Monday, February 28, 2011

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-8

20. கட்சியின் கள அணுகுமுறையும் மேல்மட்டத்தின் போக்கும் வேறு வேறாக இருந்தது எதனால்?
போராட்ட வடிவங்கள், உத்திகள்லயே இந்த முரண் வருது. பேச்சு வார்த்தைக்கு ஒத்து வராத பண்ணைகள்ட்ட பாடை கட்டி ஊர்வலமா போறதப் பத்திச் சொன்னேன். அது அமைதியான போராட்டமா? இந்த போராட்டம் நாகரிகமா இல்லையான்னு விவாதமெல்லாம் வந்தது. சில வி­யங்கள்ல நீங்க என்ன சொன்னாலும் கேட்க மாட்டீங்க. எப்படியாவது பண்ணுங்கன்னு மாட்டத் தலைமைகள் கசப்பா சொல்லிட்டு விட்டுடுவாங்க.
நாங்க நடைமுறையில சங்கடப்பட்டு அனுபவிச்ச எதிர்விளைவுகள ஏத்துக்க வேண்டியிருந்துச்சு. எந்த செயலுக்குமான விளைவுகளை எதிர்கொள்ளவும், படிப்பினைகளின் அடிப்படையில் எதிர்வினை செய்யவுமான தேவை இருந்தது. அந்தப்படி எங்களோட போராட்டத்த மாவட்டம் பூராவும் நாடு பூராவும் விரிவுபடுத்திக்கனங்கிறது நாகை தாலுக்கா கமிட்டியோட, எங்களோட ஆழமான கோரிக்கை. இது நாகை தாலுக்கா அளவுல உள்ள செக்டேரியன் போக்கு என்பது மேல உள்ளவங்க நிலைப்பாடு. இதுதான் வெண்மணிக்கான எதிர் நடவடிக்கை என்பதிலும் எதிரொலித்தது.
21. வெண்மணி நினைவு தினம் குறித்து...
வெண்மணி தினம் இப்ப கொண்டாடுவது மாதிரி ஏதோ ஒரு குறிப்பிட்ட தியாகிகள் தினம் மாதிரியோ ஒரு பண்டிகை மாதிரியோ கொண்டாடக் கூடாது. அது அன்றைய நாகை தாலுக்காவின் (இன்றைய நாகை,திருவாரூர் மாவட்டங்கள்) விவசாயத் தொழிலாளர்களுடைய எழுச்சியின் சின்னம். அப்படியான உணர்வு தொனிக்கிற வகையில் நடத்தணும். அதற்கான பெயர் சூட்டணும்.
நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தையும், சாதி வெறியினுடைய ஆதிக்கத்தையும் எதிர்த்து நடந்த அந்த நிகழ்ச்சிக்குப் பின்னால் அந்த இரண்டும் தகர்க்கப்பட்டுருச்சு. அப்படிப்பட்ட விவசாயத் தொழிலாளர்களின் எழுச்சிக்கோ, அந்த எழுச்சியின் சின்னமான நிகழ்ச்சிக்கோ சரியான வரலாற்குப் பதிவுகள் இல்லை. இலக்கிய நடையிலேயும், கதை நடையிலேயும் விபரங்கள் அடிப்படையிலேயும் சில புத்தகங்கள் வந்திருக்கு. எதுவாயிருந்தாலும் உண்மையான வரலாற்றுப் பதிவாக இல்லாதிருந்தால் அது வெண்மணி நிகழ்ச்சியோட, விவசாயிகள் எழுச்சியேட சின்னத்தைக் கொச்சைப்படுத்துவதாகத் தான் அமையும். அன்னைக்கு நடந்த நிகழ்ச்சி எல்லாம் வட விவசாயத் தொழிலாளர்களோட அரைப்புள்ளி தானே தவிர முற்றுப்புள்ளி இல்ல. ஆனா எதார்த்த நிலை என்னன்னா அதனோட தொடர்ச்சியே இல்லாம முற்றுப்புள்ளி வைச்ச மாதிரி விவசாயிகள் எழுச்சி நின்னு போச்சு.
22. சிறைக்குள்ளும் இயக்கம் நடத்துவது என்பது சர்வதேசப் பொதுவுடைமையாளர்களிடம் காணப்படுகிற புகழ் பெற்ற ஒரு அணுகுமுறை. இதை தாங்களும் வெற்றிகரமாகக் கையாண்டிருக்கிறீர்கள். அது பற்றித் தங்களோடு...?
என் சிறை வாழ்க்கை என்பது ஏறத்தாழ 24 ஆண்டுகள். அப்போ சிறைச் சூழ்நிலையும் கைதிகள் நடத்தப்பட்ட விதமும் மோசமாயிருந்தது. ஒருத்தன் சிறைப்பட்ட உடனேயே அவனது வாக்குரிமையும் பறிக்கப்பட்டு விடுகிறது. பின் அவன் இந்த நாட்டின் குடி மகனா? இல்லையா? குற்றம் நிருபணமான பிறகு தான் குற்றவாளி. அதுவரை குற்றம் சாட்டப்பட்டவன்தானே? அடிப்படையில சிறைவாசிகள்ன்னும், சிறையை இல்லம்ங்கிறதுமே தப்பு. சிறைவாசிகள் அல்ல சிறைப்படுத்தப்பட்டோர் ; இல்லம் அல்ல. அடைப்பான் என்பதே சரி. வெள்ளையன் வெளியேறிய பிறகும் அவன் விட்டுப்போன 1881 ஆம் ஆண்டின் சிறைச் சட்டங்கள் அடங்கிய சிறைக் கையேடு தான் பின்பற்றப்பட்டது. இதில் சிறைப்படுத்தப்பட்டோர் தொடர்பா அரசு வெளியிடகிற ஆணைகள் , உத்தரவுகள் எதுவுமே அவர்களுக்குத் தெரியாது. சிறை உணவு, சிறைப்பட்டோர் நடத்தப்படும் விதம் மிக மோசமாயிருந்தது. இதை எதிர்த்துப் போராட வேண்டும் என்று தீர்மானித்தோம்.  அதன் முதற் கட்டமாக திருச்சி மத்தியச் சிறையில் 1973 இல் சிறைப்படுத்தப்பட்டோர் நல உரிமைச் சங்கம் துவங்கப்பட்டது. அதன் ஒருங்கிணைப்புக்காகவும் போராட்ட ஆயுதமாகவும் உரிமைக்குரல் கைப்பிரதியேடு துவங்கப்பட்டது. சங்கம் தலைமறைவு சங்கமாகவே கட்டப்பட்டது. மொத்தமுள்ள 1100 பேரில் ஆயிரம் பேருக்கு மேல் உறுப்பினராயினர்.
காவலர்க்கும் நிறைய நிர்வாகக் கொடுமைகள். பகல்ல 3 மணி நேர டூட்டி பார்த்தால் வெளியே போய்த் திரும்பி அடுத்த டூட்டிக்கு வர இடை நேரம் கிடைக்கும். இரவுப் பண என்றால் சாயந்திரம் 6 மணிக்கு உள்ளே வந்தா அதோட மறுநாள் காலை 6 மணிக்குத்தான் வெளியே போக முடியும்.
இரவு கேட் பூட்டப்பட்டு சாவிய சிறைக் கண்காணிப்பாளர் கையில எடுத்துட்டுப் போயிடுவார். இதற்கிடையில் வர்ற நல்ல செய்தி, கெட்ட செய்தி, குடும்பப் பிரச்சனை எதுவானானும் அடுத்த நாள்தான் தெரியும். வெளியவும் போக முடியாது. ரொம்ப அடக்குமுறை. அவங்க குடும்ப நிலைமைகளும் சிறைக்குள்ள வந்து ஏதாச்சும் ஓசியில வாங்கிச் சாப்பிடணும்கிற மாதிரிதான். அவர்களுள் சிலர் ஒன்று பட்டு தங்களை நெறிப்படுத்திக் கொண்டு நிர்வாக அடக்குமுறைக்கு எதிராகச் சங்கமாகத் திரள்வதில் துணை நின்றோம். சிறைக் காவலர் நலன் வளர்ச்சிக் கழகம் துவங்கப்பட்டது. அவர்களுக்குத் தரப்படுகிற மெமோவுக்கு பதில் எழுதித் தருவது, மேல் முறையீட்டு விளக்கங்கள் எழுதுவது இப்படி அவர்களோடு ஏற்கனவே நமக்கு நல்ல உறவு இருந்தது. ஆக வாய்ப்பு ஏற்படுத்திக் கொள்ள முடிந்தது. ஒரு துண்டுச் சீட்டு கூட வெளியே கொண்டு போக முடியாது. கடுமையன சோதனைகள் இருந்தன. அப்ப ஒர்க்ஷாப் சிஸ்டம் இருந்தது. தையல், தச்சு, பைண்டிங்குன்னு ஒர்க்ஷாப்ல சிறைபட்டோருக்கு வேலை ஒதுக்கீடுகள் இருக்கும். தச்சுப்பட்டறையில் தயாராகிற லத்திகள்ல கூடாக்கி, பூண் மட்டும் போட்டு அனுப்புவோம். அதுல எத்தனை கடிதம், மனுக்கள் ஆனாலும் காவலர் மூலமாகவே வெளியே அனுப்பிடுவோம். இப்படி சகல வழிகளிலும் யுத்திகள் பண்ண வேண்டியிருந்தது.
26 கோரிக்கைகளை முன் வைத்து, மே 1, 1974 இல் (மே நாள்) போராட்டம் சிறைக்குள் துவங்கப்பட்டது. போராட்டத் துவக்க நாளிலேயே எல்லா தலைவர்கள், மத்திய, மாநில அரசுகள், அதிகாரிகள், அப்போ எதிர்க்கட்சித் தலைவர்கள் வாஜ்பேய், பிரதமர் இந்திராகாந்தி, இப்படி வெளியில 1000 பேருக்குக் கிடைக்கிற வகையில் கோரிக்கை மனுவும் போராட்டத் தகவலும் அனுப்பப்பட்டன. போராட்டத்தின் இன்னொரு வடிவமாக, சட்டபூர்வ போராட்டமாக, சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்க தொடரப்பட்டது. போராட்டத்தை ஒடுக்குவதற்கு சகல ஆயுதங்களையும் பிரயோகித்தார்கள். முக்கியமானவர்கள் சேலம், கோவை, மதுரை என்ற சிறை மாற்றம் செய்யப்பட்டனர். எங்கே சென்றாலும் அங்கங்கே போராட்டத்தைத் தொடருங்கள் , போராட்டத்தை விரிவாக நடத்த கிடைத்த வாய்ப்பு என்று பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றோம்.
என்னைப் பாளையங்கோட்டைக்கு மாற்றினார்கள். அங்கே செவ்வொளி என்ற கைப்பிரதி தொடங்கி நடத்தினோம். இறுதியில் போராட்டம் வெற்றியுடன் முடிவுற்றது. சிறைத்துறை வரலாற்றில் முதன் முறையாகச் சீர்திருத்தங்கள் துவங்கின. பாதிப்புன்னு பார்த்தா சில காவலர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். அதற்கும் பொறுப்பேற்றுக் கொண்டு நம்முடைய ரெயில்வே தொழிற்சங்கத் தோழர்கள் மூலமாக அவர்களுக்கு ரெயில்வே துறையில் வேலை ஏற்பாடு செய்து கொடுத்தோம். ஒரு காவலர் மட்டும் வேலை வேண்டாம் என்று சொல்லி விட்டார். ஒரு இளைஞர் படிக்க விரும்புவதாகச் சொன்னார். நம்முடைய ஏற்பாட்டிலேயே அவரைப் படிக்க அனுப்பி வைத்தோம். இப்படி சிறை அனுபவங்களை, போராட்டங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். சிறையா, வெளியிலா என்பதல்ல பிரச்சனை. போராட்டம்ன்னா என்ன? சூழலைப் புரிந்து கொண்டு அதில் நம்மைப் பொருத்திக் கொண்டு மாற்ற உழைப்பது தான் போராட்டம். அது சிறையிலென்றாலும் சமூகத்திலானாலும் இதுதான் யதார்த்தம். உண்மை.

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-7

18.வெண்மணிச் சம்பவத்தைப் பற்றி...
வெண்மணிச் சம்பவத்துக்கு ஒரு வாரம் முன்பு எர்ணாகுளத்தில் கட்சி மாநாடு. நாங்க 3, 4 பேர் தவிர எல்லோரும் அங்க போயிருந்தாங்க. என் மேல வழக்கு. நாகப்பட்டினத்த விட்ட வெளியே போகக் கூடாது. தினமும் போலீஸ் ஸ்டே­ன்ல கையயழுத்துப் போடனும். அதனால நான் மாநாட்டுக்குப் போகல. மாநாட்டு கடைசி நாள் நிகழ்ச்சிக்கு இங்கிருந்து அனுப்ப 5 பஸ் ஏற்பாடு பண்ணனும். ஒரு பஸ் தேவூரிலிருந்து புறப்பட ஏற்பாடு. இப்படி ஒவ்வொரு பஸ்ஸையும் ஏற்பாடு பண்ணி அனுப்ப டாக்கிசியில் ராத்திரி 9 மணிக்கு மேல போறோம். தேவூருக்குப் போய் சேரும் போது இரவு 11 மணிக்கு மேல ஆயிட்டு. அங்க கோபால்னு நம்ம தலைவர். அவர் தான் பின்னால் நடந்த இரிஞ்சூர் கொலை வழக்கில் ஏ1. அவர் வீடு தேவூர் பாரதி தெரு கடைசி. அங்கிருந்து பார்த்தா வெண்மணி தெரியும். அங்க ஒரே கூட்டம்.
நான், தோழர்கள் ஜி.பி. கணேசன் எல்லோரும் போறோம். அங்க இறங்கி என்னன்ன கேட்டா அப்பத்தான் ஒரே நெருப்பு பிழம்பா வெண்மணி எரிஞ்சி தணலா அமுங்கிற நேரம். அங்க நிக்கிற போதே போலீஸ் வேன் போச்சு. முன்னாலேயே 2 வேன் போயிருக்கன்னாங்க. இதுக்குப் பிறகு இங்க நிக்க வேணாம். நீங்க போயி மற்ற வேலைகளைப் பாருங்க. நான் என்னன்ன தெரிஞ்சுகிட்டு வர்றேன் அப்படின்னு நான் மட்டும் இறங்கிக்கிட்டு அவங்களை அனுப்பிட்டேன். வெண்மணியிலிருந்து அடிப்பட்டவங்க 8,10 பேர் வந்தாங்க. எல்லோரையும் பார வண்டியில் ஏத்தி ஆஸ்பத்திரிக்கு அனுப்பிட்டு, ஜனங்கள பார்த்தா ஒரே கொந்தளிப்பா இருக்காங்க. விபரம் கேட்டா எல்லாரும் தப்பிச்சக்கிட்டு ஓடிட்டாங்க என்பது தான் அப்போதைய தகவல். போலீசும் நிறைய போயிருக்கு. இப்ப ஒன்னும் வேணாம். விடிஞ்சி பார்த்துக்கலாம்னு சொல்லி அவுங்கள அமைதிப்படுத்திட்டு நான் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டேன்.
மறுநாள் காலையில் 9 மணிக்குத் தான் எங்களுக்கு முழு விபரமும் தெரியும். நடந்த சம்பவம் என்னன்னா, வெண்மணியில முத்துசாமிங்கிறவர் நம்ம தலைவர். டீக்கடை வச்சிருந்தார். 4 பேர் அவரு கடைக்கு வந்து சாதியச் சொல்லித் திட்டுறான். போயிடுறான். திரும்பவும் இன்னும் கொஞ்சம் ஆட்களோட வந்து டீ கிளாசையயல்லாம் உடைக்கிறான். நம்ம ஆட்கள் அதிகமில்லை. வெளியில் வேலைக்குப் போயிட்டாங்க. மறுபடியும் வந்த கும்பல் முத்துசாமிய அடிச்சத் தூக்கிட்டுப் போய் மேல வெண்மணியில ஒரு வீட்டில் அடைச்ச வச்சிட்டாங்க. இதெல்லாம் பகல்ல நடக்குது. சாயந்திரம் ஆறு , ஆறரை மணிக்கு ஊருக்குத் திரும்புன நம்ம ஆட்களுக்குச் சேதி தெரிஞ்சு, கொதிச்சுப் போய் திரண்டு கம்பு, கத்தி கையிலே கெடச்ச ஆயுதங்களோட போறாங்க. கும்பலப் பார்த்த உடனே எல்லாரும் சிதறி ஓடிர்றான். வீட்டில இருந்த பெண்கள் பயத்தில பின் பக்கக் கதவைத் திறந்து விட முத்துசாமிய வெளியே கொண்டு வந்திட்டாங்க.
இது வி­யம் தெரிஞ்ச பக்கத்து ஊர்கள்லேருந்தும் தோழர்கள் பதட்டத்தோடு வர்றாங்க. சூழ்நிலையை யோசிச்சு நம்ம ஆளக் கடத்திப் பிரச்சனைப் பண்ணினவன் அவன். நாமளும் திரண்டு பேய் மீட்டுக்கிட்டு வந்திட்டோம். இப்போதைக்கு பிரச்சனை இதோட இருக்கட்டும். எச்சரிக்கையா மட்டும் இருங்க. மேற்கொண்டு நாம மேலேயும் சொல்லி முடிவு பண்ணிக்கலாம். அப்படின்னு சொல்லிட்டுப் போயிட்டாங்க.
ராத்திரி ஏழரை மணி வாக்கிலே இருக்கை ராமுப்பிள்ளை தன்னோட அடியாட்களோட வெண்மணி தெருவுக்குள்ளே பூந்திருக்கான். எப்பவுமே கிராமங்கள்ல ஆயத்தமா இருந்தா யாரும் உள்ளே நுழைஞ்சி ஒன்னும் பண்ணிட முடியாது. அதானல் தான் போலீசே ஊர் அடங்கின பிறகு ராத்திரி 11 மணிக்கு மேல கிராமத்த சுத்தி வளைச்சு நின்னுகிட்டு, ஒவ்வொரு வீடா ஆள்களைக் கிளப்பிக்கிட்டு வந்து அடிச்சு அங்கேயே வச்சிகிட்டு மறுபடி ஒவ்வொரு வீடா தட்டிக் கிளப்பிக்கிட்டு வருவான். உஷார்படுத்தறதுக்கோ, ஒன்னு கூடவோ விட மாட்டான். நம்ம மேலே நடந்த தாக்குதல்கள் எல்லாம் இப்படித்தான். இங்க நாமளும் உஷார இருந்ததால் உடனே ஒன்னா கூடிட்டாங்க. ஆனா அவன் நுழைஞ்ச உடனேயே நாட்டுத் துப்பாக்கியால சுட ஆரம்பிச்சுட்டான். நம்ம பல பேரு உடம்புல குண்டு துளைச்சிருச்சு. இவங்க எதிர்த்து கல்லால அடிச்சிருக்காங்க. எதிர்ப்பு பலமா இருந்ததால திரும்பப் போயிட்டான். இப்படி ஒரு ஆள் செத்துப் போனத முதல்ல இரு தரப்புக்கமே தெரியாது. இது நடந்து அரை மணி நேரம் கழிச்சி கோபாலகிருஷ்ண நாயுடு பெரும் கும்பலோட வந்து நுழைஞ்சு சுட ஆரம்பிச்சுட்டாரு. பெரும் கும்பல். கடுமையான தாக்குதல் எதிர்த்து நிக்க முடியாம எல்லோரும் சுத்துப்பட்ட கிராமங்கள நோக்கி ஓடிர்றாங்க. தப்பிச்ச ஓட முடியாம ராமையாங்கிறவர் வீட்டுக்குள்ள பல பேரு ஓடி உள்ள நுழைஞ்சத பார்த்த அவங்க ஆள் ஒருத்தன் வெளித்தாழ்ப்பாள் போட்டுட்டு வீட்டைக் கொளுத்திர்றானுங்க. ஒரு ஆள் மட்டும் மேல் கூரையைப் பிச்சிக்கிட்டு தப்பிக்க முயற்சி பண்ணும் போது அவரையும் கம்பால அடிச்சு நெருப்புக்குள்ள போட்டுர்றானுவ. இதுதான் நாடு முழுவதையும் அதிர வைச்ச வெண்மணிச் சம்பவம்.


19. இந்தச் சம்பவத்தைக் கட்சி எப்படி எதிர்கொண்டது?
முதல்ல வெண்மணி பகுதியில தொழிலாளர் மேல ஒரு மோசமான தாக்குதலுக்கு ஆயத்தம் இருக்குன்னு அரசுக்கு 6 மனுக்கள் அனுப்பியிருக்கோம். கடைசியா அனுப்புனது சம்பவம் நடக்க ஒர வாரம் முன்னாடி. அப்போ அண்ணாதுரை முதல்வர். அன்னைக்கி விவசாயத் தொழிலாளர் போராட்டங்கள நசுக்கறதுல எல்லாக கட்சிகளும், கட்சிகளின் லோக்கல் தலைவர்களும் , நிலப்பிரபுக்கு ஆதரவா, ஒன்னா நின்னாங்க. அரசு நாங்க அனுப்பின பெட்டி­ன் மேல ஒரு நடவடிக்கையும் எடுக்கல. களத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே தனியா நின்னது.
வெண்மணி சம்பவத்துக்கு பின்னாடி எல்லாக் கட்சிகளின் கோரிக்கையும் நீதி விசாரணை வேண்டும் என்பதுதான். சி.பி.எம். மேல் மட்டத்திலேயும் இதையே தான் சொன்னாங்க. நகை தாலுக்கா கமிட்டி மட்டும் குற்றவாளி யாருன்னு தெரியாம இருக்கும் போது தான் நீதி விசாரணை கோரணும். பகிரங்கமா இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு அடியாட்களோடு வந்து நேரடியா நடத்தின கொலை வெறித் தாக்குதல். அதனால குற்றவாளிகளைக் குறிப்பிட்டு வழக்கு போடணும். இதுதான் நாகை தாலுக்கா கமிட்டி சொன்னது. இதைச் சொன்னவுடனே தோழர் பி.ஆர். ஏத்துக்கிட்டாரு. அப்புறம்தான் வழக்க பதிவானது. இதுக்கு எதிர் நடவடிக்கை நிச்சயம் வேணுங்கிறது பரவலான கருத்து.
சம்பவம் 68 டிசம்பர்ல நடந்தது. 69-ல இதுக்கான பதில் நடவடிக்கை என்னங்கிறத பத்தி தாலுகா கமிட்டி முடிவு எடுத்திடுச்சு. வி­யம் விவாதத்தில இருந்தது. திடமான முடிவு எடுத்தாச்சு என்பதெல்லாம் மேல் மட்டத்துக்குத் தெரியும். அந்த நேரத்தில் நான் முக்கொலை வழக்கில் உள்ள போயிடுறேன். இந்த சந்தர்ப்பத்தில் தான் கட்சியின் மேல் மட்டம் எதிர் நடவடிக்கைக்கு ஆயத்தமானவர்களை எல்லாம் கட்சியிலிருந்து நீக்கிடுச்சு. தாலுக்கா கமிட்டி செகரட்டரி மீனாட்சிசுந்தரம் உட்பட தீவிரமான கட்சித் தோழர்களைக் கட்சி வெளியேத்திருச்ச.

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-6

14. கட்சியின் அன்றைய நிர்வாக நடைமுறைகள் எப்படியிருந்தன?
அப்ப கட்சி ஒழுங்கு தீவிரமா கடைபிடிக்கப்பட்டது. 12 1/2 ரூபா செலவுக் கணக்க சரியா சொல்லலைங்கிறதுக்காக ஒரு தாலுக்கா கமிட்டி செயலரையே கட்சி நீக்கியது. அப்படியயல்லாம் கறாரா இருந்த நேரம். அதே போல கட்சி அலுவலகங்கிறது வேலைகள் கலந்தக்கிறதுக்காக, திட்டமிடலுக்காக, வருகிற இடமா மட்டுந்தான் இருந்தது. மற்ற நேரமெல்லாம் ஜனங்க மத்தியில் வேலை செய்யறதுதான். ஆபீஸ்ல எல்லாம் தங்கி அரசியல் நடத்தாதீங்க. எதுவானாலும் இருந்த இடத்திலேயே ஸ்தலத்தில தான் வேலை செய்யனும்னு கறாரா சொல்வாங்க. அதே போல கலெக்டர், போலீஸ் இப்படி எந்த அதிகாரிகள் கிட்டேயும் நேர்ல போய் பேசுங்க. அப்பதான் உங்க முகத்தைப் பார்த்துப் பேசுவாங்க. போன்லயயல்லாம் பேசுனா மத்தவங்க கிட்ட கண் சாடை காட்டி கேலியா கூடப் பேசுவான் அப்படிம்பாங்க. எதையும் ஒரு சீரியஸா, உணர்வுப் பூர்வமாக அணுகனுங்கறது அன்றைய நடைமுறை.
அப்போ ஜனங்க மத்தியிலே பேசுறது, மேடையில் பேசறதுங்கறத வேலைகளைப் பத்தின அறிக்கையாத்தான் இருக்கும். பேசுறது நடைமுறையினுடைய விரிவாகத்தான் இருந்தது. மேடைப் பேச்சே, பேச்சு வழக்காத்தான் இருந்துச்சு. பின்னால வந்த முதலாளித்துவ அரசியல்ல தான் பேச்சுங்கிறது ஒரு தொழிலாயும் சாதியாவும் மாறிப் போச்சு.
15. அந்தப் போராட்டச் சூழலில், நினைவில் எட்டுகிற சில சம்பவங்களைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா?
நாகைத் தோழர்கள்னாலே கட்சியல் விசே­மான மரியாதை உண்டு. மாநாடுகள் நடக்கும் போது, குறிப்பாக, மேற்கு வங்கத்தச் சேர்ந்தவங்க நாகைத் தோழர்களைத் தேடி வந்து வாழ்த்து சொல்வாங்க. நம்முடைய தோழர்களைத் தங்கள் தோள்களில் தூக்கிக் கொண்டு கோ­ம் போட்டதும், ஆடியதும் கூட உண்டு. நமக்குத் தீவிரமான போராட்டக்காரர்கள் என்கிற ஒரு மரியாதை இருந்தது.
பண்ணைக்கள்ல போராட்டம் நடந்த போது எந்த பேச்சுவார்த்தைக்கும் அடங்காம ரொம்ப வீம்பா இருந்தவனும் உண்டு. மாங்குடி கிருஷ்ணமூர்த்தி அய்யர்னு ஒரு மிராசுதார். ரொம்ப கிராதகமான அய்யர். நம்ம போராட்டத்தை மீறி அவங்களே அறுவடை பண்றதுன்னு முடிவு பண்ணி வெளியூர் ஆட்கள், அடியாட்களோட ஊர்வலமா போறாங்க. முன்னாலே தலைமை தாங்கி இந்த கிருஷ்ணமூர்த்தி அய்யரே தப்படிச்சுக்கிட்டுப் போறாரு. அத நம்ம தோழர்கள் தடுத்த போது (அவங்க அறுவடை செய்யக் கூடாதுன்னு) நடந்த போராட்டத்தில் தான் பூந்தாழங்குடி பக்கிரிசாமி போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.
தலையாமழை ஏ.எம்.பி. செட்டியார் பண்ணையில ஆலமழை சின்னத்தம்பின்னு ஒரு காரியக் காரர். எப்பவும் அரிவாளும் கையுமா இருப்பார். அசந்த நேரமே கிடையாது. ஆளுகள அச்சுறுத்தி வேலை வாங்கிறவர். நம்ம தோழர்கள் திட்டம் போட்டு ஒரு நாள் அவர் தூங்குற போது அரிவாள மட்டும் எடுத்துட்டு வந்துட்டாங்க. தன் அரிவாள ஒருத்தன் பறிச்சிட்ட பிறகு தன் வீரமே பறி போயிட்டதா நினைச்ச, அதோட பண்ணைய வேலையை விட்டுட்டார். பிறகு கட்சிக்கும் வந்துட்டார். அதோட கடைசி வரை சிவப்புச் சட்டையில் தான் இருந்தார்.
அப்படித்தான் வடவூர் பண்ணையில காரியக்காரர் மச்சான் கைவெட்டுப்பட்ட ராஜமாணிக்கத்தைப் பத்திச் சொன்னேன் அல்லவா? பிற்காலத்தில் அவரும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்திட்டாரு. யாருகிட்ட கையாளா இருந்தாரோ, யாரு அவரக் காப்பாத்துவாங்கன்னு நினைச்சாரோ அவங்கெல்லாம் கைவிட்ட பிறகு, தான் செஞ்ச தவறுக்குப் பரிகாரமா இங்கேயே வந்திட்டாரு. இப்படிப் பல சம்பவங்கள்.
16. வெண்மணிச் சம்பவத்திற்கு முந்தைய சூழல், வெண்மணியின் விவசாயத் தொழிலாளர் போராட்டம் பற்றி...?
முதல்ல வெண்மணிச் சம்பவத்த ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சியா பார்ப்பதோ, அத அப்படி குறுக்கி விடுவதோ தவற. 63 க்குப் பின்னாடி நாகைப் பகுதியிலே வளர்ந்து வந்த போராட்டச் சூழலின் ஒரு உச்சக்கட்டமாகத்தான் அது நடந்தது. அந்தச் சூழல் இல்லாமல் இந்தச் சம்பவம் இல்ல. இப்படியான பார்வை பொதுவுடைமை கட்சியிலேயே குறைவாகத்தான் இருக்கு. அப்போதைய போராட்டச் சூழல் என்பது நிலப்பிரபுக்களின் திட்டமிட்ட தாக்கதல்களும், நம்முடைய தற்காப்புக்கான தாக்குதலும் அதிகமாகிப் பதட்டமான சூழ்நிலை. அதன் ஒரு கட்டமாக நம்முடைய பல தலைவர்களைப் பலி கொண்டார்கள். ஆய்மழை தங்கவேல், சிக்கல் பக்கிரிசாமி, இரிஞ்சூர் சின்னப்பிள்ளை, கேக்கரை இராமச்சந்திரம் இப்படிப் பலரும் கொலை  செய்யப்பட்டார்கள். குடிசைகள், வீடுகள் கொளுத்தப்பட்டன. விவசாயத் தொழிலாளர் மீது நிலப்பிரபுக்கள் கட்டவிழ்த்து விட்ட காலித்தனங்களும், கொடுமையும், அதை எதிர்த்து வாழ்வா? சாவா? என்ற நமது ஜீவ மரணப் போராட்டங்களும் நடந்து கொண்டிருந்தன.
நெல் உற்பத்தியாளர் சங்கம் துவங்கிய ஆய்மழை மைனர், எங்க எதிர்ப்பைச் சமாளிக்க முடியாம எதிரடி வாங்கின பிறகு இப்போ அதன் தலைவரா இரிஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயுடு வர்றார். நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைகளை நன்றாகக் கற்றுத் தேர்ந்த கொடுங்கோலன். திருமணமாகாதவர். ஜாதிக்கட்டு உள்ளவர்ங்கிற கூடுதல் பலத்தோடு வர்றார். எங்கெங்கே விவசாயத் தொழிலாளர் போராட்டம் நடக்கிறதோ அங்க 3 டிராக்டர்ல அடியாட்களோடு இவரும் துப்பாக்கியோடு ஜீப்பில் வருவார். இப்படிப் பல இடங்கள்ல நேரடியாகவே தாக்குதல் நடத்தினார். அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டும், வேலை தராம விவசாயிகளை வெளியேத்தாதே! என்றும் நரியங்குடியில ஒரு போராட்டம். இவருடன் வந்த அடியாட்கள் தாக்க இவர் துப்பாக்கியால சுடுறார். போலீஸ் கண்ணீர் புகை வீசுது. இப்படி எல்லோரையும் அச்சப்படுத்தி நமது போராட்ட வலுவை ஒழித்துக் கட்ட நினைக்கிறார். அவர் எந்த ஊர்கள அடக்குமுறையில வச்சுகிட்டு மத்த இடங்கள்ல சுதந்திரமாக ரவுடித்தனம் பண்றாரோ, அந்த அவரோட இடத்திலேயே அவரக் கிளம்ப முடியாம பண்ணனும். அங்கேயே நம்முடைய கட்சிய வலுவாக்கவும், போராட்டத்தைக் கடுமையாக்கவும் செஞ்சோம். அதனால் அந்தப் பகுதிகள்ல நம்ம கட்சி கடுமையான எதிர்ப்புக் கிடையில வேலை செய்ய வேண்டியிருந்துச்சி. இந்தப் போராட்டச் சூழல்ல தான் வெண்மணிப் போராட்டம் நடந்தது.
17. கூலி உயர்வு கோரிய போராட்டந்தானே வெண்மணிப் போராட்டம்?
கூலி உயர்வு கோரிக்கை மட்டுமல்ல ; விவசாயத் தொழிலாளர் மரியாதையும் ; உரிமையும் பெறுவதற்காக நடத்திய போராட்டந்தான் அது. 5 படி நெல் கூலியை 6 படியாக உயர்த்திக் கொடுக்கணும். அறுவடை செஞ்ச நெல் அனைத்துக்கும் கூலி தரணும்னு இரண்டு கோரிக்கைகள். நெல் அறுவடை முடிந்து களத்தில் நெல் குவிக்கப்படும். ஏறத்தாழ பாதிக்க மேல் மூட்டை போட்ட பிறகு வண்ணான், பரியாரி, கோவிலுக்கு, கிராமத்துக்குன்னு பண்ணையார் அளந்து  போடச் சொல்வார். இந்த வரு­ சம்பளத்தின் மூலமும், பராமரிப்பின் மூலமுந்தான் கிராம சாதிப் படிநிலை, சேç செய்கிற சாதி முறைகள் நில உடைமை முறையை உயிரூட்டி வச்சிக்கிட்டாங்க. இந்த முறையில நெல் விநியோகிச்ச பிறகு, அறுவடையான மிச்ச நெல்லுக்குத் தான் கூலி கணக்கிடுவார்கள். இப்படிக் கூலி போடும் போது, முதல்ல அளந்து கட்டுன பாதிக்குத் தான் கூலி கிடைக்கும். மீது களத்தில் செலவாகும் நெல்லுக்குக் கூலி கிடைக்காது. களத்திலே செலவாகும் நெல்லும் கூலிக்கு அறுத்ததுதானே! அதோட களத்தில் செலவெல்லாம் முடிஞ்சு ஒவ்வொரு குவியல்லேயும் ஒன்றரை களம், 2 களம் நெல்லு கிடைக்கும். அத அடிப்பொலின்னு சொல்லி அதையும் கூலி கொடுக்காம அள்ளிக் போட்டுக்குவான். என்னன்ன கேட்டா அது பட்டறைக் காய்ச்சலுக்குன்னு  சொல்லிடுவான்.
நமது கோரிக்கை என்னன்னா அறுவடை செய்த அனைத்து நெல்லையும் மூட்டை போட்டு அத்தனை மூட்டைக்கும் கூலி போட வேண்டும் என்பதுதான். ரெண்டு கோரிக்கைகள்ல கூலியை உயர்த்திக் கொடுக்க சம்மதித்த பண்ணைகள் அறுவடை செஞ்ச நெல் அனைத்துக்கும் கூலி என்பதை மறுத்து விட்டனர். இதுவரை இருந்த பாரம்பரிய முறையை மாற்றுவது தங்கள் கெளரவத்தைப் பாதிப்பதாகக் கருதி மறுத்தனர். செய்த வேலை முழுமைக்கும் கூலி பெறுவது தங்களின் மரியாதைக்கும் உரிமைக்கும் கிடைக்கும் அங்கீகாரமாகத் தொழிலாளர்கள் முடிவு செய்தனர். இதுதான் வெண்மணிப் போராட்டத்தின் அடிப்படை.

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-5

11. கீழத்தஞ்சையின் போராட்ட வரலாறு என்பது அங்குள்ள சூழ்நிலை, வழக்கங்கள், மரபுகளையயாட்டியும் சில புதிய யுக்திகளை மேற்கொண்டது பற்றி....
உரிமை, மரியாதைக்கான போராட்டங்கள் பரவலாக நடந்தது. வலிவலம் தேசிகர் பண்ணை முதல் கடைக்கோடிப் பண்ணை வரை போராட்டம் நடந்தது. இடங்களுக் கேற்றபடி போராட்டத்தின் தன்மைகள் மாறிக் கொண்டிருந்தன. சில இடங்களில் சண்டை போட வேண்டியிருந்தது. சில இடங்களில் அமைதியாக இருந்து உள்ளே போக வேண்டியிருந்தது. போராட்டம்னா ஒழுங்குபடுத்தப்பட்ட, வரையறுக்கப்பட்ட, திட்டமிடப்பட்ட எதிர்ப்பு. இதில் எதிரிகளுக்கு நிர்பந்தம் தரக்கூடிய, மன உளைச்சல் தரக்கூடிய போராட்டங்களும் அடங்கும். எந்த பிரச்சனைன்னாலும் முதல்ல மிராசுதாரர்கிட்ட பேசணும் சொல்வோம். சில முதலாளி பேச முடியாதுன்னு ஏஜண்ட்கிட்ட பேசச் சொல்லுவாங்க. தேசிகர் பண்ணைன்னா அவரு பேச மாட்டார். ராமசுப்பையர்னு ஏஜன்ட் (அல்லது) யூனியன் சேர்மன் சண்முகசுந்தரம்ன அவர்தான் பேசுவார். பேசுவோம்.
பேச்சுவார்த்தை முடியாது. இல்லைன்னா, ஒரு அமைதியான போரட்டம் மேற்கொள்வோம். பண்ணைய வீட்டுல சாவு விழுந்தா ஒருமுறை உண்டு. ஆளுக ஆணும் பெண்ணும்மா அடுகெடையா திரண்டு தப்படிச்சுக்கிட்டு பச்ச மட்டை, குறுத்தோலை, எளனி இதெல்லாம் கொண்ட போறது பழக்கம். கோவில்லேருந்து கும்ப கலச மரியாதை வரும். இது அவங்க தரப்பு முறை. குறிப்பிட்ட பண்ணைக்கு எதிராகப் போராடுகிற போது இப்படி ஆண்களும் பெண்களுமா திரண்டு இந்த பொருள்களோடு பாடையும் சேர்த்து கட்டிக்கிட்டுப் போயிடுவோம். வாசல்ல வச்சிக்கிட்டுத் தப்படிச்சுக்கிட்டு ஒப்பாரி வைப்போம். எப்படி நம்மள
எழவெடுக்கிற மாதிரி கொடுமைகள் நடக்குதோ அதே வழியிலேயே அவனுக்குப் புத்தி கொடுக்கிற மாதிரியான போராட்டம். அவர்கள் பெண்களுக்கு அதிர்ச்சி வரும். என்னங்க இது நம்ம வீட்டு வாசல்ல இப்படி? என்ன இது எழவா? காடா? இப்படிப் பார்த்துக்கிட்டிருக்கீங்களே! என்னன்ன கேட்டு தீர்த்து விட மாட்டீங்களான்னு பிரசர் வரும்.
மூடிய கதவைத் திறந்துகிட்டு பண்ணையார் வருவார். பிறகு பேச்சுவார்த்தை அங்கேயே நடக்கும். இப்படிப் பல பண்ணைகளிலே பேசி முடிச்சிருக்கோம். அவங்க குடும்பத்தைச் சேர்ந்தவங்களம் புரிஞ்சிக்க இதை ஒரு வாய்ப்பாகவும் செய்தோம்.
12. சிற்றூர்களில் வலுவான அமைப்பாக்கப்பட்டிருந்த சாதி அமைப்பைக் கீழத் தஞ்சையில் கட்சி கையாண்ட விதம் பற்றி....
நிலப்பிரபுவ எதிர்க்கிற வர்க்கப் போராட்டத்தில் சாதி ஆதிக்க எதிர்ப்பும் மிக மையமான ஒரு வி­யமாகத்தான் இருந்தது. இத இரண்டு விதமா பார்க்க முடியும். ஒன்று வலுவான அமைப்பிலிருந்த ஆதிக்க சாதிகள். மற்றது ஒடுக்கப்பட்டோரிடமிருந்த, தற்காப்புக் கானதாயிருந்தாலும் வலுவாகவே கட்டப்பட்டிருநத சாதிப் பஞ்சாயத்துகள்.
தொடக்கத்துல கம்யூனிஸ்ட் கட்சி நிலப்பிரபுவை எதிர்க்கிற போராட்டத்தில் தாழ்த்தப்பட்டவர்களிட்ட இருந்த சாதியக் கட்டுப்பாட்டை அப்படியே பயன்படுத்திக் கொண்டது. அந்த நாட்டாமை, பஞ்சாயத்து அமைப்பை அப்படியே பயன்படுத்திக் கொண்டோம். நாட்டாமைன்னா அவர் வீட்டுல அடுப்பு பத்த வைச்ச பின்னாடி, மத்த வீட்டுப் பெண்கள் அங்கிருந்துதான் நெருப்பு கொண்டு போவாங்க அவுங்க வீட்டுக்க. நீர், நெருப்பு உட்பட எல்லாத்துக்கும் நாட்டாமை அவர்தான். அந்த அளவுக்கு நிலைமைகள் இருந்த காலம். அப்ப தலைவர்கள் கிராமங்களுக்குப் போவாங்க. போனா கட்சி சம்பந்தமான தகவல்கள், சந்தா இப்படிப் பேசின பிறகு நாட்டாமை கேட்பார் ; அய்யா வந்த வேலைகள் (கட்சி வேலைகள்) முடிஞ்சிருச்சாம்மபார். முடிஞ்சிருச்சுன்னு சொன்னா, அப்ப நீங்க போயிட்டு வாங்க. நாங்க ஊர் வேலைகளைப் பார்க்கிறோம்பார. ஊர் வேலைன்னா வழக்கமா நடக்கிற அவங்களோட கிராமப் பஞ்சாயத்து, உள்ளூர் சம்பந்தப்பட்ட வேலைகள்.
சாதி முறைகள் வேற, கட்சிகள் வேற அப்படிங்கிற நிலைமை 64 இல் ஏற்பட்ட வீச்சில்தான் மாறிச்சி. ஒரு நிலையில கம்யூனிட் கட்சி நாட்டாமைகளைக் கட்சித் தலைவராக்கிச்சி. மத்தவங்களை செயலாளர் இன்னும் மத்த மத்த பொறுப்புக்கு வச்சாங்க. சாதி உணர்வுங்கிற எடுத்துகிட்டு கொள்கை உணர்வுங்கிறத போதிச்சதங்கிறது 64 க்குப் பின்னர்தான் நடந்தது. அந்த எழுச்சி அவர்களிட்ட இருந்த சாதிக் கட்டுப்பாட்டைக் கட்சிக் கட்டுப்பாடா நாகைத் தாலுக்காவுல மாத்திச்சு. பழைய கட்டுப்பாட்டில உதவிக்க நின்னவுங்க இப்ப ஓரணியில் திரண்டாங்க. இது சாதியக் கட்டுப்பாட்டைத் தளர்த்தி, கொள்கைக் கட்டுப்பாடுங்கிற மட்டத்துக்கு அவர்களை உயர்த்துச்சு. அந்த முன்னோக்கிய சூழல்ல அவர்கள்டேயிருந்து பல நல்ல ஊழியர்களும், தலைவர்களும் உருவானாங்க.
13. பொதுவுடைமைக் கட்சிக்கு எதிராக சாதி என்கிற ஆயுதத்தை மிராசுதாரர்களும் பிரயோகித்திருப்பார்கள் தானே?
ஆமா. அத பெரிய ஆயுதமாகத்தான் கையிலெடுத்தாங்க. நாம சாதிப் போராட்டத்த சேர்த்துத்தான் வர்க்கப் போராட்டத்த முன்னெடுத்தோம். சாதி ஆதிக்கம், வர்க்க ஆதிக்கம் ரெண்டா இருந்தாலும், ரெண்டுமே ஒன்றுக்குள் ஒன்றான ஒரே எதிரிங்கிற தெளிவான பார்வை நமக்கு இருந்திச்சி. விவசாயத் தொழிலாளர் பெரும்பாலும் தாழ்த்தப் பட்டத் தொழிலாளர் கட்டுப்பாடா ஒன்றிணைஞ்சு நின்னது நம்முடைய வெற்றி. அதுக்கு எதிரா எல்லா சாதி இந்துக்களையும் ஒன்னா திரட்டணும்ன நிலப்பிரபுக்கள் பெருமுயற்சி எடுத்தாங்க. ஆனா பொருளாதார நிர்ப்பந்தம் காரணமா மத்திய தர வகுப்பு ஆண்களும் பெண்களும் விவசாய வேலைக்கு வர வேண்டியதாயிருந்துச்சு. நடவுக்கு வரும்போது ரெண்டு தரப்பு பெண்களும் ஒன்னா நிக்க வேண்டிய நிலைமை. ஆக அதே வேலை, ஒன்னா நிக்க ¼ண்டிய நிர்ப்பந்தம். அதே கூலி. இந்த சூழல்ல அவங்கள சாதிய மட்டும் சொல்லிப் பிரிக்க முடியாத நிலைமை யதார்த்தமானதாயிருந்துச்சு. சாதி வெறிங்கிறது நிலப்பிரபு தூண்டிவிட்ட உணர்ச்சி என்பத தவிர வாழ்க்கை நடைமுறையும் தரமும் இவங்களுக்கென்னவோ அதே தான் அவங்களுக்குமிருந்தது. அது மட்டுமில்லாம நில பிரவுவோட வலையில விழுந்துடாம அவங்கள அமைப்பாக்குறதலயும், வழிகாட்டுவதிலேயும் கம்யூனிஸ்ட் கட்சி முனைப்பா நின்னு வெற்றி கண்டது.

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-4

9. ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களில் குறிப்பிட்டுச் சொல்லும்படி யானவைகள் என்னென்ன?
முதல் கட்ட போராட்டங்களில் வேலைப் பளுவைக் குறைக்கணும். 8 மணி நேரம் வேலை நேரம் நிர்ணயிக்கணும் என்பதுவும் ஒன்று. காலையில் ஐந்தரை , ஆறுக்க வேலையத் துவங்கினா இருட்டின பிறகுதான் கரையேற முடியும். உடனேயே கூலியும் பெற முடியாது. ஆட்கள் வேலை முடிந்த பிறகுதான் அன்றைய வேலையை மிராசதார் ஆழமா சர்வே பண்ணுவார். அடுத்த நாள் வேலை விவரமெல்லாம் காரியக்காரர் கிட்ட சொல்லி முடிச்சு அவரு வீட்டுக்கு வர ஏழு, ஏழரை ஆகும். அதுக்கு மேல பத்தாயத்த தொறந்து கூலி போட எட்டரை மணியாகிவிடும். பிறக அதைக் குத்தி அரிசியாக்கிச் சமைச்சுச் சாப்பிபட்டுப் படுக்க பதினொன்று, பன்னெண்டு ஆகிவிடும். அடுத்த நாள் வேலைக்க எழுந்து ஓடணும்.இப்படிச் சங்கடமான நிலைமை. அப்ப இதுக்காகப் போராட வேண்டியிருந்துச்சு. போராடி ஜெயிச்சாச்சு.
அதாவது காலையில் 8 மணி முதல் மதியம் 1 மணி வரையும் பிறக 2 மணி முதல் 5 மணி வரையும் வேலை. 5 மணிக்கு வேலை முடியணும். அடுத்த கட்டம் என்னன்னா, உரிமைக்காகப் போராடுகிறது, ஜெயிக்கிறது பெரிசில்ல. அதை நடைமுறைக்குக் கொண்ட வர பெரிய போராட்டம் செய்ய வேண்டியிருந்தது. சாயந்தரமானா இன்னும் 5 மணி ஆகலைன்னு இருட்டுற வரைக்கும் வேலை வாங்கிறது. உடனே அதுக்கும் ஒரு முடிவு பண்ணினோம். வேலை துவங்கிற நேரம், சாப்பாட்டு நேரம், வேலை முடியற நேரத்தில் நம்ம விவசாய சங்கத்து ஆள் மரத்து மேல ஏறி தம்பட்டம் அடிப்பான். சில இடங்கள்ல தப்பு. சில ஊர்கள்ல கொம்பு ஊதுவான். அது ஒன்று, ஒன்ரை மைல் வரை கேட்கும். இப்படி அத நிலை நாட்டினோம்.
10. எல்லா ஒடுக்குமுறைகளிலும் முதல் இலக்கு பெண்கள் தான். இங்கே அவர்களின் நிலை எப்படி இருந்தது?
பொதுவாக வேலைகள் காரியக்கார், அடியாட்கள், பந்தோபஸ்து இந்த கட்டுப்பாட்டுக்குள்தான் நடக்கும். இதுல ஆண், பெண், குழந்தைகள்னு வித்தியாசமில்லாம ஒடுக்குமுறைக்கு ஆளாக வேண்டியிருந்தது. ஆட்கள், நடவாள்கள் வேலை செய்வாங்க. கைக்குழந்தைகளைக் கூட கருவ மரத்திலேயே தொட்டி கட்டிப் போட்டிருப்பாங்க. பெண்கள் நட ஆரம்பிச்சா குனிஞ்சபடியேதான் நடணும். நிமிரவுட மாட்டானுங்க. நடவு நடக்கும் போது பின்னாலேயே நிலப் பிரபுவோ, காரியக்காரனோ வருவான். கரையேறவும் முடியாது. தப்பித் தவறி ஒன்னுக்குப் போகனும்னா கூட வயல்லயே தான். அதுக்கும் இவன் பின்னாடியே நின்னா எப்படி? பின்னாடி நிக்காத ; முன்னால போ என்பதற்கே போராட வேண்டியிருந்தது. பெண்களுக்கு எதிரான கொடுமைகள். அவர்களை இழிவு படுத்துறது, மான ஈனப்படுத்துறது என்பதெல்லாம் ரொம்ப சாதாரணமா நடக்கம். நிலப்பிரபு மட்டுமல்ல ; அவனோட காரியக்காரன், அடியாட்கள் அத்துமீறலும் நடக்கும். திடீர்னு தெருவுக்குள்ள நுழைஞ்சு ஒரு பெண்ணைப் பிடிச்சு இழுத்துக்கிட்டுப் போவான். யாரும் கேட்க முடியாது கேட்க மாட்டார்கள். திரும்ப அவனா விடும்போது தான் வர முடியும். இதற்கெல்லாம் ஒரு மரண அடி கொடுத்தோன்.
மிராசுதாரர்களிடம் சொல்லியாச்சு. இனிமே இது மாதிரி எதுவும் நடக்கக் கூடாது. மீறி நடந்தால் எதிர் நடவடிக்கை இருக்கும்னு சொன்ன பின்னாலும் கேக்கல. நாங்களும் அப்படி நடந்தா அவன் எந்த கையாலும் இனி தொடக்கூடாதுங்கிற ஒரு கடுமையான முடிவு எடுக்க வேண்டியிருந்தது. நம்ம மக்கள் கிட்டயும் சொல்லியாச்சு. வாழறது மானத்தோட வாழனும். மானம் மானம்னு நான் சொல்றது உரிமையும், மரியாதையும் , நிலப்பிரபு சில நேரங்களில் உரிமையக் கூடத் தருவான் ; ஆனா தனக்குச் சமமான மரியாதை தர மாட்டான். அவன்என்னவோ அதையே தான் போலீசும் செய்யும்.
வடவூர் ஏ.எம்.பி. பண்ணையில் காரியக்காரர் சாம்பசிவம் சேர்வையின் மச்சான் ராஜமாணிக்கம். அது ஆய்மழை மைனர் ஏரியா. வடவூர்ல மதுரை, இராமநாதபுரம் பகுதிகள்லேர்ந்து ஆட்களைக் கொண்டு வந்து குடியாகவே வச்சிருந்தாங்க. பக்கத்திலேயே செட்டிச்சேரின்னு 10,15 வீடுகள் உள்ள நம்ம ஆளுக. மிராசுதார் பயம் காரணமா ரொம்ப நாள் நம்ப கட்சிக்கு வராம இருந்தவங்க.
அந்த ராஜமாணிக்கம் ஒரு நாள் மத்தியானத்துல வந்தான். வெள்ளையம்மான்னு ஒரு பொண்ணு. அத கைய புடிச்சிருக்கான். உடனே நம்ப ஆட்கள் அவனைக் கும்பலா கூடி அடிச்சு அவன் பிரக்கினை இல்லாம போனதும் பயந்து ஓடிட்டாங்க. நம்ம ஆள் ஒருத்தன் மட்டும் ஓடலை. அவன் ஓட முடியாதபடி நோயாளி. சோவை. ஒரு 25 வயசு ஆள்னானம் ஒன்னும் முடியாத ஆள். அவன் யோசிச்சுருக்கான். எப்படியும் செய்தி தெரிஞ்சு ஆள் திரண்டு வந்தா நாம மாட்டிக்குவோம். கொன்னுடுவாங்க. சாகப் போறது நிச்சயம். இவனுக்கு ஒரு பாடம் குடுத்துட்டுச் சாவோம்னு ஒரு முடிவுக்கு வந்திருக்கான். மெதுவா வீட்டுக்குள்ள போயி, அருவாள எடுத்து வந்து, அடிப்பட்டுக் கிடந்த ராஜமாணிக்கத்தோடு ஒரு கையை மட்டும் வெட்டித் தூக்கிப் போட்டுட்டான். அவனுங்க வந்த பாத்தாங்க. ஆள் யாரும் இல்ல. இவன் மட்டும் நிக்கிறான். அடிச்சா செத்திருவான்டான்ன சொல்லி எத்திவிட்டுட்டு ராஜமாணிக்கத்தை தூக்கிக்கிட்டு போயிட்டானுங்க. எதுக்குச் சொல்லேன்னா. ஒன்னுமில்லாதவனுக்குக் கூட இப்படி உணர்வு வரும். அதைக் கட்சி சரியா செஞ்சது. அதற்குப் பிறகு இந்த மாதிரி அத்து மீறல்களும், அயோக்கியத்தனங்களும் ஒரு முடிவுக்கு வந்துச்சு.

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல்-3

5. பொதுவுடமைக் கட்சிக்கு வந்த போது எப்படி உணர்ந்தீர்கள்? இங்கிருந்த நிலைமை என்ன?
1962 கடைசியில் நான் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தேன். ஒரு நெருக்கடியிலிருந்து வந்த எனக்கு இங்கும் ஒரு நெருக்கடி காத்திருந்தது. 47 இல் துவங்கிய தத்துவார்த்த சண்டைகள் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் மிகத் தீவிரமாகியிருந்த நேரம். அதன் காரணமாகக் கட்சியில் அதிகாரம் செலுத்திய, பொறுப்புகளில் இருந்தவர்களுக்கும், கட்சியின் உள் அணிகளுக்கமான முரணாகவுமிருந்தது. அவரவர் நிலைப்பாட்டை உறுதிப்படுத்திக் கொள்ள அரசியல் வகுப்புகள் நிறைய நடைபெற்றன. அப்போது நடைபெற்ற தத்துவார்த்த சண்டைதான் மார்க்சியத்தைப் பற்றி அதிகம் தெரிந்த கொள்ள வாய்ப்பாக அமைந்தது.
முதலில் நான் தி.க. வில் இருந்தபோது மார்க்கியத்தை விமர்சிப்பதற்காகப் படித்தது போக, இப்போது சித்தாந்த்தைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பாக இது அமைந்தது. கட்சிப் பிளவின் போது கீழத் தஞ்சையின் நிலைமை என்பது கட்சிப் பொறுப்பிலிருந்தவர்கள் சி.பி.ஐ. கட்சி அணிகள் சி.பி.எம். நாங்கள் (சி.பி.எம்) புதிதாகக் கிளைகள், அமைப்புகள் கட்ட வேண்டிய சூழல். சி.பி.எம். கட்சித் திட்டம் 1964 மாநாட்டில் அறிவிக்கப்பட்டது. அடிப்படையான வர்க்க நிர்ணயிப்பு செய்யப்பட்டது. அரசைத் தேசிய முதலாளிகளின் அரச என்றது சி.பி.ஐ. பெருமுதலாளிய,நிலப் பிரபுத்துவ அரசு என்பது எங்களது நிர்ணயிப்பு. மொத்தத்தில் போராட்டத்தில் இயக்கத்தைக் கட்டுவதும் இயக்கத்தின் மூலமாகப் போராட்டத்தை நடத்துவதும் என்பதில் தீவிரமாகச் செயல்பட்ட நேரமாக இருந்தது.
6. குறிப்பாக அறுபதுகளில் கீழத்தஞ்சையின் நிலவரம் எப்படி இருந்தது?
கீழத் தஞ்சை மாவட்டத்தில் நிலப் பிரபுக்கள் ஆதிக்கம் அதிகமாயிருந்தது. பெரிய ஆட்கள், மிட்டா மிராசுகளுக்கு இங்கு மைனர் பட்டம். ஆய்மழை மைனர், ஆவராணி மைனர், கருங்கண்ணி மைனர், கீழப்பிடாகை மைனர் இப்படி ஊரின் பெயரில் இரண்டு மூன்று ஊர்களுக்கு ஒரு மைனர் இருப்பார். அதே மாதிரி பெரும் பெரும் பண்ணைகள் ஆதிக்கம். ஐவநல்லூர், செல்லூரில் சிக்கல் கோவில் பண்ணை, பெருங்கடம்பனரில் சூரியமூர்த்தி செட்டியார், மஞ்சக்கொல்லையில் ஆர்.எம்.சம்மந்தமூர்த்தி முதலியார், ராஜகோபால் முதலியார், திருநாவுக்கரசு முதலியார், பாப்பாகோவிலில் கோவிந்தராஜ் பிள்ளை, ஆய்மழையில் எஸ்.எஸ்.ஆர். இராமநாதத் தேவர், வடுவூர் தலையாமழையில் ஏ.எம்.பி. செட்டியார் பண்ணை, இப்படி பண்ணைகள்.
அதே நேரத்தில் நிலப்பிரபுவினுடைய கொடுமைகள். விவசாயத் தொழிலாளர்க்குக் கொடுக்கப்பட்ட நெருக்கடிகள். தாக்குதல்களிலிருந்து தப்பிக்க அமைப்பு தேவை என்ற தொழிலாளர்கள் உணர்ந்து ஒன்று திரண்ட நிலைமை. நாகை மாவட்டத்தில் ஏறத்தாழ எல்லா பகுதிகளிலும் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான இயக்கமாகப் பரவியது. விவசாயத் தொழிலாளர் மேல் தாக்குதல் நடத்தி, பழைய அமைப்பை அப்படியே தொடர்ந்து கொண்டு போக வேண்டும் என்று நிலப்பிரபுக்களும் ஒன்று திரண்டார்கள். அதற்கொரு அமைப்பாகவே நெல் உற்பத்தியாளர்கள் சங்கம் தொடங்கினார்கள். ஆய்மழை மைனர் எஸ்.எஸ்.ஆர்.இராமநாதத்தேவர் அதன் தலைவர். அதன் தொடக்கவிழாவுக்கு நடிகர் சிவாஜி கணேசனை அழைத்து அவர் கையால் ஆய்மழை மைனருக்கு ஜீப் ஒன்று வழங்கினார்கள். அவர்களின் முழு முதல் திட்டம் கம்யூனிஸ்ட் கட்சியையும், அமைப்பாகத் திரண்டிருக்கிற விவசாயத் தொழிலாளர்களையும் ஒடுக்குவதுதான். ஆய்மழை என்பது ஒரு குட்டி சாம்ராஜ்யம். மேலப்பிடாகை, கருங்கண்ணிக்க வடக்கே, பாப்பா கோவிலுக்குத் தெற்கே, வேளாங்கண்ணிக்கு மேற்கே, இந்தப் பகுதி கிராமங்கள் பூராவும் அவரது ஆதிக்கம்தான். போலீஸ் கூட அவரைக் கேட்காம உள்ளே நுழைய முடியாது. அவர் வச்சதுதான் சட்டம். அவர் தலைமையில் தான் சங்கம் துவங்கினார்கள்.
நம்முடைய இயக்கமும் மிகவேகமாக விரிவடைந்து பலமாக எழந்து நின்றது. ஆய்மழை மைனர் வீட்டிற்குச் சற்று தூரத்தில் இருந்த தலித் பகுதி உள்பட எல்லா ஊர்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி பலமானதாக இருந்தது. அவர்களுடைய முதல் தாக்குதலாக வேலை கொடுப்பதில்லை என்று முடிவெடுத்தார்கள். அரிசிப் பிடி ஆட்கள் என்ற பெயரில் மதுரை, இராமநாத புரம் பகுதியில் இருந்தவர்களை வேலை செய்ய அழைத்து வந்தார்கள். அவர்கள் தங்குவதற்குப் பெரிய கொட்டகை போட்டு, சாப்பாடு உள்பட எல்லாம் ஆள் வைத்துச் செய்தார்கள். பாதுகாப்புக்குப் பயிற்சி பெற்ற அடியாட்களையும் அழைத்து வந்தார்கள்.
7. இதைப் பொதுவுடைமைக் கட்சி எப்படி எதிர்கொண்டது?
இப்படி தருவிக்கப்பட்ட வெளியாட்கள், அரிசிப்பிடி ஆட்களை வெளியேற்றுவதும், எங்களுக்கு வேலை வேண்டும் வேலை கொடு என்பதும் நம்முடைய போராட்டமாயிருந்தது. அடியாட்களோடு அவர்கள் தாக்குதல் செய்யும் போது தற்காப்புக்காக நாமும் பல இடங்களில் கைகலப்பு செய்ய மோதல் நிலை ஏற்பட்டது. நிறைய வழக்குகள் போட்டார்கள். ஒவ்வொரு இடத்திலும் 30,40 பேர் மேல் வழக்குப் போடுவார்கள். எங்கேயும் 30 பேருக்குக் குறைஞ்ச வழக்கேயில்லை. ஒரு நேரத்தில் குறைந்த பட்சம் 100 வழக்குகள் இருந்துகிட்டே இருக்கும். அப்போ சனிக்கிழமையும் கோர்ட் உண்டு. எனக்கெல்லாம் ஞாயிற்றுக் கிழமையைத் தவிர மற்ற நாளெல்லாம் கோர்ட்.
8. இதில் காவல்துறையின் தலையீட எப்படி இருந்தது?
லோக்கல் போலீஸ் மட்டுமல்ல ; கிசான் போலீஸ் என்ற அதன் தனிப்படைப் போலீசான மலபார் போலீஸ் எல்லா இடங்களிலும் கொண்டு வந்த இறக்கினார்கள். எல்லாப் பண்ணைகளிலும் அரிசிப்பிடி ஆட்கள் தங்கியிருந்தது போல கிசான் போலீஸ் கூடாரம் ஒன்றும் இருக்கம். போலீஸ், கோர்ட், அடியாட்கள், பண்ணைகள், வழக்க, வேலை செய்ய வந்த வெளியாட்கள் இப்படி எல்லாவற்றையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. வழக்குப் போட்டான்னா ஆஜராகவே ஒரு வாரம் தலைமறைவாக இருக்கணும். ஆஜராகி சப்ஜெயிலில் ஒரு வாரம் கிடக்கணும். அப்புறம் வழக்கு நடக்கும். எங்களுக்குக் கட்சிக் கூட்டம் நடத்தக் கூட முடியாது. வாரம் முழுக்கக் கோர்ட்டிலே இருந்தா எப்படி? அதனால் கோர்ட் வெளியிலேயே தான் கட்சிக் கூட்டம், கமிட்டிக் கூட்டம், சென்டர் கூட்டம் எல்லாமும். நாம தொடர்ந்து வேலை செய்ய அது அவசியமாக இருந்தது.

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல் - 2



1.  உங்களது அரசியல் வாழ்க்கையின் தொடக்கத்திலிருந்து இந்த நேர்காணலைத் துவங்குவது சரியாக இருக்குமென்று கருதுகின்றேன்...
நான் மாணவனாக இருந்த 1952 முதலே, திராவிடர் கழக ஈடுபாடும் தொடர்புகளும் உண்டு. எனத கள வேலைகளையும் அப்போது துவங்கி விட்டேன். கிராமங்களில் விவசாயத் தொழிலாளர் சங்கங்களைக் கட்டி அமைப்பாக்குகிற வேலை, பரவலாக அறியப்படுகிற வாய்ப்பு என்பது ,1957‡இல் நான் திராவிடர் கழகப் பேச்சாளராகக் கிளம்பிய பிறகு தான், பெரியார் பெருந்தொண்டர் நாகை எ     ஸ். எஸ். பாட்சா அவர்களும் நானும் அப்போது பேசப் போனோம். மதுரை, சேலம் வரையுள்ள ஊர்கள், எங்கள் கால்படாத இடமில்லை என்கிற அளவிற்கு பிரச்சாரக் கூட்டங்கள் நிறைய இடங்களில் நடக்கும்.
2. பிரச்சாரம், களவேலை எதைப் பிரதானமாகக் கொண்டிருந்தீர்கள்?
பிரச்சாரம் என்பது மக்கள் மத்தியில் பரவலாக அறியப்படுகிற வாய்ப்பு என்பதற்காகச் சொன்னது. ஆனால் அடிப்படை வேலை திராவிட விவசாய சங்க வேலைகள். பின்னாளில் பொதுவுடமை இயக்கத்தில்  என்ன செய்தேனோ அதை அப்போதே துவங்கி விட்டேன். திருவாரூர், கீவளூர் வட்டத்தில் பெரும்பகுதியான கிராமங்களில் அமைப்பு இருந்தது. ஏறத்தாழ 50,000 பேர் திராவிட விவசாய சங்கத்தில் இருந்தார்கள். பாவா நவநீதக் கிருஷ்ணன் என்கிற அர்ப்பணிப்புள்ள தலைவர், அந்த தோழருடன் சேர்ந்து வேலைகள் செய்து கொண்டிருந்தோம்.
திராவிட விவசாய சங்க வேலைகளில் தீவிரமாக இருந்த அந்த காலகட்டத்தில் தேர்தலில் காமராசரை ஆதரிக்கக் கட்சி முடிவெடுத்தது. மிராசுதாரர்கள் பெரும்பாலும் காங்கிரஸ்காரர்கள். கிராமங்களில் மிராசுதாரர்களை, அவர்களுடைய ஆதிக்கத்தை எதிர்த்துக் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்த நேரும்.
அதே வேளையில் அய்யா சொன்னபடி பச்சைத் தமிழர் காமராசரை ஆதரித்துக் கூட்டத்தில் பேச வேண்டிய நிலைமை. பல இடங்களில் மிராசுகள் கூட்டங்களுக்கு வர மாட்டார்கள். ஏ.ஜி.கே. வந்தா நான் வரமாட்டேம்பாங்க. நமக்க ஒன்னுமில்லை. அவங்க வந்தாலும் வராவிட்டாலும் நாம அதத்தான பேசப்போறோம். காமராசரை ஆதரிக்கிற விசயம் தானே. ஆனா ஸ்தல வேலைகள் என்ற நிலைமையல் அவங்களோடு நமக்கப் பிரச்சனை இருந்தது. பல இடங்களில் நம்ம மேல தாக்கதல் தொடுத்தாங்க. இதன் உச்ச கட்டமாக அந்தணப்பேட்டை, பாப்பாகோவில் இங்கெல்லாம் நம்ம வீடுகளையயல்லாம் கொளுத்தினாங்க. அப்போ அய்யா நாகப்பட்டினம் வர்றார்.
3. கட்சியின் தலைமை இநதப் பிரச்சினைகளை அணுகியது?
அதைப் பற்றித்தான் சொல்ல வர்றேன். நாகை அவுரித் திடலில் கூட்டம். ராதாகிருஷ்ண நாயுடுன்னு ஒரு டாக்டர். அவரு மிராசதார் சார்பா அய்யாவிடம் என்னைப் பற்றிக் கடுமையாக குறைபட்டிருக்கிறார். ஏ.ஜி.கே. எப்பவும் எங்களோடு தகராறு பண்ணிக்கிட்டிருக்கிறார். எல்லா ஊர்கள்லேயும் சண்டை. எங்களைப் பயப்படுத்திக் கிட்டே இருக்கார் அப்படின்னு குற்றச்சாட்டு. இதற்கிடையில் கூட்டத்திற்கு வருபவர்களை மிராசுதார்கள் வழியில் தாக்கப் போவதாகத் தகவல் வருகிறது.
பெரியாரிடம் செய்தி போன போது ஏ.ஜி.கே. யைக் கூப்பிடுன்னார். நீயும் , பாவாவும் போய் ஊர்வலத்தைப் பத்திரமா அழைச்சுக்கிட்டு வாங்கன்னார். தாசில்தார் ஜீப்பிலேயே போனோம். சிக்கல் பக்கதில் மூணிவாய்க்காங் கரைங்கிற இடத்தில் வாய்க்காலுக்குள்ள இரண்டு பக்கமும் ஆயுதங்களோட ஆட்கள் இருக்காங்க. வண்டியோட லைட் வெளிச்சத்தில தெரியுது. சரின்று போயிட்டோம். ஒரு பர்லாங் முன்னாடியே ஊர்வலத்த நிறுத்திகிட்டோம். ஊர்வலத்துல சுருளு, சிலம்பாட்டம் இப்படி வந்த ஆளுங்களை முன்னாடி போக ஏற்பாடு பண்ணினோம். ஏன்னா, அவங்க பயிற்சி பெற்ற ஆளுங்க. அடுத்ததா ஆண்கள், மேளதாளம் , ஆட்டக் காரர்கள், கடைசியா பெண்கள்.
முன்னாடி வர்ற ஆட்களுக்கு வேலை என்னான்னா அந்த குறிப்பிட்ட இடம் வந்த உடனே தாமதமில்லாம ஆயுதங்களோடு இரண்டு பக்கமும் குதிச்சி அவங்கள விரட்ட வேண்டியது. எப்பவும் ஊர்வலத்த பாதியில் புகுந்து தாக்குவது மாமூல் பழக்கம். அப்பதான் கூட்டம் கலைஞ்சி ஓடும். குழப்பம் வரும். அதற்கு வாய்ப்பு தராமல் இந்த எதிர்பாராத திடீர்த் தாக்குதல் நடத்தி பிரச்சனையில்லாம ஊர்வலத்தைக் கொண்டு வந்திட்டோம். அப்போ அந்தக் கூட்டத்திலேயே பெரியார் அறிவிக்கிறாரு. ஏ.ஜி. இருக்கிறாரே, கஸ்தூரிரங்கன். அவருக்கும் மிராசுதாரர்க்கும் நடக்கிற சண்டையிலே நம்ம கழகத்துக்கு எந்த சம்பந்தமுமில்லை அப்படின்னு அறிவிச்சுடறாரு.
4. உங்களிடம் பெரியார் எதுவுமே விசாரிக்காமலே அறிவிச்சிட்டாரா?
ஆமாம். என்னைக் கூப்பிட்டு எதுவுமே கேக்கல. அடுத்த 10 நாள்ல நிரவியில் கூட்டம். நிரவி வந்தா திரு. ரத்னவேலு வீட்டிலேதான் தங்குவார். அங்க போய் இப்படி அறிவிச்சிட்டீங்களே. என்ன ஏதுன்னு கேட்டீங்களான்னு கேட்பதற்காகவே பாபாவும் நானும் போனோம். வரச்சொல்லாத வேணாம் அவன் அப்படின்னு சொல்லிட்டார். பிறகு மாலையில் கூட்டம் நடந்துச்சு. மேடைக்கு வந்தார் பெரியார். கூட்டத்தில் நாங்களும் இருந்தோம். அப்ப திடீர்னு ஏ.ஜி.யைப் பேசச் சொல்லுன்னாரு. எஸ்.எஸ்.பாட்சா மைக்கில் சொன்னார். நான் போகலை. இரண்டாவது தடவையா ஆளனுப்பிப் பேசக் கூப்பிட்டாங்க. வர முடியாது போன்று சொல்லிட்டு அதோடு திரும்பிட்டோம். பெரியார் சம்பந்தமில்லைன்னு பேசிய பிறகு மிராசுதாரர்களின் தாக்குதல் அதிகமாயிருச்சி. நாங்க பெரிய பின்னணி, அமைப்பு எதுவுமில்லாம எதிர்கொள்ள வேண்டிய நிலை. இந்த நிலைமையில் அவர்களின் பலமான தாக்குதலிலிருந்து தொழிலாளரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு. பிறகு கம்யூனிஸ்ட் கட்சியிடம் பேசினோம். திராவிட விவசாய சங்கம் முழுவதுமாக நாங்கள் 1962 கடைசியில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தோம்.

தோழர் ஏ.ஜி.கே.வுடன் ஒரு நேர்காணல் - 1



தோழர் அ.கோ.கஸ்தூரிரங்கன் (ஏ.ஜி.கே.)

இது ஒரு தனிமனிதரின் பெயர் என்பதை விடவும் ஓர் ஆற்றல், உணர்வு, வேகம் என்பதன் குறியீடு என்றே எனது சிறு வயதில் அறிந்திருக்கிறேன் நான். கம்பீரமாய் இசை முழக்கம் எழுப்புகிற அந்த ஒற்றைக்குரலும் அதைத் தொட்டுத்தொடர்கிற பல குரல்களின் கூட்டிசை முழுக்கமும் நடவுப் பாடல்களின் தனித்துவம், எங்களூர் வயல்வெளிகளிலிருந்து எந்த பக்கவாத்தியங்களும் இல்லாமல், இயற்கையாய் எழுந்த பரவுகிற அந்த மக்களிசைப்பாடல்களின் நாயகனாய் இருந்தார் ஏ.ஜி.கே. தோழர் மணலி கந்தசாமிக்கு அடுத்து பரபரப்பாகப் பேசப்பட்ட ஏ.ஜி.கே. யின் முழுப்பெயர் ஏ.ஜி.கஸ்தூரிரங்கன்.
இன்று நாகப்பட்டினம், திருவாரூர் என்று இரு மாவட்டங்களாக இருக்கிற அன்றைய கீழத்தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் மேற்கு வங்கம் என்று பெருமிதமாய்ச் சொல்லப்பட்டது. இந்தியச் சூழலில் முதன் முதலாக வர்க்கப் போராட்டத்தையும் வருணப் போராட்டத்தையும் ஒரு சேர நடத்தி வெற்றி கண்ட ஒரு முன்னோடி மண்டலம் அது. விடுவிக்கப்பட்ட செம்பிரதேசம் என்று சொல்லப்படும் அளவுக்கு அன்று முதலாளித்துவத்துக்கும் அரசுக்கும் சவாலாய் உருவெடுத்திருந்தது.
அதன் அறுபதுகளின் போராட்டமயமான உச்சக்கட்டத்தில் எல்லா இயக்க நடவடிக்கைகளிலும் முன்னின்றவர் தோழர் ஏ.ஜி.கே. கீழத் தஞ்சை இன்னும் விரிந்து வியாபிக்க வேண்டிய நிலைக்கு மாறாக, இன்று குன்றிக் குறுகிப் போய்விட்டது. அவருடனான இந்த சந்திப்பின் நோக்கம் வாழ்ந்து கெட்டதைச் சொல்லும் வரலாற்றுப் புலம்பல்அல்ல ; இழந்த சொர்க்கத்தை அசை போடும் மலரும் நினைவுகளுமல்ல ; மாறாக, அதைத் தேடி அடைய, மீட்டுருவாக்கிட கொஞ்சமேனும் பயன்பட வேண்டும் என்பது தான்.
-           பாவெல் சூரியன்

Tuesday, January 18, 2011

கண்ணாடி காட்டும் உலகம்

கண்ணாடி காட்டும் உலகம்

இணைமிகு தோழா!

சென்ற கடிதத்தில் உள்ளது உள்ளபடி உலகத்தைப் பார்க்க எந்த சித்தாந்த கண்ணாடியை அணிந்திட வேண்டும் என பார்த்தோம்.  இந்த கடிதத்தில் அந்தக் கண்ணாடியின் மூலம் அகிலத்தைப் பார்ப்போம்.

இயற்கைவியல், சமூகவியல், பொருளியல், அரசியல், பண்பியல், அறிவியல், அமைப்பியல் ஆகியவற்றையும், இவை ஒவ்வொன்றும் உள்ளடக்கிக் கொண்டிருக்கிற பல்வேறு துறைகளையும், பிரிவுகளையும் ஒட்டு மொத்தமாக தன்னகத்தே ஈர்த்து தழுவிக் கொண்டிருப்பதே உலகம் என கூறுகிறோம்.

இயக்கவியல் சித்தாந்த விஞ்ஞான கண்ணோட்டத்தில், பொருளியல், அரசியல், பண்பியல், அமைப்பியல் ஆகியவற்றை தனது மேல் நோக்கிய வளர்ச்சிக்கு அவசியமாகவே தன்னுள் கொண்டிருக்கிற, மனிதச் சமூக வரலாற்றை ஆய்ந்தறிவதைத்தான் வரலாற்று இருப்பு முதல் வாத சித்தாந்தம் என குறிப்பிடுகிறோம்.  இது ஒரு சமூக விஞ்ஞானம்.
ஆதி முதலான இருப்பு தனது இயக்கத்திலும் மாற்றத்திலுமாக பல்வேறு படைப்புகளைப் படைத்தது எனவும், அத்தகைய படைப்புக்களின் தொடர்ச்சியாக இறுதியில் மனிதனைப் படைத்தது எனவும், அந்த மனிதன் இயற்கையின் படைப்பாக மட்டுமல்ல, அதன் வாரிசான படைப்பாளியாக உருபெற்றான் எனவும் நாம் அறிவோம்.

விலங்கிலிருந்து தான் மனிதன் தோன்றினான் என விஞ்ஞானம் ருசுப் பித்திருக்கிறது.  விலங்காயிருக்கும் போதே மந்தையாயிருந்தது.  மந்தை வாழ்வே அதன் வாழ்க்கைக்கு உத்திரவாதம் தந்தது.  அவசியமற்றவை தேய்ந்து குறைந்து மறைவதும், அவசியமானவை உருபெற்று வளர்வுற்று,  உயர்ந்து நிலை கொள்வதும் தொடர்ந்த பரிணாமத்தின் பகுதியல்லவா?
இந்த முறையில் தான் மந்தையான விலங்கினமும் மனிதக் கும்பலாக உருவெடுத்தது.  மனிதக் கும்பல் நாளாவட்டத்தில், காலப்போக்கில் கும்பலான வாழ்வை கூட்டமான வாழ்வாக்கி பல்வேறு வகைகளிலும், அம்சங்களிலும் உறுதிப்படுத்திக் கொள்ளுவதைத்தான் மனிதச் சமூகம் என குறிப்பிடுகிறோம்.  ஆதிகால மனிதன் தன்னந்தனியனாகப் பிறந்து வாழத் தொடங்கி, பின்னர் கூட்டமாகி விடவில்லை.  தொடக்கத்திலேயே மந்தையாயிருந்த நிலையில் தான் மனித கும்பல் பிறப்பெடுத்தது.
மந்தையில் தோன்றிய மனிதன், கும்பலாய், கூட்டமாய் வாழ்ந்த போது, இயற்கை உணர்வில் இனவிருத்தி செய்து பிறந்த போது தனிமனிதனாக பிறந்தாலும் பிறந்ததென்னவோ தனிப் பிறவி தான் என்றாலும், சமூகத்திலிருந்தே ஒரு தாயை அடையாளப்படுத்தி பிறந்தான் என்றாலும், பிறந்து தரை வீழ்ந்த பின் அச்சமூகத்தின் குழந்தையாகவே வளர்ந்தான்.  ஆகவே நாம் என்ற சூழலிலும், உணர்விலும் தான் மனிதப் பிறப்பிருந்தது.  ‘நான்’ என்ற சூழலிலும் உணர்விலும் அவன் பிறப்பெடுக்கவில்லை.
இருப்பு தனது இயக்கத்திலும் மாற்றத்திலும் வடிவம் கொண்டு, வளர்ந்து மறைந்து, புது உருவெடுத்து தொடர்ந்தது.  மனிதன் மனிதனாக உருவெடுத்து, மனிதச் சமூகத்தை தொடர்ந்து நிலை நாட்டியது மட்டுமல்ல, விலங்கிலிருந்தும் வேறுபட்ட வாழ்வு  கொண்டான்.  அதற்கு காரணம் ஒரு இயற்கையான விதிமுறை மட்டுமல்ல, நோக்கத் தோடு கூடிய உழைப்பைச் செலுத்த மனிதனால் முடிந்ததாலும் ஆகும்.  திட்டமிட்ட உழைப்புத்தான் - உழைப்பு என்ற ஆயுதத்தை அவன் இயல்பாகவே பெற்றது தான் அவனை மனிதனாக்கியது.

உழைப்பு ஒவ்வொருவரதும் என்றாலும், அது சமூகத்திற்கு சொந்தமானது.  உழைப்பை மூலதனமாகப் பெற்றச் சமூகம், தனது வாழ்க்கைக்கு ஏற்பட்ட தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள அவ்வுழைப்பை பயன்படுத்தியது.  ஓரு இயற்கைச் சூழலில் சமூகம் பிறப்பெடுத்திருந்ததால், அது தன் தேவைகளை இயற்கையிடமிருந்தே பூர்த்தி செய்து கொள்ள வேண்டி ஏற்பட்டது.  அத்தேவைகள் பூர்த்திக்கான முயற்சியில்  உழைப்பை செலுத்தும் போது தான் இயற்கையை எதிர்த்து அதனை வென்று அதனைத் தன் ஆளுமைக்குக் கொண்டுவந்து அத்தேவைப் பூர்த்திகளை செய்து கொள்ள முடியும் என்ற கடுமையான பணியை புரிந்து கொண்டான்.
இந்த இயற்கையை எதிர்த்துக் கட்டுப்படுத்தும் கட்டாயப் பணியில் சமூகத்தை ஈடுபடுத்தி, உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டிய சமூகப் பணிகளையும் புரிந்து கொண்டார்கள்.  பிறப்பெடுப்பிலிருந்து அதுவரை‘ நான்’  என்பதையே அறியாத ‘நாம்’ ஆகவே வாழ்ந்தார்கள்.

தோழா!  இதுவரை நான் மனிதனை ‘அவன் - இவன்‘ என்று குறிப்பிட்டு வந்தாலும் ஆண், பெண் உள்ளிட்ட சமூக உறுப்பினர்களின் மொத்தத்தையே அப்படிச் சுட்டிக் காட்டினேன் என்பதை நினைவில் கவனப்படுத்திக் கொள்.

‘கடமை’ என்ற வடிவம் பெற்ற அவ்வுழைப்புத் தான் சமூகத்திற்கு மதிப்பைத் தந்தது.  மரியாதையைத் தந்தது.  இயற்கை வளப்பங்களைத் தந்தது, உரிமையைத் தந்தது, உறவைத் தந்தது, அறிவைத் தந்தது, அனுபவத்தைத் தந்தது, சிந்தனையையும் மொத்தமாக ஒரு பெட்டகமாக உருமாற்றிக் கொண்டு ‘மானம்‘ என்ற சொல்லுக்கு இலக்கணம் தந்தது.  சமூக மானத்தை உணர்ந்த அங்கம் தன்மானியாகவும், தன்மானி சமூக மானத்தைக் காக்கும் மனிதமானியாகவும் ஒவ்வொருவரும் பிணைப்புடன்  வாழ்ந்தனர்.  இது ஆதிகாலச் சமத்துவச் சமூகம் அல்லது தொடக்கக் கால மனிதமானச் சமூகம் ஆகும்.

ஆதிகாலச் சமத்துவச் சமூகத்தில் நிறையவே பலவீனங்கள் இருந்தன.  அனைத்து கோணங்களிலும், வகைகளிலும், முறைகளிலும், துறைகளிலும் பலவீனங்கள் மலிந்து கிடந்தன என்றாலும் மனித மானமிருந்தது;  தன்மானமிருந்தது; உழைப்பு போராட்ட வடிவம் கொண்டபின், மனித வாழ்வு அதாவது சமூக வாழ்வு போராட்டத்தோடு பிணைக்கப்பட்டது; சமூகம் வாழ போராட்டம்; போராடவே சமூக வாழ்வு என வடிவம் கொண்டது.
இயற்கை வளங்கள் சமூகத்திற்குச் சொந்தம். சமூக உழைப்பு சமூக தேவை  பூர்த்திக்காக; தேவைப்பூர்த்திக்கான உழைப்பு உற்பத்திக்கு உழைப்பு; உற்பத்தி துணைபுரிவது உற்பத்தி கருவிகள்; துணை நிற்பது உற்பத்திச் சாதனங்கள்; உற்பத்தி கருவிகளின் வளர்ச்சி சமூக வளர்ச்சி; உற்பத்தியில் மனிதர்களுக்கிடையேயான உறவு உற்பத்தி உறவு ; சமூகம் உற்பத்தியில் ஈடுபடுகிறது; உற்பத்தி பொருள்களை சமூகம் தேவைக்கு பகிர்ந்து கொள்ளுகிறது; உறவால் நெருக்கம் கொண்ட மனிதர்கள் தங்கள் கருத்து பரிமாற்றத்தின் கட்டாயத்தால், சைகைகாட்டி, ஓலமிட்டு, ஓலத்தை ஒழுங்குபடுத்தி, ஒழுங்கோடு உணர்வைக் கலந்து, உணர்வை வகைப்படுத்தி வார்த்தைக்கு வடிவம் தந்து மொழிக்கு உயிரூட்டினர். கருத்து பரிமாற்றத்துக்கு தோன்றிய மொழி கண்டு பிடிப்புகளுக்கும் கருவிகளின் வளர்ச்சிக்கும் ஊக்கமூட்டி, ருசிகரமான உறவு நெருக்கத்துக்கும், ருசுப்பித்தலுக்கான சான்றுகளுக்கும் சாட்சியமானது; சமூக முன்னேற்றத்திலும், மனிதர்களின் வாழ்விலும் உணர்விலும் ஒன்றிக் கலந்துவிட்டது.  காலப்போக்கில் பேச்சாய் தொடங்கிய மொழி வரலாற்றுப் போக்கில் இலக்கணக் கட்டமைப்போடு எழுத்து வடிவம் பெற்றது.
பசிக்கு உற்பத்தி, பட்டபாட்டிற்கு உற்பத்தி, பற்றாக்குறை உற்பத்தி, போதுமான உற்பத்தி, பல்முனை உற்பத்திகளும் ஒரே மட்டமல்லாத உற்பத்தி என்ற நிலைகளில் வளர்ச்சி பெற்றுவந்தாலும், ஜீவனத்திற்கு மட்டுமல்ல, இயற்கைச் சூழலில் சமூகம் தன்னை தகவமைத்துக் கொள்ளவும், இயற்கையை புரிந்து கொள்ளவும் அதனை நெருங்கவும், எதிர்க்கவும், வெல்லவும், கட்டுப்படுத்தவும், வேலை வாங்கவுமான கட்டாயக் கடமைகளை சமூகம் உணர அவசியங்கள் நிர்ப்பந்தித்தன.
அறியாமை கோலோச்சிய காலம்; யூக கற்பனைகள் அச்சமூட்டிய காலம்; மடமை உள்நுழைந்து ஆளுமை பெற்ற காலம்; இவற்றை எதிர் கொள்ள முடியாது சமூகம் தவித்த காலம்; ஆனாலும் சமூகம் வாழ்ந்தாக வேண்டிய கட்டாயத்தில் இயற்கைக்கெதிரான உற்பத்தி பணியில்  இறங்கித் தீர வேண்டிய காரணங்கள் நிர்ப்பந்தித்தன.  இதன் விளைவாக அனுபவம் அறிவையூட்டியது; அறிவு உணர்வையூட்டியது; உணர்வு முயற்சிக்கு துணையானது; முயற்சி தன்னம்பிக்கையூட்டியது; நம்பிக்கை ஊக்கமூட்டியது என்றாலும் அந்நம்பிக்கை அறிவார்ந்த தன்னம்பிக்கை, அறியாமையோடு கூடிய அதீதநம்பிக்கை ஆகிய இரண்டிற்குமிடையே சமூகம் ஊசலாடியது.

இந்த ஊசலாட்டத்தில் உற்பத்திப் பணியை கைவிட முடியாத நிலையில் அச்சம் அறியாமை ஆசைகளால் ஏற்பட்ட மடமைக் களைகளை, பயண காலத்திற்கேற்ப விளக்க வியாக்யானங்களை செய்து சமூகத் தளையாக்கிக் கொண்டு உற்பத்திப் பணி தொடர்ந்தது.  சமூக வளர்ச்சியில் ஏற்பட்ட, எதிர்ப்பட்ட, எதிர்நோக்கிய தேவைகளை பூர்த்திப் செய்யும் சமூகப் பணியும் தொடர்ந்தது.

உற்பத்தி சக்திகள், உற்பத்தி உறவுகளினது முரண்பட்டும் முறைப்பட்டுமான வளர்ச்சிப் போக்கில் சில உற்பத்தியின் பங்கீட்டிற்கதிகமான உபரி, சில தேவைகளின் பூர்த்திக்கு வழியற்ற நிலை, அதனை நிர்வகித்து ஈடுகட்டுவதற்கான பணி போன்றவை புதிய உழைப்பு பிரிவினைகளுக்கான அவசியத்தை ஏற்படுத்திற்று.  உற்பத்தி பங்கீட்டை ஒழுங்குபடுத்தும் வேலை, வளர்ந்து கொண்டிருக்கும் சமூகத்தை நிர்வகித்து நெறிப்படுத்தும் பணி போன்ற கட்டாயங்களும் உழைப்பு பிரிவினைக்குக் காரணங்களாயின.

இப்படிச் சமூக வளர்ச்சி முன்னோக்கிப் பயணித்தது.  இவ்வளர்ச்சியில் உற்பத்திச் சக்திகள் தான் தீர்மானகரமான சக்தி என்றாலும் உற்பத்தி சக்திகளும் உற்பத்தி உறவுகளும் முரண்பட்டும் உடன்பட்டுமான இசைவில் வளர்ச்சிக்கு துணை புரிய வேண்டும்.  அத்தகைய துணையாயிருக்க முடியாது, உற்பத்தி சக்திகளின் வீச்சுக்கும் விரிவுக்கும் இணைக்கப்பட முடியாத நிலை மட்டுமல்ல, அதன் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டைப் போட்டு தேக்கவும், உற்பத்தி உறவு முனையும் கட்டம்  ஏற்படும். ஆனால் வளர்ச்சி அழிக்கப்பட முடியாததாகையால் உற்பத்தி சக்திகள் அத்தடையைத் தகர்த்தெறிந்து தனக்கிசைவான வேறொரு உற்பத்தி உறவுகளுடன் வளர்ச்சிப் பயணத்தை தொடரும் கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறது.  இதுதான் ஆதி சமத்துவச் சமூகத்திலும் நடந்தது.
‘வரலாற்று இருப்பு முதல் வாதம்’  என்ற விஞ்ஞானப்பார்வை ஆதிச்சமத்துவச் சமுதாயம் பற்றி ஒன்றை தெளிவாக்கிவிட்டது.  சமுதாயம், உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அஸ்திவாரத்தின் மீதுதான் கட்டப்பட்டிருக்கிறது.  அந்த அஸ்திவார கட்டமைப்பில் ஏற்படுகிற மாற்றங்கள் தான் சமூக வடிவில் பிரதிபலிக்கின்றன.

ஆதி சமத்துவச் சமுதாயம், அதன் வளர்ச்சிப் போக்கில் தடைபடாது தொடர வேண்டிய அவசியத்திலும்; அறியாமை, அச்சம், ஆசை, யூகம் போன்றவை தலைதூக்கிய நிலையிலும், விஞ்ஞானம், அனுபவம், சித்தாந்தம் போன்றவை வளர்ச்சியற்ற நிலையிலும், பேதப்பட்டச் சமூகமாக பிளவுபட வேண்டிய சூழ்நிலை உருவாயிற்று.  சமத்துவச் சமுதாயம் வர்க்கச் சமூகமாக பிளவுபட்டது; பிளவுபட்ட சமுதாயத்தில் அடிப்படையாக முரண்பட்ட, பகைபட்ட வர்க்கங்களும், வர்க்கத்தட்டுக்களும் தோன்றின; சமத்துவச் சமூகத்தில் பிணைப்பு கொண்டிருந்த உரிமை, கடமை, மரியாதை, மதிப்பு, அனுபவம், அறிவு, உறவு, உடமை ஆகியவற்றின் ஒருமை சிதறடிக்கப்பட்டு சின்னாபின்னமாக்கப்பட்டது.  வர்க்க போராட்டத்தின் வரலாறே சமூகத்தின் வரலாயிற்று.

உபரி உற்பத்தியும், உற்பத்திக் கருவி சாதனங்களும், உற்பத்தி பொருள்களும் சமூகத்தின் பெரும் திரளான பகுதியினரிடமிருந்து பறிக்கப்பட்டு, சிறுகுழு - கும்பலுக்குச் சொந்தமாக்கப்பட்டது.  சமூக உடமைகள் தனி உடமையாக உருவெடுத்தன; ஆண் ஆதிக்கம் பிறப்பெடுத்தது; தனி உடமையை பாதுகாக்க ஆதிக்கம், ஆட்சி, அதிகாரம், ஆளுமை தேவைப்பட்டது.  உடமைக்கும்பல் வெகுமக்கள் மீது ஆளுமை செலுத்தும் வர்க்கமாக தன்னை அமைத்துக் கொண்டது; சமூகத்தின் மேல்கட்டுமானத்தை உருவாக்கி, ஆதிக்க, அதிகார, ஆளுமை கொண்டது.  வெகுமக்கள் திரளோ உழைப்பை மட்டுமே கொண்டு நின்றது; அச்சுரண்டல் கூட்டம், அடிமையாய் உழைப்பை தானமாக்கி, அல்லது விற்று ஜீவிக்க வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தி உழைப்பைச் சாக்கிட்டு உயிரைப் பறித்தோ    அல்லது உழைப்பை கஞ்ச பஞ்ச விலை கொடுத்து பறித்தோ  உழைக்கும் மக்களை ஓட்டாண்டியாக்கி ஒடுக்கிப்போட்டது.
சொந்த சுகபோகத்திற்காக சுரண்டல் கூட்டம் வெகுமக்களை அடக்க அரசு தேவைப்பட்டது; போராட்ட எழுச்சியை ஒடுக்க அரசு எந்திரங்கள் தேவைப்பட்டன; மக்களின் உணர்வை மழுங்கடிக்க மதங்கள் தேவைப்பட்டன; மக்களுக்கு எதிரான பாதகத்தை பாதுகாத்துக் கொள்ளவும், அநியாய அட்டூழியங்களை நியாயப்படுத்திக் கொள்ளவும் ஊடகங்களும், இலக்கியங்களும், பிரச்சாரங்களும் வேண்டியிருந்தன.  தனி உடமை உழைப்பு உற்பத்தி கருவி சாதனம் இவற்றின் விளைபயன் ஆகிய மொத்தத்தையும் தனக்கே உடமையாக்கிடவும், பெண்ணுரிமை பறிக்கப்படவும் குடும்ப அமைப்பு அவசியப்பட்டது.  படைப்பால், அனுபோகத்தால் ஒன்றிய உறவால் கொண்டிருந்த கலாச்சாரம் அழிக்கப்பட்டு மக்கள் மீது மயக்க, ரசிக, மடமை அடிமை கலாச்சாரம் திணிக்கப்பட்டது.  ஆக மொத்தத்தில் இத்துணைக்குமான நச்சறிகுரி ஆதி சமத்துவச் சமூகத்தின் இறுதிக் கட்டத்தில் தென்பட்டது.  இந்தச் சமூகத்தின் பலமும் பலவீனங்களும்,  நிலையானதும் நிலையற்றதுமான அம்சங்களுக்கிடையேயான போட்டா போட்டி தொடர் நிகழ்ச்சியாக தொடர்ந்தது.

இனிய தோழா! வரலாற்று இருப்பு முதல்வாதம் என்ற கண்ணாடி நுண்நோக்கியாக உலகச் சமூகங்களின் பரந்துபட்ட தோற்றத்தையும், தொடக்க கால சமத்துவச் சமூகங்களையும் படைப்பாளிகளுக்கு காட்டியதை கூர்ந்து கவனித்தாயா?  அக்கண்ணாடி உள்நோக்கியாக காட்டியிருக்கும் இடைக்கால வர்க்க சமூகங்கள் பற்றியும், அது தொலைநோக்கியாக காட்டியிருக்கும் இறுதியாக அமைந்து தொடரும் விஞ்ஞானச் சமூகம் பற்றியும் இங்கு எழுத இடமில்லை; ஆனால் கண்ணாடி உன் கையில் இருக்கிறது; அவசரமின்றி அணிந்து கொண்டு பாரேன்.

உலகைக் காட்டும் கண்ணாடி

உலகைக் காட்டும் கண்ணாடி

இணைமிகு தோழா!

கடந்த இரு கடிதங்களில் தத்துவம் பற்றி ஓரளவு - என் அறிவுக்கு பட்ட அளவு - தொட்டுப் பார்த்தோம்.  இந்த கடிதத்தில் இன்னும் கொஞ்சம் தலை நுழைப்போம்.

சித்தாந்தம் என்பது அடிப்படை, போதனை, கோட்பாடு, படிப்பினை நிரூபணம் ஆகிய அம்சங்களை உள்ளடக்கிக் கொண்டிருப்பது. வேறு வார்த்தைகளில் கூறினால், தத்துவம் என்பது உண்மை, வழிகாட்டி, வழிநடத்தி, செயல்பாட்டு சாட்சியம் ஆகிய அம்சங்களை இணைவாக பிணைத்துக் கொண்டிருக்கிறது என்பதாகும்.

சித்தாந்தத்திற்கு எதிரான வேதாந்தமோ, தத்துவத்திற்கு நேர் பகையான அம்சங்களை உள்ளடக்கிக் கொண்டு பவனி புறப்பட்டிருக்கிறது.  அதாவது பொய்மை, புரட்டு, புளுகு, மடமை, கற்பனை ஆகியவற்றில் முழுக்க முழுக்க புறையோடிக் கிடக்கிறது.  வேறு வார்த்தைகளில் கூறினால், அச்சம் அறியாமை, தனிநலம், பேராசை, புராண இதிகாசம், மூட நம்பிக்கை, மூட பழக்க வழக்கம், யூகம் விரக்தி போன்ற சகதிகளில் சங்கமித்துக் கொண்டுவிட்டது.

சித்தாந்தம் செயலுக்கு உந்துசக்தி, வாழ்வுக்கு ஊக்கமூட்டி. வேதாந்தம் விரக்திக்கு இருப்பிடம். வேறுலக வாழ்வுக்கு பிறப்பிடம்.
முதலில் சித்தாந்தம் பற்றிய ஒரு குறிப்பைப் பார்ப்போம்.  ‘முரண் வாழ் இருப்பு முதல் வாதம்’.  இது விஞ்ஞான சித்தாந்தம்.  ‘இருப்பு’ இருந்து கொண்டேயிருக்கிறது.  இது யாராலும் படைக்கப்பட்டதல்ல, அப்படிப் படைக்கப்படாததால் தான் ‘இருப்பை’ யாராலும் அழிக்க முடிவதில்லை;  இருப்புதான் எல்லா இருப்பிற்கும் அடிப்படை;  இருப்பின்றி படைப்பில்லை; வடிவில்லை.

இவ்விருப்பு, முரணில் வாழ்வதால் போராட்டத்தில் ஜீவிக்கிறது.  போராட்டத்தின் விளைவான இயக்கத்தில், தோற்றத்தில், மாற்றத்தில், மறு உருவேற்றத்தில் தானேயாகி நிற்கிறது.  இவ்விருப்புத்தான் ஆதி முதலும் அந்தமும் என விளக்குவது தான் உண்மை சித்தாந்தம்.  இந்த சித்தாந்தம் எந்தவொன்றின் வளர்ச்சிப் போக்கிற்குமான அடிப்படை வளர்ச்சி விதிகளை விவரிக்கிறது.  தெளிவாக்குகிறது.

அடிப்படை வளர்ச்சி விதிகள்தான், ஒன்றின் வரலாற்றைக் கண்டறிவதற்குச் சாதனமாகும்.  கடந்த நிகழ், எதிர்காலங்களில் ஒன்றின் வளர்ச்சிப் போக்கின் மொத்தமே அவ்வொன்றின் வரலாறாகிறது.  கடந்த கால பரிணாம பாய்ச்சல்கள் நிகழ்காலத்தால் முன்னோக்கி உந்தப்பட்டு, எதிர்கால பரிணாம பாய்ச்சல்களாகிய படைக்கும் கட்டங்களை உள்ளடக்கிக் கொண்டிருப்பது அதன் வரலாறு.  அடிப்படை வளர்ச்சி விதிகள் எவை?

ஒன்று, ‘உடன்படுதலும் முரண்படுதலும் அல்லது ஒன்றிடுதலும் போராடுதலும்’ என்ற விதி.  இரண்டு, ‘பரிணாம மாற்றம், பண்பு மாற்றத்தில் முடியும் அல்லது இயல்பு மாற்றம் இயைபு மாற்றத்தில் முடியும்’ என்ற விதி.  மூன்று, ‘அழித்தமர்வின் அழித்தமர்வு அல்லது இருத்தல் மறுத்தலின் இருத்தல் மறுப்பு’ என்ற விதி.  இவ்விதிகளைப் பற்றியும் மிக மிகச் சுருக்கமாக புரிந்து கொள்வோம்.

முதலாவது உடன்படுதலும் முரண்படுதலும் என்ற விதி.  நேர்மறை எதிர்மறை இணைவில் வடிவம் பெற்றுள்ள இருப்பு அல்லது படைப்பு, நேர்மறை எதிர்மறை முரண்பாட்டில் போரிடுவதும், அதனில் காணும் உடன்பாட்டால் ஒன்றுபடுதலும் அதன் தொடர்ச்சியான இயக்கம் தான் வளர்ச்சிக்கான உத்வேகமும், மாற்றமும் ஆகும்.  நேர்மறை முன்நோக்கிச் செல்லும் ஆற்றல் கொண்டது.  எதிர்மறை அதனை தடுக்கும், தேக்கும் சக்தியாகும்.  இவ்விரண்டின் இணைவில் இருப்பு அல்லது படைப்பு இருப்பதால், நேர்மறை எதிர்மறையை வென்று  இசைவோடு முன்நோக்கி செல்லுகிறது.  சமயங்களில் அவசியமாக நேர்மறை முன்னேறிச் செல்ல முடியாது.  பலமான தடையாக எதிர்மறை அமையுமானால், நேர்மறை அத்தடையை உடைத்தெறிந்து தனக்கு பொருத்தமான வேறொரு எதிர்மறையுடன் இணக்கம் பெற்று முன் செல்லும்.

இரண்டாவது பரிமாணாம மாற்றம் பண்பு மாற்றத்தில் முடியும் என்ற விதி.  எந்தவொன்றின் அளவில் ஏற்படுகிற மாற்றங்கள், இறுதியாக அந்தவொன்றில் குணமாற்றத்தில் முடியும்.  அப்படி பரிணாம மாற்றம், பாய்ச்சலில் முடிகிற போது, அம்மாற்றத்திற்குள்ளான அவ்விருப்பு அல்லது படைப்பு, பழயதினின்று அடிப்படையாக மாறுபட்ட புதியதொன்றாகவே இருக்கும்.  மீண்டும் பரிணாமம் தொடரும்.

மூன்றாவது, அழித்தமர்வின் அழித்தமர்வு என்ற விதி.  காலம் கடந்த ஒன்றை அப்புறப்படுத்தி காலத்தில் ஒன்று அவ்விடத்தில் நிலை கொள்வது தவிர்க்க முடியாதது.  எதிர்காலத்தில் அவ்வொன்றும் அவசியத்தால் மற்றொன்றால் அப்புறப்படுத்தப்படக் கூடியதாகவே இருக்கும்.

இம்மூன்று அடிப்படையான விதிகளின் ஒழுங்கில் தான் வளர்ச்சிப் போக்குகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.  இவ்வொழுங்கு விதியை ஒழுங்காக கடைப்பிடிப்பதன் மூலமே இயக்கம் மாற்றத்தை உருவாக்கும் போதே மாற்றங்கொண்டு முன் செல்லுவதே வளர்ச்சிப் போக்கு தொடர்வதாகும்.  சில நேரங்களில் வளர்ச்சிக்கு முற்றான சீர்குலைவை ஏற்படுத்தும் முட்டுக்கட்டை எதிர்படும் அல்லது எதிர்நோக்கும் போது அத்தடையை உடைத்தெறிந்து முன் செல்ல விதி மீறல் செய்து விதி ஒழுங்கை பாதுகாப்பதும் விதிமுறையேயாகும்.

இவ்விதி ஒழுங்கை காப்பதற்கான விதி மீறல் என்பது வளர்ச்சிப் போக்கு ஒருகாலும் பின்னோக்கிச் செல்வதில்லை.  முன்னோக்கி மட்டுமே செல்லும் தன்மை கொண்டது என்பதற்கு சாட்சியமாகி விடுகிறது.  எந்த ஒன்றின் முன்னோக்கிய வளர்ச்சியை தேக்கலாம்-தடுக்கலாம்-தாமதப்படுத்தலாம்-குறிப்பிட்ட காலம் முட்டுக் கட்டைப் போடலாம். என்றாலும் வளர்ச்சிக் போக்கை முற்றாக அழித்து விடவோ, அதனை பின்னோக்கி செலுத்திவிடவோ ஒருகாலும் முடியாது.

வளர்ச்சிப் போக்கு செங்குத்தாக முன் செல்லுவதுமில்லை, சக்கர வட்டத்தில் சுழன்று கொண்டிருப்பதுமில்லை.  மாறாக வளர்ச்சி வளைவாக.  ஆனால் வட்டப் பாதையல்லாத, முன்னோக்கி, ஆனால் நேர் செங்குத்தாக வின்றி, துள்ளிப் பாய்ந்து , ஆனால் மையத்தை விட்டு தூர விலகி விடாமல் புரிவில் வடிவிலான முன்னேற்றம் கொண்டதே வளர்ச்சி.  மிகச் சிக்கலான கரடுமுரடான பாதைகளில் தடுத்தழிக்கப்படாது, நெளிவு சுழிவோடு ஒரு ஒழுங்கில் முன்னோக்கிப் பயணிப்பது தான் வளர்ச்சியாகும்.

மேலே கண்ட இந்த வளர்ச்சி விதிகளை விளக்குவதுதான் தத்துவத்தின் தத்துவம்.  ‘முரண்வாழ் இருப்பு முதல் வாதம்’ என்ற சித்தாந்தம்.  இதுதான் மார்க்ஸீயம்.  இதனை நிரூபித்துக் கொண்டிருப்பது தான் விஞ்ஞானம். இதனை உறுதிப்படுத்திக் கொண்டிருப்பவை தான் விஞ்ஞான கண்டுபிடிப்புகள்.

அடிப்படை வளர்ச்சி விதிகளை பிரயோகப்படுத்தி இப்பேரண்டத்தைக் கண்டறிய சில விஞ்ஞான, வழிநடத்தும் அளவுகோல்களையும் இவ்விஞ்ஞான தத்துவம் முன்வைத்தது.  எந்த ஒன்றையும் அல்லது எந்தவொரு நிகழ்வுப் போக்கையும் சரியாக கண்டறிந்து உண்மையை வெளிப்படுத்த அவ்விஞ்ஞான அளவுகோல்கள் அவசியமாயிருந்தது.  அவை தான்

1. ஒன்றின் தனித்துவமும் பொதுமையும்.
2. ஒன்றின் அகக் கட்டமைப்பும் வடிவமும்
3. ஒன்றின் அகதன்மையும் புறதோற்றமும்
4. ஒன்றின் காரணமும், காரிய வெளிப்பாடும்.
5. ஒன்றின் கட்டாயமும் திடீர் நிகழ்வும்.
6. ஒன்றின் எதார்த்தமும் சாத்தியமும்.

மேற்கண்டவை ஒவ்வொன்றிலும், அமைந்துள்ள கூட்டிணைவு ஒன்றுடன் ஒன்று பிண்ணிப் பினைந்தவை.  பிரிக்கப்பட முடியாதவை, இறுக்கமான தொடர்புள்ளவை.  இதனை மொத்தமாக போட்டு குழப்பிக் கொள்வதோ, ஒன்றை விட்டு ஒன்றை தொடர்பறுத்து பார்க்க முனைவதோ, ஒவ்வொன்றுள்ளும் தனித்து உட்புகுந்து பார்த்திட தவறுவதோ, ஒன்றைப் பற்றிய முபமையான கண்டறிவை பெற்றிட முடியாது.
இதனை ஒவ்வொன்றாக எடுத்துக் கொண்டு இக்கடிதத்தில் நாம் உள் நுழையப் போவதில்லை.  அவகாசமும் இல்லை.  அதற்காக இத்தோடு விட்டு விடாதே.  சுயகல்வி, சுயமுயற்சி, சுயபயிற்சி உன்னோடு ஒட்டிக் கிடக்கும் போது இதனை உள் நுழைந்தறிவதில் உனக்கேது தடை?  இந்த விஞ்ஞான அளவுகோல்களை பயன்படுத்தும் போது ஒவ்வொரு அசைவிலும், நாம் அடிக்கடி பேசிக் கொண்டிருப்போமே விஞ்ஞான வினாக்கள் அதனை எழுப்பி விடை காண்பது தான் முக்கியம். யார்? ஏன்? என்ன? எது? எங்கே? எப்படி? எப்போது? எவ்வளவு? ஏதற்காக? என்பவை தானே ஞானக் கேள்விகள்.

மேலே சொன்னவைகளையெல்லாம் மொத்தமாக உள்ளடக்கிக் கொண்டிருக்கிற முரண்வாழ் இருப்பு முதல்வாத சித்தாந்த வழியில் இந்த பேரண்டத்தில் நாம் அறிய முடியாதது எதுவுமில்லை.  ஆனால் அறிய வேண்டியதிருக்கலாம்.  இவ்விஞ்ஞான சித்தாந்தம் தான் செயலுக்கு வழிகாட்டியாயிருப்பதால் நாம் செய்ய முடியாதது எதுவுமி ருக்க மடியாது.  ஆனால் செய்தாக வேண்டியது இருக்கலாம்.

அன்பு தோழா! சித்தாந்தங்கள் பற்றி சொல்லும் போது வார்த்தைப் பிரயோகங்களை முறையாக வரையறுத்துக் கொள்ள வேண்டிய அவசியத்தால் உனக்கு கொஞ்சம் எரிச்சல் தட்டுகிறதா? எரிச்சல் தட்டினாலும் பரவாயில்லை, தட்டுக்கெட்டு தடுமாறி  தடம் மாறிவிடக் கூடாதல்லவா?

இந்த விஞ்ஞான சித்தாந்தம் தான் அறிவுக்கு ஆழ் ஊற்று. அறிதலுக்கு நுண்சுரப்பி, ஆற்றலுக்கு வலுவூட்டி, செயலுக்கு துணிவூட்டி, மொத்தத்தில் வழிகாட்டி. மற்றொன்றையும் மறந்துவிடாதே.  இந்த விஞ்ஞான சித்தாந்தத்தை, விஞ்ஞான கோட்பாட்டை அதாவது வழிகாட்டியையும், வழிநடத்தியையும் ஒவ்வொரு நொடியும் செழுமையூட்டி, நிரூபணம் செய்து கொண்டிருப்பதில் விஞ்ஞான கண்டுபிடிப்புக்கள் முதன்மை வகித்தாலும், படைப்பாளி மனிதன் செயல்படும் போது கிடைக்கும் படிப்பினைகள் இதனை செழுமைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.  எனவே தான் சித்தாந்தம் வழிகாட்டியாக, கோட்பாடுகள் வழிநடத்தியாக, படிப்பினைகள் செயல்படுத்தியாக, மனித சமூகத்தை இயற்கையை வெல்லும் போர்வீரர்களாகவும், புது உலகைப் படைத்து பாதுகாத்து வளர்க்கும் படைப்பாளியாகவும் ஆக்கிக் கொண்டிருக்கின்றன.

இந்த விஞ்ஞான தத்துவத்திற்கு பகை சித்தாந்தம்தான். ஆத்மீக உணர்ச்சி முதல் வாதம் என்ற வேதாந்தம்.  அதனைப் பற்றி மிக விரிவாக இங்கே விளக்கிடப் போவதில்லை என்றாலும் ஒரு சில குறிப்பிட்ட அம்சங்களைப் பற்றி சொல்லித் தானேயாக வேண்டும்.

பேரண்டத்தில் அனைத்திற்கும், ‘ஆதி முதல்’ ஆண்டவன் என்கிறது வேதாந்தம்,  அவனால் தான் பேரண்டமும் அதனிலுள்ள அனைத்தும் படைக்கப்பட்டது.  அவ்வொவ்வொன்றையும் அசைவுக்கு அசைவு அவனே இயக்குகிறான்.  அவை இயங்குவதற்கும் அவனே விதியை வகுத்து விட்டான்.  அவ்விதிப்படி அவை தோன்றும், வாழும், அழியும்.  மனிதனை அவனே படைத்தான்.  ஆத்மாவை படைத்து மனிதனுள் புகுத்தி அவனை இயங்க விட்டான்.  அந்த இயக்கத்திற்கு அவன் தலையில் விதியை எழுதி வைத்தான். தலை விதிப்படிதான் ஒவ்வொரு மனித வாழ்வும் நடந்து கொண்டிருக்கிறது.  ஆத்மா அகன்ற உடல் பிரேதம்; உடலை விட்டு பிரியும் ஆத்மா, மேலுலகில் விசாரணைக் குட்படுத்தப்பட்டு சொர்க்கம் அல்லது நரக தண்டனை அளிக்கப்படும்.  சொர்க்க வாழ்வு, ஆத்மாவுக்கு சுகபோக வாழ்வு. தண்டனை பெற்ற ஆத்மா நரகம் அனுபவித்து பின் முன்வினைப் பயனை அனுபவிக்க, மீண்டும் மனித உடலில் புகுத்தப்பட்டு மறுபிறவியளிக்கப் படுமாம்.  இதற்கெல்லாம் ஆதாரங்கள் உண்டா?  சாட்சியமுண்டா?  என கேட்டுவிடக் கூடாது.

ஆண்டவன் அரூபி. ஆனால் பக்தர்களுக்கு காட்சியளிப்பான்.  இறைவன் ஏகாந்தன் ஆனால் எல்லாவற்றையும் படைத்தவன்.  கடவுள் அனைத்தையும் கடந்தவன்.  ஆனால் அனைத்திலும் நிறைந்தவன்.  அவனுக்கு காதில்லை-கேட்பான், வாயில்லை-பேசுவான், கண்ணில்லை-பார்ப்பான், நாக்கில்லை- ருசிப்பான், கரம் இல்லை-படைப்பான், காலில்லை- ஈரேழுலகமும் சுற்றி வருவான், உடலில்லை-உணர்வான், இந்த எதிர்புதிர் நிலை கொண்டு ஒன்றிருக்கிறது என்றால் ஏற்க கூடியதா?  பரலோகத்தில் அவன் அரசாட்சி, இகலோகத்தில் அவன் திருவிளையாடல், உருவமேயற்றவன், ஆனால் ஆனாக அடையாளம் காட்டப்படுகிறான்.

இதுவெல்லாம் நம்பக் கூடியதா?  அணுவிலும் இருப்பானாம் ஆனால் யாருக்கும் அகப்படமாட்டானாம். இவன் ஞானிகளை மட்டும்  சந்திக்கின்றானாம். விஞ்ஞானிகளைக் கண்டால் தலைமறைவாகி விடுவானாம்.

ஆத்மாவை நம்புகிறவர்கள் ஆன்மீகவாதிகள்.  இருக்கிற உலகத்தை ஏற்றுக் கொள்ளுகிறவர்கள் உலகாயத வாதிகள்.  இதுதானே உண்மை.
இந்த ஆன்மீக வாதிகளுக்கு வேதாந்தம் வழிகாட்டி.  ஆத்மா வழிநடத்தி, மூட நம்பிக்கை செயல்படுத்தி, அஞ்ஞான ஆளமைக்குட்பட்டவர்கள்.  ஆக்கலும் இயக்கலும், வளர்த்தலும், காத்தலும், அழித்தலுமாய் இருப்பவன் ஆண்டவனே என்ற அஞ்ஞானத்தின் மொத்த தொகுப்பாய் வேதாந்தம் இருக்கிற போது அறிவுக்கும், ஆய்வுக்கும், ஆய்வின் அளவுகோல்களுக்கும் என்னதான்  வேலை இருக்க முடியும். சரித்திரமாக புராணங்கள், சட்டமாக சாஸ்திரங்கள், கட்டுப்படுத்த ஆச்சாரம், கடைபிடிக்க அனுஷ்டானம் என மூளை பறிப்பு செய்தபின் சிந்தனைக்கு இடமுண்டா?  இத்தனைக்குப் பிறகும் இறைவன் இருக்கின்றான் என கூற முடியுமா?  நிச்சயம் முடியாது, கடவுள் இல்லை, இல்லவே இல்லை என்பது உண்மை கண்ட பெரியாரின் கூற்றல்லவா?

கடவுள் இருக்கிறார் என்பதை எங்களால் நிரூபிக்க முடியவில்லைதான்.  ஆனால் அவர் இல்லை என உங்களால் நிரூபிக்க முடியுமா? என எதிர்கேள்வி போட்டு நம்மை மடக்க முனைகிறார்கள்.

 பரிதாபத்திற்குரியவர்கள்.  இருப்பு இல்லாத வேறெதுவுமில்லை, இருப்பைத் தவிர வேறொன்றில்லை, இருப்புக்கு அப்பாலும் எதுவுமில்லை.  இருப்பதெல்லாம் இருப்பு மட்டுமே என்பது நிரூபிக்கப்பட்டபின், அதுவல்லாத ஆண்டவனும் இல்லை தானே?  அப்படியானால் ஆண்டவன் தோன்றியதெப்படி?  இதனை வேதாந்தத்தால் விளக்க திராணியிருக்காது.  ஆனால் ‘முரண்வாழ் இருப்பு முதல் வாத’த்தால் விளக்கிட முடியும்.
விஞ்ஞான அறிவும், விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் தோன்றி வளராத தொடக்க காலத்தில், மனிதனுக்கு முன் தோன்றிய இயற்கை மற்றும் இதர நிகழ்வுகளுக்கும், அதனையொட்டிய பல்வேறு பிரச்சினைகளின் தீர்வுக்கும், சோதனை சவால்களின் சந்திப்பிற்கும் விடை காண முடியாது தவித்த நேரத்தில் அவனுக்கு ஏற்பட்ட அச்சம், அறியாமை, ஆசையின் விளைவால் மனிதனால் ஆண்டவன் படைக்கப்பட்டான்.

அப்படி, தானே கற்பனையில் படைத்துக் கொண்ட ஆண்டவனை, அண்டசராசரம் அனைத்துக்கும் மீறிய சக்தி கொண்டவனாக சித்தரித்துக் கொண்டான்.  ஆனால் அவன் உண்மையிலேயே தான் படைத்துக் கொண்ட சமூகத்தின் ஆற்றல், வலிவு அனைத்தையும் விஞ்சியது என்பதை அறிந்தானில்லை.

வாழ்வில் எதிர்பட்ட சோதனைகள், எதிர் நோக்கிய சவால்களுக்கு தானே கற்பித்துக் கொண்ட ஆண்டவனிடம் கோரிக்கை வைத்து வழிபட்டான்.  அதற்கு இசைவாக சடங்கு சன்மானம் சம்பிரதாயங்களை வகுத்துக் கொண்டான்.

அந்த கால கட்டத்தில் கட்டாயத்தை முன்னிட்டு மனிதர்களிடையே தோன்றிய மார்க்கியவாதிகள் தங்கள் அறிதலுக்கும் புரிதலுக்குமான வழிகாட்டுதலுக்காக மனிதக் கூட்டத்தின் கட்டுப்பாட்டை நிலை நிறுத்த இல்லாததென தெரிந்தும் இறைவனை துணைக்கழைத்துக் கொண்டனர்.
ஆண்டவன் வழிபாடு, சடங்கு சன்மான சம்பிரதாயம் ஆகியவற்றின் மொத்தமும் மார்க்கவாதிகளின் போதனைகளும் மார்க்கங்களும் ஒன்றுடன் ஒன்று கலப்படம் செய்யப்பட்டு மதமாக ‘உரு’ கொடுக்கப்பட்டது.  அந்த மதம் வேத சாஸ்திர புராணங் களால் போதையேற்றப்பட்டு பக்தி, பிரார்த்தனை, வேண்டுதல், பரிகாரம் என மயக்கமூட்டும் கருவியாக பயன்படுத்தப்பட்டது.  நாளாவட்டத்தில் அரசியலுக்கு, ஆட்சியதிகாரத்திற்கு ஆதரவாக ஆட்களை திரட்டும், மக்களை கவரும் மாயவலையாகவும், வெகுமக்கள் திரளை வெறுமையாக்கிடவும், உழைக்கும் மக்களை உறுஞ்சி அடிமையாக்கிடவும், உடமையாளர்களுக்கு கவசமாகவும் வளர்க்கப்பட்டது.  இது பற்றியெல்லாம் வேறொரு சந்தர்ப்பத்தில் விரிவாகப் பார்க்கலாம்.
ஆதிக்க வெறிகொண்ட சுகபோகிகளான சுரண்டல் கூட்டம், கூலிக்கு ஆள்பிடித்து வேதாந்தத்தையும் ஒரு சித்தாந்தமாக வியாக்கியானம் செய்யத் துடித்தது.  ஆத்மா தான் மனிதனுக்கு உணர்ச்சி ஊட்டுகிறது.  உணர்ச்சியின் மூலம்தான் அவனால் உலகை காண முடிகிறது.  உணர்ச்சி இல்லையேல் உலகு இல்லை.  இல்லாத மாயா உலகை இருப்பதாக மாயை காட்டுவது உணர்ச்சி தான், ஆத்மா தான், என எதார்த்தத்தை தலைகீழ் புரட்டி தத்துவம் என்பது வேதாந்தமே என விளக்கம் தருகின்றனர்.

இப்படிக் கூறுவதற்கு சான்றுகள் இல்லை. சாட்சியமில்லை. இதவல்லாத  கண் மூடி நம்பிக்கை இருந்தால் தான் அதை கண்டிட முடியுமென்றால் அது மூட நம்பிக்கை தானே?  வேதாந்தத்தை மூடத்தனம் என கூறிட சித்தாந்தத்திடம் ஆதாரம் உண்டா? என வினவுகிறார்கள்.

உலகம் இருப்பதால் உணர்ச்சி தோன்றுகிறதா?  அல்லது உணர்ச்சி இருப்பதால் உலகம் இருப்பதாக தெரிகிறதா?  இதுதானே கேள்வி.  உலகம் இருப்பது உண்மை.  அது உணர்ச்சிக்கு புறத்தே இருக்கிறது.

 புறத்திலிருக்கும் உலகம் புலன் உறுப்புகளில் ஏற்படுத்தும் தாக்கம் உணர்ச்சி. நிஜம் தான் நிழலாக பிரதிபலிக்கிறது.  நிழல் நிஜத்தை தோற்றுவிப்பதில்லை, நிஜம் எப்போதும் நிரூபனத்திற்குட்பட்டது.  ஆதிமுதல்‘ இருப்பே’ நிஜம், இருப்பின் பிம்பமே உணர்ச்சி, அதன் விளைவே எண்ணம்.  அதன் வளர்ச்சியே கருத்து.  கருத்து சிந்தனை உலையில் வார்க்கப்பட்டு செயலாகவும், அறிவாகவும் வடிவம் பெறுகிறது.  அறிவால் செழுமைப்படுத்தப்பட்ட உணர்ச்சி உணர்வாகிறது, செழுமைப்படுத்தப்படாத உணர்ச்சியின் வளர்ச்சி வெறியாகிறது.

முரண் வாழ் இருப்பு முதல் வாதம் பற்றிய இந்த குறிப்பு இப்போதைக்கு போதுமானது,  இந்த சித்தாந்த கண்ணாடியில் மனித சரித்திரத்தைப் பார்க்க வேண்டுமல்லவா?