புதிய சமூகத்தின் இரத்த சாட்சிகள் புரட்சியாளர்கள்
இணைமிகு தோழா!
மொட்டு பருவத்திலான ஒரு போராளியின் பரிணாமம்தாள் விரிந்து காட்சியாகி மலர்ந்து மனம் தந்து, காயகி மரபு காட்டி, கனியாகி ருசி தந்து, வித்தாகி விருத்தியின் தாயாகும் ஒரு புரட்சியாளனின் தோற்றம். புரட்சியாளன் என்றால் சரித்திரம் உயிர் பெற்றது என்று பொருள். வரலாறு தன்னியக்கம் பெற்றது என்ற அர்த்தம். அத்தகைய புரட்சியாளர்களைக் கொண்ட முகாம் ஒன்றும் அமைந்துவிட்டால், புரட்சியின் மகிமையையும், மகத்துவத்தையும் புரியாதவர்களுக்கும், புரிந்த புரட்டர்களுக்கும் புரட்சி வேடதாரிகளுக்கும் புரிய வைத்திடும்.
இன்றைக்கு ‘புரட்சி’ என்ற சொல், ஒரு அர்த்தமற்ற அகராதி வார்த்தையாகவும், மலிவாக கிடைத்திடும் கடைச்சரக்காகவும், தகுதியற்றவர்களுக்கெல்லாம் தரக்கூடிய இலவச பட்டமாகவும், யார் வேண்டுமானாலும் எடுத்து எக்கிலோ, கக்கிலோ, கொண்டையிலோ செருகி அழகு காட்டும் காகிதப் பூவாகவும் அசிங்கப் படுத்தப்படுவதை பார்க்க முடிகிறதல்லவா? கொடுமைதான்!
புரட்சி என்றால் என்ன? குறிப்பிட்ட நேர்மறையும், எதிர்மறையும் கொண்ட ஒரு வடிவம், தனது வளர்ச்சிப் போக்கில் அமைதியான இயல்பு அல்லது பரிமாண மாற்றங்களைக் கொண்ட பரிணாமம். அவசியமாகவே மற்றொரு குறிப்பிட்ட கட்டத்தில் அழித்தாக்கலுக்கான திடீர் வேகத்தோடு கூடிய பாய்ச்சலில் முடியும் பண்பு அல்லது அடிப்படை மாற்றம் ‘புரட்சி’ என்பதாகும்.
புரட்சிக்குப் பின்னான புதிய வடிவம், பழைய வடிவத்திலிருந்து முற்றாகத் துண்டித்துக் கொண்ட, முற்றாக மாறுபட்ட ஆனால் தனக்கே முற்றிலும் பொருத்தமான அகப்புறக் கட்டமைப்புக்களை கொண்டதாக அமைந்திடும். இவ்வடிப்படை மாறுதல் அழித்தாக்கலின் போது ஏற்பட்ட திடீர் பாய்ச்சல் வேகத்தின் பலனல்லவா? அது தானே புரட்சியின் மையம்?
இப் பேரண்டத்தில் எவ்வொன்றில், எத்துறையில் இப்புரட்சி நடந்தாலும் அந்த திடீர் பாய்ச்சல் வேகத்தை மையமாக கொண்டிருக்குமல்லவா? அமைதியாக நடைபெறுவது பரிணாமம். பாய்ச்சலில் முடிவது புரட்சி. இதுதானே? ஆனால் வீரவசனங்களை மேடைகளில் ஒப்புவிக்கும் அரசியல் நடிகர்கள் கூறுகிறார்களே ‘‘அமைதிப்புரட்சி’’ அதற்கு அர்த்தம் என்ன தோழா?
புரட்சிக்கு துணை நிற்க, துரிதப்படுத்த, உண்மையாக தன்னை முற்றிலும் ஒப்படைத்துக் கொண்டிருப்பவன் புரட்சியாளன். புரட்சியை சண்டை சச்சரவாக, தர்க்கம் தகராறாக, வம்பு தும்பாக, கலக்கம் கலகமாக சித்தரிக்கின்ற அரசியல் ஜோக்கர்கள்தான், புரட்சியாளர்களையும் வம்புக்காரர்களாக, சண்டைக்காரர்களாக, கலகக்காரர்களாக கொச்சைப்படுத்த துணிகிறார்கள். ஆனால் புரட்சி என்ற போர்வையை தாங்கள் மட்டும் போர்த்திக் கொள்ள கொஞ்சம் கூட வெட்கப்படுவதில்லை. மூச்சுக்கு முன்நூறு தடவை ‘‘ஆமாம்’’ போடும் ஜால்ராக்களுக்கும் அது அருவெறுப்பாகப்படுவதில்லை எப்படியோ தொலையட்டும். அனால் காலம் கவனித்துக் கொண்டிருக்கிறது. காரணம் காலம் கனிந்து கொண்டிருப்பதால்.
ஒன்றின் வளர்ச்சிப்பாதையில், பாய்ச்சல் கட்டம் புரட்சி என்கிற போது அது முற்போக்கு தன்மை பெற்றதாகவே அமைந்திடும் என்பது புரிகிறதல்லவா? வளர்ச்சி பின்னோக்கியும் செல்லாது, பாய்ச்சல் பதுங்கி, படுத்துறங்கவும் செய்யாது தோழா!
முற்போக்கு என்றால் காலம் கடந்தவைகளை எதிர்த்து அழித்து, காலத்தில் தன்னை தகவமைத்து, தன்னிறுத்தி காலத்தில் வரவேண்டியவைகளை கண்டறிந்து ஊக்கப்படுத்தும் போக்கு அல்லவா? ஆனால் காலங்கடந்தவைகளை ஆதரித்து காத்து காலத்தில் தடுமாறி, தறிகெட்டு, காலத்தில் வரவேண்டியவைகளை தடுத்து எதிர்க்கும் தன்மை தானே பிற்போக்கு இந்த அளவு கோலில் ஊன்றி நின்று பார்த்தால், முற்போக்கு தன்மை கொண்ட புரட்சிக்காரனையும், பிற்போக்குத் தன்மை கொண்ட புரட்டுக்காரனையும் அடையாளம் கண்டு கொள்ள முடியும். இத்தகைய புரட்டுக்காரர்கள் தங்களைத் தாங்களே புரட்சியாளர்களாக கொஞ்சம்கூட லஞ்ஜையின்றி கூறிக் கொள்வது, ஏனோ அவர்களுக்கு அசிங்கமாகப்படவில்லை; படாது, தனலிலே பிறந்து தன்னிழப்புக்குத் தயாராகி வரலாற்றில் ஜீவிக்கும் புரட்சிக்காரன் எங்கே! அசிங்கத்திலே பிறந்து, ஆபாசத்திலே வளர்ந்து, அழிவுக்கு அச்சாரம் பெற்றுவிட்ட புரட்டுக்காரன் எங்கே! அவர்களை விட்டுத் தள்ளு தோழா!
பேதப்பட்ட சமூகத்தில் வாழுகின்ற, அறிந்து, தெரிந்து, தெளிந்து, புரிந்து, விளக்கிடும் திறன் கொண்டிருப்பதாக சொல்பவர்கள் கூட பேதமற்ற சமூகத்தின் எதார்த்தங்களை ஜீரணிக்கும் பக்குவத்தை பெறமுடியாமல் தவிப்பதை நீ அறிவாயா? ஆனால் புரட்சியாளர்கள் அந்த அஜீரணக் கோளாறுக்கு ஆட்படுவதில்லை. ஏனெனில் அவர்கள் தெளிவான சித்தாந்தத்தை தெரிந்து கொண்டிருப்பவர்கள் மட்டுமல்ல, சித்தாந்த தெளிவுள்ளவர்களாகவும் இருப்பதால்; சித்தாந்தம் செயலுக்கு வழிகாட்டி என்று கருதுபவர்கள் மட்டுமல்ல அந்த வழிகாட்டலில் வழிநடத்தும் திறன் கொண்டவர்களாகவும் இருப்பதால், தெளிவான சித்தாந்தத்திற்கும் சித்தாந்த தெளிவிற்கும், வழிகாட்டலுக்கும் வழி நடத்தலுக்கும் இடையிலான நூலிழை வேறுபாட்டை புரிந்து கொண்டிருப்பவன் புரட்சியாளன். புரிகிறதா தோழா!
சித்தாந்தம் என்பது சிந்தனைத் தொகுப்பின் சாராம்சம். சிந்தனை மூளை இயக்கத்தின் விளைவு; அந்த மூளை இயக்கத்தின் விளைபயன் அறிவு; அறிவின் ஊற்றுக் கண் சிந்தனை; அறிவுக்கு உந்து சக்தி சித்தாந்தம்; உந்து சக்தியால் ஊக்கப்படுத்தப்பட்ட, ஈடுபாட்டால் உறுதி செய்யப்பட்ட அறிவு பகுத்தறிவு; அத்தகைய சித்தாந்தவாதி, பகுத்தறிவாளன் தான் புரட்சியாளன்.
சித்தாந்தம் செயலக்கு வழிகாட்டி என்பதை அறிந்த புரட்சியாளன், செயலற்ற சித்தாந்தம் ‘‘ஊருக்கு உபதேசம்’’ என்ற ஊதாரிகளுக்கும், சித்தாந்தமற்ற செயல் ‘‘ஊரையடித்து உலையில் போடும்’’ உன்மத்தார்களுக்கும் மட்டுமே உரித்தானது என்பதை உணர்ந்த புரட்சியாளன், அணுகிடும் போதும், வழி நடத்தும் போதும், சித்தாந்தத்தை வரிக்கு வரி, வார்த்தைக்கு வார்த்தை, இலக்கண வரையரையற்ற அகராதியை நம்பி, பிடித்துத் தொங்கிக் கொண்டிராமல், அதற்கு இன்றைய நீதிபதிகள் பாணி விளக்கங்களை தர முந்திக் கொண்டிராமல், நிலவுகின்ற சூழலைப் புரிந்து அதில் சித்தாந்தத்தைப் பொருத்தி உருவாக்கிடும் கோட்பாடுகளாலும் அக்கோட்பாட்டு வழி செயல்களாலும் சித்தாந்தத்தை செழுமைப்படுத்தி, வழிநடத்தும் வகையறிந்தவனாயிருக்கிறான்.
சித்தாந்தம் ஏன் தேவைப்படுகிறது? தேவையின் அவசியத்தால் தானே அது உரு பெற்றது. பேரண்டத்தை புரிந்து கொள்ள, விளக்கிட, மாற்றிட அது அவசியப்பட்டது. அதனை ருசுப்பிக்க, உறுதி செய்ய, சான்று பகர சாட்சியமாக நிற்பது விஞ்ஞானம், பேரண்டத்தின் அனைத்து துறைகளிலும் அவ்விஞ்ஞானத்தைக் கண்டறிந்த, பிரகடனம் செய்த விஞ்ஞானிகள் வரலாற்றில் காலத்தால் அடையாளம் காட்டப்படுகிறார்கள். சமூக விஞ்ஞானிகளும் அப்படித்தான் உருவாகிறார்கள். அவர்கள் சமூக புரட்சியாளர்களாக விளங்குகிறார்கள். அவர்கள் சித்தாதங்களையும், கோட்பாடுகளையும் புரிந்து கொண்டு அதனைச் செழுமைப்படுத்துபவர்களாகவே வாழ்கிறார்கள். அப்புரட்சியாளர்களின் சமாதியில் பிறப்பெடுப்பவர்களே அவர்களது வாரிசுகள். வழிவரும் தலைமுறையினர். புதிய சமூகத்திற்கு, புரட்சியாளர்கள் ரத்த சாட்சிகளாகவும், புதிய வரலாற்றின் ரத்த வரிகளாகவும் வாழ்கிறார்கள்.
இன்னொரு வேடிக்கை கேள்விப்பட்டாயா தோழா! வாரிசுகளை தன்வாழ்நாளிலேயே அடையாளம் காட்டிவிட வேண்டும் என துடிப்பவர்களும், வழிநடத்த வந்தவர் வாழும் காலத்திலேயே அடுத்த வாரிசு ‘‘நான் தான்’’ என அடையாளம் காட்டச் சொல்லி அரித்தெடுப்பவர்களும், அப்படிக் காட்டச் செய்துவிட வேண்டும் என அல்லும் பகலும் அலைமோதி கிடப்பவர்களும், அப்படிச் செய்ய வைப்பதற்காக எதையும் செய்ய சித்தம் கொண்டு தெரு நாய்களாக மட்டுமல்ல வெறிநாய்களாக அலையும் இன்றைய சமூகத்தில் சொத்துக்களை அபகரிக்கவும், சுகங்களை சூறையாடவும், கிடைத்ததை வாரிச்சுருட்டவும், அகப்பட்டதை அள்ளிக் கொள்ளவும், அடையாளம் காட்டப்பட நடக்கின்ற வாரிசு சண்டையை, அதனால் எழுகின்ற ஒலத்தை, புலம்பலை, ரத்தத்தால் அடையாளப் படுத்தப்படும் புரட்சியாளர்களின் வரலாற்றோடு கனவிலும் ஒத்திட்டு விடாதே தோழா!
பெரியார் தமிழகத்து மக்களைப் பார்த்துச் சொன்னார் பொய்மைக்கும், புரட்டுக்கும் மௌன சாட்சியாயிருப்பதை விட புதுமைக்கும், புரட்சிக்கும் ரத்த சாட்சியாய் மாறுங்கள் என்று.
ஓகோ! அது மக்களைப் பார்த்து, புரட்சியாளர்களைப் பார்த்தல்லவா சொன்னார்? என்று கேட்பவர்களை அடையாளம் தெரிகிறது. கொள்ளையர்களோடு கூட்டு சேர்ந்து, பங்கு போடுவதிலும், பாகப் பிரிவினை செய்து கொள்வதிலும் சண்டையிட்டுக் கொள்பவர்களுக்கு பெரியார் சொல்லவில்லைதான். ஆனால் உன் சண்டையை மறைக்க ஊர் சண்டைக்கு வரக்கூடாதல்லவா?
இந்திய துணைக்கண்டத்தில் இன்றைய புரட்சியாளனின் சித்தாந்தம் ‘பெரியாரீயம்’ என்பதை உரக்ககூவிடு தோழா! ஏன்?
அக்டோபர் 2003, தன்மானம்
No comments:
Post a Comment