் அமைக்கும் சமயம். தொண்டு தூய்மை கொண்டக் கட்டம். இவைதானே இலட்சிய சமூகம் காண, இலட்சியப் பயணம் மேற்கொண்டுள்ள நமது நிலை .

இனிய தோழா! இந்த இலட்சயப் பயணத்தைத் தடுப்பதில், தகர்ப்பதில், சுரண்டும் சுகபோகிகள் குழு, ஆதிக்கம் செய்யும் ஆளும் கும்பல், அடிமையையும் மடமையையும் அப்படியே காக்கும் அதிகாரக் கூட்டம் போன்றவை முண்டியடித்துக் கொண்டு முனைப்பாக நிற்பதை உன்னால் காண முடிகிறதா?

ஏழை எளியவர்களை, ஏமாந்த பாமரர்களை, உழைக்கும் பாட்டாளிகளை உருகுலைந்து நிற்கும் பெருந்திரளை, இலட்சியவாதிகளை, இன மக்களை, இளைஞர்களை, அந்த எதிரிகள் கூட்டம், என்ன செய்கிறது என உள்நுழைந்து உன்னிப்பாகக் கவனி. உறுதியாக நடத்திடு பவனி. உருவெடுக்கிற புரட்சிப் படைகளமிறங்கும் பணி. பனிமூட்டம் குலைத்திடும் அந்தப் பணிக் கூட்டம்.

எதிரிகளிடமோ ஏராளமான ஆயுதங்கள். அனைவருக்கும் மேலாக கருதிடும் அரசு. அடக்கி ஒடுக்கிட அடக்குமுறைச் சட்டங்கள். தாக்கி நசுக்கிட ஆயுதப் பயிற்சிப் பெற்ற பட்டாளம். ஆள் மடக்கி அசத்திட அதிகாரிகளிள் ஜாலம். மனதைக் குழப்பி மயக்கமூட்டி மதப்பிரச்சாரங்கள். நாக்கில் எச்சிலூட்டி நப்பாசைப்படுத்திட நாட்டு நலப்பணி அறிவிப்புகள். சொந்த பந்த பகை மூட்டி சூட்சிகளை அரங்கேற்ற சுய உதவிக்குழுக்கள். கூட்டுக் கொள்ளைகளில் போட்டி போட ஓட்டு வியாபாரங்கள் . இரத்தத்தின் இரத்தமே என்ற சொந்தத்திலும் உயிரினும் மேலான உடன்பிறப்புக்களே என்ற பந்தத்திலும் தடி கொண்டு தாக்கும் தாதா கூட்ட வளர்ப்பு. இப்படி சொல்லி மாளாது.

இத்தனையும் ஏன்? இலட்சியப் பயணத்தின் விரோதிகள். அது தொடர்ந்து விட்டால் அதற்குத் துணிந்து விட்டால், தங்கள் சமாதி சமீபத்திருப்பதை கண்டு கொண்டவர்கள், அப்பயணத்தை தகர்ப்பதில் தான் தங்கள் மூச்சோட்டமிருப்பதை தெரிந்து கொண்டவர்கள் வேறென்னதான் செய்வார்கள்?

இதற்கெல்லாம் மக்கள் பலியாகலாமா? இரையாக விடலாமா? இதனை உணர்த்தி, ஊக்கம் தந்து, உத்வேகப்படுத்தி, எழுச்சியூட்டி, களம் இறக்குவது தானே உனக்கு சமூகம் தந்த வேலை. வேலையறிந்து வினைபுரிவதுதானே முத்திரையிடுவது என்று பெயர். அப்படி முத்திரையிடாது நித்திரை கொண்டால் செத்த பிணம் தானே? அது நடக்குமா‡பேசுமா‡ சிரிக்குமா?
ஒன்றை எண்ணிப்பார். மானம் பறிப்பது ஈனத் தொழில், மானம் பறிக்கப்பட்டவன் அதை மீட்காதிருப்பது ஈன வாழ்வு. அதனை மீட்பதில் இழப்பது மான வரலாற்று வாழ்வு. அதனை மீட்டிட வாழ்வது மான போராட்ட வாழ்வு. இலட்சிய சமூக வாழ்வை அடைவது மனிதமான வாழ்வு. அவ்வாழ்வில் பிணைந்த வாழ்வே தன்மான வாழ்வு. தன்மான வாழ்வே தலையாய வாழ்வு.

அன்புத்தோழா! கடந்த கால வரலாற்றைக் கற்றறிந்து, நிர்ணயிப்புக்களைச் செய்து கொண்டு, அவ்வெளிச்சத்தில் நிகழ்கால வரையறுப்புக்களை பட்டறிவின் வழிகாட்டியாக்கி, அவ்வனுபவத்தில் எதிர்கால எதிர்பார்ப்புகளைக் கணிப்புகளாகக் கொண்டு முன் செல்லுவதே இலட்சிய பயணம். காலம் கடந்து கண்விழிப்போரும், கண்ணை மூடிக் காலம் கடத்துவோரும் அல்ல, காலமறிந்து காரியமாற்றிட வேண்டிய உன்னைப் போன்றோர் எதிர் கால சமூகத்தைக் காண்பதில் கணிப்பதில், கணக்கிடுவதில் தடையயன்ன இருக்க முடியும்?

கடந்த காலத்தைக் காண மறுத்து, நிகழ்காலத்தையே நிரந்தர காலமாக சொந்தமாடி, சிக்குண்டு, எதிர்காலமே இல்லை என்று கிடப்பவர்கள், இருந்த இடத்தை விட்டு எடுத்தடி வைக்க அச்சப்பட்டு, தடுமாறி  தடம் புரண்டு தறிகெட்டலையைத்தானே செய்வார்கள்? அப்படிப்பட்டவர்கள் ஆத்ம விசாரணை, ஆண்டவன் சோதனை, அடுத்த உலக பிரார்த்தனையோடு கிடக்கட்டும். அது நம்மால் முடியுமா?

கடந்த காலத்தையும் எதிர்காலத்தையும் இமை நொடியில் இணைக்கின்ற நிகழ்காலம் நீண்ட காலமுமல்ல. நிரந்தர காலமுமல்ல. நிலை எடுத்து வினையாற்ற கிடைத்துள்ள குறுகிய கால வாய்ப்பே நிகழ்காலம் என்பதைப் புரிந்து  கொண்டால் நேரம் கடத்த நேரமுண்டா? காலம் கடத்தினால் காலம் கடந்தராவார். காலத்தால் அப்புறப்படுத்தப் படுவர். வரலாற்றில் முத்திரை பதிக்க முடியாமல் முகவரி இழந்து நிற்பர். நீயும் உன்னைப் போன்றவர்களும் அப்படி இருக்க முடியுமா? ஒருகாலும் முடியாது.

அன்புத் தோழா! ஆதியில் இல்லாதது, அஸ்திவாரமில்லாதது, அவசியமில்லாது, இறுதியில் இருப்பதற்கும் தொடர்வதற்கும் என்ன நியாயமிருக்கிறது? எதிர்காலக்குரு கடந்த காலத்தில் இருப்பதும், கடந்த கால அடையாளங்கள் எதிர்காலத்தில் தொடர்வதும் இயல்பே என்றாலும் இடையில் வந்தது, இடைநிலைப் பயன்பாடு மட்டும் கொண்டது. எதிர்காலத் தளமற்றது. இடையில் மறைவதிலே என்ன வியப்பிருக்கிறது? இந்த பாதை வழி சிந்தனையின் எதார்த்த எதிர்பார்ப்புதானே எதிர்காலம் சமைத்திடும் சமூகம் பற்றியது.

தொடக்க மனிதமான சமூகம், மனிதமான சமூகமாக முழுமை பெற்ற போது, ஆதி சமுகத்தில் இல்லாதது, இடையில் வந்தது, இறுதியில் மடிந்தது. ஆதியை முழுமையாக்க பாதியில் தோன்றி செழுமைப்பட்ட சில ஆதியின் மாற்றுரு இறுதியிலும் உறுதிப்பட்டுத் தொடர்ந்தது காலப்போக்கில், அவசியமற்றுப் போனவை மறைவதும், காலத்தில் அவசியமானவை தோன்றி வளர்வதும் தானே பரிணாமம் என்பது.
ஆதிச் சமுகத்தில் கடவுள் இல்லை. மதம் இல்லை. ஜாதி இல்லை. வருணமில்லை. வர்க்கமில்லை. பாலியல் பேதமில்லை. தனி குடும்பமில்லை. குல தெய்வமில்லை. அரசு இல்லை. அரசு எந்திரங்கள் இல்லை. உயர்வு தாழ்வு இல்லை. அடிமைத்தனம் இல்லை. நான் என்ற தன்னகங்காரம் இல்லை. சுரண்டல் இல்லை. இவை எல்லாம் இடையில் வந்தவை. இடையோடு மறைந்தொழிபவை. இறுதியில் இருக்க இயலாதவை.

இடையில் ஏன் இவைத் தோன்றின? சமூக வரலாற்று வளர்ச்சிப் போக்கில் பட்டறிவும் பரிசோதனையறிவும் பகுத்தாய்வால் இணைவு கொண்டு விஞ்ஞான அறிவும் ‡ ஆற்றலும் படைப்புகளும் வளர்ச்சியுறாத நிலையில் , அச்சம் அறியாமை,மடமை, யூகம் போன்றவை வாழ்க்கைச் சூழலில் வழிகாட்டியாகி, தன்னம்பிக்கை, தன்முயற்சி, தன்னூக்கம் வாழ்க்கைக்கு தேவை என்ற நிர்ப்பந்தத்தில் ஊசலாடித் துடித்த போது, இம் மூடநம்பிக்கைகளும் , மூட ப்பழக்க வழக்கங்களும் களையாகச் சேர்ந்தே வளர்ந்து தளைப்படுத்தி விட்டன. விஞ்ஞானம் சாட்சியமாகக் கட்டியம் கூறி களம் வந்த பின் , இடையில் தோன்றியவை இறுதியில் மறைய மரண சாசனம் எழுதப்பட்டது.

பாசமிகு தோழா! ஆதிமுதல் அந்தம் வரையிலான இச்சுருக்கோட்டத்தை, கனவுகள் மனிதப் படைப்பில் நனவாக்கப்படும் வரலாற்றுச் சாரத்தை உன் மனதின் ஒரு மூலையில் அழுத்தமாக பதியப் போடு. அது பாழடைந்து கிடைக்கும் சில பல புதிர்களையும் , புதையல்களையும் புரிந்து கொள்ள குத்துக் கோலாயிருக்குமல்லவா?

ஆனாலும் ஒன்று. ஆதியில் தொடங்கி அந்தம் வந்தவை அழிவின்றி  செழுமையில் தொடர்வது என்பதும் , பாதியில் வந்து பயனற்று போனவை அந்தம் வந்த பின் அந்திமம் அடைவதும் வரலாற்றுப் பதிவு என்பதை மட்டும் பார்க்கத் தவறிவிடாதே.
விடுமடல் -15 நன்றி:  தன்மானம்

No comments:

Post a Comment